2025 ஜூலை 09, புதன்கிழமை

யாழின் தேவையை நிறைவேற்றவுள்ள துரையப்பா மைதானம்

Kanagaraj   / 2014 டிசெம்பர் 22 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

யாழ்ப்பாணத்தின் தேவையாக இருந்த நவீன வசதிகளைக்கொண்ட விளையாட்டுமைதானம், தற்போது யாழ். துரையப்பா மைதானத்தின் புனரமைப்பு மூலம் நிறைவேறவுள்ளது.

யாழ்ப்பாணத்தின் மத்தியில் அனைவருக்கும் ஏற்றவிதத்தில் பொது மைதானமாக யாழ். துரையப்பா விளையாட்டரங்கு விளங்குகின்றது.
கழகங்கள் நடத்தும் விளையாட்டுப்போட்டிகள் தொடக்கம் தேசிய மட்ட விளையாட்டுப்போட்டிகள் வரை துரையப்பா மைதானத்தில் நடத்தப்படுகின்றன.

விளையாட்டுப்போட்டிகள், கால்பந்தாட்ட போட்டிகள், ஹொக்கி போட்டிகள், களியாட்ட நிகழ்வுகள் என்பன இந்த மைதானத்தில் நடத்தப்படுகின்றன.

இந்த மைதானத்தின் தேவைகள் அதிகமாக இருந்தாலும் அதனுடைய தரம் உரிய முறையில் பேணப்படவில்லை. பல வசதிகள் இல்லாத நிலையில் இந்த மைதானம் நீண்டகால காணப்பட்டது.

அத்துடன், மைதானத்துக்குள் பாரிய வாகனங்கள் கொண்டு செல்லப்படுவதால், மைதானத்தில் பள்ளங்கள் ஏற்பட்டு, விளையாட்டு வீரர்கள் உபாதைக்கு உள்ளாகும் நிலையும் அதிகரித்து காணப்பட்டது.

மாநகர சபையின் அதிகாரத்துக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இந்த மைதானத்தை புனரமைத்து, யாழ்ப்பாணத்திலுள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கவேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக இருந்தது.

அதற்குரிய பலன் இந்தியாவின் நிதியுதவியின் மூலம் கிடைக்கப்பெற்றது.  இந்த மைதானத்தை புனரமைத்து, நவீன வசதிகள் கொண்ட மைதானமாக்கும் பொருட்டு, இந்திய அரசாங்கத்தால் 145 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

புனரமைப்பு பணிக்கான வேலைகள், கடந்த நவம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

புனரமைப்பு பணிகளில், மைதானத்துக்கான சுற்றுமதில் அமைத்தல், 400 மீற்றர் ஓட்டப்பாதை அமைத்தல், நுழைவாயில்கள் புனரமைப்பு, மலசலகூட கட்டடத்தொகுதி அமைத்தல், குடிநீர் வசதிகளை ஏற்படுத்தல், கழிவகற்றல் வேலைகள், புற்தரைக்கு நீர்தெளிக்கும் கருவிகள் பொருத்துதல், மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தல், பார்வையாளர் அரங்குக்கான கூரைகள் புனரமைத்தல் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் 2015ஆம் ஆண்டு மே மாதத்துக்கு முன் மைதானம் பாவனைக்கு விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மைதானத்தின் தேவைகளை இந்த மைதானம் பெறுமிடத்து, அது சர்வதேச தரத்திலான மைதானமாக மாற்றமடையும். அதற்கான ஆரம்ப கட்ட புனரமைப்புப் பணிகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

போட்டிகளை நடத்துவதற்கு மட்டுமல்ல, வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபடும் வசதிகளும் இந்த மைதானத்தில் அமைக்கப்படவுள்ளது.
மைதானம் புனரமைக்கப்பட்டு, பாவனைக்கு விடப்படும் போது, விளையாட்டு  வீரர்கள் அதிக பயனை அடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .