2025 மே 19, திங்கட்கிழமை

முதல்வர் ஜெயலலிதாவுக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் நடக்கும் "காவிரி அரசியல்"

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 25 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பரிசாக காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. "என் 22 கால போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி" என்று முதல்வர் இது பற்றி மகிழ்ச்சியுடன் பேட்டியளித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதியோ அவர் எடுத்த நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி காவிரி தீர்ப்பு அரசிதழில் வெளியாக உதவிய சுப்ரீம் கோர்ட்டிற்கும் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் நன்றி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் - காங்கிரஸ் சார்பில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,"இது ஒரு கட்சிக்கு கிடைத்த வெற்றியல்ல. அனைத்துக் கட்சிக்கும் கிடைத்த வெற்றி" என்று அறிவித்துள்ளார். காவிரி பிரச்சினையில் இந்த மூன்று முக்கிய கட்சிகள்தான் "காவிரி பிரச்சினையில்" யாருக்கு வெற்றி என்பதற்கு தகுந்த விளக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி தத்தம் கட்சிகளின் சார்பில் பெயரைத் தட்டிச் செல்ல முனைகிறார்கள்.

800 கிலோ மீற்றர் காவிரி!
காவிரி நதி நீர் பிரச்சினை என்பது நான்கு மாநிலங்களுக்கு மிக முக்கியமான பிரச்சினை. குறிப்பாக கர்நாடக மாநிலத்திற்கும் தமிழகத்திற்கும் "ஜீவாதார பிரச்சினை". மற்ற இரு மாநிலங்களான கேரளாவும், பாண்டிச்சேரியும் காவிரி நதி நீரில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி இறுதி தீர்ப்பில் தங்களுக்கு என்று உரிய பங்கினைப் பெற்றுள்ளன. இதில் கேரள மாநிலம் மட்டும் இடைக்கால தீர்ப்பு வழங்கியபோது "உரிமை கோரவில்லை". பிறகு இறுதி தீர்ப்பு வெளிவரும் போதுதான் தங்கள் மாநிலத்தின் மூலமாகவும் வாதாடி தங்களுக்குள்ள பங்கினை பெற்றுள்ளது. 800 கிலோ மீற்றர் நீளமுள்ள இந்த காவிரி நதி கர்நாடக மாநிலத்திற்குள் 320 கிலோ மீற்றர் ஓடுகிறது. தமிழகத்திற்குள் 416 கிலோ மீற்றர் தூரம் ஓடுகிறது. இரு மாநிலங்களுக்கும் பொதுவாக உள்ள எல்லைக்குள் 64 கிலோ மீற்றர் ஓடுகிறது. காவிரி ஆற்றுப் பிடிப்பின் பகுதிகள் என்று எடுத்துக் கொண்டால் கர்நாடகத்தில் 34,273 சதுர கிலோ மீற்றரும், தமிழகத்தில் 44,016 சதுர கிலோமீற்றரும், கேரள மாநிலத்தில் 2,866 சதுர கிலோ மீற்றரும் இருக்கின்றன. காவிரி நதியின் மொத்த ஆற்றுப் பிடிப்பு (கேட்ச்மென்ட் ஏரியா) 81,155 சதுர கிலோ மீற்றராக கணக்கிடப்பட்டுள்ளது.

"பழுதடைந்த" பழமையான ஒப்பந்தங்கள்
தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே போடப்பட்டுள்ள இரு ஒப்பந்தங்கள் மூலம் (1892) மற்றும் (1924) இரு மாநிலங்களுமே புதிய அணைகள் கட்டுவது, புதிய நீர்பாசன பகுதிகளை உருவாக்குவது, தண்ணீரை பகிர்ந்து கொள்வது என்று அனைத்து விடயங்களுமே வடிவமைக்கப்பட்டன. மிகப் பழமையான ஒப்பந்தங்களைக் கொண்டது காவிரி நதி நீர் விவகாரம் என்றால் மிகையாகாது. திடீரென்று கர்நாடக மாநிலம் அடம்பிடிக்க ஆரம்பித்தது. "எங்கள் மாநிலத்தில் உருவாகும் நதியின் நீரை நீங்கள் எப்படி முழுவதும் பயன்படுத்தலாம். எங்களுக்குத்தான் முன்னுரிமை" என்று போர்க்கொடி தூக்க, இப்படித்தான் இரு மாநிலங்களுக்கும் இடையே இந்த நதி நீர் பிரச்சினையில் சண்டை வந்தது, சச்சரவு ஏற்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. தீர்வு கண்ணுக்குத் தெரியவில்லை. (இந்த ஒப்பந்தங்கள் எல்லாம் இப்போது வெளிவந்துள்ள காவிரி இறுதி தீர்ப்புக்குப் பிறகு செல்லாதவை ஆகியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது).

காவிரியும் முன்னாள் முதல்வர் கருணாநிதியும்
முதலில் பிரச்சினை பெரிதானது அணைகளை கட்டும் விவகாரத்தில்தான். காவிரி நீரை மறித்து வழியில் ஹாரங்கி, கபினி, ஹேமாவதி, சொர்ணாவதி என்று நான்கு அணைகளை கட்ட கர்நாடக மாநில அரசு முயற்சி மேற்கொண்டது. தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி கட்டப்படும் இந்த அணைகளுக்கு தமிழக அரசு சார்பில் அப்போதே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு முதன் முதலில் கடிதம் எழுதி "கர்நாடக மாநிலத்தை ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தங்களின்படி நடந்துகொள்ளச் சொல்லுங்கள். இதுபோன்ற அணைகளை கட்டக்கூடாது என்று தடை போடுங்கள்" என்று தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிதான் கடிதம் எழுதினார். இதன்பிறகு இந்த நதி நீர் பிரச்சினையில் "இனி பேசிப் பயனில்லை. நடுவர் மன்றம் அமையுங்கள்" என்று முதன் முதலில் கோரிக்கை விடுத்தவரும் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிதான். அது நடந்தது 1970 பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி. மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த கே.எல்.ராவ் மூன்று மாநிலங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தி, அது பெயிலியர் என்று முடிவான பிறகு இதுபோன்ற கோரிக்கையை அன்று மத்திய அரசுக்கு விடுத்தார் கருணாநிதி. ஆகவே நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கையை முதலில் விடுத்தவர் அவரே! அதன் பிறகு பிரதமராக வி.பி.சிங் இருந்தபோது இக்கோரிக்கைய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தினார். ஆகவே, மத்தியில் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதும், தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்திலும்தான் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அது 1990ஆம் வருடம் அரங்கேறியது. இந்த ஆணையம் வழங்கிய இடைக்கால தீர்ப்பை அமல்படுத்த "காவிரி வரைவு திட்டம்" ஒன்று உருவாக்கப்பட்டு, அதன்படி "காவிரி நதி நீர் ஆணையம்" அமைக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டது 1996-2001 வரை முதல்வராக இருந்த கருணாநிதிதான். மீண்டும் அவர் 2006-2011 முதலமைச்சராக வந்தபோதுதான் காவிரி நதி நீர் விவகாரத்தில் "இறுதி தீர்ப்பு" வெளியானது. இந்த வகையில் காவிரி பிரச்சினையில் தி.மு.க.விற்கு பங்கு உண்டு.

காவிரியும் முதல்வர் ஜெயலலிதாவும்
அ.தி.மு.க.வை பொறுத்தமட்டில், 1991-1996இல் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாதான் நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கோரினார். அப்போது முதலமைச்சராக இருந்த அவர் மூன்று நாட்கள் இதற்காக உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரை சமாதானம் செய்ய அப்போது மத்திய நீர்வளத்துறை அமைச்சரான சுக்லா - சென்னைக்கே வந்து "அரசிதழில் வெளியிடுகிறோம். நீங்கள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுங்கள்" என்று கேட்டுக் கொண்டார். இதன்படி முதல்வராக இருந்த ஜெயலலிதா தன் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். அதன்படி அரசிதழில் இடைக்காலத் தீர்ப்பு வெளியானது. அதன் பிறகு "காவிரி வரைவு திட்டம்" உருவான போது, "இத்திட்டத்தின் பேரில் வரும் காவிரி நதி நீர் ஆணையம் பிரச்சினைகளை தீர்க்கப்போவதில்லை" என்று உறுதியான கருத்தை தெரிவித்தது அவர்தான். இன்றுவரை "காவிரி நதி நீர் ஆணையம்" போட்ட உத்தரவை கர்நாடக மாநிலம் சிரமேற்கொண்டு ஏற்றுக் கொண்டதில்லை. மாறாக ஒவ்வொரு முறையும் சுப்ரீம் கோர்ட்டிற்குப் போனதாலேயே தமிழகம் ஓரளவு நிவாரணத்தைப் பெற முடிந்தது. முதல்வர் ஜெயலலிதாவைப் பொறுத்தமட்டில், "பேசிப் பயனில்லை. காவிரி நதி நீர் ஆணையமும் தேவையில்லை. நீதிமன்றம் மூலம் மட்டுமே தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும்" என்பதில் கறாரான கருத்துக் கொண்டிருந்தார். அந்தக் கருத்திற்கு வலு சேர்க்கும் விதத்திலேயே இப்போது கூட காவிரி நடுவர் மன்றம் பெப்ரவரி 2007இல் அளித்த தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டிடம் கோரிக்கை வைத்தார். சுப்ரீம் கோர்ட் கொடுத்த கெடுபிடியில் மத்திய அரசும் காவிரி இறுதி தீர்ப்பை பெப்ரவரி 19ஆம் திகதி அரசிதழில் வெளியிட்டுள்ளது. சூட்டோடு சூடாக, அரசிதழில் வெளியிட்ட தீர்ப்பை அமல்படுத்த "காவிரி மானேஜ்மென்ட் போர்டு" ஒன்றை விரைவில் அமையுங்கள் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் கடிதம் எழுதியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆகவே காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு மற்றும் இறுதி தீர்ப்பு இரண்டையும் அரசிதழில் வெளியிடுவதற்கு பாடுபட்டவர் முதல்வர் ஜெயலலிதா. அந்த பெருமை அ.தி.மு.க.விற்கே சாரும்.

காவிரியும் காங்கிரஸ் தந்த "ராவ் பார்முளாவும்"
இந்த இரு கட்சிகளின் பங்களிப்பு இப்படியென்றால் காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பும் காவிரி பிரச்சினையில் நிச்சயம் இருக்கிறது. காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பாக இருந்தாலும் சரி, இறுதி தீர்ப்பாக இருந்தாலும் சரி அவற்றை அரசிதழில் வெளியிட்டது காங்கிரஸ் தலைமையிலான பிரதமர்களான நரசிம்மராவ், மன்மோகன்சிங் காலத்தில்தான் என்று நாளைய சரித்திரம் சொல்லும். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா ஒரு பேட்டியில் கூறியது போல், "தமிழகத்தில் காங்கிரஸும், பா.ஜ.க.வும் ஆட்சிக்கு வர முடியாது. அதனால் காவிரியில் தமிழகத்திற்கு அந்த கட்சிகள் உதவுவதில்லை" என்றார். இதில் முன்பகுதியான "தமிழகத்தில் காங்கிரஸும், பா.ஜ.க.வும் ஆட்சிக்கு வர முடியாது" என்பதில் உண்மையிருக்கிறது. ஏனென்றால் 1967இல் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி இன்றும் தமிழக ஆட்சிக்கட்டிலில் ஏறி அமரவில்லை. அதே நேரத்தில் கர்நாடகத்தில் அந்தக் கட்சியின் செல்வாக்கு அப்படியில்லை. எந்த கூட்டணியும் இல்லாமலேயே அங்கு காங்கிரஸ் கட்சி ஜெயிக்க முடியும். அம்மாநிலத்தில் 20 எம்.பி. தொகுதிகள் இருக்கின்றன. இன்னும் இரு மாதங்களில் அங்கே சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தனித்தே வெற்றி பெறும் வாய்ப்பு கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்தாலும், அங்குள்ள பா.ஜ.க. முதல்வர் ஜெகதீஷ் ஷட்டர் - பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து, "காவிரி இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடாதீர்கள்" என்று கேட்டுக் கொண்ட பிறகும், அந்த இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின் படி பிரதமர் அப்படிச் செய்தார் என்று எடுத்துக் கொண்டாலும், மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு நினைத்திருந்தால், "இது நான்கு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை" என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் ஏதாவது ஒரு வாதம் செய்து, இறுதி தீர்ப்பு இப்போது "அரசிதழில்" வெளியிடாதவாறு பார்த்துக் கொண்டிருக்க முடியும். அப்படிச் செய்யாமல் காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தின்பால் காவிரி பிரச்சினையில் நின்றது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்ல, இன்று இடைக்கால தீர்ப்பாக இருந்தாலும் சரி, இறுதி தீர்ப்பாக இருந்தாலும் சரி அதை தீர்மானிக்க காவிரி நடுவர் மன்றம் எடுத்துக் கொண்ட ஒரு முக்கியமான விடயம் "கே.எல்.ராவ் பார்முளா". அது என்ன பார்முளா? மத்திய நீர்பாசனத்துறை அமைச்சராக இருந்த ராவ் காங்கிரஸ்காரர் - காவிரி பேக்ட் பைன்டிங் கமிட்டி ஒன்றை அமைத்து, காவிரியில் பகிர்ந்து கொள்ளக்கூடிய தண்ணீரின் அளவு 740 டி.எம்.சி. என்று 1973இல் முடிவு செய்தார். கேரள மாநில முதல்வர் அச்சுதமேனன், கர்நாடக மாநில முதல்வர் தேவராஜ் அர்ஸ், தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி ஆகிய மூவரையும் இந்த "பார்முளாவை" 29.4.1973 அன்று சம்மதிக்க வைத்தார். இது முடிந்தவுடன் பத்திரிகையாளர்களை சந்தித்த ராவ், காவிரி பிரச்சினையில் பாதிக் கிணறை தாண்டிவிட்டோம் என்பதைக் குறிக்கும், "போரின் முதல் பகுதி வெற்றி" (ஹாப் தி பேட்டில் வொன்) என்ற கருத்தைச் சொன்னார். ஆகவே, இன்று நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்க ஆதாரமாக இருக்கும் "740 டி.எம்.சி" பார்முளாவை உருவாக்கியது மத்தியில் காங்கிரஸ் அமைச்சராக இருந்த கே.எல்.ராவ் என்றால் அந்த பெருமை காங்கிரஸ் கட்சிக்கே போய் சேரும்.

