2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

விண்ணில் உயர்ந்த கலையம்ச காற்றாடிகள்

George   / 2015 ஜனவரி 19 , பி.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


யாழ்ப்பாணம் வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தால் நடாத்தப்படும் விநோத, சித்திர பட்டம் விடும் போட்டி, பொழுதுபோக்கு அம்சம் என்ற எல்லையைக் கடந்து இளைஞர்களிடமிருக்கின்ற கலையம்சத்தை வெளிக்கொண்டு வரும் போட்டியாக மாற்றம் பெற்றுள்ளது. 

வல்வெட்டித்துறை மடத்தடி உதயசூரியன் கடற்கரையில் வருடாந்தம் தைப்பொங்கல் தினத்தன்று பட்டம் விடும் போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு முறையும் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதேவேளை, பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கின்றது. 

வடமராட்சி பகுதியை சேர்ந்த மக்கள் மட்டுமல்ல வலிகாமம், யாழ்ப்பாணம், தென்மராட்சி ஏன் தீவகப்பகுதி மக்களும் கூட பட்டப்போட்டியை பார்க்க வல்வெட்டித்துறையை நோக்கிப் படை எடுக்கின்றனர்.   

பட்டப் போட்டி இந்தளவுக்கு வரவேற்பு பெற்றமைக்கு அந்த போட்டியில் இருக்கும் பொழுதுபோக்கு அம்சம் தான் காரணம் என்று கூறமுடியாது. அதற்கும் மேல் அந்தப் போட்டியில் ஒளிந்திருக்கும் கலையம்சமே காரணம் என்று கூறலாம்.

பட்டம் கட்டுவது என்பது ஒரு கலை. அதனை பல உருவங்களில் கட்டி அதனை ஏற்றுவது என்பது வியக்கத்தக்க விடயம். எட்டுமூலை, சாணாத்தான் கொக்குப்பட்டம், பெட்டிப்பட்டம்  போன்ற பட்டங்களை கட்டி ஏற்றிவிட்டு பட்டம் விடுதல் என்று முடித்து விடாமல் அதில் மாற்றங்கள் கொண்டு வந்து, பலவகையான உருவங்களை பறக்கவிடுகின்றமையே பட்டம் விடும் போட்டிக்கு அதிக வரவேற்பு கிடைப்பதற்கு காரணம் எனலாம்.

இந்தப் போட்டிகளில் 1994ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் வல்வெட்டித்துறை சனசமூக நிலையத்தால் நடத்தப்பட்டு, நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக கைவிடப்பட்டது. தொடர்ந்து 2010ஆம் ஆண்டிலிருந்து வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம் இந்தப் போட்டியை நடத்தி வருகின்றது. 

இம்முறை பட்டம் விடும் போட்டியில் 53 போட்டியாளர்கள் ஒவ்வொரு பட்டங்கள் சகிதம் கலந்துகொண்டனர். பட்டங்கள் கடற்கரைக்கு கொண்டு வரும் போது அதனை பார்க்க பிரமிப்பாக இருந்தது. 

தாஜ்மஹால், சிறியரக உழவு இயந்திரம், சீன ட்ராகன், தேவதை, பறக்கும் பாம்பு, பிராந்து, ஆமை, மீன், பெப்சி கோலா, குதிரை, நட்;டுவக்காலி, கப்பல், உலங்கு வானூர்தி என அடுக்கடுக்காக பட்டங்கள் கொண்டு வரப்பட்டு பறக்கவிடப்பட்டன. 

சில பட்டங்கள் நூல் இழுத்த மாத்திரத்திலேயே பறக்க ஆரம்பித்து விட்டன. சில பட்டங்கள் சிரமப்படும், சில பறக்கமுடியாமலும் தத்தளித்தன. பட்டங்கள் கட்டும் போது நேர்த்தியையும் சமநிலையையும் பேணியிருந்தால் அந்த பட்டம் இலகுவில் வானைத் தொடும்.

போட்டியில் நடுவர்கள் பட்டத்தின் வடிவம், நேர்த்தி, ஏறும் விதம், பட்டத்தில் உள்ளடங்கியுள்ளக கைவண்ணம், பட்டத்தின் சமநிலை என்பவற்றை தீர்மானித்து வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர். 

முதலிடத்தை தாஜ்மஹால் பட்டத்தை வடிவமைத்த சிவநாதன் நிமலன் என்பவர் தட்டிச் சென்றார். இரண்டாம் இடத்தை சிறிய ரக உழவு இயந்திரத்தை வடிவமைத்த மகேந்திரன் காசன், மூன்றாமிடத்தை சீன ட்ராகன் பட்டத்தை வடிவமைத்த நாகலிங்கம் அகர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். மேலும் 7 பேருக்கு ஆறுதல் பரிசில்கள் கிடைத்தன.  

வெற்றியாளர்களை தேர்தெடுத்தல் என்ற எல்லைக்கு அப்பால், பட்டம் விடும் போட்டியில் மறைந்துள்ள கலையம்சம் வரவேற்கத்தக்கது. சாதாரணமாக தாஜ்மஹால் அமைப்பது என்றால் எவ்வளவு சிரமமான வேலை. கண்காட்சிக்கு வைப்பதற்கு தாஜ்மஹால் அமைப்பதே மிகவும் கடினமாக காணப்படும் நிலையில், பட்டமாக தாஜ்மஹால் உருவாக்கப்பட்டு அது பறக்கவிடப்படுதல் என்பது சாதாரண விடயமல்ல. அதனை உருவாக்கிய நபரிடமிருந்த கலையம்சம் இதனூடாக வெளிப்படுகின்றது.  

சிறிய ரக உழவு இயந்திரம் என்று அழைக்கப்படும் லேன்ட்;மாஸ்டர் அமைப்பு செய்யப்பட்டிருந்தது பிரமிக்கத்தக்கது. உழவு இயந்திரத்தின் சக்கரங்கள் முதற்கொண்டு, பெட்டியும் இணைக்கப்பட்டு அதன் மேல் ஆள் உருவம் ஒன்று அமைக்கப்பட்டு நேர்த்தியாக காணப்பட்டது.  

சீன ட்ராகனின் நீளத்தின் அளவை பார்க்க இது பறக்குமா என்ற சந்தேகத்தை, இரண்டு நிமிடங்களில் ட்ராகன் வானத்தில் பறந்து தீர்த்தது.  

ஆச்சரியங்கள் கலையம்சத்தில் தங்கியுள்ளது. இந்தப் போட்டிகளை வடமாகாண கல்வி, கலாச்சார மற்றும் இளைஞர் விவகார அமைச்சு வரவேற்றுள்ளதுடன் இதனை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் அமைச்சால் மேற்கொள்ளப்படுகின்றன. 

எந்தத்துறை கலைஞர்களும் எந்தநேரத்திலும் கௌரவித்து பாராட்டப்படவேண்டியவர்கள். அந்த வகையில் இந்த பட்டம் விடும் கலைஞர்களும் பாராட்டுக்குரியவர்களே.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .