.jpg)
இந்தியாவின் "மினி பொது தேர்தல்" போன்று ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஷ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் டெல்லி சட்டமன்றத் தேர்தல் மட்டும் டிசெம்பர் 4ஆம் திகதி நடைபெறுகிறது. மற்ற நான்கு மாநிலங்களில் சட்டிஷ்கர் மாநில தேர்தல் கடந்த நவம்பர் 11 மற்றும் 19 தேதிகளில் இரு கட்டங்களாக நடந்து முடிந்திருக்கிறது. அம்மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் முதல் கட்டமாக 18 சட்டமன்றத் தொகுதிகளிலும், இரண்டாவது கட்டமாக 72 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. நக்ஸலைட்டுகளின் தீவிரப் பிரச்சினையால் இந்த மாநிலத்தில் மட்டும் தேர்தலை இரு கட்டங்களாக பிரித்து நடத்தியது இந்திய தேர்தல் ஆணையம். முதல் கட்டத்தில் 74.7 சதவீத வாக்குகளும், இரண்டாவது கட்டத்தில் 75 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மத்திய பிரதேச மாநிலத்தைப் பொறுத்தமட்டில் அங்குள்ள 230 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 25ஆம் திகதி வாக்குப் பதிவு நடந்து முடிந்திருக்கிறது. அதில் மொத்தம் 72.52 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதே திகதியில் 40 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட மிசோரம் மாநிலத்தில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இங்கு பதிவான வாக்குகள் 81.29 சதவீதம். முன்பு இங்கு வாக்குப் பதிவு டிசெம்பர் 4ஆம் திகதி நடக்கும் என்ற அறிவித்தது தேர்தல் ஆணையம். ஆனால் அங்கு நடைபெறும் மத நிகழ்ச்சிகளை காரணம் காட்டி அம்மாநில மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று வாக்குப் பதிவு தினத்தை அட்வான்ஸ் செய்தது. அதனால் டிசெம்பருக்குப் பதில் நவம்பர் மாதமே அங்கு வாக்குப் பதிவு நடந்தது. ராஜஸ்தானில் இருக்கும் 200 சட்டமன்ற தொகுதிகளுக்கு டிசெம்பர் 1ஆம் திகதி வாக்குப் பதிவு நடந்தது. 74.38 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளார்கள். இனி கடைசியாக வாக்குச் சாவடிக்குப் போகப் போகிறவர்கள் இந்திய தலைநகரமான டெல்லியில் உள்ள வாக்காளர்கள்தான். 70 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட இந்த தேர்தலுக்கான வாக்குப் பதிவு டிசெம்பர் 4ஆம் திகதி நடக்கப் போகிறது. இந்த வாக்குப் பதிவு முடிந்த பிறகு ஐந்து மாநிலங்களில் நான்கு மாநில வாக்குகள் வருகின்ற டிசெம்பர் 8ஆம் திகதி எண்ணப்படுகின்றன. ஆனால் மிசோரம் மாநில வாக்குகள் மட்டும் டிசெம்பர் 9ஆம் திகதி எண்ணப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த ஐந்து மாநிலங்களில் டெல்லி, ராஜஸ்தான், மிசோரம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர்கள் இருக்கிறார்கள். மற்ற இரு மாநிலங்களான மத்திய பிரதேசத்திலும், சட்டிஷ்கரிலும் காங்கிரஸுக்குப் போட்டியாக களத்தில் நிற்கும் பிரதான எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் முதல்வர்கள் இருக்கிறார்கள். அடுத்து நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கின்ற சூழலில் இந்த தேர்தல்கள் ஒரு "மினி பொதுத் தேர்தல்கள்" போலவே காட்சியளிக்கின்றன. ஆளுகின்ற காங்கிரஸ் அரசுக்கு "வாக்கெடுப்பு" போலவும், எதிர்கட்சியாக இருக்கின்ற பா.ஜ.க.விற்கு "நம்பிக்கையளிப்பு" போலவும் சூடுபிடித்து நிற்கின்றன. இனி இந்த தேர்தல் நிலவரங்கள் கடந்த கால தேர்தல் முடிவுகளின் படி எப்படியிருக்கிறது என்று பார்ப்போம்.
