2025 மே 19, திங்கட்கிழமை

தமிழகத்தில் சமூகப் பிரச்சினையாக மாறிய "காதல் திருமணம்"

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 29 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெற்ற வன்னியர் சமுதாயத்தின் "சித்திரை முழு நிலவு" பெருவிழா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தர்மபுரியில் தொடங்கிய "ஜாதி கலவரம்" மீண்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் உருவாகிவிட்டது. அது அப்படியே வட மாவட்டங்களில் தொடருமோ என்ற அச்ச உணர்வு காவல்துறைக்கே வந்திருக்கிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது காவல்துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்து ஜாதி கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டிருக்கின்ற அதேவேளையில் மரக்காணம் கலவரத்தின் பின்னணியில் "சித்திரை முழு நிலவு" மாநாடு அமைந்திருக்கிறது என்பதுதான் அரசியல் கட்சிகள் மத்தியில் அனல் வீச வைத்துள்ளது.

பா.ம.க.வின் பரிணாம வீழ்ச்சி
தமிழக தேர்தல் களத்தில் 1989 நாடாளுமன்ற தேர்தலில் காலடி எடுத்து வைத்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் தன்னந்தனியாக நின்று 5.82 சதவீத வாக்குகளைப் பெற்றார். பிறகு 1991 சட்டமன்ற தேர்தலில் நின்று 5.89 சதவீத வாக்குகளையும் முதன் முதலில் ஒரேயொரு சட்டமன்ற உறுப்பினரையும் தமிழக சட்டமன்றத்திற்கு அனுப்பினார். அவர்தான் பன்ருட்டி ராமச்சந்திரன். இன்று விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அவைத் தலைவராக இருக்கிறார். பிறகு 1996 சட்டமன்ற தேர்தலில் அன்று உருவாக்கப்பட்ட "திவாரி காங்கிரஸுடன்" கூட்டணி சேர்ந்து களத்தில் நின்றார். ஆனால் இந்தமுறை குறைவான தொகுதிகளில் போட்டியிட்டதால் பாட்டாளி மக்கள் கட்சியால் 3.82 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. ஆனால் நான்கு எம்.எல்.ஏ.க்களை அவரால் சட்டமன்றத்திற்கு வெற்றிபெற வைத்து அனுப்ப முடிந்தது. ஆனாலும், இப்படி தனியாக போட்டியிடுவது தேர்தல் வெற்றியைக் கொடுக்காது என்று கருதிய அவர் 1998 நாடாளுமன்ற தேர்தலில் முதன் முதலில் அ.தி.மு.க. அணியுடன் கூட்டணி வைத்தார். அந்த தேர்தலில் நான்கு எம்.பி.க்களை பெற்றார். முதலில் இந்திய நாடாளுமன்றத்திற்குள் பாட்டாளி மக்கள் கட்சி நுழைந்தது அப்போதுதான்.

அடுத்து நடைபெற்ற 1999 இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தார். இந்தமுறை தமிழகத்தில் எட்டு சீட்டுகளும், பாண்டிச்சேரியில் ஒரு சீட்டும்- ஆக மொத்தம் 9 சீட்டுகளை தி.மு.க. கூட்டணியில் பெற்றார் டாக்டர் ராமதாஸ். தமிழகத்தில் பெற்ற எட்டு சீட்டுகளில் ஒரு சீட்டை அப்போது இருந்த வாழப்பாடி ராமதாஸுக்கு வழங்கினார். மீதி ஏழு சீட்டுகளில் போட்டியிட்டு ஐந்து எம்.பி.க்களை பெற்றார். இந்த கூட்டணியை அவர் சட்டமன்ற தேர்தல்களிலும் தொடர்ந்தார். 2001இல் அ.தி.மு.க.வுடனும், 2006 மற்றும் 2011இல் தி.மு.க.வுடனும் சட்டமன்ற தேர்தலை சந்தித்தார் டாக்டர் ராமதாஸ். ஆனால் 2001இல் கிடைத்த வெற்றி 2006 சட்டமன்ற தேர்தலில் குறைந்தது. அதற்கு முக்கியகாரணம் தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சியும், விஜயகாந்த் தலைமையில் உருவான புதிய கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகமும்தான் காரணம். இந்த இரு கட்சிகளால் கிடைக்கும் தேர்தல் தோல்வி பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்கால தேர்தல் அரசியலை கேள்விக்குறியாக்கியது. அதற்கு விடை கண்டு பிடிக்க டாக்டர் ராமதாஸ் கையிலெடுத்த ஆயுதம்தான் "காதல் திருமணத்திற்கு" எதிரான போராட்டம். அவர் ஒன்றை சொல்கிறார். "நான் காதல் திருமணத்திற்கு எதிரியல்ல. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்தும் "காதல் நாடக திருமணத்திற்கு எதிரி" என்று புதிய கோஷத்தை வைத்து தமிழகமெங்கும் பிரசாரம் செய்து வருகிறார்.

டாக்டர் ராமதாஸ் குறிவைத்த வாக்கு வங்கிகள்
தமிழகத்தில் முக்கிய வாக்கு வங்கிகள் என்றால் மூன்றுதான். ஒன்று வன்னியர் வாக்கு வங்கி. இது வட தமிழகத்தில் பிரதானமாக இருக்கிறது. அடுத்தது தேவர் வாக்கு வங்கி. இது தென் தமிழகத்தில் முக்கியமான வாக்கு வங்கியாக திகழ்கிறது. மூன்றாவது கொங்கு கவுண்டர்கள் வாக்கு வங்கி. இது மேற்கு தமிழகத்தில் வெற்றி தோல்வியை முடிவு பண்ணும் சக்தியாக இருக்கிறது. இந்த மூன்று வாக்கு வங்கிகளையும் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகளுக்கு எதிராக திருப்பி விடும் பணியில் தீவிரமாக இருக்கிறார் டாக்டர் ராமதாஸ். இந்த வாக்கு வங்கிகள் பிரதானமாக உள்ள மாவட்டங்களுக்கு எல்லாம் சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள அந்த இன தலைவர்களை சந்தித்து கூட்டம் போடுகிறார். ஆலோசனை நடத்துகிறார். இதில் சில மாவட்டங்களில் டாக்டர் ராமதாஸ் நுழையவே தடை விதிக்கப்பட்டன. இப்போது கூட தமிழகத்தின் மேற்கு மாவட்டமான திருப்பூரில் பா.ம.க. தலைவர் ராமதாஸின் கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழன் தலை நிமிர்ந்து நிற்கிறானா?
இப்படி மேற்கொண்டுள்ள தீவிர பிரசாரத்தின் விளைவாக இந்தமுறை மாமல்லபுரத்தில் நடத்திய சித்திரை முழு நிலவு பெருவிழாவிற்கு அந்த தேவர், கவுண்டர் இனத்தில் உள்ள சில ஜாதி அமைப்பு தலைவர்களை அழைத்தார். முதல் முறையாக பிராமணர் சங்கத்தை சேர்ந்தவரையும் வன்னியர் விழாவில் பேச வைத்தார் டாக்டர் ராமதாஸ். இது எல்லாமே "காதல் திருமணத்திற்கு" எதிராக திரளும் அனைத்து ஜாதியினரையும் ஒருங்கிணைக்கும் டாக்டர் ராமதாஸின் முயற்சி. சித்திரை பெருவிழாவில் பேசிய அன்புமணி ராமதாஸ் (டாக்டர் ராமதாஸின் மகன்), "தமிழன் தலை நிமிர்ந்து நிற்கிறானா? இல்லை. தன்மானம் இழந்து, குடிகாரனாக நிற்கிறான். இதற்கு பொறுப்பு திராவிட கட்சிகள்தான். தமிழனை பிச்சைக்காரர்களாக ஆக்கிய திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும்" என்று தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு முக்கிய கட்சிகள் மீதும் அட்டாக் பண்ணினார். அதில் பேசிய பிராமணர் சங்க தலைவர் அருண் ராமதாஸ், "அனைத்து சமுதாய மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான டாக்டர் ராமதாஸ் அவர்களே" என்று பாராட்டினார். கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ஜி.கே.நாகராஜ், "காதல் நாடக திருமணங்களை காவல்துறை கண்டிப்பதில்லை. நடவடிக்கையும் எடுப்பதில்லை. பத்திரிகைகளும் இதை கண்டித்து எழுதுவதில்லை. இதையும், வன்கொடுமை சட்டம் (தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான தீண்டாமையை தண்டிக்கும் சட்டம்) தவறாக பயன்படுத்தப்படுவதையும் அனைத்து சமுதாய பேரவையால் (டாக்டர் ராமதாஸ் உருவாக்கியுள்ள புதிய அமைப்பு) மட்டுமே முடியும். அதற்கு தலைமை தாங்கும் தகுதியுடையவர் டாக்டர் அய்யாதான்" என்றார் ஆவேசமாக.

காதல் திருமணம் - காடுவெட்டி குரு ஆலோனை
தேவரின மக்களின் சார்பாக தேசிய பார்வார்டு பிளாக் தலைவர் பி.டி.அரசகுமார், "இந்தியாவில் குடிக்காத ஒரே தலைவர் டாக்டர் ராமதாஸ். அதேபோல் கட்டிய மனைவியை மட்டும் நேசிக்கும் ஒரே உலக தலைவர் டாக்டர் ராமதாஸ். பவுடர் போடாத கூட்டம் நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சிதான். வன்னியன் பூமியில் அந்நியன் கொடி பறக்கக்கூடாது" என்று தூக்கலாகப் பேசி, "தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி வர வேண்டும். அப்படி பா.ம.க. ஆட்சி அமைந்தால் அது என் ஆட்சி" என்றார். வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு, "வங்க கடலை மிஞ்சியது இங்கே கூடியிருக்கும் வன்னியர் படை. நாங்கள் கலவரம் செய்ய மாட்டோம். ஆனால் கலவரம் செய்தால் தமிழகம் தாங்காது. எங்களை அடக்க தமிழக காவல்துறையும் போதாது. காதல் நாடக திருமணத்தை நடத்துகிறார்கள். காதல் திருமணம் வேண்டும் என்று கூறும் நீங்கள் முதலில் உங்கள் ஜாதியில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்குள் முதலில் காதல் திருமணம் செய்து கொள்ளுங்கள் பார்க்கலாம்" என்று சவால் விட்டார். இவரது அட்டாக்கும் தி.மு.க. மீதுதான் முக்கியமாக இருந்தது. குரு தன் பேச்சில் "மானமுள்ள வன்னியன் எவனும் தி.மு.க.வில் இருக்கலாமா?" என்று கேள்வி எழுப்பியவர், "நாங்கள் வாழ வேண்டும் என்றால் நாங்களும் ஆள வேண்டும்" என்று கூறி முடித்தார்.

காதல் நாடக திருமணம்- சமூக பிரச்சினை
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி, "இது திருப்புமுனை மாநாடு. இனி ஓர் இளைஞனும் இளம் பெண்ணும் பாட்டாளி மக்கள் கட்சி தவிர வேறு எந்தக் கட்சியிலும் இருக்கக்கூடாது. திராவிடக் கட்சிகள் ஒழிய வேண்டும். தகுதியான பாட்டாளி மக்கள் கட்சி ஆள வேண்டும். 39 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு 15 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மருத்தவரய்யாவுக்கு (டாக்டர் ராமதாஸ்) தடை விதித்தால் தமிழ்நாடு தாங்காது. தமிழ்நாடு போர்க்களமாகும்" என்று ஆவேசப்பட்டார். இறுதியில் பேச வந்தார் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ். அவர், "எங்களைப்போல் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் கட்சி எதுவும் இல்லை. நாங்கள்தான் கட்சியில் சேரும்போதே குடிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பத்து உறுதிமொழிகளை இளைஞர்களுக்கு கொடுத்து ஏற்க வைக்கிறோம். காதல் திருமணம் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆணும், பெண்ணும் படித்து, வேலைக்குப் போன பிறகு, அப்படியொரு காதல் திருமணம் நடைபெற்றால் அதை நான் தடுக்கவில்லை. ஆனால் 13 வயதிலேயே "காதல் நாடக திருமணம்" என்ற பெயரில் சின்னஞ்சிறு பெண்களை கூட்டிக்கொண்டு ஓடுவதைத்தான் கண்டிக்கிறேன். இன்று தமிழகத்தில் வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதும், காதல் நாடக திருமணமும் சமூக பிரச்சினையாக மாறியிருக்கிறது. ஒரு பெண்ணுக்கு யார் மருமகனாக வர வேண்டும் என்பதை இழுத்துக் கொண்டு போகிறவன் முடிவு பண்ண முடியாது. அந்த பெண்ணின் பெற்றோர்தான் முடிவு பண்ண வேண்டும். ஆனால் தி.க. வீரமணியும், திராவிடக் கழகங்களும் இழுத்துக் கொண்டு ஓடுகிறவன்தான் முடிவு பண்ண வேண்டும் என்கிறார்கள். அது சரியா?" என்று கோபப்பட்டவர், "தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்க வேண்டும். அதற்கு எங்களை கூப்பிட்டு பேசுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்தார். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, "இரவு பத்து மணி வரைதான் கூட்டம்" நடத்த வேண்டும் என்று பொலிஸ் அறிவுறுத்தியிருந்தது. ஆனால் ராமதாஸ் தன் பேச்சை முடிக்கும் போது இரவு 11.30. ஆனால் அதற்கு எல்லாம் அஞ்சாதவர் போல், "கொடுத்த நேரத்திற்கு மேல் பேசியதற்காக வழக்கு போட வேண்டும் என்றால் போடு" என்று காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கும் தொணியில் பேசினார்.

போராட்டக் களத்திற்கு வரும் திருமாவளவன்
இந்த மாநாட்டில் இதைவிட "ஆவேசமான" கருத்துக்கள் எல்லாம் பேசப்பட்டன. அவற்றை அப்படியே எழுத முடியாது. இந்த பேச்சுக்கள்தான் மற்ற அரசியல் கட்சிகளை பதற்றமடைய வைத்துள்ளது. விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவவளவன் உடனடியாக தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார். அவரும், "ஜாதி மோதல்களை காவல்துறை தடுக்க வேண்டும். கலவரம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இதுவரை எதிரும் புதிருமாக இருந்த திருமாவளவனும், விஜயகாந்தும் சந்தித்துக் கொண்டார்கள். அதைத் தொடர்ந்து "ஜாதிக்கலவரத்தை அரசியல் ஆதாயத்திற்காக தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அறிக்கைவிட்டார். இதே கருத்தை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே அறிக்கை விட்டுள்ளன. தமிழக அரசியல் காதல் திருமணத்தை முன்னிறுத்தி திசைமாறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய டாக்டர் ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து மே 2ஆம் திகதி திருமாவளவன் தமிழகம் முழுவதும் கண்டனப் போராட்டம் நடத்தப் போகிறார். அந்த போராட்டத்திற்கு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

