Editorial / 2025 செப்டெம்பர் 11 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஊழல் முறைகேடுகள், வேலையின்மை, கருத்துச் சுந்திரத்துக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நேபாளத்தில் அரசுக்கு எதிராக வெடித்த இளைஞர்களின் போராட்டத்தால் பதற்றம் நீடித்து வருகிறது.
நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. அவருடன் சேர்ந்து, நாட்டின் அதிபராக இருந்த ராம்சந்திர பவுடேலும் ராஜினாமா செய்தார். இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தில் நிலவி வரும் அரசியல் பதற்றமான சூழ்நிலை காரணமாக சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மேலும், நாட்டின் தலைநகர் காத்மாண்டு உட்பட பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்கின்றன. ஊழல் அரசியல்வாதிகளின் வசிப்பிடங்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
நேபாளத்தில் அமைதி திரும்பாத நிலையில், பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. காத்மாண்டு முழுவதும் போலீஸாரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி? - நேபாளத்தில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் பிரதிநிதியினரை, உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் செயலர் புதன்கிழமை சந்தித்துப் பேசினார். 4 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, சுசீலா கார்கியை, இடைக்கால பிரதமராக நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்ததாக பார் அசோசியேஷன் செயலர் தெரிவித்தார்.
எனவே, நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான சுசீலா கார்கி, நேபாளத்தின் இடைக்கால பிரதமராக விரைவில் நியமிக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அரசியல் பின்புலம் ஏதுமில்லாதவர், நடுநிலையாகவும் நம்பகத்தன்மையுடன் செயல்படக் கூடியவர் என்ற அடிப்படையில் அவரை ‘டிக்’ செய்ததாக ‘ஜென் ஸீ’ போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டக்காரர்களில் விருப்பப்படி, இடைக்கால பிரதமர் பொறுப்பை ஏற்க முன்வந்துள்ள சுசீலா கார்கி, நேபாளத்திலுள்ள பிராட் நகரில் 1952-ல் பிறந்தார். இவர் தனது முதுநிலை படிப்பை இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். அதன் பின்னர் நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை படித்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2017 வரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சுசீலா கார்கி, தேர்தல் விவகாரம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளில் தீர்ப்பு வழங்கியவர். நீதித் துறை மூலம் ஜனநாயகத்தைக் காப்பவர் என்று போற்றப்பட்டவர். இவருக்கு எதிராக நேபாள பாராளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு, மக்களின் அழுத்தத்தால் அது கைவிடப்பட்ட வரலாறும் உண்டு.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .