2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பாராளுமன்றத்தை கைப்பற்ற முயன்ற போராட்டக்காரர்கள்

Freelancer   / 2025 டிசெம்பர் 21 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷில் கொலை செய்யப்பட்ட இளைஞர் அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி இறுதிச் சடங்கில் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் பங்கேற்றார். பாராளுமன்றத்தைக் கைப்பற்ற போராட்டக்காரர்கள் முயற்சி செய்ததால் பதற்றம் ஏற்பட்டது. பாராளுமன்றம், அனைத்து அரசு அலுவலகங்களிலும் இராணுவம், பொலிஸ் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிரான மாணவர் அமைப்புகளின் போராட்டத்தை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அங்கு செயல்பட்டு வருகிறது. இதனிடையே, பங்களாதேஷில் அடுத்த ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் போட்டியிட டாக்கா 8 ஆவது தொகுதியில் ஷெரீப் உஸ்மான் ஹாடி என்ற மாணவர் தலைவர் கள மிறங்கினார். கடந்த 12 ஆம் திகதி இவர் டாக்காவில் பிரச்சாரம் தொடங்கினார். பின்னர் சைக்கிள் ரிக் ஷாவில் செல்லும் போது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஹாடியை தலையில் சுட்டுவிட்டு தப்பினர். உடனடியாக டாக்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஹாடி, மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி 3 நாட்களுக்கு முன்பு ஹாடி உயிரிழந்தார். இந்த தகவல் பரவியதும் நேற்று முன்தினம் பங்களாதேஷில் பெரும் கலவரம், வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து பதற்றம் உள்ள இடங்களில் பொலிஸார், இராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதனிடையே, மைமென்சிங் நகரில் ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ் (வயது 27) என்ற இளைஞர், முஸ்லிம் மதத்தை பற்றி அவதுாறாக பேசியதாக கூறி ஒரு கும்பல் நேற்றுமுன்தினம் அவரை சுற்றி வளைத்து கொடூரமாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் தீபு சந்திர தாஸின் உடலை மரத்தில் கட்டி தொங்கவிட்டு தீ வைத்து எரித்தது. இதனால் வங்கதேசத்தில் இந்துக்கள் உட்பட சிறுபான்மையினர் இடையே பீதி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பொலிஸார் முக்கிய இடங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட ஷெரீப் உஸ்மான் ஹாடியின் உடல் சிங்கப்பூரில் இருந்து நேற்றிரவு டாக்கா கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அவரது இறுதி ஊர்வலம் நேற்று பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. மேலும் ஹாடியின் மறைவையொட்டி ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த ஊர்வலத்தில் இடைக்கால அரசுத் தலைவர் முகமது யூனுஸ் பங்கேற்றார். மேலும், இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஹாடியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பங்களாதேஷின்  தேசிய கவிஞர் காஸி நஸ்ருல் இஸ்லாமின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையில், பங்களாதேஷில் தொடர்ந்து போராட்டம், பேரணி, வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று மாலை பங்களாதேஷ் பாராளுமன்ற வளாகம் முன்பு குவிந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். பின்னர் அவர்கள் பாராளுமன்றத்துக்கு உள்ளே நுழைய முயற்சித்தனர். பாராளுமன்றத்தைக் கைப்பற்ற முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இராணுவ வீரர்கள், பொலிஸார் அவர்களை தடுத்து விரட்டியடித்தனர். தலைநகரில் பதற்றம் நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,பாராளுமன்றம், அனைத்து அரசு அலுவலகங்களிலும் இராணுவத் தினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டு உள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X