2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

மீனவர்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 24 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை,உட்துறைமுகம் கடலில்கட்டுவலை மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வலைகளில் இருந்து மீன்கள் திருடப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரியும்,திருடர்களை சட்டரீதியாக தண்டிக்குமாறு கோரியும் புதன்கிழமை (24) அன்று தமிழ் மற்றும் சிங்களமீனவர்சங்கங்கள் இணைந்து, உட்துறைமுகம் வீதியில் அமைந்துள்ள மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அரசடி​ புனிதசூசையப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடந்த இப்போராட்டத்தை தொடர்ந்து தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை,மீனவர் சங்கப் பிரதிநிதிகள் திருகோணமலை மாவட்ட கடற்றொழில் உதவிப்பணிப்பாளரிடம் கையளித்தனர். 

இப்போராட்டத்தின் போது கருத்து தெரிவித்த சங்கத்தின் முன்னாள் தலைவரும்,தற்போதைய ஆலோசகருமான இ.பாக்கியராசா கூறுகையில் "உட் துறைமுக கடற்பரப்பில் எம்மால் மேற்கொள்ளப்படும் கட்டுவலை தொழிலுக்கு,இப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிலரால் பின்வரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

1.எமது மீனவர்சங்கஅங்கத்தவர்களால் 56 இடங்களில் கட்டுவலை அமைக்கப்பட்டு மீன்பிடி நடைபெறுகிறது.

2.மேற்படி கட்டுவலைகளில் உள்ளகூடுகளில் நிற்கும் கணவாய்மீன்களை சிலர்திருடுகின்றனர்.

3.கணவாய்களை பிடிப்பதற்கான அவர்கள் பயன்படுத்தும் விசேடதூண்டிலினால் எமதுகட்டுவலைகள் சேதமடைகின்றது.

4.வலைகள் சேதமடையும் போதுகூட்டில் உள்ளமீன்கள் வெளியேறி விடுகின்றன.

5.இதனால் வலைகள்சேதமடைவது டன்,மீன்கள் வெளியேறுவதால் வருமானம் முழுவதும் இழக்கப்படுகின்றது.

எனவேஇவ்வாறு திருட்டில் ஈடுபடுபவர்களை சட்டரீதியாக தடுக்கவும் ,திருடர்களுக்கு உரிய தண்டனை வழங்கி திருட்டுக்கள் தொடராது இருப்பதை உறுதிப்படுத்துமாறும் நாங்கள் உரிய அதிகாரிகளை வேண்டுகின்றோம்.

இந்த உட் துறைமுக கடற்பரப்பில் 1935 ம்ஆண்டு முதல் நான்கு தலைமுறையாக இந்த கட்டுவலைத் தொழில் எம்மால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆரம்பத்தில் பிளான் ரன் பொயின்ட் முகாமையை அண்மித்த கடற்பரப்பில் இருந்து கடற்படை முகாம் வரையிலான கடல் பகுதியில் 64 இடங்களில் கட்டுவலை அமைக்கப்பட்டு மீன்பிடி நடைபெற்று வந்தது.

உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலத்தில் பாதுகாப்பு காரணங்களின் நிமித்தம்,கட்டு வலைகளின் எண்ணிக்கை 56 ஆக குறைவடைந்தது.கடற்படை முகாமை அண்மித்த கட்டுவலைகள் அகற்றப்பட்டது.

1935 ம் ஆண்டு முதல் இக்கட்டுவலைத் தொழில் இப்பகுதியில் செய்யப்பட்டு வந்த போதும்,1993ம்ஆண்டில் முதல் முறையாக இத்தொழிலுக்கென அனுமதிப்பத்திரம் கடற்றொழில் அமைச்சு வழங்கப்பட்டது.

அது வருடாந்தம் புதிப்பிக்கப்பட்டு வருகின்றது.ஆழம் குறைந்த கடற்ப்பரப்பில் மட்டுமே இக்கட்டு வலைத் தொழில் செய்ய முடியும்.2019 ம் ஆண்டின் பின்னர்  சிலர் எமது கட்டுவலைகளில் கணவாய்களைத் திருட தொடங்கினர்.