மத்திய பிரதேசம் மாநிலம்:
230 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில் பா.ஜ.க.வின் சார்பில் சிவ்ராஜ் சவுகான் முதலமைச்சராக இருக்கிறார். பா.ஜ.க மூன்றாவது முறையாக இங்கு ஆட்சிக்கு வர ரேஸில் நிற்கிறது. முதன் முதலில் 2003இல் இங்கு பா.ஜ.க.173 எம்.எல்.ஏ.க்களையும், 42.50 சதவீத வாக்குகளையும் பெற்று ஆட்சிக்கு வந்தது. அடுத்து 2008 சட்டமன்ற தேர்தலில் சவுகானுக்குப் போட்டியாக பா.ஜ.க.விலிருந்து விலகி உமா பாரதி தனிக்கட்சி தொடங்கினார். அவர் கட்சி ஏறக்குறைய 5 சதவீத வாக்குகளைப் பிரித்தது. இதனால் 37.64 சதவீத வாக்குகளை மட்டும் பெற்ற சவுகான் 143 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே பெற்று இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தார். இங்கு மாயாவதியின் கட்சியான பகுஜன் கட்சி வாங்கிய 8.97 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் கட்சிக்கு அங்கே முக்கிய மாநிலத் தலைவர்கள் இல்லாமல் போனதும் பேரிழப்பாக அமைந்தது. இந்த சூழ்நிலையில் ஏற்கனவே 32.39 சதவீத வாக்குகளை வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி இந்த முறை இங்கு ஆட்சியைப் பிடிக்கப் போராடி வருகிறது.
நரேந்திரமோடியின் பிரசாரம் சவுகானுக்கு கைகொடுக்குமா என்பதுதான் கேள்விக்குறி. ஏனென்றால் இருவருக்கும் ஆரம்ப காலத்திலிருந்தே அவ்வளவாக ராசியில்லை. இப்போது நாட்டில் நிலவும் "காங்கிரஸ் எதிர்ப்பு" காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கடம். அதே சமயத்தில் ஆட்சியில் இல்லாத மயாவதி கட்சிக்கு இந்த முறை 9 சதவீத வாக்குகள் மத்திய பிரதேசத்தில் கிடைக்காது என்று காங்கிரஸ் தரப்பில் எண்ணுகிறார்கள். ஏற்கனவே பத்து வருடங்கள் மாநிலத்தை ஆண்டு விட்ட பா.ஜ.க.விற்கு "எதிர்ப்பு வாக்குகள்" இல்லாமல் இல்லை. அதை நரேந்திரமோடி பிரசாரமும், உமா பாரதியின் வருகையும் காப்பாற்றுமா என்பதுதான் சுவாரஸ்யமான கேள்வி. ஏனென்றால் கடந்த தேர்தல் நிலவரப்படி காங்கிரஸை விட பா.ஜ.க. வசம் இருக்கும் வாக்கு வித்தியாசம் வெறும் 5 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் மாநிலம்:
காங்கிரஸ் சார்பில் அசோக் ஹெலட் இங்கு முதலமைச்சராக இருக்கிறார். 2003இல் இங்கு 200இற்கு 120 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது. அப்போது அக்கட்சிக்கு கிடைத்த வாக்கு வங்கி 39.19 சதவீதம். ஆனால் 2008இல் இந்த நிலைமை மாறியது. சுமார் ஐந்து சதவீத வாக்குகள் குறைந்து 78 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே பெற்று ஆட்சியை காங்கிரஸிடம் பறி கொடுத்தது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில் பா.ஜ.க. போல் அமோக வெற்றி பெற முடியவில்லை. ஆனால் 200 தொகுதிகளில் 96 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்தது. அதற்கு காரணம் சுயேட்சையாக 14 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றதுதான்! ஆட்சியை பறி கொடுத்தாலும் காங்கிரஸுக்கும், பா.ஜ.க.விற்கும் உள்ள வாக்கு வித்தியாசம் 2008இல் வெறும் 2.55 சதவீத வாக்குகள் மட்டுமே. இந்த சூழ்நிலையில் அசோக் ஹெலட் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வது இமயமலையில் ஏறிக் கோழி பிடிப்பது போன்றுதான்! ஏனென்றால் இங்கே இப்போது அசாத்தியமாக பதிவாகியுள்ள 74.38 சதவீத வாக்கு வங்கி காங்கிரஸுக்கு எதிரான அலை வீசுவதை எடுத்துக் காட்டுகிறது என்பதுதான் ஒரே பேச்சாக இருக்கிறது.
சட்டிஷ்கர் மாநிலம்:
நக்ஸலைட்டுகள் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் மாநிலம் இது. இங்குள்ள பா.ஜ.க. முதல்வர் ராமன்சிங் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள போராடுகிறார். அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கும் பொது விநியோகத் திட்டத்தினை செயல்படுத்தும் கடைகளின் நிர்வாகத்தை பெண்கள் கையில் ஒப்படைத்ததால் மாநிலத்தில் தாய்மார்கள் மத்தியில் பிரபலமானார் ராமன்சிங். அவர் 2003இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 90 தொகுதிகளில் 50 தொகுதிகளில் வெற்றி பெற்று முதன் முறையாக முதலமைச்சரானார். அவர் தலைமை தாங்கிய பா.ஜ.க. பெற்ற வாக்குகள் 39.26 சதவீதம். அடுத்து 2008 சட்டமன்ற தேர்தலில் 50 எம்.எல்.ஏ.க்களைப் பெற்று தன் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார். ஆனால் இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே வாக்குகளைப் பெற்றார். பா.ஜ.க. பெற்ற வாக்கு வங்கி 40.33 சதவீதம்!
காங்கிரஸ் கட்சியின் வி.சி.சுக்லா போன்றவர்கள் நக்ஸலைட் தீவிரவாதத்திற்கு பலியாகி விட்ட நிலையிலும் கூட அங்கு காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. குறிப்பாக காங்கிரஸின் "அஜித் ஜோகி" காரணி பற்றி ராமன்சிங்கே கலக்கத்துடன் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். ஏனென்றால் 2003இல் 36.71 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி 37 எம்.எல்.ஏ.க்களை வெற்றி பெற வைத்தது. அதேபோல் 2008இல் 38.63 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி 38 எம்.எல்.ஏ.க்களை தட்டிச் சென்றது. சென்ற தேர்தல் நிலவரப்படி பார்த்தால் பா.ஜ.க.விற்கும், காங்கிரஸுக்கும் இடையே உள்ள வாக்கு வங்கி வித்தியாசம் வெறும் 1.70 சதவீதம் மட்டுமே! இப்படியொரு சூழ்நிலையில் தீவிரமாகிவிட்ட நக்ஸலைட் பிரச்சினை, அதனால் கொல்லப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள், பொதுவிநியோகத் திட்டத்தில் உள்ள கவர்ச்சிக் குறைவு போன்ற பல விஷயங்கள் பா.ஜ.க. முதல்வர் ராமன்சிங்கிற்கு நெகட்டீவாக இருக்கின்றன. ஏனென்றால், முதல் கட்டம் மற்றும் இரண்டாவது கட்டம் எல்லாவற்றிலுமே சுமார் 75 சதவீத வாக்குகள் இங்கே பதிவாகியிருக்கின்றன. நக்ஸலைட் தீவிரவாதம் உள்ள மாநிலத்தில் இவ்வளவு வாக்குப் பதிவு அனைத்து அரசியல் கட்சிகளையுமே மிரட்டியிருக்கிறது- குறிப்பாக பா.ஜ.க.வை!
