2026 பெப்ரவரி 23, திங்கட்கிழமை

கால்நடைகளால் கடும் சிரமம் ; பிரதேச சபை எச்சரிக்கை

Janu   / 2026 பெப்ரவரி 22 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலியாக அலைய விடப்பட்ட மாடுகள் காரணமாக அன்றாடம் வீதி விபத்துகள் அதிகரித்துள்ளதுடன், பொதுச் சொத்துக்கள் மற்றும் பெறுமதியான பயிர் வகைகளும் சேதமடைந்து வருவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பிரதேச சபை தெரிவித்துள்ளது.

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதிகளில் அலையும் மாடுகள் மக்களின் உயிர் மற்றும் சொத்துகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்கள் உடனடியாக அவற்றை தங்களது வீடுகள் அல்லது பண்ணைகளில் கட்டிப் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது இறுதி அறிவித்தல் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரதேச சபையினால் பிடிக்கப்படும் ஒவ்வொரு மாட்டுக்கும் 10,000 ரூபா தண்டப்பணமும், ஒருநாள் பராமரிப்புச் செலவாக 2,000 ரூபாவும் அறவிடப்படும். மூன்று நாட்களுக்குள் உரிய தண்டப்பணத்தைச் செலுத்தி மாடுகளை மீட்டுக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் அவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு அரசுடமையாக்கப்பட்டு ஏலத்தில் விற்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நாட்களுக்குள் நோய்வாய்ப்படும் அல்லது இறக்கும் மாடுகளுக்கு பிரதேச சபை பொறுப்பேற்காது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மாடுகளின் உரிமையாளர்கள் தங்களது உரிமையை உறுதிப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட கிராம சேவகரின் உறுதிப்படுத்தலுடன் பண்ணைக் காட் மற்றும் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்தகவலை மீறி தொடர்ந்து கட்டாக்காலியாக கால்நடைகளை அலைய விடும் பட்சத்தில், பிரதேச சபை சட்டத்தின் கீழ் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் நீதிமன்றத்தில் ஒப்படைத்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதேச சபை அறிவித்துள்ளது.

நூருல் ஹுதா உமர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X