2025 மே 19, திங்கட்கிழமை

மே 16இல் தலைவிதி

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 29 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியத் தேர்தலில் ஏழாவது கட்டமான வாக்களிப்பு நாளை 30ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. ஆந்திரா, குஜராத், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், பீஹார் மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும், ஏனைய வேறு சில யூனியன் பிரதேசங்களின் தொகுதிகளிலும் சேர்த்து 89 நாடாளுமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறப் போகிறது.

இந்திய நாடாளுமன்றத் தொகுதிகளில் 543இல், 438 தொகுதிகளுக்கு தேர்தல் நிறைவடைய போகிறது. இன்னும் இரு கட்டங்கள் எஞ்சியிருக்கிறன. ஒன்பது கட்டமாக நடைபெறும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்கு வந்த பிறகு மே 16ஆம் திகதி வாக்குகள் எண்ணப்படும். இந்திய பிரதமராக வரப்போகிறவர் யார் என்பது அன்றைய தினமே தெரியவந்து விடும்.

இந்தத் தேர்தலின் ஆறாவது கட்டத்தில்தான் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 39 நாடளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் சேர்த்து மொத்தம் நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளின் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆறுமுனைப் போட்டி என்றாலும் முக்கியமான போட்டி மூன்று அணிகளுக்கு மத்தியில்தான் இருந்தது. தி.மு.க. அணி, அ.தி.மு.க. அணி, மூன்றாவதாக பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை முன்னிறுத்திய அணிக்கு இடையிலேயே இந்த போட்டி இருந்தது.

இம்மூன்று அணிகளும் களத்தில் காரசாரமாக மோதிக் கொண்டன. வார்த்தைப் போர்கள் நடத்திக் கொண்டன. தி.மு.க.விற்கும், அ.தி.ணி.க.விற்கும் மாற்று அணியாக நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்பது மோடியின் பிரசார மந்திரம். ஆனால் தி.ணி.க.வோ, மோடி அலை எல்லாம் இல்லை. இது திராவிட அலை வீசும் பூமி என்று போட்டி போட்டது. பொறுத்துப் பார்த்த அ.தி.மு.க. கடைசியில் மோடியை விமர்சிக்க ஆரம்பித்து, தமிழகத்தின் வளர்ச்சிக்கு இந்த மோடிதான் காரணம் என்று இறுதியாக போட்டியை நிறைவு செய்தது.

தமிழகத்தில் போட்டி முடிந்து விட்டது. அதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பது மே 16ஆம் திகதி தெரியும். அன்றைய தினம் வாக்குகளை எண்ணும் போதுதான் மூன்று அணியில் யாருக்கு இலாபம், நஷ்டம் என்பது வெளிப்படும்.

தேர்தல் களத்தைப் பொறுத்தமட்டில் அ.தி.மு.க.விற்கு விழும் வாக்குகளைப் பிளக்கும் சக்தி மோடி தலைமையிலான அணிக்கு உண்டு என்ற கருத்து நிலவுகிறது. இந்த அணியில்தான் வைகோ, விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் எல்லோரும் அணி வகுத்து நிற்கிறார்கள்.

அதே நேரத்தில் சிறுபான்மையினர், தலித் மக்கள் அனைவரும் பெரும்பான்மையாக தி.மு.க. பக்கமே வாக்களித்திருப்பார்கள் என்ற எண்ணம் மேலொங்கியிருக்கிறது. திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி, வைகோ, அன்புமணி ராமதாஸ், தயாநிதி மாறன், அ.ராஜா என்று ஒரு வி.ஐ.பி.கள் பட்டாளமே தேர்தலில் தங்கள் தலைவிதி எப்படி என்பதைக் கணிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் தற்போதையை நிலைமை.

தேர்தல் முடிவுகள் யாருக்குச் சாதமாக அமைந்தாலும், மத்தியில் வரப்போகின்ற அரசாங்கம் பா.ஜ.க. தலைமையிலானது என்றால் இலங்கை தமிழர் பிரச்சினையில் பெரிய மாற்றம் வந்துவிடப் போவதில்லை என்ற எண்ணம் சாதாரண வாக்காளர் மத்தியிலும் தமிழகத்தில் இருக்கிறது. தமிழகத்தில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட  அ.தி.மு.க, தி.மு.க.,மறுமலர்ச்சி தி.மு.க, பாட்டாளி மக்கள் கட்சி அனைத்துமே இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி தங்கள் கருத்துக்களை வேண்டுகோளை மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்துள்ளன.

ஏன் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூட இலங்கை தமிழர்களுக்கு என்ன செய்வோம் என்பது விளக்கப்பட்டுள்ளது. ஆனால் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இலங்கை தமிழர் பிரச்சினையில் அக்கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது விளக்கப்படவில்லை.

அது மட்டுமல்ல, தமிழக பா.ஜ.க. சார்பில் தனியாக ஒரு துணை தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அதில் இலங்கை தமிழர் விவகாரம் இடம்பெறும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் அப்படியொரு துணை தேர்தல் அறிக்கை தமிழக பா.ஜ.க.வின் சார்பில் இறுதி வரை வெளியிடப்படவே இல்லை.

அதைவிட மேலாக இப்போது ராஜீவ் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேரின் விடுதலை வேறு சிக்கலாக முளைத்திருக்கிறது. இவர்களை விடுதலை செய்த மாநில அரசின் முடிவு இந்திய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்சு முன்பு போகிறது. அந்த பெஞ்ச் இந்த வழக்கில் என்ன முடிவு எடுக்கப் போகிறது. அப்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் ம.தி.ணி.க. போன்ற கட்சிகள் எப்படி சிக்கலில் மாட்டிக் கொள்ளப் போகிறது என்பதெல்லாம் இனி வரும் காலங்களின் கோடை இடி முழக்கமாக இருக்கும்.

காங்கிரஸ் அரசு இருந்த போது இலங்கை பிரச்சினை தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் பா.ஜ.க. தலைமையிலான அரசு அமைந்தாலும் வருமா என்பதே இப்போது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால் தமிழகத்தில் உள்ள மாநில அரசும் சரி, அரசியல் கட்சிகளும் சரி (தி.ணி.க, காங்கிரஸ் தவிர) இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அடக்கி வாசிக்கவே விரும்புவார்கள் என்ற எண்ணமே மேலோங்கியிருக்கிறது.

தமிழகத்தின் நிலைமை இவ்வாறு இருக்க, அகில இந்திய அளவில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்ற போது மோடியை ஒரு வளர்ச்சி நாயகனாக சித்தரித்தது பா.ஜ.க. ஆனால் அக்கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டவுடன் அதில் இடம்பெற்றிருந்த ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகையை பறிக்கும் முடிவு, பொது சிவில் சட்டம் எல்லாம் சேர்த்து மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். நாயகன் என்ற முத்திரையைப் பதித்துள்ளது. அதையும் மீறி இப்போது மோடி தரப்பிலிருந்து சோனியாவின் மருமகன் ராபர் வதேரா மீது நடத்தப்படும் தாக்குதல், டெவலப்மென்ட், இந்துத்துவா எல்லாவற்றையும் தாண்டி, பெர்ஷனல் அட்டாக் என்ற நிலைக்கு வந்து விட்டது.

இப்போது காங்கிரஸுக்கும், பா.ஜ.க.விற்கும் அகில இந்திய அளவில் நடக்கும் தனிப்பட்ட மோதல் போட்டி ஏற்கெனவே தமிழகத்தில் தி.ணி.க.விற்கும், அ.தி.ணி.க.விற்கும் இடையே நடக்கும் போட்டி போல் இருக்கிறது. ராபர்வதேராவின் மீது எழுந்துள்ள நிலம் தொடர்புடைய சி.டி க்கு அவரது மனைவி பிரியங்கா காந்தி மிகவும் காட்டமாக பதில் கூறியிருக்கிறார்.

மோடிக்கு 54 இஞ்ச் மார்பளவு இருந்தால் என்ன அந்த அளவிற்கு விசாலமான இருதயமாக இருக்க வேண்டும் என்று டைரக்ட் அட்டாக் பண்ணியிருக்கிறார் பிரியங்கா. அது மட்டுமின்றி, இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் நான் அஞ்சமாட்டேன் என்று அவரது பேச்சில் மறைந்த இந்திரா காந்தியின் துணிச்சல் எதிரொலிக்கிறது.

உத்தரபிரதேசம், பீஹார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறும் இந்த ஏழாவது கட்டத் தேர்தலில் சோனியா காந்தி, நரேந்திரமோடி, பரூக் அப்துல்லா போன்ற முக்கியத் தலைவர்களின் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இப்படியொரு சூழலில், மோடி ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் இந்தியாவுடன் இருக்க விரும்பாது என்று தடாலடியாக கருத்துச் சொல்லியிருக்கிறார் பரூக் அப்துல்லா.

இவ்வளவு களேபரங்களுக்கு இடையிலும், நான் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினரை அரவணைத்துச் செல்வேன் என்ற வெளிப்படையான அறிவிப்பை இதுவரை மோடி செய்யவில்லை என்பதைத்தான் மற்ற அரசியல் கட்சிகள் அனைத்துமே குறையாகச் சொல்கின்றன.

குறிப்பாக பீஹாரில் உள்ள பா.ஜ.க. தலைவர் ஒருவர், மோடியைப் பிடிக்காதவர்கள் பாகிஸ்தானுக்குப் போகலாம் என்ற போதும் சரி, இன்னொரு பா.ஜ.க. தலைவர் அமித்சா, பழிவாங்க பா.ஜ.க.விற்கு வாக்களியுங்கள் என்ற தொணியில் உத்தரபிரதேசத்தில் பேசிய போதும் சரி, அவர்களை பா.ஜ.க.வோ அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடியே வெளிப்படையாக கண்டிக்கவில்லை என்ற கோபம் மைனாரிட்டி மக்கள் மனதில் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

போதாக்குறைக்கு இப்போது ராபர்ட் வதேரா மீது மோடி தரப்பு வெளியிட்டுள்ள சி.டி., பெர்ஷனல் அட்டாக்கை முன் வைத்து தேர்தல் களம் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு புறத்தில் மோடியின் நெருங்கிய தொழிலதிபர் அதானிக்கு குஜராத்தில் குறைந்த விலையில் வழங்கப்பட்ட நிலங்கள் பற்றிய புகார். இன்னொரு புறத்தில் ராபர்ட் வதேராவிற்கு விற்கப்பட்ட நிலங்கள் பற்றி புகார். இப்படி பிரதமர் வேட்பாளர்கள் மீதான குற்றச்சாட்டாக இல்லாமல் அவர்களின் நிழல்களுக்கு எதிரான தாக்குதல் நிறந்த போர்க்களமாக இந்திய தேர்தல் காட்சியளிக்கிறது.

இந்தக் காட்சி மோடிக்கு கணிசமான எண்ணிக்கையில் எம்.பி.க்கள் சீட்டு கிடைப்பதை குறைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியொரு சூழலில் காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்க முடியாவிட்டாலும், 1996ஆம் வருட பாணியில் மூன்றாவது அணிக் கட்சிகள் ஏதேனும் தலைமை தாங்க விட்டு, காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவளிக்கும் சூழ்நிலை எழலாம்.

இதையெல்லாம் மீறி ஒருவேளை நரேந்திரமோடிக்கும் அவரது கூட்டணிக் கட்சிகளுக்கும் 272 எம்.பி.க்கள் (ஆட்சி அமைக்கத் தேவையான எம்.பி.க்கள்) கிடைத்து விடலாம் என்ற நோக்கில்தான் பா.ஜ.க.வினர் ராபர்ட் வதேரா மீதான தாக்குதல் இருக்கிறது.

ஒரு எல்லை வரம்பிற்குள் பேசுங்கள் என்று ராகுல் காந்திக்கு மோடி விடுக்கும் எச்சரிக்கையும் அதை எடுத்துக் காட்டியுள்ளது. மோடி பிரதமரானால் அந்தக் கடவுளால் கூட இந்த நாட்டைக் காப்பாற்ற முடியாது என்ற சோனியாவின் எச்சரிக்கையும் மோடிக்கு தனிப்பட்ட முறையில் ஆட்சி செய்யும் எண்ணிக்கை கிடைத்து விடக்கூடாது என்பதில் இருக்கிறது.

1980களில் இந்திரா காந்திக்கு கிடைத்து போன்று மோடிக்கு தனித்து ஆட்சி அமைக்கும் எண்ணிக்கையில் எம்.பி.க்கள் கிடைத்து விடுவார்களா, அல்லது 1996களில் நடந்தது போல் காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி அமைக்கும் பாக்கியம் மூன்றாவது அணிக்கு கிடைக்குமா? என்ற கேள்வி இந்திய அரசியல் பார்வையாளர்கள் மனதில் எழுந்திருக்கிறது.

1980 அல்லது 1996 இந்த இரண்டில் எது நடக்கப் போகிறது என்பது இந்திய வாக்காளர்களின் கையில் இருக்கிறது. ஏறக்குறைய 438 நாடாளுமன்றத் தொகுதிகளின் வாக்குப்பதிவு முடிவு பெறும் நிலையில், எஞ்சியிருக்கும் தொகுதிகள் 105. அங்கு எட்டும் மற்றும் ஒன்பதாவது கட்டத் தேர்தல்கள் நடந்து மே 16ஆம் திகதி வாக்குகள் எண்ணப்படுகிறது. அந்த எண்ணிக்கை இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X