2025 மே 05, திங்கட்கிழமை

வங்கதேசத்தில் வெடித்த வன்முறை ; 18 பேர் பலி

Freelancer   / 2024 ஜூலை 18 , பி.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வங்கதேசத்தில் வெடித்துள்ள வன்முறையால் இதுவரையில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. மேலும், இந்த வன்முறையில் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதுமட்டுமின்றி ரயில்கள், மெட்ரோ மற்றும் இணையமும் பாதிக்கப்பட்டதுடன், ஒரு தொலைக்காட்சி நிலையத்திற்கு தீ வைத்து எரிக்கப்படடது.

வங்கதேசம் - பாகிஸ்தான் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு அரசுப் பணியில் 30 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை வங்கதேசத்தில் இருந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு மாணவர்கள் போராட்டத்தால் இடஒதுக்கீடு முறை நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், வங்கதேசத்தில் மீண்டும் 30 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டிருந்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்த இடஒதுக்கீடு அறிவிப்பை எதிர்த்து வங்கதேசம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தை துவங்கினர். ஆனால், ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பினர், போராட்டம் நடத்துபவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் வன்முறையாக மாறியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மாணவர்கள், போலீஸார் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன், விடுதிகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இடஒதுக்கீட்டை மீண்டும் நிலைநிறுத்த உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 7ஆம் தேதி விசாரிக்கவுள்ளது. அதுவரையில் மாணவர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் ஹசீனா வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, வங்கதேசத்தில் நிலவி வரும் கலவரச்சூழலில் அங்கு வசிக்கும் இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் பயணத்தைத் தவிர்க்குமாறும், வெளியில் செல்வதை குறைத்துக் கொள்ளுமாறும் இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X