2024 மார்ச் 28, வியாழக்கிழமை

போர்க்களம்!

Menaka Mookandi   / 2015 ஜூன் 09 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரிப்புடனே நானிங்கு சுற்றுவதைப் பார்த்து
                    சிலர் உனக்கென்ன எந்தவொரு சிக்கல்
                பிரச்சினையு மில்லை, பிள்ளைகளும் படித்துப்
                    பட்டம் பெற்று விட்டார், என்றிங்கு
                எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றி
                    என்னமாய் வறுத் தெடுத்து விடுவார்கள்.
                புரியாது இவர்களுக்கு போர்க்களமாய் உள்ளே
                    புகைகின்ற என்மனதின் புதிர்க் கதைகள்.

                மனக் கணக்குகளை மூட்டையாய்ச் சுமந்து
                    மணிக் கணக்காய் மகிழ்ந்திட்ட குற்றம்.
                எனக்குள் எத்தனைநாள் ஏங்கி அழுதிருப்பேன்
                    எவருக்கும் தெரியாது என்னிதய வடுக்கள்.
                கனக்கின்ற மனதைக் காட்டிக் கொடுத்து
                    கவலை கொள்வதனால் என்ன பயனிங்கு?
                எனவேதான் எப்போதும் என்னிதழில் புன்னகை
                    உள்ளே எரிகின்ற போர்க்களமாய் மனது.

                நல்லவனாய் வாழ்ந்து நன்மை செய்ததனால்
                    நாலுபணம் சேர்க்கநான் தவறி விட்டேன்.
                செல்லாக் காசாக செல்லரித்துப் போயின்று
                    செல்லப் பிள்ளைகளின் சீண்டும் நையாண்டி.
                இல்லத்தரசி கூட ஏளனமாய்ப் பார்த்து
                    எள்ளி நகையாடும் ஏழைப் பரதேசி.
                பல்லைப் பிடுங்கிவிட்ட பாம்பின் நிலைபோல
                    போர்க்களமாய்ப் பற்றி எரிகிறது மனது.

                கொள்ளையும் களவும் கூச்சமின்றிச் செய்து
                    கும்மாளக் கூத்து குத்துபவர் மத்தியிலே
                வெள்ளை மனத்தோடு வெள்ளத்தில் அடிபட்டு
                    வேரோடு சாய்ந்த விசால மரம்போல
                பள்ளத்தில் வீழ்ந்திட்ட பாவியென்று தெரிந்தால்
                    பரிதாபப் படுவதுபோல் பகிடிவதை செய்வர்.
                உள்ளம் போர்க்களமாய் உள்ளே எரிந்தாலும்
                    உதட்டினே சிரிப்பு என்னமாய் வருகிறது.

                அக உணர்வுக்குள் அற்புதமாய்ப் புகுந்து
                    அன்பின் ஆட்சிக்கு அடித்தாள மிட்டாலும்
                பகட்டு வாழ்க்கைக்குப் பழகிய மனிதருக்கு
                    பணம்தான் இங்கு பத்தும் செய்கிறது.
                யுக மாற்றமிதில் போலிப் புன்னகைககுள்
                    யுத்தக்களமாகி உள்ளே உயிர் எரிய
                நகத்துள் ஊசிபோல் நெருடும் நினைவுகளில்
                    நரகம் தெரிந்தாலும் மருந்து சிரிப்புத்தான்.

 

ஜெயசீலன்
கண்டி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X