2025 நவம்பர் 05, புதன்கிழமை

மும்பை ஆரே பகுதியில் மெட்ரோ பணிக்காக மரங்களை வெட்டத் தடை

Editorial   / 2019 ஒக்டோபர் 07 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் மகாராஷ்ரா மாநிலத் தலைநகரான மும்பையின் ஆரே பகுதியில் மெட்ரோ ரயில் நிலையப் பணிகளுக்காக மரங்களை வெட்ட மகாராஷ்ரா அரசுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஆரே காலனி பகுதியில் மெட்ரோ நிலையத்துக்கான வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், இதற்காக ஆரே காலனி வனப்பகுதியில் உள்ள சுமார் 2, 700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதி அளித்திருந்தது.

மரங்களை வெட்ட எதிர்ப்புத் தெரிவித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பல மாதங்கள் நடந்து வந்த இந்த வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து மரங்களை வெட்டும் பணி நள்ளிரவே தொடங்கியது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக தாமே முன்வந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்து, நீதியரசர்கள் அருண் மிஸ்ரா, அசோக் பூஷன் தலைமையிலான விடுப்புக்கால சிறப்பு அமர்வு இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அப்போது, ஆரே பகுதியில் மெட்ரோ ரயில் நிலைய பணிக்காக மரங்களை வெட்டுவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த நீதியரசர்கள், மேற்கொண்டு மரங்களை வெட்டத் தடை விதித்தனர்.

மேலும், மரம் வெட்ட எதிர்ப்பு தெரிவித்து யாராவது கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். இதுவரை எத்தனை மரங்கள் வெட்டப்பட்டு உள்ளன என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்ததுடன், அடுத்த கட்ட விசாரணையை இம்மாதம் 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X