2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

”நான் இந்தியாவின் மருமகள்”:பாக். பெண் சீமா

Editorial   / 2025 ஏப்ரல் 27 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைகளால் அச்சமடைந்துள்ள பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், "நான் இந்தியாவின் மருமகள், என்னை இங்கேயே இருக்க அனுமதிக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 2023, ஜூலையில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தவர் சீமா ஹைதர். பாகிஸ்தானின் சிந்து மாகாணம், கராச்சி நகரை சேர்ந்த இவர் தனது இந்திய காதலர் சச்சின் மீனாவை திருமணம் செய்துகொள்வதற்காக பாகிஸ்தானை விட்டு வெளியேறினார். ஏற்கெனவே திருமணமான சீமா ஹைதர், 4 குழந்தைகளுக்கு தாய் ஆவார்.

இந்நிலையில் தனது 4 குழந்தைகளுடன் நேபாளம் வழியாக சட்டவிரோதாக இந்தியாவுக்குள் நுழைந்தார். உ.பி.யின் கவுதம புத்தர் நகர் மாவட்டம், ரபுபுரா பகுதியில் தனது காதலர் சச்சின் மீனாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவரை கடந்த 2023 ஜூலையில் அதிகாரிகள் பிடித்தனர். தற்போது உ.பி.யின் கிரேட்டர் நொய்டாவில் சச்சினுடன் சீமா வசித்து வருகிறார். இந்நிலையில் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை ஏப்ரல் 27 முதல் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் நாடு கடத்தப்படலாம் என சீமா அச்சம் அடைந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில், "நான் பாகிஸ்தான் மகள். ஆனால் இப்போது இந்தியாவின் மருமகள். நான் பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை. நான் இந்தியாவிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் உ.பி. முதல்வர் யோகியை வேண்டுகிறேன்" என்று கூறியுள்ளார். மீனாவை மணந்த பிறகு தான் இந்து மதத்தை ஏற்றுக்கொண்டதாக சீமா கூறுகிறார்.

இந்நிலையில் சீமா தொடர்ந்து இந்தியாவில் வசிக்க அனுமதிக்கப்படுவார் என அவரது வழக்கறிஞர் ஏ.பி.சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “சீமா இனி பாகிஸ்தான் குடிமகள் அல்ல. அவர் கிரேட்டர் நொய்டாவில் வசிக்கும் சச்சின் மீனாவை மணந்தார். சமீபத்தில் அவர்களுக்கு பாரதி மீனா என்ற மகள் பிறந்தாள். சீமாவின் குடியுரிமை தற்போது அவரது இந்திய கணவருடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசின் உத்தரவை சீமா விவகாரத்துடன் பொருத்திப் பார்க்க கூடாது" என்றார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X