Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 25 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்லாந்து - கம்போடியா இடையே நடைபெற்று வரும் ராணுவ மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, எல்லை பகுதியில் வசிக்கும் இரு நாடுகளைச் சேர்ந்த மக்களும் இடத்தை காலி செய்து பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து வருகின்றனர். தாய்லாந்து எல்லையில் இருந்து 1,38,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளான தாய்லாந்து - கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. தாய்லாந்தின் சுரின் மாகாண எல்லையில் உள்ள தா மியூன் தோம் எனும் இந்து கோயிலை மையமாக வைத்து இந்த எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது.
இந்த கோயில், தங்கள் நாட்டுக்குச் சொந்தமானது என கம்போடியா கூறி வரும் நிலையில், தாய்லாந்து அது தங்கள் நாட்டுக்கு உரியது என உரிமை கோரி வருகிறது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரித்து ராணுவ மோதல்கள் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றன.
இந்த மோதல் காரணமாக, தாய்லாந்தின் எல்லையோர மக்கள் 1,38,000 பேர் தங்கள் பகுதியில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். இவர்களில், பலர் அரசு ஏற்படுத்தி உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரு நாட்டு ராணுவத்துக்கு இடையேயான மோதல் காரணமாக தாய்லாந்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில், 14 பேர் பொதுமக்கள் என்றும், ஒருவர் ராணுவ வீரர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 46 பேர் காயமடைந்துள்ளதாகவும், இவர்களில் 15 பேர் ராணுவ வீரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவ மோதலுக்கு கம்போடியாதான் காரணம் என குற்றம் சாட்டியுள்ள தாய்லாந்தின் தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சாயாசாய், மோதல் முடிவுக்கு வராவிட்டால் அது போராக வெடிக்கும் என எச்சரித்துள்ளார். “நாங்கள் அண்டை நாடுகள் என்பதால் சமரசம் செய்ய முயற்சித்தோம். அதேநேரத்தில், அவசர காலங்களில் உடனடியாக செயல்பட எங்கள் நாட்டு ராணுவத்துக்கு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். நிலைமை மோசமடைந்தால், அது போராக உருவாகலாம், இருப்பினும் இப்போதைக்கு, அது மோதல் என்ற அளவில் மட்டுமே உள்ளது” என்று பாங்காக்கில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.
தாய்லாந்து ராணுவத்தின் தாக்குதல் காரணாக கம்போடியா எல்லையில் வசிக்கும் மக்களும் வெளியேறி வருகின்றனர். எல்லையிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள கம்போடிய நகரமான சாம்ராங்கில் இருந்து பலரும் பொருட்களுடன் வாகனங்களில் வேகமாக வெளியேறி வருவதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.
கனரக ஆயுதங்கள், பீரங்கிகள் மற்றும் BM-21 ராக்கெட் அமைப்புகள் மூலம் குண்டுகளை வீசியதாக கம்போடியப் படைகள் தெரிவித்தன. “தகுந்த பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று தாய்லாந்து ராணுவம் கூறியுள்ளது. இதனிடையே, இரு நாடுகளும் மோதலை கைவிட்டு அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று, அமெரிக்கா, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகளும் ஐநா அமைப்பும் கோரி வருகின்றன.
42 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago