2025 மே 19, திங்கட்கிழமை

இந்தியாவில் "குடும்பத் தலைவராகும்" பெண்கள்!

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

"உணவு பாதுகாப்பு அவசரச் சட்டம்" ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முன்னோடி திட்டம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை இந்த சட்டத்தின் பலத்தில் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற வியூகம் வகுத்திருக்கிறது. அதன் எதிரொலிதான் நாடாளுமன்றம் கூடுவதற்கு சில நாட்களுக்கு முன்பு உணவு பாதுகாப்பு மசோதாவை அவசரச்சட்டமாக பிறப்பித்திருக்கிறது. நாட்டில் உள்ள வறுமையைப் போக்கிட, விவசாயிகள் ஏற்றம் பெற்றிட வழி வகுக்கும் என்று காங்கிரஸ் கட்சி இந்த சட்டம் பற்றி "போற்றி" பாடி வருகிறது. இந்திய மக்கள் தொகையில் ஏறக்குறைய 82 கோடி மக்கள் இந்த திட்டத்தால் பயனடைவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் எதிர்கட்சிகளோ, "இது தேர்தல் திட்டம்" என்று பிரசாரத்தை மேற்கொண்டுள்ளன.
 
முதல் மாநிலம் மணிப்பூர்!
இந்த உணவு பாதுகாப்பு சட்டத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன? நாட்டில் உள்ள கிராமப்புற மக்களில் 75 சதவீதம் பேருக்கும், 50 சதவீத நகர்ப்புற மக்களுக்கும் மான்ய விலையில் அரிசி, உணவு தானியங்கள் வழங்குவதே இதன் முக்கியச் சிறப்பு. "மூன்று ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி", "இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ கோதுமை" என்பது அதில் முக்கியமானவை. மூன்று வருடங்களுக்கு இப்படி மான்ய விலையில் வழங்கப்படும் பொருள்கள் பிறகு மத்திய அரசு நிர்ணயிக்கும் விலையில் கிராமப் புற மக்களுக்கும், நகர்ப்புற மக்களுக்கும் அளிக்கப்படும் என்று இந்த அவசரச்சட்டம் கூறுகிறது. இப்போது இருக்கின்ற 28 மாநிலங்களில் மணிப்பூர் மாநிலம்தான் இச்சட்டத்தின் பயனைப் பெறுவதில் முதல் மாநிலமாகத் திகழ்கிறது. அங்கு வாழும் 88.56 சதவீத கிராம மக்களும், 85.75 சதவீத நகர்ப்புற மக்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள் என்று மத்திய அரசின் பயன்பெறும் மாநிலங்களின் பட்டியல் அறிவிக்கிறது.
 
கிராமம், நகரம்- முதல் மூன்று இந்திய மாநிலங்கள்!
கிராம மக்கள் பயனடையும் வகையில் பார்த்தால், அனைத்து மாநிலப் பட்டியலில் மணிப்பூர், ஜார்கண்ட், பீஹார் உள்ளிட்ட மாநிலங்கள் முதல், இரண்டு, மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றன. அதே சமயத்தில் நகர்ப்புற மக்கள் பயனடையும் பட்டியலைப் பார்த்தால், மணிப்பூர், பீஹார், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் முதல், இரண்டாவது, மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கின்றன. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 64.43 சதவீத மக்கள் "நகர்புற" வாசிகள் என்ற வகையில் இத்திட்டத்தின் கீழ் வருகிறார்கள். இது தவிர, இந்தியாவில் உள்ள ஆறு மாநிலங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் பெரிய மாநிலங்கள். உத்தரபிரதேசம், ஆந்திர பிரதேசம் (தற்போது தெலுங்கானாவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அறிவிப்பு இன்னும் அமலுக்கு வரவில்லை), பீஹார், மஹாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு போன்றவை அந்த மாவட்டங்கள். இந்த ஆறு மாநிலங்களில் தமிழகம், மேற்குவங்கம்,உத்தரபிரதேசம் ஆகிய மூன்று முக்கிய மாநிலங்களும் இத்திட்டத்திற்கு "நிபந்தனை" ஆதரவு என்ற வகையிலேயே இதுவரை பேசி வருகின்றன. குறிப்பாக இந்த மாநிலங்கள் உணவு பாதுகாப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந்த ஆறு மாநிலங்களில் பீஹார் மாநிலத்தில் மான்ய விலையில் அரிசி பெறப்போகும் நகர்புற மக்கள் 74.53 சதவீதம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் குறைந்த நகர்ப்புற மக்கள் பயன்பெறுவது தமிழகத்தில்தான். இங்கு இதன் மூலம் பயன்பெறுவோர் 37.79 சதவீதம் என்று கூறப்பட்டுள்ளது. 
 