இறுதி தீர்ப்பில் என்ன கிடைக்கும்?
ஆகவே காவிரி பிரச்சினையில் மூன்று கட்சிகளுமே தங்களின் பங்களிப்பை காட்டியிருக்கின்றன. இப்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் படி தமிழகத்திற்கு 419 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். கர்நாடகத்திற்கு 270 டி.எம்.சி.யும், கேரளாவிற்கு 30 டி.எம்.சி.யும், பாண்டிச்சேரிக்கு 7 டி.எம்.சி.யும் தண்ணீர் கிடைக்க இறுதி தீர்ப்பு வழி செய்கிறது. இது தவிர கடலில் கலக்கும் தண்ணீர் கணக்கு வகையில் 4 டி.எம்.சி.யும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக 10 டி.எம்.சி.யும் காவிரி நடுவர் மன்றம் ஒதுக்கியிருக்கிறது. ஆக மொத்தம், "ராவ் பார்முளா" படி கண்டுபிடித்த, 740 டி.எம்.சி. காவிரித் தண்ணீரை இப்படித்தான் பகிர்ந்தளிக்க நடுவர் மன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியத்திற்கும் தொடங்குமா "சட்டப்போர்"?
இந்த தீர்ப்பை அமல்படுத்த முதலில் காவிரி மேலாண்மை வாரியம் (காவிரி மானேஜ்மென்ட் போர்டு) அமைக்கப்பட வேண்டும். அந்த வாரியத்தில் நான்கு மாநிலங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள். அவர்கள் இந்த நான்கு மாநிலத்தையும் சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். அதே நேரத்தில் அவர்கள் தலைமைப் பொறியாளர் அந்தஸ்திற்கு குறைவானவர்களாக இருக்கக்கூடாது என்ற நியதி இருக்கிறது. மத்திய அரசின் சார்பில் ஒருவரோ அல்லது மூவரோ இந்த வாரியத்தில் இடம்பெறுவார்கள். அவர்கள் ஜாயின்ட் செகரட்டரி முதல் செகரட்டரி அளவு அந்தஸ்து உள்ள அதிகாரிகளாக இருப்பார்கள். இவர்களில் மத்திய அரசின் சார்பாக நியமிக்கப்படும் உயர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைவராக இருப்பார். இப்படித்தான் முன்பு கிருஷ்ணா நதி நீர் விவகாரத்தில் "மேலாண்மை வாரியம்" அமைக்கப்பட்டது என்பது இங்கே கவனிக்கத்தக்கது. காவிரி நடுவர் மன்றம் வழங்கிய "இறுதி தீர்ப்பு"க்கு எதிராக போடப்பட்டுள்ள வழக்குகளின் மீதான முடிவிற்கு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள தீர்ப்பு கட்டுப்பட்டது என்று சுப்ரீம் கோர்ட் கூறியிருக்கிறது. அந்த வாசகங்கள் காவிரி இறுதி தீர்ப்பின் அரசிதழின் முகப்பிலேயே இடம்பெற்றிருக்கிறது. "இது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இடையூறாக இருக்கும்" என்று மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் ராவத் கூறியிருக்கிறார். ஆகவே இனி "காவிரி மேலாண்மை வாரியம்" அமைப்பது தொடர்பாகவும் "சட்டப்போர்" நடக்குமா? அல்லது "தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா?" என்பது தமிழக அரசியலில் பரபரப்பாகியிருக்கிறது. இப்படி காவிரி நதி நீர் பிரச்சினையில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட மூன்று கட்சிகளுமே அவரவர் பங்கை செய்திருந்தாலும், ஏதாவது ஒரு காரணத்தை காண்பித்து ஒவ்வொருவரும் இன்னொருவர் மீது "குற்றம்" சொல்லும் விதத்திலேயே செயல்பட்டு வருகிறார்கள். அதுதான் ஏறக்குறைய அரை நூற்றாண்டாக தமிழகத்தில் நடக்கும் "காவிரி அரசியல்"!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X