2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பங்களாதேஷில் மோதல்: 4 பேர் பலி; 50 பேருக்கு காயம்

Editorial   / 2025 ஜூலை 17 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பங்களாதேஷத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக அவர் தனது பதவியை இழந்து, அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பு சார்பில், நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாணவர்கள் பலர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

பங்களாதேஷத்தின் அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வு ஓராண்டை நிறைவு செய்ய உள்ளதை முன்னிட்டு, மாணவர்களின் அரசியல் கட்சியான தேசிய குடிமக்கள் கட்சி சார்பில் இந்த மாதத்தில்( ஜூலை ) நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக,  கோபால்கஞ்ச் நகரில் பேரணி வியாழக்கிழமை (17) நடத்தப்பட்டது.

ஷேக் ஹசீனாவின் மூதாதையர்கள் வாழ்ந்த நகரமான இது, அவாமி லீக் கட்சியின் கோட்டையாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை (17)  காலை பலத்த பாதுகாப்புடன் பேரணி தொடங்கியது. அப்போது, அவாமி லீக் கட்சியினர், வன்முறையில் ஈடுபட்டனர். பல்வேறு வாகனங்களுக்குத் தீ வைத்த அவர்கள், பொலிஸார் மீது தாக்குதல்களை நடத்தினர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வன்முறையை அடுத்து, மாணவர் தலைவர்கள் காவல் நிலையங்களுக்குள் தஞ்சம் புகுந்தனர். பலர், பொலிஸ் பாதுகாப்புடன் அண்டை மாவட்டங்களுக்கு விரைந்தனர்.

கோபால் கஞ்ச் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து தற்போது அங்கு கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

இதனிடையே, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாணவர் தலைவர் நஷீத் இஸ்லாம் வலியுறுத்தியுள்ளார். மேலும், அண்டை மாவட்டமான பரித்பூரில் அடுத்த பேரணி நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

முகம்மது யூனுஸ் பதவியேற்றதில் இருந்து பங்களாதேஷத்தில் தொடர் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பங்களாதேஷத்தில் உள்ள சிறுபான்மை இந்துக்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவங்களால், அந்நாடு சர்வதேச அளவில் கடும் விமர்சனங்களைச் சந்தித்தது.

சட்டம் ஒழுங்கு நிலைமை மோசடைந்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த யூனுஸ் அரசு தவறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாட்டில் நல்லிணக்கம் குறைந்து வருவதாகவும், மக்களிடையே பிளவு அதிகரித்து வருவதாகவும் கூறும் யூனுஸ் எதிர்ப்பாளர்கள், நிலைமை மேம்படவில்லை என்றால் ஜனநாயகம் ஆபத்துக்குள்ளாகும் என எச்சரித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X