மூன்று ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி!
சரி, இத்திட்டத்தின் கீழ் பயனடையும் மக்கள் யார்? எந்தெந்த பிரிவினருக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது? ஒருவருக்கு மாதம் ஒன்றிற்கு ஒரு கிலோ அரிசி அல்லது ஒரு கிலோ கோதுமை. ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு 25 கிலோ அரிசி அல்லது 25 கிலோ கோதுமை என்று வழங்கப்படும். கோதுமை என்றால் கிலோ ரூபாய் இரண்டு. அரிசி என்றால் மூன்று ரூபாய்க்கு ஒரு கிலோ. இது தவிர, கர்ப்பிணிப் பெண்களுக்கு கை கொடுக்கும் திட்டங்கள் இருக்கின்றன. குறிப்பாக கர்ப்பிணியாக இருக்கும் காலத்திலும், குழந்தை பிறந்த பிறகும் ஆறு மாதங்களுக்கு ஊட்டச்சத்துணவு வழங்கப்படும் என்று இச்சட்டம் உறுதி செய்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு மாதந்தோறும் 6000 ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று தனியாக ஒரு சிறப்புத் திட்டமும் இருக்கிறது. ஆனால் அரசு ஊழியர்களாக உள்ள பெண்களுக்கோ, பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகள். அதில் குறிப்பாக ஆறு மாதம் முதல் ஆறு வருடம் வரை உள்ள குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவது முக்கியமானது. ஆறு மாதங்களுக்குள் உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க ஊக்கமளிப்பது இன்னொரு முக்கியம்சம். 6 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கும் அல்லது எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும் இலவச மதிய உணவு வழங்குவது என்ற திட்டமும் இதில் அடங்கியிருக்கிறது.
 
குடும்பத் தலைவர் இனிமேல் "பெண்களே"!
இது ஒரு புறமிருக்க "பெண்ணுரிமை" இந்த உணவு பாதுகாப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்கு அதிக அதிகாரம் என்பது நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. அதற்காக பல போராட்டங்கள் நடக்கிறது. பெண்களுக்கு அதிகாரம் என்பது உள்ளாட்சி அமைப்புகளைத் தாண்டி இன்னும் கிடைக்கவில்லை. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா பல கட்சிகளின் முரண்பட்ட நிலைப்பாட்டால் இன்னும் அப்படியே முடங்கிப் போய்கிடக்கிறது. இதுபோன்ற நேரத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி "குடும்பத் தலைவர்" என்ற அந்தஸ்து முதல் முறையாக பெண்களுக்குப் போகிறது. அதாவது வீட்டில் கணவன் இருந்தாலும் அந்த குடும்பத்தில் உள்ள மனைவிதான் இந்த திட்டத்தின்படி "குடும்பத் தலைவர்"! அப்படி மனைவி இல்லாத குடும்பங்களில் கூட, 18 வயதிற்குட்பட்ட பெண்கள் இல்லையென்றால் மட்டுமே அந்த குடும்பத்தில் உள்ள ஆண் "குடும்பத் தலைவர்" என்ற அந்தஸ்தைப் பெற முடியும் என்று சட்டம் வரையறுக்கிறது. நாடாளுமன்றம் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மசோதா "நீண்ட நித்திரை" கொண்டிருக்கின்ற நேரத்தில், ஏதோ ஒரு குடும்பத்திலாவது பெண்களுக்கு தலைவர் பதவி கொடுக்க காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முன்வந்திருக்கிறது! இதுதவிர, இன்னொரு முக்கியத்துவம் இந்த சட்டத்தின் படி இருக்கிறது. அதாவது உணவுப்பொருள்களை மான்ய விலையில் வழங்க முடியவில்லை என்றால், அதற்கு பதில் "உணவு பாதுகாப்புப் படி" பணமாகவே வழங்கவும் இந்தச் சட்டம் வகை செய்கிறது. "உணவுப் பொருள். இல்லையென்றால் பணம்" என்பது இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 66 வருடங்களுக்குப் பிறகு அரங்கேறியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
 
சர்ச்சைக்குரிய ஷரத்துக்கள் சில!
ஆனால் இச்சட்டத்தில் சர்ச்சைக்குரிய வேறு விடயங்களும் இடம்பெற்றுள்ளன. அது என்ன? மத்திய அரசு கொடுக்கும் வரையறையின்படி மாநில அரசுகள் குடும்பங்களை அடையாளம் காண வேண்டும். அப்படி அடையாளம் காண மத்திய அரசு கெடு வைத்திருக்கிறது. அதாவது அவசரச்சட்டம் அமலுக்கு வந்து 180 நாட்களுக்குள் மாநில அரசு இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் "கிராமப்புற" மற்றும் "நகர்ப்புற" குடும்பங்களை அடையாளம் கண்டு விட வேண்டும். அதுவரையில் இப்போது அந்தந்த மாநிலங்கள் மத்திய தொகுப்பிலிருந்து பெறும் மான்ய விலை அரிசி, கோதுமை நீடிக்கப்படும் என்று இந்த சட்டப் பிரிவு 10 (1) (பி) கூறுகிறது. இது மாநில அரசின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி. அது மட்டுமின்றி, மத்திய அரசின் வழிகாட்டுதல் படி குடும்பங்களை கண்டிபிடித்து முடித்து விட்டால், பிறகு இந்த உணவு பாதுகாப்புச் சட்டப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் வரையறுக்கப்பட்டுள்ள கிராமப் புற மக்கள் மற்றும் நகர்புற மக்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தின் பயன்கள் கிடைக்கும். இதன் படி பார்த்தால் தமிழகத்தில் இச்சட்டம் அமலான 180 நாட்களுக்குப் பிறகு கிராமப்புற மக்களில் 62.55 சதவீதம் பேருக்கும், நகர்ப்புற மக்களில் 37.79 சதவீத மக்களுக்கும் மட்டுமே மான்ய விலையில் அரிசி அல்லது கோதுமை உள்ளிட்ட மற்ற பயன்கள் கிடைக்கும் என்பது தெளிவாகிறது. இது தவிர, இச்சட்டத்தின் பிரிவு 24 (1) என்பது "மாநில அரசுகள் மத்திய அரசின் அமைச்சகங்களின் வழிகாட்டுதல் படி அவ்வப்போது வெளியிடப்படும் நடைமுறைகளை அமல்படுத்தும் கடமை இருக்கிறது" என்றே சுட்டிக்காட்டுகிறது. ஒரு கிராமத்தில் ஒருவருக்கு இப்படி அரிசி கொடு, இப்படி கோதுமை கொடு என்பதை மத்தியில் அமர்ந்து கொண்டு மாநில அரசுக்கு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது என்றே இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
அவசரச்சட்டமும், அ.தி.மு.க. எதிர்ப்பும்!
இப்போது நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இந்த அவசரச்சட்ட மசோதா பற்றிய அரசியல் நாடு முழுவதும் சூறாவளிக் காற்று போல் வீசிக் கொண்டிருக்கிறது. அது தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் இது விடயத்தில் இடைவிடாத "அறிக்கைப் போரே" நடந்து கொண்டிருக்கிறது. ஆளும் அ.தி.மு.க.வைப் பொறுத்தமட்டில், இது மாநில உரிமைகளில் குறுக்கிடும் சட்டம் என்று திடமாக நம்புகிறது. அதனால் இது பற்றிய அமைச்சரவை ஆலோசனை தொடங்கிய காலத்திலிருந்து இச்சட்டத்தை தீவிரமாக எதிர்த்து வருகிறது. இச்சட்டத்தில் முக்கிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது அ.தி.மு.க.வின் எதிர்பார்ப்பு. அதை வலியுறுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் அறிமுகமான நிலையிலேயே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து உள்ளார்கள். முதல்வர் ஜெயலலிதாவைப் பொறுத்தமட்டில், "தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ஒரு லட்சம் டன் மான்ய விலையிலான அரிசியின் அளவு இச்சட்டத்தால் குறைக்கப்பட்டு விடும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பிரிவினையில் (75 சதவீதம், 50 சதவீதம்) குழப்பம் ஏற்படும். நகர்ப்புற மக்களின் சதவீதத்தை 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதம் அல்லது 100 சதவீதம் என உயர்த்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் பொது விநியோகத் திட்டம் என்பதற்கு இச்சட்டம் எதிரானது. அதைவிட மான்ய விலையில் அரிசி என்பது மூன்று வருடங்களுக்கு மட்டுமே. இச்சட்டத்தை அமல்படுத்தினால் மாநில அரசுக்கு கூடுதலாக மூவாயிரம் கோடி ரூபாய் செலவாகும்" என்று இச்சட்டத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை அடுக்கி, தமிழக நலனில் அக்கறையில்லாத இந்த சட்டத்தினை தி.மு.க. ஆதரிக்கப் போகிறதா? இல்லையா என்று சூடாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
 
