2024 மே 11, சனிக்கிழமை

தலிபானை ஆதரிக்கிறது பாகிஸ்தான்

Editorial   / 2021 ஓகஸ்ட் 02 , பி.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் தமது வன்முறை கலாசாரத்தை அரங்கேற்றியுள்ளதாக ஆப்கான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு ஆப்கான் வெளியுறவு அமைச்சு செய்திக்குறிப்பொன்றை அண்மையில் (ஜூலை24)  அனுப்பியிருந்தது.  

கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் தலிபான்கள் நாடு முழுவதும் சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தி வன்முறைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. 

அவர்கள் 193 மாவட்ட மையங்களையும் 19 எல்லை மாவட்டங்களையும் கைப்பற்றியுள்ளனர். இவற்றில் ஒன்பது மாவட்ட மையங்களை ஆப்கான் தேசிய பாதுகாப்புப்படை திரும்பக் கைப்பற்றியுள்ளது.

தலிபான்கள் 10 எல்லை தாண்டும் இடங்களையும் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். ஏப்ரல் 14 முதல் ஆப்கான் தேசிய பாதுகாப்புப் படையைச்சேர்ந்த கிட்டத்தட்ட நான்காயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 1,600 பேர் பிடிக்கப்பட்டுள்ளனர். என அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறைகளில் பெண்கள் பிள்ளைகள் உட்பட 2000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2200 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்களின் இராணுவ தாக்குதலை பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ ஆதரிப்பதாகவும் அது தலிபான்களை ஹக்கானி வலையமைப்பு, மற்றும் அல்-கொய்தாவுடன் இணைக்க முயற்சிப்பதாகவும் ஆப்கான் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

பாகிஸ்தான் இராணுவம் கிழக்கு மாகாணங்களில் பயிற்சி முகாம்களை அமைப்பதற்கும்  ஆட்சேர்ப்புக்கும் தலிபான்களுக்கு உதவுவதாக தெரிகிறது.

உருஸ்கன் மாகாணத்தில் பயிற்சி நிலையங்களை அமைக்க தலிபான்களுக்கு அல்-கொய்தா உதவுவதாக ஆப்கான் பாதுகாப்புப்படையினர் நம்புகின்றனர். ஆப்கானிஸ்தானில் அதன் தளத்தை விரிவுபடுத்த தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்ளவும் அது முயற்சிக்கிறது.

தலிபான்களால் இவ்வாறு மனித உரிமைகள் மீறப்பட்டும் வன்முறைகள் நடத்தப்பட்டும் வரும் நிலையில் தலிபான்கள் ஓர் அறிவித்தலை வெளியிட்டிருப்பதாகவும் அதில் தலிபான் போராளிகள் பதினைந்து வயதுக்கு மேற்பட்ட பெண்களைகளையும் 45 வயதுக்குட்பட்ட விதவைகளையும் பதிவு செய்து வசிரிஸ்தானிலுள்ள மதரஸாக்களுக்கு அனுப்புமாறும் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மைய ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை நடவடிக்கைகளில் காபுல் உட்பட பல மாகாணங்களில் 226 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டடுள்ளனர். 135 பேர் காயமடைந்துள்ளனர் என ஆப்கான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .