Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Administrator / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
- என்.கே.அஷோக்பரன் LLB (Hons)
தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 79)
ஜே.ஆரைத் தந்திரோபாயத்தில் வல்லவர் என்றும், சூழ்ச்சித் திட்டங்களில் தேர்ந்தவர் என்றும் பலரும் கூறுவதுண்டு.
இதை ஒரு சந்தர்ப்பத்தில் ஜே.ஆரே ஏற்றுக்கொண்டுள்ளார்.
“என்னைத் தந்திரோபாயம்மிக்கவன் என்றும் திட்டதாரி என்றும் அவர்கள் சொல்வதை நான் அறிவேன். திட்டங்களில்லாவிட்டால் எப்படித் தலைவனாக இருக்க முடியும்? அரசியலில் மட்டுமல்ல, யுத்தத்திலும் மனித விவகாரங்களிலும் இது அவசியம். இவ்வளவு ஏன், குத்துச்சண்டைப் போட்டியில் கூட சூழ்ச்சித் திட்டம் அவசியமாகிறது. நான் சிறுவயதில் குத்துச்சண்டை வீரனாக இருந்திருக்கிறேன். நீங்கள், முகத்தில் குத்துவது போல காட்டிக்கொண்டு வயிற்றிலடிக்க வேண்டும். ஆம்! நிச்சயமாகச் சூழ்ச்சித் திட்டங்கள் செய்யத்தான் வேண்டும்” என்று ஜே.ஆர் ஒரு சர்வதேச ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியொன்றில் குறிப்பிட்டதை, தனது கட்டுரையொன்றில் கே.ரீ.ராஜசிங்கம் பதிவு செய்கிறார்.
ஜே.ஆர் யார் என்பதற்கு அவருடைய இந்த வாக்குமூலத்தைத் தவிர, வேறேதும் சான்றாதாரங்கள் தேவையில்லை. இத்தகைய ஜே.ஆருடன் தான் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் பேச்சுவார்த்தை எனும் பந்தயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
ஜே.வி.பியின் ஜனநாயகப் பிரவேசம்
இதேவேளை, 1982 இன் ஆரம்பப் பகுதியில், இலங்கையின் தேர்தல் ஆணையாளர் புதிதாக மூன்று கட்சிகளுக்கான அங்கிகாரத்தை வழங்கியிருந்தார். இதில் குறிப்பிடத்தக்கது ரோஹண விஜேவீர தலைமையிலான
ஜே.வி.பி (மக்கள் விடுதலை முன்னணி) ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துகொண்டு அரசியல் கட்சியாகத் தன்னைப் பதிவு செய்து கொண்டமையாகும்.
சிறிமாவோவின் ஆட்சியில் பெரும் ஆயுதப் புரட்சியொன்றைச் செய்து, நாட்டின் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயன்ற ஆயுதக்குழுவை சிறிமாவோவின் அரசாங்கம், இரும்புக் கரம் கொண்டு அடக்கியிருந்தது.
‘ஜே.ஆர் அரசாங்கம்’ பதவிக்கு வந்ததும், ஜே.ஆர் அரசாங்கத்தின் ‘அரசியல் சகிப்புத்தன்மை’ என்ற கொள்கையின் கீழ், ரோஹண விஜேவீர உள்ளிட்ட ஜே.வி.பி போராளிகள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
இப்போது அவர்கள் ஓர் அரசியல் கட்சியாகத் தம்மை பதிவுசெய்துகொண்டதன் மூலம், அடுத்த தேர்தலில் அவர்கள் போட்டியிடக் கூடும் என்று ஜே.ஆர் உணர்ந்திருந்தார்.
உண்மையில், ஜே.வி.பி புரட்சியை சிறிமாவோ ஆயுதம் கொண்டு அடக்கிய விதம், கிராமப்புற சிங்கள மக்களிடையே சிறிமாவோ அரசாங்கம் மீது அச்சத்தையும் அசூசையையும் ஏற்படுத்தியிருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.
நிச்சயமாக, ஐக்கிய தேசியக் கட்சிக்கு விழப்போகும் வாக்குகளை ஜே.வி.பி உடைக்கப்போவதில்லை, மாறாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாற்றான வாக்குவங்கியைத் தான் ஜே.வி.பி. உடைக்கும் என்பதை ஜே.ஆர் உணர்ந்திருக்கலாம்.
ஆகவே, ரோஹண விஜேவீர விடுதலை செய்யப்படவும் ஜே.வி.பியை ஒரு கட்சியாகப் பதிவுசெய்யவும் ஜே.ஆர் அரசாங்கம் வழிசமைத்தமைக்குப் பின்னால், தமக்கு எதிரான வாக்குகளைச் சிதைக்கும் சூழ்ச்சித் திட்டம் இருக்கலாம்.
ஏனெனில், ஜே. ஆரே ஒத்துக்கொண்டதைப் போல, அவர் ஒரு சூழ்ச்சிதாரி! ஆனால், ஜே.வி.பியின் இன்னொரு ஆயுதப் புரட்சியைச் சந்திக்க வேண்டிய நிலைமை ஜே.ஆருக்கு இன்னும் ஐந்து வருட காலங்களில் காத்திருந்தது என்பதை அன்று ஜே.ஆர் உணர்ந்திருக்க மாட்டார்.
குற்றவாளிகளைக் காப்பாற்ற ஒரு சட்டம்
ஜே.ஆர் அரசாங்கம் பதவியேற்ற சில நாட்களிலேயே, 1977 ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற இனக்கலவரம், அதோடு ஒட்டிய வன்முறைகள் பற்றி விசாரிக்க முன்னாள் பிரதம நீதியரசர் மிலியானி க்ளோட் சன்சொனி தலைமையில் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
விசாரணைக் குழு அறிக்கை 1980 நொவம்பரில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பொலிஸார் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலவரத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமை, அரசாங்க அதிகாரிகள் பலரும் எந்த நடவடிக்கையும் எடுக்காதிருந்தமை பற்றி சன்சொனி ஆணைக்குழு அறிக்கையில் அடையாளம் காணப்பட்டிருந்தது.
ஆனாலும் இந்த பொலிஸ் அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் ஜே.ஆர் அரசாங்கம் எடுக்கவில்லை. மாறாக, இதில் சம்பந்தப்பட்ட சில பொலிஸ் அதிகாரிகள் பதவியுயர்வு பெற்றிருந்ததைப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆகவே, ஜே.ஆர் அரசாங்கம், தான் நியமித்த விசாரணை ஆணைக்குழு தவறிழைத்தவர்கள் என அடையாளங்காட்டியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதோடு, அவர்களில் சிலருக்கு பதவியுயர்வும் அளித்திருந்தது.
இத்தோடு இது நின்றுவிடவில்லை. 1982 மே மாதத்தில் ஜே.ஆர் அரசாங்கம் இன்னொரு கைங்கரியத்தையும் நிறைவேற்றியது. 1982 மே 20 ஆம் திகதி ஜே.ஆர் அரசாங்கம் பொறுப்பினின்று விடுவிக்கும் சட்டமொன்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது (Indemnity Act).
இந்தச் சட்டமானது, 1977 ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் 31 ஆம் வரை நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பில் எந்தவொரு அமைச்சர், பிரதி அமைச்சர், முப்படையினர், பொலிஸார் மற்றும் அமைச்சரின் நல்லெண்ண வழிகாட்டுதலின் பேரில் நடந்த எந்தவொரு நபர் மீதும் எவ்வித சட்டநடவடிக்கையும் எடுக்கப்படுவதிலிருந்து விலக்களிக்கும் வகையில் அமைந்தது.
சுருக்கமாக 1977 ஓகஸ்ட் இனக்கலவரத்துக்குக் காரணமானவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதிலிருந்து சட்டரீதியான பாதுகாப்பொன்றை ஜே.ஆர் அரசாங்கம் வழங்கியது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்காத ஜே.ஆர் அரசாங்கம், பாதிப்புக்குக் காரணமாக இருந்தவர்கள் என சன்சொனி ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்டவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை முன்னெடுத்தமை இலங்கை அரசியல் வரலாற்றில் இன்னொரு கரும்புள்ளியாகும்.
முதலாவது உலகத் தமிழீழ மாநாடு
1982 ஜூலை மாதம் ஐந்தாம் திகதி, முதலாவது உலகத் தமிழீழ மாநாடு ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் புறநகர்ப் பகுதியில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில், உலகம் முழுவதிலுமிருந்தும் தமிழீழ விடுதலைக்காகப் போராடும் பல்வேறு அமைப்புகளினதும் பிரதிநிதிகள், புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோருடன் தமிழ் அரசியல் தலைமைகளும் கலந்துகொண்டன.
இலங்கையிலிருந்து தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவரும் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் இம்மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார்.
ஏற்கெனவே, 1982 ஜனவரியில் கிருஷ்ணா வைகுந்தவாசன் உள்ளிட்டோரின் தமிழீழப் பிரகடன முயற்சியை அமிர்தலிங்கமும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும் எதிர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இம்மாநாட்டில் தமிழீழத்துக்கான இடைக்கால, தற்காலிக அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது.
1982, ஜனவரியில் தமிழீழப் பிரகடன முயற்சியை எதிர்த்தது போலவே அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், முதலாவது தமிழீழ மாநாட்டில் முன்வைக்கப்பட்ட தமிழீழ இடைக்கால தற்காலிக அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் பிரேரணையையும் கடுமையாக எதிர்த்தார்.
இந்த விடயம் தொடர்பில் உரையாற்றிய அமிர்தலிங்கம் “நாம் எதிர்நோக்கியுள்ள பெரும் பொறுப்பை நாம் உணர்ந்துள்ளோம். நாம் செய்கின்ற காரியங்களில் நாம் பொறுப்பில்லாமல் செயற்பட முடியாது. எங்கள் மீது கல்லெறியும் முன்பு, எங்களுடைய இடத்தில் நின்று சிந்தித்துப் பாருங்கள். நாம் மனிதர்கள், தவறு இழைக்கக் கூடியவர்கள். மகாத்மா காந்திகூடத் தான் தவறிழைத்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார். ஏதாவதொரு கட்டத்தில் தமிழ் மக்களின் நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன் என்று நான் உணர்ந்தால், நான் தலைமைப் பதவியிலிருந்து இறங்கி, தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றவர் எவராயினும் அவரிடம் தலைமைப் பதவியை அளிக்கத் தயார்” என்று குறிப்பிட்டதுடன் தனித் தமிழீழத்தை ஸ்தாபிப்பதிலுள்ள சிக்கல்கள், சவால்கள் பற்றியும் பேசினார்.
இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் உயிர்களுக்கு தாமே பொறுப்பு என்று சொன்ன அமிர்தலிங்கம், மக்கள் இல்லாமல்ப் போனபின் விடுதலையைப் பெற்று என்ன இலாபம் என்றும் கேள்வி கேட்டார்.
அண்மையில் வெற்றிகரமாகப் பாகிஸ்தானிலிருந்த வங்கதேசம் (பங்களாதேஷ்) பிரிந்தமையைச் சுட்டிக்காட்டிய அமிர்தலிங்கம், அந்த விடுதலைப் போரில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்கள் பலியானதைக் குறிப்பிட்டு, இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் மொத்தச் சனத்தொகையே அவ்வளவுதான் என்று கூறினார்.
மேலும், ஜே.ஆருடன் பேச்சுவார்த்தை நடத்துவது, அவர் மீது கொண்ட காதலால் அல்ல; மாறாகத் தமிழ் மக்கள் மீது கொண்ட அன்பினால் என்று குறிப்பிட்டவர், மாவட்ட அபிவிருத்திச் சபைகளை அடிப்படையாகக் கொண்டு, வலுவான அதிகாரப் பரவலாக்கலை நோக்கித் தாம் பயணிப்பதாகத் தெரிவித்தார்.
நரகத்திற்குப் போவது யார்?
தமிழீழ ஆதரவாளர்கள் நிறைந்த அந்தச் சபையில் இப்படி ஓர் உரையை ஆற்றுவது அமிர்தலிங்கத்துக்கு இலகுவாக இருக்கவில்லை. நிறைய எதிர்ப்புகள், கூக்குரல்களை அவர் எதிர்கொள்ள வேண்டி வந்தது.
குறிப்பாக மாநாட்டில் கலந்துகொண்ட கிருஷ்ணா வைகுந்தவாசனைப் போன்றவர்கள் அமிர்தலிங்கத்துக்குக் கடுமையான சவாலைக் கொடுத்தார்கள். ஒரு கட்டத்தில் “ஜே.ஆரை நரகத்துக்குப் போ என்று அவரது முகத்தைப் பார்த்துச் சொல்லுங்கள்” என்று சொன்னபோது, கோபமடைந்த அமிர்தலிங்கம் “அப்படிச் சொன்னால் நரகத்துக்குப் போகப்போவது ஜே.ஆர் அல்ல, தமிழ் மக்கள்தான் நகரத்துக்குப் போக வேண்டி வரும்” என்று பதிலளித்தார்.
இறுதியில் முதலாவது உலகத் தமிழீழ மாநாடு, தமிழீழ விடுதலைப் பேரவை என்ற ஒன்றை உருவாக்கி, சுதந்திர தமிழீழத்துக்கான சர்வதேச ஆதரவினைத் திரட்டும் பணியில் ஈடுபடும் தீர்மானமொன்றை நிறைவேற்றியது.
தேர்தலுக்கு முன் ஒரு முகம், தேர்தலுக்குப் பின் இன்னொரு முகம்
முதலாவது உலகத் தமிழீழ மாநாட்டில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் பேசிய விடயங்களில் நிறைய யதார்த்தம் பொதிந்திருந்ததை யாரும் மறுக்க முடியாது. தனித் தமிழீழம் ஒன்று உருவாக்கப்பட்டு, நிலைத்து நிற்பதற்கான எந்தவொரு அடிப்படைகளும் திட்டங்களும் இல்லாத நிலையில் அதற்கான அரசாங்கமொன்றை ஸ்தாபித்தல், இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களின் வாழ்வை மேலும் இன்னலுக்குள் தள்ளும் செயலாகவே அமையும்.
இதைவிடப் பேச்சுவார்த்தை மூலம், அதிகாரப் பரவலாக்கலை விஸ்தீரணப்படுத்தி, அதனூடாகத் தமிழ் மக்கள், தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள வழிசமைத்தல் ஒப்பீட்டளவில் சாத்தியமான, சிக்கல் குறைந்த தீர்வாக இருக்கிறது.
ஆனால், இதில் பிரச்சினை எங்கே ஆரம்பமாகின்றது என்றால், இந்த யதார்த்தம் பற்றியும் சாத்தியமான தீர்வுகள் பற்றியும் அமிர்தலிங்கமோ, தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியோ தேர்தல் காலத்தில் எதுவுமே பேசவில்லை.
மாறாகத் தேர்தலின்போது, தனிநாடு அமைப்பதற்கான மக்களாணையையே அவர்கள் கோரியிருந்தார்கள். தேர்தலின் போது ஒரு கதையையும் அதன் பின்னர் “யதார்த்தம், சாத்தியம்” என்று சொல்லும் இன்னொரு கதையையும் முன்வைக்கும் போதுதான் சிக்கலும் முரண்பாடுகளும் தோன்றுகின்றன.
இந்த விடயத்தில் அன்றுமட்டுமல்ல, இன்றும் கூட தமிழ்த் தலைமைகள் இதே வழியில்தான் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது வருத்தம் தரும் விடயம்.
தாங்கள் உறுதியாக நம்பவதை மக்களிடம் கொண்டு செல்ல அவர்களுக்கு திராணி இருப்பதில்லை. மாறாகக் குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டிச் சோறூட்டுவதுபோல தனிநாட்டைக் (பின்னர் சமஷ்டியை) காட்டி வாக்குகள் பெற்றுவிட்டு, அதன் பின்னர் “சாத்தியமான, யதார்த்தமான, இணக்கப்பாடான” தீர்வு என்ற பாதையில் பயணிக்கிறார்கள்.
“சாத்தியமான, யதார்த்தமான, இணக்கப்பாடான” தீர்வு என்ற பாதையில் பயணிப்பது தவறேயில்லை. ஆனால், அதனை முற்கூட்டியே மக்களுக்குச் சொல்லி, அதற்கான மக்களாணையை மக்களிடம் பெறாமைதான் தவறாகிறது. இதனால்தான், தமிழ்த் தலைமைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தம்மை ஏமாற்றுவதாகத் தமிழ் மக்கள் உணர்கிறார்கள்.
தமிழ் அரசியல் பரப்பில் மாற்றுத் தீர்வுகள் பற்றிய கலந்துரையாடல் வலுவடையாமைக்கும் இது ஒரு காரணம். ஏனெனில் “சாத்தியமான, யதார்த்தமான, இணக்கப்பாடான” தீர்வு என்று நடைமுறையில் செயற்படும் தலைமைகள் கூட, வெளிப்படையாக அதனை ஒத்துக்கொள்ளத் தயங்குகின்றன. இந்த இரட்டைமுக அரசியல், இலங்கை தமிழ் அரசியலில் ஒரு சாபக்கேடாகவே மாறிவிட்டது என்பதுதான் உண்மை.
(அடுத்த வாரம் தொடரும்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
8 hours ago