தி.மு.க. எதிர்ப்பும்- மாநில சுயாட்சியும்!
ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதியோ, "தற்போதைய வடிவில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டால் அதை எதிர்ப்போம்" என்று உறுதி படக் கூறியிருக்கிறார். இந்த உணவு பாதுகாப்புச் சட்டத்திற்கான திருத்தங்களையும் தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஏற்கனவே கொடுத்திருக்கிறார். அதில் இச்சட்டத்தின் பிரிவு 3(2), 9 மற்றும் 10 ஆகிய மூன்று பிரிவுகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்துகிறது. அந்த மூன்று பிரிவுகள் எதைச் சொல்கின்றன? சட்டத்தின் பிரிவு 3(2) இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்பங்களை அடையாளம் காணுவது தொடர்பான பிரிவு இது. அதாவது அந்தந்த மாநிலத்தில் கிராமப்புற மக்கள் மற்றும் நகர்ப்புற மக்கள் என்று மத்திய அரசு அளித்துள்ள பட்டியலின் அடிப்படையில் அரிசி, கோதுமை பெறும் குடும்பங்களை அடையாளம் காணுவது. இது "அனைவருக்கும் பொது விநியோகத் திட்டம்" என்ற தமிழக அரசின் கொள்கைக்கு விரோதமானது என்று கருதி இதை எதிர்க்கிறது தி.மு.க. அதேபோல் 9ஆவது பிரிவு. இப்பிரிவின் அடிப்படையில்தான் மாநிலங்களில் "உணவு பாதுகாப்புச் சட்டத்தின் படி எந்தெந்த மக்கள் பயன்பெறுவார்கள்" என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை மத்திய அரசு பெறுகிறது. அப்படி மத்திய அரசு வரையறை செய்யும் பட்டியலிற்குள் (கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம்) இருந்து பயன்பெறும் குடும்பங்களை மாநில அரசு அடையாளம் காணும் என்று இச்சட்டத்தின் 10ஆவது பிரிவு கூறுகிறது. யார் கிராமப் புற மக்கள், யார் நகர்ப்புற மக்கள், இந்த திட்டத்தின்படி பயன்பெறும் குடும்பங்கள் எது?- இந்த மூன்று விடயங்களிலுமே மேற்கண்ட பிரிவுகளின் படி மத்திய அரசின் முடிவுப்படியே மாநிலங்கள் செயல்பட முடியும் என்று அறுதியிட்டு கூறப்பட்டுள்ளது. "மாநில சுயாட்சிக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான இந்த மூன்று பிரிவுகளையும் நாங்கள் எதிர்க்கிறோம்" என்கிறார் தி.மு.க. எம்.பி. இதையே வலியுறுத்தி ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தி.மு.க. தரப்பில் கூறப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புச் சட்ட மசோதாவை "தேசிய அளவில் உணவு உரிமை வழங்கி மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தும் எண்ணம் இந்த மசோதா மூலம் பிறந்திருக்கிறது" என்றும், "82 கோடி மக்கள் பயனடைவார்கள்" என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி தன் அறிக்கையில் பாராட்டியிருந்தார். அதுதான் அ.தி.மு.க. தலைமை அறிக்கையின் முக்கிய பின்னணியாக அமைந்தது.
 
