2025 ஜூலை 09, புதன்கிழமை

தடைகளை தகர்த்தெறிந்த கே.சி.சி.சியின் வெற்றிப்பாதை

George   / 2014 டிசெம்பர் 29 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்


யாழ்ப்பாண மாவட்ட துடுப்பாட்ட கழகங்களின் தரப்படுத்தலில் ஆதிக்கம் செலுத்தி வரும்  கே.சி.சி.சி என்று அழைக்கப்படும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டு கழகம், பலரின் அர்ப்பணிப்புக்கு மத்தியில் தன்னை தானே வளர்த்து கொண்டு வெற்றிப்பாதையில் பயணிக்கின்றது.

கே.சி.சி.சி கழகம் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்றுவரை வீரர்களுக்காகவோ அல்லது பயிற்சியாளருக்காகவோ வெளிக் கழகங்களை நாடிச்சென்றதில்லை. கொக்குவில் இந்து கல்லூரியிலிருந்து வெளியேறிய, பாடசாலை அணியில் இடம்பிடித்திருந்த வீரர்களை தன்னகத்தில் வைத்து, தனது பயணத்துக்கான பாதையை அமைத்துக்கொண்டது. இந்நிலை தற்போதும் தொடர்கின்றது.

1981ஆம் ஆண்டு கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் கொக்குவில் இந்துக் கல்லூரியில் இருந்து வெளியேறிய வீரர்கள் தமது திறமைகளை மேன்மேலும் வளர்த்து கொள்வதற்கு தமக்கென்று ஒரு கழகம் இல்லாத காரணத்தினால் வெளிக்கழகங்களை, நாடிச்சென்று தமது திறமைகளை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தனர்.

இதனை கவனத்திற் கொண்ட கொக்குவில் மத்திய சனசமூக நிலையம், தமது வீரர்களை தமக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் 1985ஆம் ஆண்டு கொக்குவில் மத்திய விளையாட்டுக் கழகத்தை ஆரம்பித்தது.

இதன் பிரதிபலிப்பு 1988ஆம் ஆண்டு ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழகம் நடத்திய ஆறு ஓவர்கள் கொண்ட துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் கே.சி.சி.சி அணி சம்பியனாகியது. அணியின் முதலாவது வெற்றிப்படி இதுவாகும்.

தொடர்ந்து 1989ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையால், கழக உறுப்பினர்கள் சிலர் நாட்டைவிட்டு வெளியேறினர். இக்காலகட்டத்தில் கழகத்தை வழிநடத்திய உமாசங்கர் என்பவர் கழகத்தை விட்டு விலகியபோது அணிக்கு தகுந்த  வழிநடத்துனர் இல்லை என்று அணி கலங்கி நிற்கவில்லை.

காரணம் அணியின் சிரேஷ்ட வீரர்கள் தமக்கு பின்னுள்ள வீரர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதே, பயிற்சியாளர்கள் பாடசாலை அணியின் பயிற்சியாளர்களாகவும் தம்மை செயற்படுத்தினர். இக்காலகட்டத்தில் அணியில் சிரேஷ்ட வீரர்களாக இருந்த எஸ்.கோகுலன், கே.சுதாகரன் ஆகியோர் பயிற்சியாளர்களாக செயற்பட்டனர்.

இதன் போது கழக உறுப்பினரான சிவானந்தராஜா லண்டனில் இருந்து முதன் முதலில் ஒரு தொகை கிரிக்கெட் உபகரணங்களை கழகத்துக்கு அனுப்பி வைத்து கிரிக்கெட் கழகத்தை துணிச்சலாக ஆரம்பிப்பதற்கு உறுதுணையாக இருந்தார்.

இவர்களின் வழிநடத்தலில் அணி தனது வளர்ச்சிப் பாதையை சிறந்த முறையில் வகுத்துக்கொண்டதன் பயனாக 1993, 1994, 1995ஆம் ஆண்டுகளில் சதீஸ்வரன், கேதீஸ்வரன், சசிகுமார், தனிகேஸ்வரன், றஜீவன் ஆகிய வீரர்கள் கே.சி.சி.சி மற்றும் கொக்குவில் இந்துக்கல்லூரி என இரண்டு அணிகளிலும் தமது சிறந்த திறமைகளை வெளிப்படுத்தினர். இதனால் 1999ஆம் ஆண்டு இந்த இரண்டு அணிகளும் பிரபலமாகின.  

