2025 ஜூலை 09, புதன்கிழமை

வர்ண இரவுகள்

Gavitha   / 2014 டிசெம்பர் 15 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


எந்தவொரு விளையாட்டு வீரனும் தான் விளையாட்டில் சாதிக்கும்போது, தனக்குரிய கௌரவம் பாராட்டுகளை பெறும்போதே தன்னை மேலும் வளப்படுத்திக்கொள்ள எத்தனிப்பான்.

அந்தவகையில் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சால் நடத்தப்படும் வடமாகாண வர்ண இரவுகள் நிகழ்வு, வடமாகாணத்திலுள்ள விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு பெரும் உந்துதலாக இருக்கும்.

வடமாகாண விளையாட்டு வீரர்கள் தேசிய ரீதியில் தற்போது சிறப்பாக செயற்பட்டு வருகின்றனர். அவர்களின் திறன்கள் மேலும் விருத்தியடைய அவர்களை ஊக்குவிக்க வேண்டிய தேவை துறை சார்ந்த அதிகாரிகளுக்கு இருக்கின்றது.

வடமாகாண வர்ண இரவுகள் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியால் உருவாக்கப்பட்டு, வீரர்களுக்கு சிறந்த கௌரவங்கள் கொடுக்கப்பட்டு வந்தன.

பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டிகளில் தேசிய ரீதியில் தடம் பதித்தவர்கள், திறந்த போட்டிகளில் தேசிய ரீதியில் தடம் பதித்தவர்கள், தேசிய இளைஞர் சம்மேளனத்தால் நடத்தப்படும் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டவர்கள் என விளையாட்டுத்துறையில் சாதிக்கும் பல வீரர்கள் கௌரவிக்கப்படுகின்றனர்.

தொடர்ந்து வடமாகாண சபை உருவாக்கப்பட்ட பின்னர், 2013ஆம் ஆண்டு முதல் வடமாகாண கல்வி அமைச்சு இந்த நிகழ்வை நடத்தி வருகின்றது.
இவ்வருடத்துக்குரிய நிகழ்வு கடந்த 12ஆம் திகதி சாவகச்சேரி நகர சபை பொன்விழா மண்டபத்தில் வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்த வர்ண இரவுகளில் சாதனை வீர, வீராங்கனைகளுக்கான விருதுகளை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழங்கினார். இந்நிகழ்வுக்கு இலங்கை தேசிய வலைபந்தாட்ட அணியில் இடம்பிடித்த வீராங்கனை சிவலிங்கம் தர்சினியும் கலந்துகொண்டு வீரர்களை பாராட்டினார்.

தடகளம், மைதானம் மற்றும் அணிகளுடனான போட்டிகளில் தேசிய ரீதியில் திறமையை வெளிக்காட்டிய வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர். குறிப்பாக விமானப்படையின் கூடைபந்தாட்ட அணியில் இடம்பெற்ற யாழ். இந்து கல்லூரி வீரன் வாகீசன், இலங்கை கால்பந்தாட்ட குழாமில் இடம்பிடித்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் செபமாலை ஞானரூபன் ஆகியோர் சுட்டிக்காட்டப்படவேண்டியவர்கள்.

இதனைவிட, தேசிய பாடசாலைகளுக்கிடையிலான  போட்டிகளில் தங்கள், வெள்ளி, வெண்கலம் மற்றும் வர்ண விருதுகள் பெற்று சாதனை படைத்த வீர, வீராங்கனைகள் இதன்போது கௌரவிக்கப்படுகின்றனர்.

இது போன்று வர்ண இரவுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தாலும், இலங்கை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகளில் வெற்றியீட்டிய யாழ்ப்பாண பல்கலைக்கழக வீர, வீராங்கனைகளை கௌரவிக்கும் முகமாக நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .