2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

யார் இந்த இப்ராஹிம் ரெய்சி?

Freelancer   / 2024 மே 20 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானின் எட்டாவது ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி பயணித்த ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கிய நிலையில், இந்த விபத்தில் அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அவர் குறித்த பின்னணி பற்றி இங்கு அறிவோம்.

63 வயதானவ இப்ராஹிம் ரெய்சி, கடந்த 2021இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பதிவான 28.9 மில்லியன் வாக்குகளில் 62 சதவீத வாக்குகளை பெற்றார். அதற்கு முன்பாக அந்த நாட்டின் நீதித்துறையில் முக்கிய பங்காற்றியவர். தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். 2017இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

ஈரான் நாட்டின் மூத்த தலைவர் பொறுப்பை கவனித்து வரும் அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்ததாக அந்த பொறுப்பை இப்ராஹிம் ரெய்சி கவனிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் தான் அவர் ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கினார். அவரது நீதித்துறை சார்ந்த செயல்பாடு மற்றும் மத ரீதியிலான பற்று காரணமாக பரவலாக அறியப்பட்டவர்.

15 வயதில் ஈரான் நாட்டின் ‘Qom’மத பாடசாலையில் பயின்றார். அப்போது இஸ்லாமிய அறிஞர்கள் பலரிடம் பாடம் கற்று, அதில் தேர்ச்சி பெற்றார். 1981இல் அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அதில் இருந்து தொடங்கிய அவரது நீதித்துறை பயணம் நாட்டின் தலைமை நீதிபதி வரை தொடர்ந்தது. 1983-ல் ஜமீலி அலமோல்ஹோதாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

1988இல் ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இடதுசாரி ஆதரவாளர்களுக்கு மரண தண்டனையை அரசு வழங்கியது. அதனை மேற்பார்வையிடும் பொறுப்பை கவனித்தார். அதன் காரணமாக அமெரிக்கா போன்ற நாடுகளின் எதிர்ப்பைப் பெற்றார்.

ஈரான் மதத் தலைவர் மறைந்த கோமேனி மற்றும் தற்போதைய மதத் தலைவர் காமெனி உடன் நெருக்கமான தொடர்பை பெற்றவர். அது தவிர அரசு, இராணுவம் மற்றும் சட்டமன்றம் உட்பட நல்ல உறவை கொண்டிருந்தார்.

ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி ஆட்சியில் ஈரான் நாட்டு மக்கள் பரவலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது ஆட்சி மக்கள் அதிருப்தியை பெற்றிருந்தது. குறிப்பாக கடந்த 2022ஆம் ஆண்டின் செப்டம்பரில் மாஷா அமினி என்ற 22 வயது பெண் முறையாக ஹிஜாப் அணியாத காரணத்துக்காக கைது செய்யப்பட்டார். அவர் பொலிஸ் காவலில் இருந்த போது உயிரிழந்தார். அது அந்த நாட்டில் மிகப் பெரிய போராட்டமாக மாறியது.

வீதிகளில் அந்த நாட்டுப் பெண்கள், தங்களது ஹிஜாப்புக்கு தீயிட்டனர். பல மாத காலம் நீடித்த அந்தப் போராட்டத்தை அரசு தனது அதிகாரத்தின் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்ததாக உலக நாடுகள் தெரிவித்துள்ளன.

இந்த சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் உடனான மோதல் மீண்டும் வெடித்த போது அணுகுண்டு தயாரிப்பதை தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என ஈரான் தெரிவித்தது. ரெய்சி இரண்டாவது முறையாக மீண்டும் ஜனாதிபதி ஆவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X