.jpg)
அரசியல் கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் "இப்தார் விருந்து" கொண்டாட்டத்தில் தீவிரமாக இருக்கின்றன. அதுவும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு என்றால் சொல்லவே வேண்டாம். தங்கள் கட்சியின் இஸ்லாமிய சமுதாய கட்சி நிர்வாகி மூலமாகவோ, அல்லது கூட்டணிக் கட்சியாக இருக்கும் இஸ்லாமிய அமைப்பின் மூலமாகவோ "இப்தார் விருந்து" கொண்டாட்டத்தில் இறங்கிவிடுவார்கள். இது தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு புத்தம் புதிய காட்சிகள் அல்ல. எப்போதுமே பார்த்து சலித்துப்போன காட்சிகள்தான்! ஏனென்றால் எப்போதெல்லாம் தேர்தல் வருகி்றதோ அப்போது எல்லாம் இந்த "இப்தார் விருந்து" அதி விமரிசையாக அனைத்துக் கட்சிகளின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்று விடும்.
தமிழகத்தில் முக்கிய கட்சிகளான அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் போட்டி போட்டுக் கொண்டு இந்த நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். சில நாட்களுக்கு முன்பு "இப்தார் விருந்து" நிகழ்ச்சியை தி.மு.க. நடத்தியது. அதன் கூட்டணிக் கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் கே.எம்.காதர் மொகைதீன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அக்கூட்டத்தில் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு தன் ஆட்சியில் செய்யப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை பட்டியலிட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவர்களுக்கு வேலை வாய்ப்பில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு பற்றியும் விவரமாக விளக்கிப் பேசினார். அத்துடன் நிற்காமல், "இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இப்போது பல்வேறு துண்டுகளாக பிளவு பட்டு கிடக்கின்றது. நீங்கள் ஒற்றுமையாக இருந்தால்தானே மதவெறியர்கள் அஞ்சுவார்கள்" என்று அரிய ஆலோசனை வழங்கினார். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இன்று தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்புகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தேசிய லீக், தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி என்று பல்வேறு கணக்கிலடங்கா பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றன. அதனால் தேர்தல் வரும்போது சில அமைப்புகள் தி.மு.க. அணியில் இருந்தால், வேறு சில அமைப்புகள் அ.தி.மு.க. அணியில் இருக்கும். சில நேரங்களில் தமிழகத்தில் இருக்கின்ற கூட்டணிகளில் எல்லாம் ஏதாவது ஓர் இஸ்லாமிய அமைப்பின் கொடி இடம் பெற்றிருக்கும். இதனால் இஸ்லாமிய மக்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் எந்த ஒரு கூட்டணிக்குச் செல்லும் வாய்ப்பு கடந்த பல தேர்தல்களாகவே எழவில்லை.
இது மாதிரி இஸ்லாமிய வாக்குகள் பிளவு படுவதால் முதலில் பாதிக்கப்படுவது தி.மு.க.தான். குறிப்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதியே அந்த பாதிப்பை சந்தித்துள்ளார். 2006 சட்டமன்ற தேர்தலில் அவர் சென்னையில் உள்ள சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காயிதே மில்லத்தின் பேரன் தாவூத் மியாகான் அ.தி.மு.க. கூட்டணியின் ஆதரவுடன் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் தேர்தல் முடிவுகள் தி.மு.க.விற்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தின. தி.மு.க. தலைவர் கருணாநிதி சுமார் 8000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் அவரை வெற்றி பெற முடிந்தது. அவரே தேர்தல் களத்தில் நின்ற போதுகூட இஸ்லாமிய சமுதாயத்தினர் முழுமையாக தி.மு.க.வை சேப்பாக்கம் தொகுதியில் ஆதரிக்கவில்லை என்பது தி.மு.க.விடமிருந்து இஸ்லாமிய சமுதாயத்தினர் விலகிச் செல்லுகிறார்கள் என்பதற்கு அடையாளமாக அமைந்தது. இதனால்தான் அடுத்த தேர்தலில் சென்னையில் எந்த தொகுதியிலும் போட்டியிடாமல் தன் சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தி.மு.க.விற்கும், இஸ்லாமியர்களுக்கும் இடைவெளி வரக்காரணம் 1998-களில் தி.மு.க.வே பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்ததுதான் காரணம்!
இந்த இஸ்லாமியர் வாக்கு வங்கி இழப்பு தி.மு.க.விற்கு தொடர்ந்தது. அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களில் இஸ்லாமிய சமுதாயத்தினர் அதிகம் உள்ள அதுவும் குறிப்பாக சென்னை மாநகரத்தில் உள்ள தொகுதிகளில் தி.மு.க. எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. சென்ற சட்டமன்ற தேர்தலில் கூட அதேதான் நிலை! தி.மு.க.விற்கும், இஸ்லாமிய சமுதாயத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட இந்த இடைவெளிதான் நரேந்திரமோடிக்கு விசா வழங்கக்கூடாது என்று அமெரிக்க அதிபருக்கு எழுதிய கடிதத்தில் கையெழுத்திட்ட தி.மு.க. எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க.வை அறிவிக்க வைத்தது. அதுவும் தி.மு.க. தலைவர் கருணாநிதியே ஓர் அறிக்கை மூலம் அதை வெளிப்படுத்தினார். கட்சிக் கட்டுப்பாடு என்பது காரணமாக இருந்தாலும், இந்த அறிவிப்பு பலரின் புருவங்களை உயர்த்தியது என்றே சொல்ல வேண்டும். அப்படி ஏற்பட்ட "இடைவெளிதான்" இஸ்லாமிய மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை அந்த "இப்தார் விருந்தில்" அதிரடியாகப் பேச வைத்தது.
இந்த சூழ்நிலை அ.தி.மு.க.விற்கு சாதகமாக அமைந்தது. ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் அக்கட்சிக்கு இஸ்லாமிய சமுதாயத்தினரின் வாக்குகள் அதிகமாகிக் கொண்டே சென்றது. அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த கட்சிதான் என்றாலும், தி.மு.க. மீது ஏற்பட்ட கோபம் போல் அ.தி.மு.க. மீது இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு ஏற்படவில்லை என்பதும் அதற்கு காரணம். அந்த சாதகமான சூழ்நிலை தான் மனித நேய மக்கள் கட்சியை சென்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர வைத்தது. அதேபோல் அக்கட்சிக்கு இரு சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்கவும் காரணமாக அமைந்தது. இதன் பலனாக ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., இஸ்லாமியர்களுக்கு சாதகமாகவே காய் நகர்த்தி வருகிறது. குறிப்பாக அச்சமுதாயம் சார்பான அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் கூட அவ்வளவு கெடுபிடிகளைப் பண்ணாமல் பார்த்துக் கொள்கிறது. அமெரிக்க தூதரகத்தை எதிர்த்து அவர்கள் நடத்திய போராட்டம், கமல்ஹாசனின் "விஸ்வரூபம்" படத்திற்கு எதிராக நடத்திய போராட்டம் எல்லாவற்றிற்குமே ஒருவிதமான முக்கியத்துவம் இஸ்லாமிய அமைப்புகளுக்குக் கிடைத்தது.
இந்நிலையில்தான் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவது தமிழகத்தில் அரங்கேறியது. முதலில் பொலிஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ரீதியில் குரல் கொடுத்த பா.ஜ.க. தலைவர்கள் ஆடிட்டர் ரமேஷ் கொலையின் போது கொதித்து எழுந்தார்கள். "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது" என்ற ரீதியில் பேசத் தொடங்கினார்கள். குறிப்பாக "எங்கள் பாதுகாப்பை பொலிஸ் உறுதி செய்யவில்லை என்றால் நாங்களே ஆயுதம் வைத்துக் கொள்ள நேரிடும்" என்று பா.ஜ.க.வின் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணனே பேட்டியளித்தார். இதனால் சேலத்தில் சமீபத்தில் கொல்லப்பட்ட ஆடிட்டர் ரமேஷ் கொலை அ.தி.மு.க.வை திணற வைத்தது. அதனால் தன் கட்சி எம்.எல்.ஏ. பெருமாள் இறந்ததைக் காரணம் காட்டி "இப்தார் விருந்தை" தள்ளி வைத்தது. அப்படி தள்ளி வைக்கப்பட்ட விருந்து மீண்டும் 5.8.2013 அன்று நடைபெற்றிருக்கிறது.
இந்த விருந்திற்கு முன் தினமே இஸ்லாமிய சமுதாயத்தை குஷிப்படுத்தும் அறிவிப்புகள் சிலவற்றை தமிழக முதல்வர் ஜெயலலிதா செய்திருக்கிறார். ஆட்சிக்கு வந்தவுடன் இஸ்லாமிய மக்களுக்கு வழங்கிய பல சலுகைகளை சுட்டிக்காட்டியுள்ள முதல்வர், "முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு மான்யத்தை உயர்த்துவது, ஹஜ் பயணங்களை மேற்கொள்ள இயங்கி வரும் ஹஜ் சிறப்புக் குழுவிற்கான மான்யத்தை 20 லட்சத்திலிருந்து 30 லட்சமாக உயர்த்தி உத்திரவிட்டுள்ளது" போன்ற அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற வேளையில் முதலமைச்சர் ஜெயலலிதா சிறுபான்மை சமுதாயத்தின் ஒட்டு மொத்த ஆதரவைப் பெறுவதற்கு இந்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். அ.தி.மு.க.வின் "இப்தார் விருந்து" இந்த நடவடிக்கைகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. அ.தி.மு.க. தலைமையைப் பொறுத்தமட்டில் "இந்துத்வா வாக்காளர்கள்" "இஸ்லாமியர் வாக்காளர்கள்" ஆகிய இரு தரப்பிடமிருந்தும் அதிகப்படியான வாக்குகளை நாடாளுமன்ற தேர்தலில் பெற்று விட வேண்டும் என்ற வியூகத்தை மனதில் வைத்தே இந்த காட்சிகள் அரங்கேறுகின்றன- அதாவது ஒருபுறம் பா.ஜ.க. பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கொலை பற்றி தீவிர நடவடிக்கைக்கு உத்தரவு. இன்னொரு புறம் "இப்தார் விருந்துக்கு" ஏற்பாடு!