"ஜாதி தீயை" அடக்க இரும்புக்கரம்
ஆனால் டாக்டர் ராமதாஸை பொறுத்தமட்டில் இந்த "காதல் நாடக திருமணத்திற்கு" எதிரான போர்க்குரல் மூலம் சரிந்து வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கை தூக்கி நிறுத்தி விட முடியும் என்று நினைக்கிறார். அது மட்டுமின்றி பாட்டாளி மக்கள் கட்சி ஏதோ வன்னியர் சமுதாய கட்சி என்பதுபோல் செய்யப்பட்டுள்ள பிரசாரத்தை மாற்றி "நான் அனைத்து சமுதாயத்திற்கும் தலைவர்" என்ற இமேஜை டாக்டர் ராமதாஸ் உருவாக்க முனைகிறார். அதே நேரத்தில் திராவிடக் கட்சிகள் மீது கடும் தாக்குதலை நடத்தும் டாக்டர் ராமதாஸ், தி.மு.க.வை மட்டுமே அதிகமாக விமர்சிக்கிறார். சித்திரை முழு நிலவு பெருவிழாவில் அரங்கேற்றிய ஒரு நாடகத்தில் கூட தி.மு.க. தலைவர் கருணாநிதியைத்தான் மோசமாக விமர்சித்தார்கள். ஆனால் அ.தி.மு.க.வை பற்றி ஏதோ சில விமர்சங்களை மட்டும் முன் வைத்து அந்த நாடகத்தில் அடக்கி வாசித்தார்கள். ஆளுங்கட்சியை ஓர் அளவுக்குமேல் வம்பு இழுத்தால் நடவடிக்கை பாய்ந்து விடும் என்ற அச்சமே இதற்கு காரணம்! ஏன் காடு வெட்டி குருவே கூட "ஒரு வன்னியனும் தி.மு.க.வில் இருக்கக்கூடாது" என்று கூறினாரே தவிர, அ.தி.மு.க. பற்றி வாய் திறக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த மேடை நாடகத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை "நிதானமில்லாத தலைவர்" என்றே விமர்சித்தார்கள். இந்த கடும் விமர்சனங்களை எல்லாம் மேடையின் எதிரே அமர்ந்து டாக்டர் ராமதாஸ் ரசித்து கேட்டுக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. "காதல் நாடக திருமணம்" "வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுதல்" என்ற இரு கோஷங்களை முன் வைத்து பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும். தன் செல்வாக்கை நிரூபிக்க வேண்டும் என்பதுதான் அஜெண்டா. அரசியல் எப்படியிருந்தாலும், அமைதியாக இருக்கும் தமிழகத்தில் "ஜாதி தீ"யைப் பரப்பும் செயலை இந்த "மாமல்லபுரம் மாநாடு" செய்திருக்கிறது. தமிழக காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் என்றே தெரிகிறது.

முதல்வர் தொடுத்த "ராமதாஸ் அட்டாக்"
தமிழக சட்டமன்றத்தில் ஏப்ரல் 29ஆம் திகதி இந்த "மரக்காணம் கலவரம்" பற்றி விளக்கம் அளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, "சாதி மத கலவரத்தை தூண்டுவோர் மீது தடுப்புக்காவல் சட்டத்தின் படி கூட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்" என்று அறிவித்தார். அது மட்டுமின்றி, "பொலிஸ் கொடுத்த நேரத்திற்கு மேல் பேசிய டாக்டர் ராமதாஸ், "என் மீது வழக்குப் போடு" என்று கேட்டி்ருக்கிறார். அவர் கோரிக்கையை ஏற்று அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கூட்டத்திற்கு வந்தவர்கள் குடித்துவிட்டு வந்திருக்கிறார்கள் (மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்" என்று டாக்டர் ராமதாஸ் போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது). சந்தனக் கடத்தல் வீரப்பனின் படத்தை ஒட்டி வந்திருக்கிறார்கள். கூட்டத்திற்கு வந்த சில வாகனங்களின் நம்பர்கள் போலியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த திட்டமிட்டு வந்தது போலவே தெரிகிறது. சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் எதையும் டாக்டர் ராமதாஸ் நடத்திய கூட்டத்தில் கடைப்பிடிக்கவில்லை. பல நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளன" என்று குற்றம் சாட்டிய முதல்வர் ஜெயலலிதா, "இறுதியாக டாக்டர் ராமதாஸ் இளைஞர்களை நல்வழிப் படுத்துகிறேன் என்கிறார். வீரப்பன் போட்டோவை ஒட்டிக் கொண்டு அவரது இளைஞர்கள் வந்திருக்கிறார்கள். வீரப்பன் வழியை கடைப்பிடிக்கச் சொல்கிறாரா டாக்டர் ராமதாஸ். இதுதான் அவர் இளைஞர்களை வழி நடத்தும் விதமா" என்று கேள்வி எழுப்பினார். முதல்வர் ஜெயலலிதாவின் சட்டமன்ற பேச்சு சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விதத்தில் அமைந்திருக்கிறது. ஆளும் அ.தி.மு.க. தரப்பில் இருந்து வந்த இந்த "இடியை" தாங்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ் என்பதுதான் இப்போதைய நிலைமை.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X