நிதியமைச்சர் சிதம்பரம் கோரும் தேசிய நீரோட்டம்!
இந்த இரு முக்கியக் கட்சிகளும் உணவு பாதுகாப்புச் சட்டத்திற்கு ஆதரவு உண்டா? இல்லையா? என்று வாதிட்டுக் கொண்டிருக்கையில், தமிழகத்தில் காங்கிரஸ் எம்.பி. கே.எஸ்.அழகிரியின் தாயார் பட திறப்பு விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் இரு கட்சிகளுக்கும் கோரிக்கை விடுத்திருக்கிறார். அவர் தன் பேச்சில், "தமிழகத்தில் காங்கிரஸ் பெரிய கட்சியில்லை. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய திராவிட கட்சிகள்தான் பெரிய கட்சிகள். அதற்காக அவர்கள் தேசிய நீரோட்டத்தில் இருந்து விலகிச் செல்லக் கூடாது. இன்று தேசிய நீரோட்டம் பாதிக்கப்படாமல் முடிவுகளை எடுக்கும் கட்சி காங்கிரஸ் மட்டுமே" என்று பேசி, மத்திய அரசு கொண்டு வந்துள்ள உணவு பாதுகாப்பு அவசரச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கும் துணை நிற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். மத்திய தொழில்துறை இணையமைச்சர் சுதர்ஸன நாச்சியப்பனோ, "தமிழக முதல்வரின் அம்மா திட்டம் போல் இந்த உணவு பாதுகாப்பு திட்டமும் அனைவரும் பயன்பெறும் திட்டம். அதை அ.தி.மு.க. ஆதரிக்க வேண்டும்" என்று ஓப்பனாகவே கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய நிதியைமச்சர் சிதம்பரம் இரு கட்சிகளுக்கும் கோரிக்கை விடுக்க, இணையமைச்சர் சுதர்ஸன நாச்சியப்பனோ அ.தி.மு.க.விற்கு மட்டுமே கோரிக்கை விடுத்திருக்கிறார்.
 
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் "மாநில உரிமைகளை" மனதில் வைத்து உணவு பாதுகாப்பு சட்டத்தை எதிர்க்கின்ற அதேநேரத்தில் மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசுக்கும், மத்திய அரசுக்கும் சமீபகாலமாக ஓர் இணக்கமான சூழ்நிலை உருவாகி வருகிறது. "நெய்வேலி அனல் மின்சார பங்குகளை" தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களே வாங்குவதற்கு பிரதமர் அனுமதி வழங்கியது, அதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு தொலை பேசியில் பேசி நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு நிதியமைச்சர் சிதம்பரத்தின் சொந்த தொகுதியான சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற பி.எச்.ஈ.எல். ஆலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பாரதபிரதமர் மன்மோகன்சிங், நிதியமைச்சர் சிதம்பரம் ஆகியோருடன் மாநில அமைச்சர் செந்தில் பாலாஜியை பங்கேற்க அனுப்பி வைத்தது இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், "தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது" என்று பாராட்டியது அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி. இதுபோன்ற சூழ்நிலையில்தான் இப்போது உணவு பாதுகாப்புச்சட்டத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் சுதர்ஸன நாச்சியப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதே நேரத்தில் தி.மு.க.விற்கும் காங்கிரஸுக்கும் கனிமொழி ராஜ்ய சபை சீட் விடயத்தில் இணக்கமான சூழ்நிலை உருவானாலும், அது தொடருவதில் ஏகப்பட்ட நெருக்கடிகள் இருக்கின்றன. ஏனென்றால் காங்கிரஸ் தரப்பிலிருந்து வெளிப்படையாக எந்தவிதமான கோரிக்கையும் "உணவு பாதுகாப்பு சட்டத்தை" ஆதரிக்கும் விடயத்தில் இதுவரை தி.மு.க.விற்கு வரவில்லை. உணவு பாதுகாப்பு அவசரச் சட்டத்தில் தி.மு.க.விற்கும்- காங்கிரஸுக்கும் மீண்டும் தொடர்பு உறுதியாகி விடக்கூடாது என்பதே அ.தி.மு.க. தலைமையின் வியூகம். அதனால்தான் திருப்பித் திருப்பி, "தமிழக மக்கள் நலனுக்கு விரோதமான உணவு பாதுகாப்பு சட்டத்தை தி.மு.க. ஆதரிக்கப்பார்க்கிறது" என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இரு தலைவர்களுக்கும் இடையில் "அறிக்கைப் போர்" நடக்கிறது.
 
