2025 நவம்பர் 05, புதன்கிழமை

பதாதை விழுந்து இளம்பெண் பலி: ‘ஜெயகோபால் விரைவில் கைது செய்யப்படுவார்’

Editorial   / 2019 செப்டெம்பர் 25 , பி.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பதாதை சரிந்து விழுந்து இளம்பெண் பலியான வழக்கில் ஜெயகோபால் விரைவில் கைது செய்யப்படுவார் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் ரவியின் ஒரே மகளான சுபஸ்ரீ, இம்மாதம் 12ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்றபோது, சட்டவிரோதமாக வீதியின் நடுவே வைக்கப்பட்டிருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அ.இ.அ.தி.மு.க) நிர்வாகி இல்லத் திருமண பதாதை சரிந்து விழுந்தது.

இதனால் நிலை தடுமாறி வீதியில் விழுந்த சுபஸ்ரீ மீது, பின்னால் வேகமாக வந்த லொறி ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார். இச்சம்பவம் தொடர்பாக இம்மாதம் 13ஆம் திகதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், என். சேஷசாயி ஆகியோர் விசாரித்தபோது தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று (25) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு சட்டத்தரணியிடம் நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். இந்த வழக்கைப் பொருத்தவரை பிரதான எதிரியான ஜெயகோபால் மீது 304(2) வழக்கு பதிவு செய்தபோதும் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அரசிடம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் ஜெயகோபால் சட்டவிரோதமாக பதாதை வைத்த நிலையில் லொறி ஓட்டுநர் மீதான வழக்குடன் அவரைச் சேர்த்தது ஏன் எனவும் ஜெயகோபால் இங்கு இருக்கிறாரா அல்லது வெளிநாட்டுக்கு தப்பிவிட்டாரா எனவும் நீதிபதிகள் கேட்டுள்ளனர். பதாதை விவகாரத்தில் பல உத்தரவுகளை பிறப்பித்தாலும் அதை அமுல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நீதிபதிகள் குற்றஞ்சாட்டினர்.

இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயற்பட்ட பொலிஸார் மீது என்ன நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, பள்ளிக்கரணை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உதவிப் பொறியாளர், செயற்பொறியாளர் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பு சட்டத்தரணி பதிலளித்தார்.

மேலும் ஜெயகோபாலைப் பிடிக்க துணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X