இஸ்லாமியர் வாக்குகளை குறி வைக்கும் மற்ற கட்சிகளும் இதற்காக சளைத்தவைகள் அல்ல! ஏற்கனவே ம.தி.மு.க.வின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் வைகோ இப்தார் பார்ட்டி கொடுத்து விட்டார். அக்கூட்டத்தில் பேசிய வைகோ, "நான் கடைசி வரை போராடிக் கொண்டேயிருப்பேன். இஸ்லாமியர்களுக்கு நான் ஆதரவு தெரிவித்ததுபோல் வேறு யாரும் ஆதரவு காட்டவில்லை. அவர்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டபோது நான் போராடியிருக்கிறேன். குறிப்பாக பொடா சட்டம் வந்தபோது நான் போராடினேன். ஆனால் இஸ்லாமிய ஆதரவு கட்சிகள் என்று சொல்லிக் கொள்பவை போராடவில்லை." என்று சுட்டிக்காட்டி தனக்கும் இஸ்லாமிய சமுதாயத்திற்கும் உள்ள நெருக்கத்தை பறைசாற்றிக் கொண்டார். அவரைத் தொடர்ந்து தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் தனது தொகுதியில் இப்தார் பார்ட்டி கொடுக்கிறார். அதேபோல் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தன் தலைமை அலுவலகத்திலேயே "இப்தார் பார்ட்டி" கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் சிறுபான்மையின வாக்குகள்- குறிப்பாக முஸ்லிம் வாக்காளர்கள் எந்தவொரு கட்சிக்கும் "தீர்மானமாக" வாக்களிப்பவர்கள். ஆகவே அவர்களின் ஆதரவைப் பெறுவது அவசியம் என்று தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. மட்டுமல்ல, மற்ற கட்சிகளுமே நம்புகின்றன. அதை மையமாக வைத்தே ரம்ஜான் நேன்பு காலங்களில் "இப்தார் பார்ட்டிகளை" நடத்தி அச்சமுதாய மக்களிடத்தில் அன்பையும், ஆதரவையும் பெறுவதற்கு முயற்சி செய்கின்றன. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைப் பொறுத்தமட்டில் பிரதமர் பதவியை மனதில் வைத்து நாடாளுமன்ற தேர்தல் வியூகம் வகுத்து வருகிறார். அதனால்தான் முதலில் மறுத்து பிறகு அவரே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவிற்கு சமீபத்தில் நடந்து முடிந்த ராஜ்ய சபை தேர்தலில் தனது ஒரு சீட்டை விட்டுக் கொடுத்தார். அவரை வெற்றி பெறவும் வைத்தார். அகில இந்திய அரசியலில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவும், தமிழகத்தில் சிறுபான்மையின மக்களின் ஆதரவும் தனக்கு இருப்பதுதான் "அகில இந்திய பிரதமர் பதவி வியூகத்திற்கு" அச்சாணிகள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கருதுகிறார் என்பதே இந்த யுக்திகளின் மூலம் வெளிப்படுகின்றது.
இஸ்லாமிய வாக்குகளை பகிர்ந்துகொள்ள நடைபெறும் போட்டியில் ஜெயிக்கப் போவது அ.தி.மு.க.வா? தி.மு.க.வா என்பது பா.ஜ.க.வின் அதிகார பூர்வ பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பிறகுதான் தெரிய வரும். ஏனென்றால் அப்போதுதான் இரு கட்சிகளின் எந்தக் கட்சி நரேந்திர மோடிக்கு முழுவதும் எதிர்ப்பாக இருக்கிறது என்பதை இஸ்லாமிய வாக்காளர்கள் உணருவார்கள். அப்போதுதான் அந்த வாக்காளர்கள் இந்த இரு கட்சிகளில் ஒரு கட்சி சார்பாக சாய்வார்கள்!