2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

மிகப்பெரிய காகித விமானம்

A.P.Mathan   / 2012 மார்ச் 26 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


காகிதத்தில் விமானங்கள் செய்து பறக்கவிட்ட பழைய நினைவுகளை யாரும் எளிதில் மறந்துவிடமாட்டார்கள். சிறிய காகிதங்களில் விமானங்களை செய்து விளையாடுவது அந்தக்காலம். ஆனால் அதனையே சாதனைக்காக பெரியளவில் செய்து மகிழ்ந்திருக்கிறார்கள் சிலர்.

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலுள்ள விமானத்தயாரிப்பு நிபுணர்கள் சிலரது கூட்டு முயற்சியினால் இந்த பாரிய காகித விமானம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. பிமா விண்வெளி நூதனசாலையின் அனுசரணையில் தயாரிக்கப்பட்ட இந்த காகித விமானத்திற்கு டெசர்ட் ஈகள் (பாலைவன கழுகு) என பெயரிட்டிருக்கிறார்கள்.

சுமார் 45 நீளமான பாலைவன கழுகு வானத்தில் வெறும் 6 செக்கன்கள் மாத்திரமே பறந்திருக்கிறது. ஹெலிஹொப்டர் ஒன்றின் உதவியுடன் சுமார் 4000 அடி உயரம்வரை கட்டிச்சென்று இந்த காகித விமானத்தினை பறக்கவிட்டிருக்கிறார்கள். 4000 அடி உயரத்திலிருந்து தரையினை வந்தடைவதற்கு இந்த காகித விமானத்திற்கு வெறும் 6 செக்கன்கள் மட்டுமே தேவைப்பட்டிருக்கிறது. மணிக்கு 98 மைல்கள் (சுமார் 158 கிலோ மீற்றர்) என்ற வேகத்தில் மண்ணைத் தொட்டிருக்கிறது இந்த காகித விமானம்.

உண்மையில் இந்த காகித விமானத்தினை வடிவமைத்தவர் 12 வயதுடைய (Arturo Valdenegro) ஆர்துரோ வல்டிநீக்றோ என்ற சிறுவன். பிபா விண்வெளி நூதனசாலை, உள்ளூர் பத்திரிகைகளுடன் இணைந்து கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு போட்டியினை நடத்தியது. 6 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட எவரும் இந்த போட்டியில் பங்குபற்றலாம். அதுதான் காகித விமானம் வடிவமைக்கும் போட்டி. அப்போட்டியிலேயே 12 வயதுடைய ஆர்துரோ வல்டிநீக்றோ என்ற சிறுவன் வெற்றிபெற்றான். அதனால்தான் அவனினால் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய காகித விமானத்திற்கு அவனுடைய பெயரினையும் சேர்த்துள்ளனர். “ஆர்துரோவின் பாலைவன கழுகு“ என்றே அந்த மிகப்பெரிய காகித விமானத்திற்கு பெயரிட்டுள்ளனர்.

சுமார் 363 கிலோகிராம் நிறையுடைய 'பாலைவன கழுகு' காகித விமானத்தின் அகலம் 24 அடிகள். இந்த விமானத்தினை தயாரித்த குழுவிற்கு தலைமை தாங்கியவர் கென் பிளெக்பேர்ன். இவர் ஏற்கனவே மிக நீளமான காகித விமானத்தினை தயாரித்து சாதனை படைத்தவர். முதன் முதலில் 1983ஆம் ஆண்டு மிக நீளமாக காகித விமானத்தினை தயாரித்திருந்தார். அதன் பின்னர் தன்னுடைய சாதனையினை 1994, 1998ஆம் ஆண்டுகளில் தானே முறியடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X