இக்காலகட்டத்தில் கழகத்தில் மீண்டும் இணைந்த உமாசங்கர், எஸ்.கோகுலன், கே.சுதாகரன், சசிகரன் ஆகியோர் அர்பணிப்புடன் செயற்பட்டு அணியை சிறந்த முறையில் வழிநடத்தி சென்றனர்.

தமது நேர காலங்களை அதிகம் அணிக்காக செலவழித்தனர். இவ்வாறு வெளிநபர்களை நம்பியிருக்காமல் தம்மிலுள்ள திறமைகளைக் கொண்டு தம்மை வளர்த்து கொண்டனர். இக்காலகட்டத்தில் அணியில் விளையாடிய கே.கேதீஸ்வரன், எஸ்.சுபானந்த் இருவரும் தற்போது யாழ். பல்கலைக்கழக விளையாட்டு பிரிவின் விரிவுரையாளர்களாக உள்ளனர்.

தற்போதய நிலையில் கே.சி.சி.சி என்று அடையாளப்படுத்தும் அளவுக்கு அணியின் வளர்ச்சி உள்ளது. கழகத்துக்கு சொந்தமான கட்டிடம், வருடாவருடம் நடத்தும் 30 ஓவர்கள் கொண்ட துடுப்பாட்ட சுற்றுப்போட்டி, தேவையான நேரம் பயிற்சி பெற மைதானம் வழங்கி ஒத்துழைக்கும் கொக்குவில் இந்துக் கல்லூரி என தன்னிறைவுடன் காணப்படுகின்றது கே.சி.சி.சி.

கே.சி.சி.சி அணியில் திறமைகளை வளர்த்து கொண்ட பல வீரர்கள் யாழ். மாவட்ட அணிக்கு தெரிவாகியிருந்தனர். தற்போது அணியிலுள்ள வேகப்பந்து வீச்சாளர் கே.சிலோயன் தேசிய அணியின் தெரிவில் இடம்பிடித்தார். விக்கெட் காப்பாளர் எல்.ஆதித்தன் யாழ். மாட்ட அணியில் விகn;கட் காப்பாளராக உள்ளார்.

இவ்வாறு சிறந்த வீரர்களை தமது திறமைகளாலும் அனுபவங்களாலும் வளர்த்துக்கொண்ட கே.சி.சி.சி அணிக்கு ஏ.ஜெயரூபன், கே.இராகுலன், ரி.சத்தியன் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டமும் வேகப்பந்து வீச்சாளர்களான கே.சிலோயன், ஆர்.பார்த்தீபன், சகலதுறை ஆட்டக்காரர் எஸ்.யனுதாஸ் ஆகியோரின் பங்களிப்பும், சுழல்பந்து வீச்சாளர்களான எஸ்.சாம்பவன், பவிதரன் ஆகியோரின் பந்துவீச்சும் அணியின் வெற்றியின் ரகசியங்களாக இருக்கின்றன.

இவ்வாறு தமது வீரர்களின் திறமை வெளிப்பாட்டின் மூலமும் இந்த திறமைகளை வெளிக்கொண்டு வந்த பயிற்சியாளராலும் கடந்த 1988ஆம் ஆண்டு முதல் இன்று வரை வடமாகாண சம்பியன், யாழ். மாவட்ட சம்பியன் உள்ளடங்கலான 18 முறை சம்பியனாகவும் தெரிவான கே.சி.சி.சி அணி, 21 முறை இறுதிப்போட்டியில் விளையாடி சம்பியன் கிண்ணத்தை தவறவிட்டுமுள்ளது. 1 முறை முன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

இதன் வளர்ச்சி யாழ். சென்றல் விளையாட்டுக்கழகம் வருடந்தோறும் வெளியிடும் யாழ். அணிகளின் தரப்படுத்தலில் கே.சி.சி.சி 2013ஆம் ஆண்டு, முதல் இடத்தையும் 2014ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது.

You May Also Like

  Comments - 0

  • aravinth Thursday, 01 January 2015 09:16 AM

    kcccsc always keeps uniqueness

    Reply : 0       0

    s.srinivasan Sunday, 04 January 2015 04:27 PM

    Kccc is have very dicepline players

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .