.jpg)
"இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் தமிழர்களின் இல்லங்களில் கறுப்புக் கொடி ஏற்றப்படும், ரயில் மறியல் நடத்தப்படும்" என்று இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி. அதற்கு அவர் முன் வைத்துள்ள காரணம், "இலங்கை விடுதலை அடைவதற்கு முன்பும், விடுதலை அடைந்த பின்னரும், பண்டித் நேரு, அன்னை இந்திரா அம்மையார், இளந்தலைவர் ராஜீவ் ஆகியோர் காலத்திலும் ஈழத்தமிழர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட எந்த ஒப்பந்தத்தையும் நிறைவேற்றாமல் அவற்றை மீறி, சர்வதேசக் கண்ணோட்டத்தில் முழுவதும் நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது இலங்கை. இந்தியாவுக்கும், தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் எதிராகவே இலங்கை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நேரத்தில் தமிழர்களின் கோரிக்கையை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அலட்சியப்படுத்தாமல், இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்று திட்டவட்டமாகவும், வெளிப்படையாகவும் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்று கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் - இந்தியா வருவதற்கு முதல்நாள் இவ்வாறு அறிக்கை விடுத்தார்.
அத்துடன் நிற்கவில்லை. அடுத்த நாள் மீண்டும் ஓர் அறிக்கை விடுத்தார். தன் கட்சியின் "உடன் பிறப்புகளுக்கு" எழுதிய அந்தக் கடிதத்தில் இலங்கை அரசு எவ்வாறு எல்லாம் ஈழத்தமிழர்கள் விடயத்தில் பல்வேறு ஒப்பந்தங்களை மீறியிருக்கிறது என்று பட்டியலிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் 1930களில் இந்தியாவிலிருந்து கொழும்பிற்கு சென்ற மலையாளிகளையும் சிங்களவர்கள் எதிர்த்தார்கள் என்று சுட்டிக்காட்டி, அதனால் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மலையாளிகள் கொழும்பை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது என்று கோடிட்டுக் காட்டியிருக்கிறார். அதன் பிறகு ஈழத்தமிழர்களுக்கான ஒப்பந்தங்கள் எப்படி மீறப்பட்டன? ராஜீவ் காந்தி- ஜெயவர்த்தனே முன்னின்று கொண்டு வந்த 13ஆவது அரசியல் சட்ட திருத்தம் எப்படிப் போயிற்று என்பது பற்றி விளாவாரியாக ஓர் "ஆய்வு கட்டுரை" போல் எழுதியிருக்கிறார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. இந்த இரு அறிக்கைகளும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் டெல்லியில் இருக்கின்ற காலகட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளன. "கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது" என்பது ஒருபுறமிருக்க, வரவேற்க வந்திருக்கும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இந்தியா கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பே இந்த அறிக்கையின் பின்னால் மறைந்து கிடக்கிறது. இது தவிர முதல் முறையாக தி.மு.க. தலைவர் கருணாநிதி, "சிங்களவர்கள் - தமிழர்களுக்கு மட்டுமல்ல, மலையாளிகளுக்கும் எதிரி" என்ற ரீதியில் 1930களில் மலையாளிகள் கொழும்பை விட்டு வெளியேறியதை நினைவு படுத்தி விளக்கியிருக்கிறார். இந்திய அரசில் முக்கியப் பதவிகளில் இருக்கும் கேரள மாநிலத்தவரும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இப்படிக் கூறியிருப்பதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பிரதமர் - கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தமிழகத்தில் இப்போது இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பது தி.மு.க. மட்டுமே என்பதை முன்னிலைப்படுத்தவே கலைஞர் கருணாநிதி விரும்புகிறார். குறிப்பாக இவருக்குப் போட்டியாக இன்னும் வேகமாக இலங்கை தமிழர்கள் விடயத்தில் அறிக்கை விட்டு வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த கொமன்வெல்த் மாநாடு விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியதோடு நிறுத்திக் கொண்டிருக்கிறார். அதை முன் வைத்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்களோ, போராட்டங்களோ இல்லை. மாணவர்கள் போராட்டமும் இல்லை. குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு சூடுபிடித்திருந்த மாணவர்கள் போராட்டம் இப்போது இல்லை. அதற்காக முழு மூச்சாக நின்ற பழ. நெடுமாறன் போன்றவர்கள் கூட அமைதியாக இருக்கிறார்கள். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மட்டும் ஏற்கனவே பாகிஸ்தான், நைஜீரியா போன்ற நாடுகள் கொமன்வெல்த் மாநாட்டில் இருந்து "சஸ்பென்ட்" செய்யப்பட்டுள்ளன என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார். அந்த உதாரணத்தை சாதகமாக்கிக் கொண்டு இலங்கையை கொமன்வெல்த்திலிருந்து "சஸ்பென்ட்" செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். இது தவிர முன்பு இதற்காக போராடிய பாட்டாளி மக்கள் கட்சி கூட இப்போது அமைதியாக இருக்கிறது. அந்தக் கட்சியினர் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம் போன்றவற்றை உடைத்து தன் கட்சியினரை வெளியில் கொண்டுவருவதே பெரிய பிரச்சினை என்று நினைத்து "திகைத்து"ப் போய் நிற்கிறது. ஆகவேதான் இந்த தருணத்தை பிரதானமாக எடுத்துக் கொண்டுள்ள கலைஞர் கருணாநிதி, "கொமென்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது" என்று வலியுறுத்தி அடுத்தடுத்து இரு அறிக்கைகள் வெளியிட்டுள்ளார்.
இதற்கு இன்னொரு பின்னணியும் இருக்கிறது. இந்தியாவின் 16ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான "பாதை" இப்போடு போடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் எந்த "பாதையில்" பயணிக்கப் போகிறோம் என்பது பற்றி தீவிர ஆலோசனையில் இருக்கின்றன. இந்த வகையில் தி.மு.க. தன் முதல் கட்ட ஆய்வை நடத்தி முடித்திருக்கிறது. இந்திய சுதந்திர தினத்திற்கு மறுநாள் ஓகஸ்ட் 16ஆம் திகதியன்று நடைபெற்ற தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இதற்கான கருத்துக் கேட்பு பணி முடிவு பெற்றுள்ளது. "கூட்டணி வைக்கும் அதிகாரத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் ஒப்படைத்து" தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்பிச் சென்று விட்டார்கள். ஆனால் அ.தி.மு.க.வின் பாதை "தனிப் பாதையா" அல்லது "கூட்டணிப் பாதையா" என்பதை தி.மு.க.வால் இன்னும் உறுதி செய்ய முடியவில்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, "யாருடனும் கூட்டணி இல்லை" என்று அறிவித்தாலும், அவருடன் கூட்டணி வைப்பதற்காக காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் முண்டியடித்துக் கொண்டு போட்டி போட்டு நிற்பது தி.மு.க. தலைமையின் கண்களுக்கு நன்றாகவே தெரிகிறது.
அதன் எதிரொலிதான் சமீபத்தில் தன் முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் தொடக்கி வைத்துப் பேசிய பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அ.தி.மு.க. அரசையும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் பாராட்டியது. இந்த பாராட்டு ஏதோ பா.ஜ.க.வே முன்னின்று தாமாகவே செய்கிறது என்று தி.மு.க. நம்பத் தயாராக இல்லை. இது எதிர்கால கூட்டணிக்கு திட்டமிடப்பட்ட வியூகம் போலவே கருதுகிறது. அதே நேரத்தில் சமீபத்தில் "தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி" என்று பிரதமர் மன்மோகன்சிங் தமிழகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பாராட்டியது, மாநிலத்தில் நடைபெறும் முக்கிய மத்திய அரசின் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ள நிலையில், மேலும் சுமார் 7800 கோடி ரூபாய்க்கு மோனோ ரயில் திட்டம் அமல்படுத்த தமிழகத்திற்கு இப்போது அனுமதி அளித்து நிதி ஒதுக்கியுள்ளது. அ.தி.மு.க.வுடன் நெருங்கிச் செல்ல காங்கிரஸ் முன் எடுத்து வைக்கும் முயற்சி இது என்றே தி.மு.க. நினைக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் "கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் ரயில் மறியல் போராட்டம்" என்று அறிவித்திருக்கிறது தி.மு.க.
முன்பு காங்கிரஸுடன் தி.மு.க. கூட்டணியாக இருந்தது. அப்போது இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு துரோகம் செய்கிறது என்ற போராட்டத்தை வீரியத்துடன் கொண்டு போனது ஆளும் அ.தி.மு.க.தான். அதனால்தான் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி பேசத் தயங்கியவர்கள் கூட மத்திய அரசை கண்டித்து குரல் கொடுத்தார்கள். இதன் முடிவில் காங்கிரஸ் கூட்டணியை விட்டும், மத்திய அரசை விட்டும் விலக நேர்ந்தது தி.மு.க. ஒருவேளை அ.தி.மு.க. காங்கிரஸுடன் நெருங்கிச் செல்ல முயன்றால் "இந்த கொமன்வெல்த் விவகாரம்" கைகொடுக்கட்டும் என்பதும் இந்த "ரயில் மறியல் போராட்ட" அறிவிப்பின் பின்னணிகளில் ஒன்று. தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்கிறது என்ற குற்றச்சாட்டை தி.மு.க. தனது நாடாளுமன்ற தேர்தல் பிரசாரமாக்க உதவும் என்ற வியூகமும் இதன் பின்னால் இருக்கிறது.
அதுவும் சில மாதங்களுக்கு முன்பு நடைபயணம் மேற்கொண்ட வைகோவை முதல்வர் ஜெயலலிதா காரிலிருந்து இறங்கிச் சென்று சந்தித்தார். அது அரசியல் பிரளயம் போல் பேசப்பட்டது. ஆனால் காங்கிரஸை விட்டு தி.மு.க. விலகிய பிறகு அதே அ.தி.மு.க.வின் அமைச்சர் ஒருவர், "காமாலை கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்" என்று வைகோவை கடுமையாக சாடினார். இதுவும் தி.மு.க. தலைமைக்கு அ.தி.மு.க.வின் "தேர்தல் பாதை" காங்கிரஸுடனும் இருக்குமோ என்ற சந்தேகத்தை விதைத்திருக்கிறது. ஆகவேதான் இலங்கை தமிழர் பிரச்சினையில் இப்போது புதிய வடிவமாக "கொமென்வெல்த் மாநாட்டு" பிரச்சினை சூடுபிடிக்கிறது. ஆகவே அடுத்தடுத்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிடும் அறிக்கைகளில் "இந்திய அரசு இலங்கைக்கு இன்னும் அழுத்தம் கொடுக்க வேண்டும்" என்பது முக்கிய நோக்கம். அதே நேரத்தில் "இலங்கை தமிழர் பிரச்சினையை" மையப்படுத்தி தங்கள் மீது பழி சுமத்திய தமிழக அரசியல் கட்சிகளுக்கு "செக்" வைக்க வேண்டும் என்பது அந்த அறிக்கையின் "உபரி" நோக்கம்!