2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பறிபோகும் போது மீட்பர்கள் இங்கில்லை

Freelancer   / 2021 ஒக்டோபர் 24 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

கிழக்கின் மீட்பர்களாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் எமது மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஆகியோர், கிழக்கு பறிபோகின்ற போராட்டங்கள் வருகின்றபோது  கொழும்பிலும், இந்தியாவிலும் தங்கியிருந்து தாங்கள் இங்கில்லை என்று  கூறுகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காரமுனை காணிப் பிரச்சனை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

காரமுனை என்கின்ற தமிழ் பேசும் மக்களின் கிராமத்தில் திட்டமிட்ட அடிப்படையில் போலி ஆவணங்களைத் தயாரித்து பெரும்பான்மை இனத்தவர்களைக் குடியேற்றுவதற்காக கிழக்கு மாகாண காணி ஆணையாளர் மிகவும் இரகசியமான முறையில் நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றார்.

கிழக்கு மாகாணத்தில் ஏற்கெனவே இனப்பரம்பல் மாற்றப்பட்டு திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் பறிபோயிருக்கின்றன. 

இருப்பது மட்டக்களப்பு மட்டும் தான். இங்கும் பெரும்பான்மை இனத்தவர்களைத் திட்டமிட்டு குடியேற்றி, இங்கும் எதிர்காலத்தில் நாங்கள் சிறுபான்மை சமூகமாக வாழ்வதை நோக்காகக் கொண்டு நீண்டகால அடிப்படையில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

எமது அதிகாரிகள் பலர் இது தொடர்பில் எங்களிடம் வேதனைப்படுகின்றார்கள். ஆனால், இதில் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் உயரதிகாரிகள் சிலர் தங்களது பதவிகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்த விடயங்களைப் பரம இரகசியமாக வைத்துப் பாதுக்காக்கின்றார்கள்.

எமது மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுத் தலைவர் எப்போதும் கிழக்கு மீட்பர், கிழக்கைப் பாதுகாப்பவர், கிழக்கின் இரட்சகர் போன்று பேசிக்கொண்டிருக்கின்றார். அதேபோல் எமது இராஜாங்க அமைச்சரும் கிழக்கைப் பாதுகாப்பதென்று சொல்லுகின்றார். 

ஆனால் கிழக்கு பறிபோகின்ற போராட்டங்கள் வருகின்ற போது இவர்கள் கொழும்பிலும், இந்தியாவிலும் தங்கியிருந்து தாங்கள் இங்கில்லை என்று சொல்லுகின்றார்கள்.

இந்த விடயங்களை நாங்கள் தட்டிக் கேட்காமல் விடுகின்ற போது எமது நிலங்கள் எல்லாம் தட்டிப் பறிக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் அம்பாறையில் கல்லோயக் குடியேற்றம் திருகோணமலையில் கந்தளாய் குடியேற்றம் என்பன வந்து அங்கெல்லாம் நாங்கள் அடிபட்டு வந்ததைப் போன்று மட்டக்களப்பிலும் அடிபணிய வேண்டிய நிலையே ஏற்படும்.

நாங்கள் இனவிரோதிகளும் அல்ல, இனவாதிகளும் அல்ல. ஆனால், எமது மண்ணில் எமது மக்கள் குடியிருப்பதற்கு நீங்கள் வழிவிடுங்கள். அயல்மாவட்ட, மாகாணங்களுக்கு அப்பாற்பட்டு நீங்கள் குடியேறுகின்ற விடயத்தைச் சட்டவிரோதமான செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம். 

ஆளுநர் ஜகம்பத் பல்லினத்திற்கான ஆளுநராக இல்லாமல் தனிப்பட்ட ஒரு இனத்தின் ஆளுநராகவே செயற்படுகின்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .