2025 மே 19, திங்கட்கிழமை

டெல்லியில் நடக்கும் "மதவாத எதிர்ப்பு" கருத்தரங்கு

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒக்டோபர் 30... இடது சாரிக் கட்சிகளின் சார்பில் ஒரு கருத்தரங்கம் நடக்கப் போகிறது. அதற்குப் பெயர் "மதவாத எதிர்ப்புக் கருத்தரங்கு"! பல்வேறு மாநிலக் கட்சிகளின் தலைவர்களை அழைத்துள்ளதாக இடது சாரிகளின் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இந்த கருத்தரங்கம், இந்திய அரசியலில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாக் கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அணியை உருவாக்கும் முயற்சிக்கு உத்வேகம் பெறுவதற்காக போடப்படுகிறது. அன்றைய தினம் டெல்லியில் நடக்கும் "மதவாத எதிர்ப்பு கருத்தரங்க"த்திற்கு எத்தனை கட்சிகள் வரப்போகின்றன என்பதுதான் அடுத்த கட்ட அரசியல் அதிரடிகளுக்கு விதை போடும். அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் எடுக்கும் இந்த முயற்சி எத்தனை தலைவர்கள் சம்மதிக்கப் போகிறார்கள்? மூன்றாவது அணி தேர்தலுக்கு முன் அமையுமா அல்லது பிறகு அமையுமா?- இதெல்லாம் இன்னும் விடை தெரியாத கேள்விகளாகவே அந்தரத்தில் நிற்கின்றன.
 
மூன்றாவது அணிதான் பா.ஜ.க.விற்கும், காங்கிரஸுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் "கசப்பு" மாத்திரைகளைக் கொடுக்கும். இதுவரை அப்படி பல முறை மூன்றாவது அணி இந்திய அரசியலில் தேர்தலுக்கு முன்பும் தோன்றியிருக்கிறது. தேர்தலுக்குப் பிறகும் தோன்றியிருக்கிறது. ஆனால் அப்படி மூன்றாவது அணியின் சார்பில் பிரதமரானவர்கள் நீண்ட காலம் பதவியிலிருக்க முடியவில்லை. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அல்லாத பிரதமர்களாக வந்த வி.பி.சிங், சந்திரசேகர், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் ஆகிய மூவருமே தொடர்ந்து இரு வருடங்கள் கூட இந்தியப் பிரதமர்களாக இருக்க முடியவில்லை. வி.பி.சிங் பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு வழங்கும் இட ஒதுக்கீட்டைக் கொடுத்த "மண்டல் கமிஷன்" பரிந்துரையை அமல்படுத்தி ஆட்சியை இழந்தார். ராஜீவ் காந்தியின் வீட்டை வேவு பார்த்தார்கள் பொலிஸ்காரர்கள் என்ற காரணத்திற்காக சந்திரசேகர் பதவியிழந்தார். "இந்து தேசியவாதத்தை" கட்டுப்படுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டைச் சுமத்தி, பிரதமராக இருந்த தேவகவுடாவிற்கு தன் ஆதரவை வாபஸ் பெற்றது காங்கிரஸ் கட்சி. அதனால் அவர் பிரதமர் பதவியிழந்தார். "ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் தி.மு.க.வினரை மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்" என்று காங்கிரஸ் கட்சி போர்க்கொடி தூக்கியது. அதை ஏற்க மறுத்ததால், ஐ.கே. குஜ்ரால் தன் பிரதமர் பதவியை இழந்தார்.
 
ஏன் அதற்கு முன்பு 1979 ஜூலை மாதத்தில் (அதாவது மொரார்ஜி தேசாய் ராஜினாமா செய்த பிறகு) 64 எம்.பி.க்கள் மட்டும் வைத்திருந்த சரன்சிங் - இந்திரா காந்தியின் ஆதரவுடன் பிரதமரானார். ஆனால் இந்திரா காந்தி மீதான எமெர்ஜென்ஸி வழக்குகளை வாபஸ் பெற மறுத்ததற்காக பதவி விலகுகிறேன் என்று கூறி விட்டு அவரும் ராஜினாமா செய்தார். பதவியேற்றதிலிருந்து 24 நாளில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே சரன்சிங் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எமெர்ஜென்ஸிக்குப் பிறகு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற மொரார்ஜி தேசாய் மட்டும் அப்படியும் இப்படியுமாக இரு வருடங்கள் வரை பிரதமராக இருந்தார். ஆனாலும் அவரது கட்சிகள் நடைபெற்ற "உள்குத்துகள்", "உரசல்கள்" அவரையும் விரைவில் வீட்டிற்கு அனுப்பி வைத்தது. மூன்றாவது அணியின் பிரதமர்களோ அல்லது காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.விற்கு மாற்றாக வந்த பிரதமர்களோ (மொத்தம் ஆறு பிரதமர்கள்) இந்திய நாடாளுமன்றத்தின் முழு ஆயுள்காலமான ஐந்து வருடம் முழுவதும் தொடர்ந்து பதவியில் இருக்க முடியவில்லை. இந்தக் காரணமே மூன்றாவது அணியால், "நிலைத்த ஆட்சியைக் கொடுக்க முடியாது" என்ற கோஷத்திற்கும், குற்றச்சாட்டிற்கும் உள்ளானது. வாக்களிக்கும் மக்களுக்கு மூன்றாவது அணி என்றாலே அது ஒரு "நித்ய கண்டம் பூரண ஆயுசு" என்ற ஆட்சி என்ற நிலைமைக்குப் போனது. 
 
நிலையான ஆட்சியை இடது சாரிக் கட்சிகள் முன்னிறுத்தும் மூன்றாவது அணியால் கொடுக்க முடியாது என்பதுதான் இந்திய அரசியலில் காங்கிரஸுக்கும், பா.ஜ.க.விற்கும் மாற்று உருவாகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. தமிழகத்தில் எப்படி தி.மு.க.விற்கு மாற்று அ.தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்று தி.மு.க. என்ற நிலைமை இருக்கிறதோ, இதேபோன்று அகில இந்திய அளவில் காங்கிரஸுக்கு பா.ஜ.க. மாற்று என்பதும், பா.ஜ.க.விற்கு காங்கிரஸ் கட்சி மாற்று என்பதும் 1999 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிலைபெற்று விட்டது என்றே சொல்ல வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில் இடது சாரித் தலைவர் பிரகாஷ் காரத் எடுக்கும் முரண்பட்ட மூன்றாவது அணி காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.விற்கு மாற்றாக வர மறுக்கிறது. சுர்ஜித், ஜோதிபாசு போன்ற தலைவர்கள் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தவிர மற்ற அனைத்து மாநிலக் கட்சிகளையும் ஒருங்கிணைக்க முயற்சி எடுத்தார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள். ஆனால் பிரகாஷ் காரத்தோ இருக்கின்ற மதசார்பற்ற கட்சிகளுக்குள் வெவ்வேறு கோட்பாடுகளின் அடிப்படையில், மாநிலங்களில் நிலவும் வெவ்வேறு அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் பல மாநிலக் கட்சிகளை புறந்தள்ளி வைக்கிறார். அதனால் பலமான மூன்றாவது அணி அமைவதற்கு முட்டுக்கட்டையாக நிற்கிறது.
 
உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால் தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் இடது சாரிகள் கூட்டணியாக இருப்பதால், தி.மு.க.வை "மதவாத எதிர்ப்பு கருத்தரங்கிற்கு" அழைக்கவில்லை. ஏன் பொதுவான விடயமான இலங்கை தமிழர் பிரச்சினைக்காக டெல்லியில் கூட்டம் போட்ட போது கூட இடதுசாரிக் கட்சிகள் அக்கருத்தரங்கில் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் கலந்து கொள்ளும் கூட்டத்தில் தி.மு.க. அழைப்பினே ஏற்க முடியாது என்று காரணம் கூறினார்கள். அது மட்டுமின்றி இப்போது ஏற்காடு சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறுகிறது. வருகின்ற டிசெம்பர் 4ஆம் திகதி நடைபெற விருக்கும் அந்தத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் மாறனை ஆதரிக்கக் கோரி இடதுசாரிக் கட்சிகளுக்கும் கடிதம் எழுதினார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. ஆனால் "காங்கிரஸ் அரசின் கொள்கைகளை தி.மு.க. ஆதரிக்கிறது. இப்போதும் கூட முக்கியப் பிரச்சினைகளில் மத்திய அரசை தி.மு.க. ஆதரிக்கிறது. ஆகவே அவர்களுக்கு ஆதரவு அளிக்க முடியாது" என்று கூறியிருக்கிறார் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். இது அக்கட்சியின் அகில இந்திய நிலைப்பாட்டை ஒட்டியே எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படியென்றால் இன்றையே திகதிவரை மத்திய அரசை பல முக்கியமான கட்டங்களில் இருந்து காப்பாற்றி வரும் முலயாம் சிங் யாதவ் மீது கம்யூனிஸ்டுகளுக்கு கோபம் வருவதில்லை. காங்கிரஸுக்கு அவர் ஆதரவளித்துக் கொண்டிருந்தாலும், அவரை "மதவாத எதிர்ப்பு" கருத்தரங்கிற்கு அழைக்கிறார்கள். பீஹாரில் நிதிஷ்குமார் தலைமையில் உள்ள ஐக்கிய ஜனதாதள அரசின் மீதான நம்பிக்கைத் தீர்மானத்தை காங்கிரஸும் ஆதரித்து வாக்களித்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரித்து வாக்களித்தது. ஆகவே மதவாத எதிர்ப்பு என்ற பின்னணியில் மாநிலத்திற்கு ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பின்னால் அனைத்து மாநிலக் கட்சிகளுமே வராமல் இருப்பதால் மூன்றாவது அணி கனவாகவே ஆகிவிடும் போலிருக்கிறது.
 
மூன்றாவது அணி உருவாகும் சூழ்நிலை மட்டுமல்ல, இடது சாரிகளுக்கே இந்த நிலைப்பாடு இடியாப்பச் சிக்கலாக மாறி வருகிறது. அக்கட்சியால் தமிழகத்தில் ஓர் உருப்படியான நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை. அது தி.மு.க.வாக இருந்தாலும் சரி, அ.தி.மு.க.வாக இருந்தாலும் சரி "ஆளும் அரசுக்கு எதிரான போராட்டங்கள்" தான் இந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் வாக்கு வங்கியை உருவாக்கிக் கொடுத்தது. ஆனால் இன்று நிலைமை என்ன? கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் போராட்டங்களை நடத்துவது போல் இடது சாரிகளால் தமிழகத்தில் நடத்தமுடியவில்லை. கடந்த இரண்டரை வருடங்களாக இந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் பெரும்பாலான போராட்டங்கள் மத்திய அரசுக்கு எதிரான விடயங்களில் மட்டுமே "ஆக்ரோஷமாக" இருந்தது என்பதைப் பார்க்க முடிகிறது. இதே நிலைமை நீடித்து, இன்னும் இரு வருடங்கள் இடது சாரிகள் அமைதி காத்தால், அந்த இரு கட்சிகளின் வாக்கு வங்கி எங்கேயிருக்கிறது என்பதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலைமை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆகவே இடது சாரிகளுக்கு தமிழகம் போன்ற மாநிலங்களில் தங்கள் வாக்கு வங்கியை ஸ்திரப்படுத்திக் கொள்வதிலும் சிக்கல். டெல்லி போன்ற மாநிலங்களில் அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து கருத்தரங்கம் நடத்துவதிலும் சிக்கல். மூன்றாவது அணி என்பதை உருவாக்க வேண்டும் என்று கூறும் கேப்டனான பிரகாஷ் காரத்திற்கே எது சரியான வழி என்பது இன்னும் பிடிபடவில்லை என்பதால், அந்தக் கேப்டன் காட்டும் பாதையில் நடந்து வர மற்ற மதசார்பற்ற கட்சிகள் தயங்குகின்றன. இதுதான் இன்றைக்கு காங்கிரஸுக்கும், பா.ஜ.க.விற்கும் இருக்கும் மிகப்பெரிய பலம்.
 
இவ்வளவு சிக்கல்கள் நிறைந்த தருணத்தில் டெல்லியில் "மதவாத எதிர்ப்பு கருத்தரங்கம்" நடத்துகின்றன இடது சாரிக் கட்சிகள். இதற்கு தமிழகத்திலிருந்து அ.தி.மு.க.வின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவே கலந்து கொள்ள மாட்டார் என்று இப்போது செய்திகள் வருகின்றன. இதே போன்றதொரு மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியை 2009 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கம்யூனிஸ்டுகள் கையிலெடுத்தனர். ஆனால் அந்த அணிக்கு யார் தலைமை தாங்குவது என்ற போராட்டத்தில் அது கைவிடப்பட்டது. இப்போது நடக்கப் போகும் கருத்தரங்கும் அந்த வகையில் மூன்றாவது அணி அமைக்க உதவுமா என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இப்போது, "மதவாத எதிர்ப்பு", "ஊழல் எதிர்ப்பு", "டெவலப்மென்ட்" என்ற மூன்றில் எதை முன்னிறுத்தி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது என்பதில் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடே இந்தக் குழப்பத்திற்கு காரணம். ஆகவே உருப்படியான மூன்றாவது அணி இன்னும் உருவாகவில்லை என்பதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டிது இடது சாரிகளும் அவர்களின் ஹீரோவான பிரகாஷ் காரத்தும்தான் என்றால் மிகையாகாது!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X