தி.மு.க.வை தனிமைப்படுத்தும் அ.தி.மு.க. வியூகம்!
"காங்கிரஸிடமிருந்து தி.மு.க. தனிமைப்படுத்தப்பட வேண்டும்" "எக்காரணத்தைக் கொண்டும் அக்கட்சிக்கும் காங்கிரஸுக்கும் கூட்டணி அமைந்து விடக்கூடாது" என்பது அ.தி.மு.க. தலைமையின் வியூகம். தமிழக அரசியலில் தி.மு.க.விற்கு விஜயகாந்த் மூலம் "மாற்றுக் கூட்டணி" அமையாத பட்சத்தில் இந்த வியூகத்தால் தி.மு.க. தனிமைப்படுத்தப்படும் என்பது அ.தி.மு.க. தலைமையின் கணிப்பு. ஆனால் "அரசியலில் யாரும் நிரந்தர எதிரியுமல்ல. நண்பர்களும் அல்ல" என்பது இந்த கணிப்பிற்கு எதிராக இருக்கிறது. அதனால்தான் தி.மு.க.வும், "நரேந்திர மோடி விசா விடயத்தில் கையெழுத்துப் போட்ட எம்.பி.க்கள் மீது நடவடிக்கை", "உணவு பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள சில அம்சங்களுக்கு பாராட்டு" என்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறது. தி.மு.க.வைப் பொறுத்தமட்டில் நிதியமைச்சர் சிதம்பரம் கொண்டு வரும் பொருளாதார சீர்த்திருத்தச் சட்டங்களுக்கு எதிர் என்ற நிலைப்பாட்டை எளிதில் எடுத்து விட்டது. ஆனால் உணவு பாதுகாப்புச் சட்டம் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் கனவு திட்டம். ஆகவே அந்த சட்டத்தில் முழு வீச்சில் தி.மு.க. எதிர்க்கத் தயங்குகிறது. ஏனென்றால் சோனியாவின் கனவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்து விட்டு எப்படி காங்கிரஸுடன் கூட்டணி போகலாம் என்ற ஆப்ஷனை தி.மு.க. தக்க வைத்துக் கொள்ள முடியும்? என்ற கேள்வி இதன் பின்னணியில் இருக்கிறது.
 
ஆகவே, தி.மு.க. காங்கிரஸுடன் மீண்டும் கூட்டணி காண்பது என்பது அ.தி.மு.க.வின் கையில் இல்லை. அடுத்தடுத்து வரப்போகும் அரசியல் மாற்றங்களில் இருக்கிறது. பொருள், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் போட்டியிட விரும்பும் "தொகுதிகளின் எண்ணிக்கையிலும்" எஞ்சியிருக்கின்ற ஆட்சி காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் போக்கு "தி.மு.க. விடயத்தில் எப்படியிருக்கும்" என்பதைப் பொறுத்துமே அமையும் என்பதே தமிழக கூட்டணியை நிர்ணயிக்கும். அதற்கு உணவு பாதுகாப்பு சட்ட மசோதா விடயத்தில் காங்கிரஸிடமிருந்து வெளிப்படையாக தி.மு.க.விற்கு கோரிக்கை வரும் வரை, இந்த கண்ணாமூச்சி விளையாட்டுகள் அரசியல் களத்தில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கும். ஆனால், தமிழகத்தில் "அரசியல் கூட்டணி" அமையும் போராட்டத்தில் இப்போது காங்கிரஸ் அரசு கொண்டு வந்துள்ள உணவு பாதுகாப்பு அவசரச்சட்ட மசோதா மாட்டிக் கொண்டு முழிக்கிறது என்பதே உண்மை!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X