Editorial / 2026 மே 06 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

அ. அச்சுதன்
நாட்டில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமையானது, இது ஒரு சாதாரண விலைத்திருத்தம் அல்ல என்பதைக் காட்டுகிறது. இவ்வருடத்தில் ஏற்கனவே ஆறாவது தடவையாக விலை உயர்த்தப்பட்டிருப்பது, நாட்டின் பொருளாதார அமைப்பில் நிலவும் ஆழமான அசாதாரண நிலைமையை வெளிப்படுத்துகிறது எனத் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சின்னமோகன் தெரிவித்தார். புதன்கிழமை (06) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்:
"எரிபொருள் விலை உயர்வின் முதல் தாக்கம் போக்குவரத்திலேயே பிரதிபலிக்கும். டீசல் விலை உயர்ந்தவுடன் தனியார் பேருந்து கட்டண உயர்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இது வெறும் பயணச் செலவை மட்டுமல்லாது; தினசரி தொழிலுக்குச் செல்வோர், மாணவர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் ஆகியோரின் வாழ்க்கைச் செலவையும் நேரடியாக அதிகரிக்கும். இதனால் நகர்ப்புற வாழ்க்கை மட்டுமன்றி, கிராமப்புறங்களின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகின்றது.
குறிப்பாக, திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல், சீனன்வெளி, நல்லூர் மற்றும் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாட்டாளிபுரம், சூடைக்குடா, கூனித்தீவு, கடற்கரைச்சேனை உட்படப் பல கிராமப்புறங்களில் வாழும் பொதுமக்கள் எரிபொருள் விலை உயர்வால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயத்துறையிலும் இதன் தாக்கம் கடுமையாகக் காணப்படுகின்றது. குறிப்பாக நீர்ப்பாசன வசதிகள், உரம் மற்றும் பொருட்கள் போக்குவரத்து ஆகிய அனைத்தும் எரிபொருளையே சார்ந்துள்ளன. மீன்பிடித்துறையும் இந்த நெருக்கடியிலிருந்து விடுபடவில்லை. கடலுக்குச் செல்லும் செலவு அதிகரித்தால், மீனவர்கள் மீன்பிடியைக் குறைப்பார்கள். இதனால் சந்தையில் மீன் வரத்து குறைந்து, விலை உயரும் நிலை தற்போது காணப்படுகின்றது.
எரிபொருள் விலையுயர்வு என்பது ஒரு பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல; அது ஒரு சமூக நெருக்கடியின் ஆரம்பமாக மாறக்கூடியது. எனவே, இந்த நெருக்கடிகளைத் தொடரவிடாமல் நிறுத்த வேண்டியது அரசின் பொறுப்பாகும்" என்றார்.
27 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
2 hours ago