மிசோரம் மாநிலம்:
இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களில் ஒன்றான மிசோரம் எப்போதுமே காங்கிரஸின் கோட்டை. அங்கு திரும்பத் திரும்ப காங்கிரஸ் ஆட்சியே வந்து கொண்டிருக்கும். இரு தேசிய கட்சிகளில் இங்கே காங்கிரஸுக்கு எந்தவிதத்திலும் போட்டியாக பா.ஜ.க. இல்லை. ஏனென்றால் இங்குள்ள 40 சட்டமன்ற தொகுதிகளில் இந்த முறைதான் பா.ஜ.க. 17 சட்டமன்றத் தொகுதிகளிலாவது போட்டியிட முன் வந்திருக்கிறது. இதற்கு முன்பு நடைபெற்ற 2003 தேர்தலில் 8 இடங்களிலும், 2008 தேர்தலில் 9 இடங்களிலும் மட்டுமே போட்டியிட்டு ஒரு எம்.எல்.ஏ.வைக் கூட பெறவில்லை. சென்ற தேர்தலில் அம்மாநிலத்தில் பதிவான சுமார் 5 லட்சம் வாக்குகளில், பா.ஜ.க. வேட்பாளர்கள் 2222 வாக்குகளைத்தான் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாநிலத்தைப் பொறுத்தவரை போட்டி காங்கிரஸுக்கும், மற்ற மாநில கட்சிகளுக்கும்தான். அதிலும் முக்கியமாக மிசோரம் நேஷனல் பிரன்ட், மிசோரம் பீப்பிள் கான்பரன்ஸ், மார்லண்ட் டெமாக்ரட்டிக் ப்ரென்ட் ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்று சேர்ந்து "மிசோரம் ஜனநாயக முன்னனி" என்பதை தோற்று வித்து தேர்தல் களத்தில் காங்கிரஸுக்கு போட்டியாக நிற்கின்றன. காங்கிரஸின் முதலமைச்சர் லால்தம்ஹாவாலா வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தாலும், மிசோரம் ஜனநாயக முன்னனிக்கு தலைமை தாங்கும் மிசோ நேஷனல் பிரன்டின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜோரம் தங்கா "நாங்கள் வெற்றி பெறுவோம்" என்று நம்பிக்கையுடன் இருக்கிறார். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கடந்த 2008 சட்டமன்ற தேர்தல் நிலவரப்படி காங்கிரஸ் கட்சி இங்கே 40 தொகுதியில் 32ல் வெற்றி பெற்று 38.89 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதே நேரத்தில் மிசோ நேஷனல் பிரன்ட் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் மொத்தத்தில் போட்டியிட்ட 39 தொகுதிகளில் 30.65 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதே போல் மிசோ பீப்பிள் கான்பரென்ஸ் 16 இடங்களில் போட்டியிட்டு 10.38 சதவீத வாக்குகளையும் பெற்றது. இந்த இரு கட்சிகளின் வாக்குகளைச் சேர்த்தாலே 41.03 சதவீத வாக்குகள் வந்து விடுகிறது. இதில் மார்லண்ட் டெமாக்ரட்டிக் பிரன்டின் வாக்கான 1.95 சதவீதத்தையும் சேர்த்தால், 42.98 சதவீத வாக்குகளாகி விடுகிறது. இந்த நம்பிக்கையில்தான் ஜோரம் தங்கா அவ்வாறு பேட்டியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தல் முடிவுகள் படி காங்கிரஸ் அணியை விட, மிசோரம் ஜனநாயக முன்னணி கூட்டணிக்கு வாக்கு வித்தியாசம் சுமார் 4 சதவீதத்திற்கு மேல் இருப்பதால் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள இங்கே திணறிக் கொண்டுதான் இருக்கிறது.
டெல்லி தலைநகரம்:
அகில இந்தியாவின் கவனத்தையும் ஈர்ப்பது 70 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட டெல்லியின் சட்டமன்றத் தேர்தல்தான். இங்கு இனிமேல்தான் வாக்குப் பதிவு நடக்கப் போகிறது. காங்கிரஸின் சார்பில் மூன்றாவது முறையாக ஆட்சியிலிருக்கும் ஷீலா தீட்சித்திற்கு, பா.ஜ.க.விற்கும் நேரடிப் போட்டி என்றுதான் இருந்தது. ஆனால் "ஆம் ஆத்மி" கட்சி ஆரம்பித்த அரவிந்த் கேஜ்ரிவால் பா.ஜ.க.விற்கு சோதனையாக வந்து களத்தில் நிற்கிறார். இங்கு 2003 தேர்தலில் காங்கிரஸ் 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 48.13 சதவீத வாக்குகளை வாங்கியது. அதற்கு போட்டியாக நின்று தோற்ற பா.ஜ.க. 35 .22 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஆனால் 2008 சட்டமன்ற தேர்தல் வேறு திருப்பத்தைக் கொடுத்தது. அங்கு போட்டியிட்ட மாயாவதியின் கட்சி 14 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதனால் காங்கிரஸின் வாக்கு வங்கி 40.31 ஆகக் குறைந்தது. ஆனாலும் 43 எம்.எல்.ஏ.க்களைப் பெற்று ஷீலா தீட்சித் இரண்டாவது முறையாக முதலமைச்சரானார். அதே சமயத்தில் பா.ஜ.க. தனது வாக்கு வங்கியை 2003 தேர்தலில் இருந்து 2008இல் 38.34 சதவீதமாக உயர்த்திக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2003இல் பா.ஜ.க.வை விட 12.91 சதவீத வாக்குகள் அதிகம் பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, 2008 தேர்தலில் 1.97 சதவீத வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள நேர்ந்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் பா.ஜ.க.விற்கு போட்டியாக களத்தில் குதித்து இருக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் கேஜ்ரிவால். ஊழல் ஒழிப்புப் போராட்டத்தில் கலக்கிய இவர், இப்போது டெல்லி தேர்தலையும் கலக்குகிறார். இவர் யாருடையை வாக்கு வங்கிக்குள் நுழையப் போகிறார் என்பதுதான் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் விஷயம். பா.ஜ.க.வின் வாக்கு வங்கியை பதம் பார்த்து விடுவோரோ என்ற அச்சம் அக்கட்சியினருக்கே இருக்கிறது. அதனால்தான் டெல்லித் தேர்தலுக்கு முன்பு "புனிதராக"த் தெரிந்த கேஜ்ரிவால் இப்போது பா.ஜ.க.வினரின் கண்களுக்கு "கரைபடிந்தவராக"த் தெரிகிறார். அவரது புகழைக் கெடுக்கும் பிரச்சாரங்கள் தூள் கிளப்பும் விதத்தில் பரப்பப்படுகின்றன. ஏற்கனவே 1.97 சதவீத வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே ஊசலாடிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி, கேஜ்ரிவால் பா.ஜ.க.வின் வாக்குகளை மேலும் பிரித்து புண்ணியம் கட்டிக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் பா.ஜ.க.வோ "கேஜ்ரிவால் ஒரு ஸ்பாயிலிங் ஃபோர்ஸ்" என்பது போல் பிரச்சாரத்தை மேற்கொண்டு, தங்கள் வாக்கு வங்கி ஆம் ஆத்மி கட்சிக்குப் போய்விடக்கூடாது என்ற "தற்காப்பு வியூகங்களில்" இறங்கி விட்டார்கள். ஆகவே டிசம்பர் 4-ம் தேதி நடக்கும் வாக்குப் பதிவின் போது காங்கிரஸ் தப்பினால் அது கேஜ்ரிவாலின் புண்ணியம் என்றே கருத வேண்டும்! ஆனால் "கேஜ்ரிவாலையும் மீறி நாங்கள் ஜெயிப்போம்" என்பதுதான் பா.ஜ.க.வின் நம்பிக்கையாக இருக்கிறது.
ஆக மொத்தம் இந்த ஐந்து மாநிலங்களிலும் 11 கோடியே 60 லட்சம் பேர் வாக்காளர்களாகவும், 630 எம்.எல்.ஏ.க்களை தேர்வு செய்ய வேண்டிய தேர்தலாகவும் இந்த தேர்தல் இருக்கிறது. மத்திய பிரதேசம், சட்டிஷ்கர் போன்ற மாநிலங்களை காங்கிரஸ் கட்சி குறி வைக்கிறது. டெல்லி, ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களின் பக்கம் பாரதீய ஜனதாக் கட்சி தன் பார்வையை அழுத்தமாக பதித்துள்ளது. மிசோரம் மாநிலத்தைப் பொறுத்தமட்டில், காங்கிரஸிடமிருந்து மாநிலத்தை மீட்க அங்குள்ள மாநில கட்சிகள் சபதம் மேற்கொண்டுள்ளன. 1,33,537 வாக்குச் சாவடிகளில் பதிவாகியுள்ள வாக்குகளை வருகின்ற டிசெம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் எண்ணிப் பார்க்கும் போதுதான் மக்களின் எண்ணம் பிரதிபலிக்கும். அதுவே அடுத்து வரும் இந்திய பாராளுமன்றத் தேர்தலுக்கு உருவாகும் கூட்டணிகளுக்கும், தேர்தல் யுக்திகளுக்கும் "அச்சாரம்" போடுவது போல் அமையும். "யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே" என்பது போல், அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு இந்த "மினி பொதுத் தேர்தல்" ஒரு எச்சரிக்கை மணி!