2025 மே 19, திங்கட்கிழமை

தி.மு.க., அ.தி.மு.க.வை மிரட்டும் "ராகுல் மேஜிக்"?; காங்கிரஸை காப்பாற்றுமா, கைவிடுமா?

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

"ராகுல் காந்தி" மேஜிக் தமிழக அரசியலில் இப்போது புகுத்தப்படுகிறது. கடைசியாக நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 5 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்ற காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் பிரதான கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இல்லாமல் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றிபெற்றுவிட முடியுமா என்று "கனவு கோட்டை" எழுப்புகிறது.

தமிழக அரசியலில் காங்கிரஸ் மீதான எண்ணம் வாக்காளர்கள் மத்தியில்  "நெகட்டிவாகவே" இருக்கிறது. இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளும் பிரச்சினை- இவையெல்லாவற்றையும் விட தமிழக நலனில் காங்கிரஸ் அக்கறை செலுத்துவது இல்லை என்று ஆட்சியிலிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தாக்குதல் போன்ற பல விவகாரங்களில் மாட்டி தத்தளித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி.

இந்நிலையில் ஓகஸ்ட் 25ஆம் திகதி தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் விஜயகாந்தின் 61ஆவது பிறந்த நாள் விழா. அந்த விழாவினை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சியின் மூத்த தலைவர் ஒருவருக்கு நடந்த பிறந்த நாள் விழா போலவே கொண்டாடி இருக்கிறார்கள். தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்கள், கட்சியின் மாநில தலைவர், ஏன் அந்தக் கட்சியின் அகில இந்திய துணை தலைவர் ராகுல் காந்தி அனைவருமே விஜயகாந்திற்கு வாழ்த்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இதைத்தான் "ராகுல் மேஜிக்" என்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் உருவாக்குவோம் என்பதுதான் அவர்களது நிலைப்பாடு. முக்கிய காங்கிரஸ் தலைவர்களைப் பொறுத்தமட்டில், "எங்கள் தலைமையில் விஜயகாந்த் கூட்டணி அமைப்பார். அதன் பிறகு தி.மு.க. வேண்டுமானால் எங்கள் கூட்டணியில் வந்து சேர்ந்து கொள்ளட்டும்" என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அவர்களது திரைமறைவு பேச்சில் இதெல்லாம் வெளிப்படுகிறது.

அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தங்களுக்கு வாழை இலை போட்டு வரவேற்கவில்லை என்பதைப் புரிந்து கொண்ட காங்கிரஸ் மேலிடம் - குறிப்பாக துணை தலைவர் ராகுல் காந்தி தரப்பில் உள்ளவர்கள் தங்களுக்கு வேண்டிய தமிழக தலைவர்களிடம் வேறு மாதிரியாக பேசி வருவதாக தகவல். "ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மூன்றாவது டேர்மைப் பொறுத்தமட்டில் தமிழகத்தை நாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அங்குள்ள 39 எம்.பி.க்களில் எதுவுமே நமக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அதே நேரத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் பலப்படுத்தி விட வேண்டும். அதுதான் 2016 சட்டமன்ற தேர்தலில் நம் கட்சி வெற்றி பெற உதவும்" ராகுல் தரப்பின் எண்ணமாக இருக்கிறது.

இதை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலரே வெளிப்படையாகவே பேசுகிறார்கள். அதனால்தான் விஜயகாந்திற்கு வாழ்த்துச் சொன்ன அதே நாளில் தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் போடப்பட்டுள்ள தீர்மானங்களில் ஒன்று "தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும்" என்ற தீர்மானம். அப்படி ஒரு வேளை கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் "நமக்கு மரியாதை தரும் கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டும்" என்று தீர்மானம் போட்டிருக்கிறது.

இந்த தீர்மானம் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கு மட்டுமல்ல. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கும்தான்! வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி என்பதற்கு விஜயகாந்த் சம்மதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் நினைக்கிறது. ஏனென்றால் விஜயகாந்த் தலைமையில் கூட்டணி என்று வைத்து நிதியமைச்சர் ப.சிதம்பரம், அகில இந்திய தலைவர்கள் ராகுல்காந்தி, சோனியா காந்தி போன்றோர் தமிழகம் வந்து பிரசாரம் செய்தால் அது காங்கிரஸுக்கு மரியாதை தரும் கூட்டணியாக இருக்காது என்று காங்கிரஸில் இருக்கும் ஒரு தரப்பு மேலிடத்திற்கு தூபம் போட்டு வருகிறது.

சென்ற ஜூன் மாதத்தில் நடைபெற்ற ராஜ்ய சபை தேர்தலில் முதலில் விஜயகாந்திற்கு ஆதரவு தருகிறோம் என்று கூறி விட்டு பிறகு தி.மு.க.வைச் சேர்ந்த கனிமொழிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது இந்த பின்னணியில்தான் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலரே சொல்கிறார்கள். ஆக, காங்கிரஸ் தலைமையில் கூட்டணி என்பதை சம்மதிக்க வைக்கவே இப்போது விஜயகாந்தின் பிறந்த நாளுக்கு தானே முன் வந்து பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லியிருக்கிறார் ராகுல் காந்தி என்று தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள்.

ராகுலின் இந்த முயற்சிக்கு பல பின்னனிகள் உள்ளன. அவற்றுள் முக்கிய பின்னணி தே.மு.தி.க.வை காட்டி தி.மு.க.வை பணிய வைப்பதுதான். தி.மு.க.வுடன் 2004இல் காங்கிரஸ் கூட்டணி வைத்த போது அக்கட்சிக்கு 10 தொகுதிகளை கொடுத்தது தி.மு.க. 2009 நாடாளுமன்ற தேர்தலில் 16 தொகுதிகளைக் கொடுத்தது.

இனி கூட்டணி சேர்ந்தால் அத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்று காங்கிரஸ் தலைவர்களே நம்பவில்லை. அதனால் "பார்! பார்! விஜயகாந்த் எங்களுடன் இருக்கிறார். உங்களுக்கு அ.தி.மு.க.வை ஜெயிக்க வேண்டும் என்றால் எங்களுடன் கூட்டணி சேருங்கள். நாங்கள் கேட்கும் தொகுதிகளைக் கொடுங்கள்" என்று தி.மு.க.வை மிரட்டவே விஜயகாந்த் பக்கம் சாய்கிறது காங்கிரஸ் கட்சி. அவர் கட்சி ஆரம்பித்து 9 வருடமாக விஜயகாந்தின் பிறந்த நாளை கண்டுகொள்ளாத காங்கிரஸ் கட்சி இப்போது வாழ்த்தத் தொடங்கியிருக்கிறது.

இந்த "சூட்சம வியூகத்தின்" பின்னணியில் விஜயகாந்த் என்ன மாதிரி முடிவு எடுக்கப் போகிறார் என்பதுதான் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தைப் பொறுத்தமட்டில் அ.தி.மு.க.வின் அட்டாக்கை தாங்க முடியாமல் தவிக்கிறார். அவர் மீது போடப்பட்டுள்ள மானநஷ்ட வழக்குகளில் தமிழகம் முழுவதும் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜராவதே அவருக்கு அன்றாட வேலை என்றாகி விட்டது. தன் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் திணறுகிறார்.

ஏழு எம்.எல்.ஏ.க்கள் அவரது கோட்டையை விட்டு வெளியேறி, "எங்கே சேருவது" என்ற குழப்பத்தில் நிற்கிறார்கள். அவர்களை கட்சியை விட்டு நீக்கப் போகிறேன் என்று நோட்டீஸ் கொடுத்த விஜயகாந்த் அதைக்கூட இன்னும் நிறைவேற்ற முடியாமல் யோசிக்கிறார். இது தவிர அவரது கட்சியில் இருக்கும் முக்கியப் பிரமுகர்கள் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் அவரது கட்சியின் மாநில துணைச் செயலாளர் ஆஸ்டினே இப்போது விலகல் கடிதம் கொடுத்து விட்டார்.

இப்படி கட்சியை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் விஜயகாந்த், சமீப காலமாகவே அ.தி.மு.க. அரசுக்கு எதிராக "காரசார" பேச்சை குறைத்துக் கொண்டு விட்டார். ஆகவே அவர் முன்பு உள்ள உடனடி இலக்கு, ஒரு வெற்றிக் கூட்டணியை நாடாளுமன்ற தேர்தலுக்கு அமைப்பதுதான்! அது மட்டுமே தன் கட்சியின் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தும் சக்தி மிக்கதாக இருக்க முடியும் என்ற எண்ணம் நிச்சயமாக விஜயகாந்திற்கு இருக்கிறது.

"வெற்றிக்கூட்டணி" என்ற கோட்பாட்டிற்கு காங்கிரஸுடன் கூட்டணி சேருவது, அதுவும் அந்தக் கட்சியின் தலைமையில் கூட்டணி சேருவது விஜயகாந்திற்கு போதுமா என்பதுதான் அவர் மனதில் உள்ள அடுத்த கேள்வி. தமிழகத்தில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த 39 தொகுதிகளில் காங்கிரஸும்- தே.மு.தி.க.வும் கூட்டணி வைத்தால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது என்பதுதான் தேர்தல் புள்ளிவிவரம் காட்டும் பாடம். அதாவது பரவாயில்லை. ஒரு தொகுதியிலாவது டெபாஸிட் வாங்க முடியுமா என்பதே கேள்விக்குறிதான்.

ஏனென்றால் தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது தேர்தல் பணி செய்வது வேறு. அ.தி.மு.க. ஆட்சியிலிருக்கும் போது தேர்தல் பணிகளில் ஈடுபடுவது என்பது வேறு என்ற விஷயம் விஜயகாந்திற்கு நன்கு புரிந்திருக்கும். இப்படியொரு ஜெயிக்க முடியாத கூட்டணியை வைக்க வேண்டும் என்பது அடுத்து ஆட்சிக்கு வருவது கஷ்டம் என்ற நிலையில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் "2016-ல் முதலமைச்சராக வேண்டும்" என்ற முழக்கத்துடன் பவனிவரும் தே.மு.தி.க.வினருக்கு சரிப்பட்டு வராது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முதலில் வேட்பாளர்கள் முன் வர வேண்டும். 2006, 2011 ஆகிய சட்டமன்ற தேர்தல்களிலும், 2009 நாடாளுமன்ற தேர்தலிலும் இருந்த நிலை தே.மு.தி.க.விற்கு இப்போது இல்லை. "அடுத்து நாம்தான் வெற்றி பெறுவோம்" என்ற எண்ணம் அப்போது தே.மு.தி.க.வில் உள்ள வேட்பாளர்களுக்கு இருந்தது. அதனால் போட்டியிட்டு, செலவு செய்ய முன்வந்தார்கள். ஆனால் அப்படி போட்டியிட்டவர்கள் எம்.எல்.ஏ. ஆகி பலர் வெளியேறி விட்டார்கள்.

போட்டியிடாதவர்கள் இனிமேல் செலவு செய்ய தயார் இல்லை என்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள்.
இது போன்ற சூழலில் "வெற்றிக்கூட்டணி" என்ற இமேஜை விஜயகாந்த் முதலில் தன் கட்சியினருக்கு கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்து ஏதாவது சில எம்.பி.க்களைப் பெற்று, அவர்கள் மூலம் மத்தியில் அமையும் ஆட்சியிலும் பங்கேற்றால் மட்டுமே தமிழகத்தில் தே.மு.தி.க.வை நிலைநிறுத்த முடியும்.

அது மட்டுமல்ல, தங்கள் வாக்கு வங்கிக்குப் போட்டியாக இருக்கிறது தே.மு.தி.க. என்ன எண்ணத்தில் அந்தக் கட்சி மீது "ஆப்பரேஷனை" ஆரம்பித்துச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க.வின் நடவடிக்கைகளில் இருந்தும் தே.மு.தி.க.வை காப்பாற்ற முடியும். இந்த இரு காரணிகளுக்கும் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது பொருத்தமாக இருக்காது என்றே தே.மு.தி.க.விலேயே "எம்.பி. தேர்தலில் போட்டியிட விரும்பும்" பிரமுகர்களின் கருத்தாக இருக்கிறது.

காங்கிரஸுடன் கைகோர்ப்பதில் வேறு சில சிக்கல்களும் இருப்பதாகவே விஜயகாந்த் உணருகிறார். தமிழகத்தில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் எந்தக் கட்சிகளும் இல்லை. இப்போது "பகைமை"யாகியிருக்கும் அ.தி.மு.க. தவிர! அதுவும் கூட தேர்தல் களம் நெருங்கும் வேளையில் இந்த "வேண்டாம் கூட்டணி" என்ற விரதம் அ.தி.மு.க.விற்கு நீடிக்குமா என்றும் தெரியவில்லை.

ஆனால் தி.மு.க., பா.ஜ.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாமே தே.மு.தி.க.வுடன் கூட்டணி வேண்டாம் என்ற எண்ணத்தில் இல்லை. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மீதான எண்ணம் அப்படியில்லை. இன்று தமிழகத்தில் எந்தக் கட்சியும் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற குஷியில் இல்லை. ஆகவே காங்கிரஸுடன் முதலில் ஐக்கியமாகி தங்களுக்கு உருவாக காத்திருக்கும் "வெற்றிக் கூட்டணியை" கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற நினைப்பு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பலருக்கு இருக்கிறது என்பதே உண்மை.

இது ஒருபுறமிருக்க, தமிழக அரசியலில் மூன்றாவது சக்தியாக தே.மு.தி.க. ஏற்கனவே உருவாகி விட்டது. இந்த சூழ்நிலையில் அந்த இடத்திற்கு ஏற்கனவே போட்டி போட்டுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பது தே.மு.தி.க.வை நான்காவது இடத்திற்கு கொண்டு போய்விடக்கூடாது என்ற அச்சமும் அக்கட்சி தலைமைக்கு இருக்க வாய்ப்புண்டு. அதே போல் ஒரு வேளை "கௌரவமான தொகுதிகளுடன்" தி.மு.க.வுடனோ அல்லது அ.தி.மு.க.வுடனோ கூட்டணி வைக்கும் வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு கிட்டி விட்டால், அக்கட்சி தலைவர்கள் தே.மு.தி.க.வை அந்தக் கூட்டணியில் சேர்த்துக் கொள்வார்களா?

அப்படி சேர்த்துக் கொண்டால் தே.மு.தி.க.விற்கு மரியாதைக்குரிய எண்ணிக்கையில் தொகுதிகளை கொடுக்குமாறு காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க.விடமோ அல்லது தி.மு.க.விடமோ வற்புறுத்துமா என்ற கேள்வியும் தே.மு.தி.க.வினர் மனதை நெருடாமல் இல்லை. ஏனென்றால் ராஜ்ய சபை தேர்தலில் தங்களை கைவிட்ட கட்சிதான் காங்கிரஸ் என்பதை தே.மு.தி.க. தலைவர்களும் மறக்கவில்லை. விஜயகாந்தும் மறக்கத் தயாராக இல்லை! அதனால்தான் பிறந்த நாள் கூட்டத்தில் "முதலில் தேர்தல் அறிவிக்கப்படட்டும். பிறகு கூட்டணி பற்றி அறிவிக்கிறேன். மாநாடு போட்டு என் கட்சி தொண்டர்களின் கருத்தைக் கேட்டே அப்படியொரு முடிவை அறிவிப்பேன்" என்று விஜயகாந்ந் "எண்ணையும்- தண்ணீரும்" போல் விலகி நின்று பதில் அளித்துள்ளார்.

தே.மு.தி.க. பக்கம் காங்கிரஸ் நெருங்கிச் செல்வதை அ.தி.மு.க. சந்தோஷமாகவே பார்க்கிறது. தி.மு.க.வோ சந்தேகக் கண்ணுடன் பார்க்கிறது. ஏனென்றால் தி.மு.க- காங்கிரஸ்- தே.மு.தி.க. என்று ஒரு கூட்டணி உருவாகி விடக் கூடாது என்பது மட்டுமே அ.தி.மு.க.வின் முக்கிய நோக்கம். அதை விட "விஜயகாந்த்- பா.ஜ.க. கூட்டணியோ" அல்லது, "பா.ஜ.க.- வைகோ" என்று ஒரு கூட்டணியோ உருவாகி விடக்கூடாது என்று நினைக்கிறது அ.தி.மு.க. இந்த மூன்றில் எந்த வடிவத்தில் கூட்டணி அமைந்தாலும், அது "39-க்கு 39 வெற்றி" என்ற தங்கள் முழக்கத்திற்கு ஆபத்தாக முடியும் என்பது அ.தி.மு.க. தலைமைக்குப் புரிகிறது.

ஏனென்றால் "இளம் வாக்காளர்கள்" நரேந்திர மோடியின் இமேஜில் கவரப்பட்டு இருக்கிறார்கள். இந்த வாக்காளர்கள்தான் சென்ற சட்டமன்ற தேர்தலில் 2-ஜி அலைக்கற்றை ஊழலை காரணம் காட்டி தி.மு.க.வை படு மோசமாக தோற்கடித்தவர்கள். அந்த வாக்காளர்கள் "விஜயகாந்த்- பா.ஜ.க" அல்லது "பா.ஜ.க.- வைகோ" கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்து விடுவார்கள். அது மட்டுமின்றி பா.ஜ.க.வே தேர்தல் களத்தில் நின்றால் கூட அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் "இந்துத்துவா" வாக்காளர்களும் இந்த கூட்டணிகளுக்கு வாக்களித்து விடுவார்கள் என்ற அச்சம் அ.தி.மு.க. தலைமைக்கு வர வாய்ப்புண்டு. இந்த நிலைப்பாடு தவிர, காங்கிரஸுடன் தே.மு.தி.க.வும் கைகோர்த்தால் நல்லதுதான் என்ற நினைப்பில்தான் அ.தி.மு.க. இருக்கிறது.

அதே நேரத்தில் தே.மு.தி.க.வுடன் காங்கிரஸ் கொஞ்சி குலாவுவது தங்களை வழிக்குக் கொண்டு வரவே என்று தி.மு.க. சந்தேகிக்கிறது. அதனால்தான் முதலில் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மீது மறைமுகத் தாக்குதலை தொடுத்தது தி.மு.க. பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் மீது அட்டாக் பண்ணியது. இரண்டு பேரும்தான் விஜயகாந்த்தை நம் பக்கம் வர விடாமல் தடுக்கிறார்கள் என்ற எண்ணம் அக்கட்சி தலைமைக்கு இருக்கிறது என்பதற்கான அடையாளங்கள் இவை.

நம்மிடம் பேசிய தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர், "தி.மு.க.வைப் பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி என்பது உடனடியாக மாநிலத்தில் எங்களை ஆட்சிக்கு கொண்டு வந்து விடப் போவதில்லை. அ.தி.மு.க.விற்கு மாற்று என்றால் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் எங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள். அதே போல் நாடாளுமன்ற தேர்தலி்ல கூட அ.தி.மு.க. மீதான அதிருப்தி எங்களுக்குத்தான் வாக்குகளாக மாறுவே தவிர, காங்கிரஸ்- தே.மு.தி.க. கூட்டணிக்குப் போகாது.

அதனால் காங்கிரஸுடன் தே.மு.தி.க. சேர்ந்தால், அது விஜயகாந்திற்குத்தான் பிரச்சினையே தவிர எங்களுக்கு அல்ல. நாங்கள் காங்கிரஸ் அல்லாத கட்சிகளை முன் வைத்து கூட்டணியை அமைத்து விடுவோம். ஏன் இப்படியொரு இக்கட்டான சூழ்நிலை 1999 பாராளுமன்ற தேர்தலில் வந்த போது நாங்கள் பா.ஜ.க.வுடனேயே கூட்டணி வைக்க தயங்காதவர்கள்" என்றார் பூடகமாக! விஜயகாந்தை மையமாக வைத்து நகர்த்தப்படும் "ராகுல் மேஜிக்", தமிழக அரசியலில் காங்கிரஸை காப்பாற்றுமா அல்லது 2004, மற்றும் 2009 நாடாளுமன்ற தேர்தல்களில் அதிக எம்.பி.க்களைப் பெற்றுத்தந்த கூட்டணி தி.மு.க.வடிவிலோ, அ.தி.மு.க.வடிவிலோ காங்கிரஸுக்கு கிடைக்காமல் கைநழுவிப் போகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X