2025 மே 15, வியாழக்கிழமை

'புனிதர்'களும் மேலைத்தேயத் திணிப்புகளும்

Thipaan   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

அல்பேனியாவைச் சேர்ந்த அருட்சகோதரியான அக்னஸ் கோன்ஜா போஜாஜியூ, கிறிஸ்தவ மதத்துக்கான அவரது சேவைகளுக்காக, புனிதராக, கடந்த வாரத்தில் திருநிலைப்படுத்தப்பட்டார். மேலே கூறப்பட்ட வாக்கியம், இலங்கை உள்ளிட்ட கீழைத்தேய நாட்டவர்களுக்குப் பரீச்சயம் இல்லாமல் இருக்கலாம். அதே வாக்கியத்தை, 'இந்தியாவின் கொல்கத்தாவில் சமூக சேவைகள் புரிந்த அன்னை தெரேசா, புனிதராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்' என்று எழுதினால், அதை விளங்காதவர்கள் புரிந்து கொள்வார்கள். இந்த அன்னை தெரேசா, புனிதராகத் திருநிலைப்படுத்தப்பட்டமை தொடர்பாகவும் அதற்கான எதிர்வினைகள் தொடர்பாகவும் ஆராய்வதற்கு, இந்தப் பத்தி முயல்கிறது.

இலங்கையையும் இந்தியாவையும் இன்னும் வேறு கீழைத்தேய நாடுகளையும் சேர்ந்த அனைவரது சிறுவயதுப் பாடப்புத்தகங்களிலும், அன்னை தெரேசா என்ற சமூக சேவகி பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தியாவின் கொல்கத்தாவில், தொழுநோய், காச நோய், எயிட்ஸ் போன்ற நோய்களால் வருந்திக் கொண்டிருந்தவர்களைப் பராமரித்தார் என, சிறிய வயதிலேயே எமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் உண்மையுமிருக்கிறது. அன்னை தெரேசா மீதான விமர்சனங்கள் எவ்வாறிருந்தாலும், அவரால் ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளைகள், இந்தியா முழுவதும் பரந்து விரிந்து காணப்படுகிறது என்பதையும் இன்றும் நூற்றுக்கணக்கான - இல்லாவிடில் பல்லாயிரக்கணக்கான - ஆதரவற்றவர்களை வைத்துப் பராமரித்து வருகின்றன என்ற உண்மையை மறைத்துவிட முடியாது.

ஆனால், விமர்சனங்களற்றவரா அன்னை தெரேசா? இல்லாவிடில், விமர்சனங்களைப் புறந்தள்ளுமளவுக்கு அவரது சேவைகள் இருந்தனவா? அவரது நோக்கங்கள், புனிதமாக இருந்தனவா?

அன்னை தெரேசாவின் மீதான விமர்சனங்களைக் கொண்டோர், அவரின் 'அன்பின் பணியாளர்' துறவறசபையில் நோயாளிகளாக இருந்தோருக்கு, போதுமான சிகிச்சைகள் வழங்கப்பட்டதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். ஏழைகள் வருந்துவதை, கடவுளை நோக்கிச் செல்வதற்கான பாதையாக அவர் கருதினார் எனவும், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுக் குணப்படுத்தக்கூடியவர்கள், அந்தக் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்கள் என்றும் தெரிவிக்கிறார்கள். அத்தோடு, அங்குள்ள நோயாளிகளுக்கு ஏற்றப்பட்ட ஊசிகள், முறையாகத் தொற்றுநீக்கப்படாமல், திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்பட்டது எனவும் ஆவணப்படங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விமர்சனங்களுக்கு வலுவூட்டுவது போன்று, அன்னை தெரேசா தெரிவித்த கருத்துகளும் அமைந்தன. 'வறியவர்கள், தங்களது வறுமையை ஏற்றுக் கொண்டு, கிறிஸ்துவின் அதிவிருப்புப் போன்று வருந்துவதில் அழகொன்று உள்ளது. அவர்களது வருத்தத்தில் இந்த உலகம், ஏராளமானவற்றைப் பெற்றுக் கொள்கிறது' என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல், அவரது இந்த அறக்கட்டளையைப் பயன்படுத்தி, தனது சமயத்தைப் பரப்புவதற்கே அவர் முயன்றார் என்பது, அடுத்த குற்றச்சாட்டு. அதையும் ஏற்றுக்கொள்வது போன்று, 'நான், சமூக சேவகர் அல்லன். அந்தக் காரணத்துக்காக நான் சேவைகளைச் செய்வதில்லை. கிறிஸ்துவுக்காக நான் செய்கிறேன். திருச்சபைக்காகச் செய்கிறேன்' எனவும் 'வறியவர்களுடன் இறைவனின் நற்செய்தியைப் பகிர்வதற்கு முன்பு, இதை நாம் செய்தாக வேண்டும்; உடலின் தேவைகளை நாம் முதலில் திருப்திசெய்ய வேண்டும். அப்போது தான் அவர்களை, கிறிஸ்துவிடம் அழைத்துவர முடியும்' எனவும் அவரே தெரிவித்திருக்கிறார்.

நோயால் வாடுகின்றோரையும் அவர்களது குடும்பத்தினரையும் கிறிஸ்தவ சமயத்துக்கு மாற்ற முயன்றார் என்பது,  கருக்கலைப்புத் தொடர்பாகவும் கருத்தடுப்பு தொடர்பாகவும் தனக்குக் காணப்பட்ட கொள்கைகளைப் பரப்புவதற்கும், தனது பெயரைப் பயன்படுத்தினார் என்பது, அடுத்த குற்றச்சாட்டாகும். இந்தியாவின் போபால் நச்சுவாயுக் கசிவினால், பல்லாயிரக்கணக்கானோர் (3,700 தொடக்கம் 16,000 பேர் வரை என, எண்ணிக்கை வித்தியாசப்படுகிறது) உயிரிழந்தமை தொடர்பாகக் கேட்கப்பட்டபோது, 'எங்களை இது பாதித்திருக்கிறது என்பதற்காக நாம் அதிகம் உணர்ச்சிவசப்படுகிறோம். உலகம் முழுவதும் இடம்பெறும் மில்லியன் கணக்கான கருக்கலைப்புகள் பற்றி எவரும் சிந்திப்பதில்லை' என்பதே அவரது பதிலாக இருந்தது. அதேபோல், தனக்கான நோபல் பரிசைப் பெற்றுக் கொள்ளும் போது அவர் தெரிவித்தது, 'உலகின் சமாதானத்தைப் பாரியளவில் அழிப்பது, கருக்கலைப்பே' என்று தெரிவித்தார். இவ்வாறு, கிடைக்கப்பெறும் சிறிய சிறிய சந்தர்ப்பங்களிலும், கிறிஸ்துவத்தையும் திருச்சபையின் கொள்கைகளையும் பரப்புவதிலேயே அவரது கவனம் காணப்பட்டது. இவைகளைத் தவிர, ஹெய்ட்டியின் வலதுசாரிக் கடும்போக்குத் தலைவர் ஜோன்-கிளெட் டுவாலியர், அல்பேனியாவின் சோஷலிசத் தலைவர் என்வெர் ஹொக்ஹா, பிரித்தானியாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய பதிப்பாளர் றொபேர்ட் மக்ஸ்வெல் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய நபர்கள் பலருடன் நட்புறவைப் பேணினாரெனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்தியாவில், இந்திரா காந்தியின் கடும்போக்கு ஆட்சியில், மக்களின் சிவில் உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டு, ஜனநாயகத்துக்கான கேள்வி எழுந்தபோது, 'மக்கள், மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடைபெறவில்லை' என்று தெரிவித்து, இந்திரா காந்தியின் ஆட்சிக்கு ஆதரவளித்தார். இவையெல்லாம், அவருக்கு அரசியல் தொடர்புகள் கிடையாது என்ற கருத்தை இல்லாது செய்கின்றன.

ஒட்டாவா பல்கலைக்கழத்தில் 2013ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியொன்று, உலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் அளவுக்கு, மாபெரும் உயர்நிலையானவராக அன்னை தெரேசா இருந்ததில்லை எனவும், அவருக்கான இந்த நற்பெயர், கத்தோலிக்கத் திருச்சபையின் மாபெரும் ஊடகப் பிரசாரத்தினாலேயே ஏற்படுத்தப்பட்டது என்றும் முடிவுக்கு வந்தனர்.

மேலே குறிப்பிட்ட விடயங்களை ஆராய்வதற்கு, கீழைத்தேய ஊடகங்களும் சிந்தனையாளர்களும் பெரும்பாலும் முயன்றதில்லை. இந்தியாவில் ஒரு சிலர் முயன்றாலும், அவர்களில் குறிப்பிடத்தக்க அளவிலானோர், கிறிஸ்தவம் மீதான வெறுப்பினால் அல்லது இந்து சமயம் மீதான அதிபற்றினாலேயே அந்த விமர்சனங்களை முன்வைத்தார்களே தவிர, உண்மையை அறிந்துகொள்ளும் நோக்கில் விமர்சனங்களை முன்வைத்தமை அரிதாகும்.

பாப்பரசர் பிரான்ஸிஸினால் அன்னை தெரேசா, புனிதராகத் திருநிலைப்படுத்தப்பட்டார் என்ற செய்தியை, இலங்கையின் பெரும்பாலான ஊடகங்கள், முக்கியமான செய்தியாக வெளியிட்டன. இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான நெருக்கத்தை வைத்துப் பார்க்கும் போது, அன்னை தெரேசா பற்றி இச்செய்தி, முக்கியமானது தான். ஆனால், அந்தச் செய்திகளில், அன்னை தெரேசா மீது விமர்சனங்கள் காணப்படுகின்றன என்ற தகவல் குறிப்பிடப்பட்டதா?

ஒருவர் இறந்த பின்பு, அதுவும் அன்னை தெரேசா போன்ற ஒருவர் இறந்த பின்பு, அவர் மீதான விமர்சனங்களை மீண்டும் மீண்டும் கிளறிவிடுவது சரியன்று என்ற வாதம் முன்வைக்கப்படக்கூடும். உண்மையிலேயே, இறந்தவர்கள் மீதான விமர்சனங்கள், உயிரோடிருப்பவர்களை விடக் குறைவாகவே மேற்கொள்ளப்படுவது வழக்கமாகும். ஆனால் அதற்காக, அடோல்ப் ஹிட்லரை ஜனநாயகவாதி என்றோ அல்லது பல மில்லியன் மக்களை ஸ்டாலின் கொல்லவில்லை என்றோ அல்லது ஒசாமா பின் லேடன் என்பவர் உத்தமர் என்றோ குறிப்பிட்டுவிட முடியாதல்லவா? அத்தோடு, அன்னை தெரேசா மீதான விமர்சனங்கள், பொதுவெளியில் பெருமளவில் முன்வைக்கப்பட்டதே இல்லை. இறந்துவிட்டார் என்பதற்காக விமர்சனங்களை முன்வைக்காதுவிட்டால், வரலாறே தவறாகிப் போய்விடுமே?

அடுத்ததாக, அவர் புனிதராகத் திருநிலைப்படுத்தப்பட்டமைக்கும் அவரது சமூக சேவைகளுக்கும் இடையில் சம்பந்தமேதும் கிடையாது. கிறிஸ்தவ சமயத்தில் புனிதராகத் திருநிலைப்படுத்தப்படுவது என்பது, அச்சமயத்துக்காக மேற்கொள்ளப்பட்ட சேவைகளுக்காகவே வழங்கப்படுகிறது. அவ்வாறு திருநிலைப்படுத்தப்படும் போது, அவரது வாழ்க்கையின் பின்புலம், அவரது நடத்தைகள் போன்றன கருத்திலெடுக்கப்படும் என்ற போதிலும், கடவுளின் விருப்பத்துக்கு ஏற்ப வாழ்ந்து, இரண்டு அதிசயங்களையாவது புரிந்தார் என்று திருச்சபை ஏற்றுக் கொள்கின்ற ஒருவரே, புனிதராக முடியும். இதில் குறிப்பிடத்தக்கதாக, கீழைத்தேய சமயங்களில் அதிசயங்கள் செய்வதாகச் சொல்லும் சாமியார்களைத் தூற்றும் அல்லது கேலி செய்யும், அறிவாளிகளென சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டோர் பலர் (குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த லிபரல்கள்), அன்னை தெரேசாவின் புனிதர் பட்டத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அவருக்கான புனிதர் பட்டம் கிடைப்பதற்கு, இந்தியாவின் அதிநவீன மருத்துவ சேவைகளின் காரணமாகப் பெண்ணொருவருக்குப் புற்றுநோய் குணப்படுத்தப்பட்டதாக இந்திய மருத்துவர்களும் சுகாதாரத் துறையினரும் தெரிவிக்கும் சம்பவமே, அன்னை தெரேசாவின் முதலாவது அதிசயம் என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதை, அனைவரும் மறந்தனரா என்ற கேள்வியும் எழுகிறது. கீழைத்தேய சமயங்களில் கேலிசெய்யப்படும் விடயங்கள், மேலைத்தேய சமயங்களாலும் நம்பிக்கைகளாலும் மட்டும் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படும் போது, அவை ஏற்றுக்கொள்ளப்படுபனவாக மாறுவது ஏன்?

இதற்கு, மேலைத்தேய நாடுகளாலும் ஊடகங்களாலும் தெரிவிக்கப்படும் விடயங்களை, அப்படியே ஏற்றுக் கொள்ளும் காலனித்துவச் சிந்தனையிலிருந்து, நாம் மாறாமையே காரணமாகும். 'சிவப்பாக இருக்கிறவன், பொய் சொல்ல மாட்டான்' என்பது, காலனித்துவச் சிந்தனையில் விதைக்கப்பட்ட அபத்தமான சிந்தனைகளில் ஒன்று. அதேபோல் தான், மேலைத்தேய ஊடகங்களும் சிந்தனாவாதிகளும் தெரிவிக்கும் விடயங்களை, அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்வதும், கீழைத்தேய மக்களின் வழக்கமாகிவிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .