2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

காட்டுத்தீயை சாதகமாக்கி வீடுகளில் திருடர்கள் கைவரிசை

Freelancer   / 2025 ஜனவரி 12 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

லாஸ் ஏஞ்சல்சில், காட்டுத்தீயை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, சிலர் வீடுகளில் நுழைந்து திருடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி வீடுகளை சூறையாடிய பலரை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், அங்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் அமைந்துள்ளது. அந்த நகரின் மத்தியில் ஹாலிவுட் பகுதி உள்ளது. அங்கு முன்னணி திரைப்பட நிறுவனங்கள், அவற்றின் திரைப்பட நகரங்கள் அமைந்துள்ளன. இதன்காரணமாக ஹாலிவுட் திரையுலகின் தலைநகராக லாஸ் ஏஞ்சல்ஸ் விளங்குகிறது.

கடந்த 7ஆம் திகதி லாஸ் ஏஞ்சல்ஸின் பாலிசேட்ஸ் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. மலைப்பகுதிகள், எளிதில் தீப்பற்றி எரியும் பைன் மரங்களால் காட்டுத் தீ அதிவேகமாக பரவியது. தற்போது பாலிசேட்ஸ், ஈட்டன், ஹர்ஸ்ட், லிடியா ஆகிய பகுதிகளில் கட்டுக்கடங்காமல் தீ பரவி வருகிறது.

கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக மழை இல்லாத காரணத்தால் வறண்டு கிடந்த பகுதிகளில் பற்றிய தீ, தற்போது காட்டுத் தீயாக மாறி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சுமார் ஒரு கோடி பேர் வசிக்கின்றனர். இதில் காட்டுத் தீ பரவும் பகுதிகளில் இருந்து சுமார் 4 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

 90க்கும் மேற்பட்ட முறை, மக்கள் வெளியேற வேண்டும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. நகரம் முழுவதும் ஆறு பகுதிகள் தீ விபத்துகளால் எரிந்து சேதம் அடைந்துள்ளது. வைத்தியசாலைகள், எரிபொருள் நிரப்பும் நிலையம், உணவகங்கள் என அனைத்து பகுதியும் கருகியுள்ளன.

மாலிபூ பகுதியில் மட்டும் 13 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள பகுதிகள் கருகி சேதமடைந்துள்ளது. தீயை அணைப்பதற்காக அமெரிக்கா கோடிக்கணக்கான ரூபாயை செலவழித்து வருகிறது. தீயணைப்பு பணியில் கனடாவும் இணைந்துள்ள நிலையில், பல ஹாலிவுட் நடிகர்களின் வீடுகளும் தீக்கிரையாகி உள்ளது. மேலும் பல பகுதிகள் தீ விபத்து அபாயத்தில் இருக்கிறது. பொதுமக்கள் பலர் வீடுகளை இழந்துள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயால் அமெரிக்காவுக்கு சுமார் ரூ.13 இலட்சம் கோடி வரை இழப்பு ஏற்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல தனியார் வானிலை நிறுவனம் இந்த மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது. எனினும், அமெரிக்க அரசு அதிகாரிகள் இது குறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், காட்டுத் தீயால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து தீ பரவி வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. பலர் பலத்த தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 22,000 ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ பரவியுள்ள நிலையில், தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்புத்துறை தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X