இதனால் முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கியது. உட் துறை முகப்பகுதியில் தூண்டில் மீன்பிடி,வலையை பயன்படுத்தி மீன் பிடித்தல்,கரைவலைமீன்பிடி என்ற மேலும் மூன்று வேறு மீன்பிடித் தொழில்களும் நடைபெற்று வருகின்றது.

கட்டுவலைத் தொழில் மேற்படி மூன்று தொழில்முறைகளுக்கு இடையூறு எதுவும் ஏற்படுத்தாது நடைபெற்று வருகின்றது.

அதே வேளை மேற்படி மூன்று மீன்பிடியாளர்களால் கட்டுவலைத் தொழிலுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் எமது கட்டுவலைகளில் மீன்களை(கணவாய்)திருடும் சிலரை பலமுறைகையும் களவுமாக பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளோம்.

ஆனால் அடுத்த நாளே அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு வெளியில் வந்து மீண்டும் திருட்டில் ஈடுபடுகின்றார்கள். இது பற்றி கஸ்தூரி நகர் மீனவர் கூட்டுறவுச் சங்கத்திற்கு அறிவித்தோம்.ஆனால்திருடர்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது உள்ளது.நீங்கள் சட்ட ரீதியாக அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்.அதற்கு நாங்கள் தடையில்லை என்றுஅந்த சங்க நிர்வாகிகள் எழுத்து மூலம் எமக்குஅறிவித்துள்ளனர்.

இம் முரண்பாடுகள் தொடரும் நிலையில் அது இரு பகுதியினருக்கும் இடையில் பெரும் மோதல் நிலையை ஏற்படுத்தக்கூடும் என்றும் நாங்கள் அஞ்சுகின்றோம்.

எனவே மேற்படி நிலைமைகளை கருத்தில் கொண்டு பின்வரும் தீர்வுகளை எமக்கு வழங்கி இவ்முரண்பாட்டு நிலையை முடிவுக்கு கொண்டு வர உதவுமாறு வேண்டுகிறோம்.

உரிய அரச அதிகாரிகளை வேண்டி நிற்கின்றோம். தீர்வுகள்

1.ஒவ்வொரு ஆண்டும் யூலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையான காலத்தில் கணவாய் மீன்கள் கரையை நோக்கி வரும்.

இக்காலப்பகுதியில் தான் கணவாய் திருட்டு அதிகளவில் இடம் பெறும்.எனவே இது முற்றாக தடுக்கப்படல் வேண்டும்.

2.திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு சட்டரீதியாக உச்சபட்சத் தண்டனை வழங்கப்படல் வேண்டும்

.3.திருட்டின் போதுகட்டுவலை சேதமாக்கப்பட்டால் அதற்குரிய முழுமையான நட்டஈடும் திருட்டில் ஈடுபட்டவரால் உரிய கட்டுவலை உரிமையாளருக்கு வழங்கப்படல் வேண்டும்.

4.உட்துறைமுக கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் கட்டுவலை,தூண்டில் முறை,வலைத்தொழில்,கரைவலைத் தொழில் என்பவற்றை சுதந்திரமாகவும்,எவருக்கும் மற்றைய தொழில்செய்பவரால் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தப்படாமலும் இருப்பதற்கேற்ற ஒழங்குவிதிகளை ஏற்படுத்தலும்,அதனை நடைமுறைப்படுத்தி கண்காணிப்பதும்.

இறுதியாக எமது பாதிப்புக்களையும் அவற்றிற்கான தீர்வுகளையும் முன்வைத்து நடக்கும் இப்போராட்டம் மூலம் வெற்றி கிடைக்காவிட்டால் அடுத்து நீதித்துறையிடம் நேரடியாக முறையிட எண்ணியுள்ளோம் "என்று அவர் கூறினார். 

எஸ்.கீதபொன்கலன்

ஏ.எச்.ஹஸ்பர் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X