2025 ஜூலை 05, சனிக்கிழமை

கிறாஸ்கொப்பர்ஸ் பிறீமியர் லீக்: சம்பியனானது டொப் சலஞ்சேர்ஸ்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 27 , மு.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக் போட்டிகளைப் போன்று, உரிமையாளர்களே தங்கள் அணிகளைத் தேர்ந்தெடுத்த கிறாஸ்கொப்பர்ஸ் பிறீமியர் லீக்கின் முதலாவது பருவகால சம்பியனாக சலஞ்சேர்ஸ் தெரிவாகியுள்ளது.

மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஞாபகார்த்தமாக கிறாஸ்கொப்பர்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் தொடரானது, ஆறு பேர் கொண்ட அணிகளுக்கிடையிலான ஐந்து ஓவர்களைக் கொண்டதாக மகாஜனக் கல்லூரியில் இடம்பெற்றிருந்தது.

இத்தொடரில் ஆறு அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், டொப் சலஞ்சேர்ஸ், லீப் கட்டர்ஸ், சுப்பர் றைடர்ஸ் ஆகிய அணிகள் ஒரு குழுவாகவும் ஃபாஸ்ட் டொல்பின்ஸ், டீப் டைவர்ஸ், ஸ்பெஷல் கிங்ஸ் ஆகிய அணிகள் ஒரு குழுவாகவும் இடம்பெற்று, அந்தந்த குழுக்களுக்கிடையே ஒவ்வொரு அணியும் ஏனைய அணியுடன் விளையாடி, ஒவ்வொரு குழுவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தன.

அந்தவகையில், தமது குழுவில், லீப் கட்டர்ஸ், சுப்பர் றைடர்ஸ் ஆகிய அணிகளை வீழ்த்திய  டொப் சலஞ்சேர்ஸ், அக்குழுவிலிருந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்ததோடு, தமது குழுவில், டீப் டைவர்ஸ், ஸ்பெஷல் கிங்ஸ் ஆகிய அணிகளை தோற்கடித்து, ஃபாஸ்ட் டொல்பின்ஸ், தமது குழுவிலிருந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.

டொப் சலஞ்சேர்ஸ், ஃபாஸ்ட் டொல்பின்ஸ் அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஃபாஸ்ட் டொல்பின்ஸ், டொப் சலஞ்சேர்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய டொப் சலஞ்சேர்ஸ், ஐந்து ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 92 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, கஜானன் 14 பந்துகளில் 38 ஓட்டங்களையும் அணித்தலைவர் வினோத், 11 பந்துகளில் 32 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில், ஃபாஸ்ட் டொல்பின்ஸ் அணி சார்பாக லினோத்தன் தனது ஓவரில் 12 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தார்.

பதிலுக்கு 93 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை கொண்டு துடுப்பெடுத்தாடிய ஃபாஸ்ட் டொல்பின்ஸ், ஐந்து ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 12 ஓட்டங்களால் தோல்வியடைந்தது, அவ்வணி சார்பாக ஸ்ரீகுகன் ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 41 ஓட்டங்களையும் அணித்தலைவர் சுயாந்தன் 10 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், டொப் சலஞ்சேர்ஸ் அணி சார்பாக பிருந்தாவன், தனது ஓவரில் ஏழு ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தார்.

இறுதிப் போட்டியின் நாயகனாக டொப் சலஞ்சேர்ஸ் அணியின் கஜானான் தெரிவானதோடு, தொடரின் நாயகனாகவும், தொடரில் அதிகமாக 103 ஓட்டங்களைக் குவித்து தொடரின் அதிக ஓட்டங்களைப் பெற்ற துடுப்பாட்டவீரராகவும் அதேயணியைச் சேர்ந்த வினோத் தெரிவானதோடு, தொடரின் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளராக பிருந்தாவன் தெரிவானதோடு, தொடரின் சிறந்த களத்தடுப்பாளராக சுப்பர் றைடர்ஸ் அணியின் டி.சுதர்சன் தெரிவானதோடு, தொடரில் அதிக ஆறு ஓட்டங்களைப் பெற்ற வீரராக, ஒன்பது ஆறு ஓட்டங்களைப் பெற்று லீப் கட்டர்ஸ் அணியின் சரண்ராஜ்ஜும் தெரிவாகினர்.

யாழ்ப்பாண கிரிக்கெட் சங்கத்தில் அங்கம் வகிக்கும் 18 அணிகளிலிருந்து தலா இரண்டு சகலதுறை வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு ஆறு பேர் கொண்ட ஆறு அணிகளாக பிரிக்கப்பட்டதோடு, கிறாஸ்கொப்பர்ஸ் விளையாட்டுக் கழகத்திலிருந்து ஆறு வீரர்கள், ஒவ்வொரு அணிக்கும் வழங்கப்பட்டே இந்தத் தொடரில் அணிகள் அமைக்கப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .