2025 மே 09, வெள்ளிக்கிழமை

மீண்டும் மிரட்டும் பாகிஸ்தான்

Freelancer   / 2025 மே 06 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நதிநீரை அபகரிக்கவோ, தடுக்கவோ எடுக்கும் எந்தவொரு முயற்சியும் போர் நடவடிக்கையாக கருதப்படும் என்று, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

 பஹல்காமில் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகி உள்ளது. போர் பதற்றத்தை தணிக்க பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. அதேவேளை, சில நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்து வருகின்றன.

இதனிடையே பாகிஸ்தான் அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தி இந்தியாவை ஆத்திரமூட்டி வருகிறது. 

இந்நிலையில், திங்கட்கிழமை (5) 120 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கும் ஏவுகணைகளை சோதித்தது. தரையில் இருந்து தரை இலக்கை தாக்கும் 'படா வரிசை' ஏவுகணைகளை சோதித்தது.

'சிந்து' என்ற பெயரில் நடத்தி வரும் பயிற்சியின் ஒருபகுதியாக இந்த ஏவுகணை சோதனை நடத்தியதாக இராணுவம் கூறியுள்ளது. 

வீரர்களின் தயார் நிலை, ஏவுகணைகளின் துல்லியம் உள்ளிட்டவற்றை சோதிக்கும் வகையில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தங்களை தாக்கினால் இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் தொடர்ந்து மிரட்டி வருகிறது. இதை மீண்டும் ஒருமுறை வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

 அதன்படி ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி செய்தியாளர்களிடம் கூறுகையில், 

“எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. நாங்கள் எங்கள் முழு படையையும் பயன்படுத்துவோம். அது பாரம்பரியரீதியாகவும், அணு ஆயுத வழியிலும் இருக்கும்.

இதைப்போல நதிநீரை அபகரிக்கவோ, தடுக்கவோ அல்லது திருப்பிவிடவோ எடுக்கும் எந்தவொரு முயற்சியும் பாகிஸ்தானுக்கு எதிரான போர் நடவடிக்கையாக கருதப்படும். அதற்காக அணு ஆயுதம் உட்பட முழு பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும். எனினும் இரு நாடுகளும் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும். 

“இரு நாடுகளும் அணுசக்தி நாடாக இருப்பதால் பதற்றத்தை தணிப்பது அதிக தேவையாக உள்ளது.

பஹல்காம் தாக்குதல் குறித்து நியாயமான மற்றும் நம்பகமாக விசாரணை அவசியம். இதில் சர்வதேச சமூகத்தின் பங்கு இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சீனா மற்றும் ரஷ்யா போன்ற சக்திகள் இந்த விசாரணைகளில் பங்கேற்க முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X