2025 மே 14, புதன்கிழமை

“குறி வைத்து சீனா தாக்குகிறது”

Freelancer   / 2023 ஒக்டோபர் 23 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கு பசிபிக் கடலில், கடல்வழி போக்குவரத்திற்கு மிக அத்தியாவசியமான இடமாக கருதப்படுவது வட சீன கடல் பகுதி. இந்த கடற்பகுதி வழியாக உலகின் 21 சதவீதத்திற்கும் அதிகமான உலக வர்த்தக கப்பல் போக்குவரத்து கையாளப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இந்த வட சீன கடல் பகுதியில் இரண்டாம் தாமஸ் ஷோல் (shoal) எனும் நீர்மட்டம் குறைவான கடல் பகுதி உள்ளது. இப்பகுதி மீது சீனாவும் பிலிப்பைன்ஸும் உரிமை கொண்டாடுவதால் சர்ச்சைக்குரிய பகுதியாக கருதப்படுகிறது.

பிலிப்பைன்ஸ் இப்பகுதியில் தன் நாட்டு கப்பல்களை நிலைநிறுத்தி இக்கப்பல்களுக்கு மாதாந்திர அத்தியாவசிய பொருட்கள், சிறிய படகுகளில் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், இரு வெவ்வேறு சம்பவங்களில் பிலிப்பைன்ஸிற்கு சொந்தமான ஒரு சரக்கு விநியோக படகின் மீதும், ஒரு கடலோர கப்பற்படை கப்பல் மீதும், சீனாவின் கடலோர கப்பற்படை கப்பல், வேண்டுமென்றே மோதியதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் இதனை மறுத்துள்ள சீனா, "பிலிப்பைன்ஸ் வேண்டுமென்றே சர்ச்சையை உருவாக்குகிறது" என தெரிவித்துள்ளது.

 இது குறித்து பிலிப்பைன்ஸ் "எங்கள் நாட்டு கடல்வழி போக்குவரத்தை சீனா தடுக்க நினைக்கிறது. இதற்காக அந்நாடு ஆபத்தான வழிமுறைகளை கையாண்டு வருகிறது. இதனால் கடல் பயணம் மேற்கொள்ளும் எங்கள் நாட்டினரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது" என தெரிவித்துள்ளது.

இக்கடல் பகுதியில் பிலிப்பைன்ஸை தவிர மேலும் பல நாடுகளின் பல பகுதிகளுக்கு, சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக வியட்னாம், தைவான், மலேசியா மற்றும் புரூனே ஆகிய நாடுகள் சீனாவுடன் சுமூக உறவில்லாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X