Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gopikrishna Kanagalingam / 2017 மே 25 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில், சுமார் 3 தசாப்தங்களாக இடம்பெற்றுவந்த போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட மே 18, 19ஆம் திகதிகளை, இலங்கை அனுஷ்டித்திருக்கிறது.
வடக்கிலும் தெற்கிலும், மாறுபட்ட உணர்வுகளை, அந்தத் திகதிகள் ஏற்படுத்தியிருக்கின்றன. இவை, எதிர்காலத்தில் எடுக்கப்படக்கூடிய நல்லிணக்க முயற்சிகளுக்கும் இன ஒற்றுமை குறித்த நடவடிக்கைகளுக்கும், எந்தப் பெரியளவு சவால்கள் காத்திருக்கின்றன என்பதைக் காட்டிச் சென்றிருக்கின்றன.
போர் முடிவடைந்து 8 ஆண்டுகள் முடிவடைந்திருக்கின்ற போதிலும், இம்முறை தான், பாரியளவிலான நினைவேந்தல் நடவடிக்கைகள், வடக்கில் ஏற்பாடு செய்யப்பட்டன.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வீழ்த்தப்பட்டு இடம்பெறுகின்ற 3ஆவது நினைவேந்தல் நிகழ்வு இது. எனவே, இம்முறை ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நடவடிக்கைகள், அண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கின்ற போராட்ட உணர்வுகளால் தூண்டப்பட்டவையாக அமைந்தன என்றே கருதிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
அடிக்கடி நினைவுபடுத்தப்படுவது போல, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தோடு ஒப்பிடும் போது, நினைவேந்தல் நடவடிக்கைகளுக்கு இந்த அரசாங்கம், ஓரளவு ஆதரவை அல்லது குறைந்தளவிலான தடங்கல்களை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. எனவே, நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற இரா. சம்பந்தன் கூட, இம்முறை நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்டார். அவர், என்னதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்தாலும், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் அவரது பங்குபற்றுகை, இதில் முக்கியமானதாக அமைந்தது.
ஆனால், நினைவேந்தல் நடவடிக்கைகள், முழுமையாகத் தடைகளின்றி இடம்பெற்றனவா என்ற கேள்வியையெழுப்பினால், அதற்கான பதில், இல்லையென்றே கூற வேண்டியிருக்கிறது. இதனால்தான், நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவடைந்து ஒரு வாரத்தின் பின்னர், இவை பற்றி ஆராய வேண்டியிருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உட்பட, அரசியல்வாதிகள் கலந்துகொண்ட நினைவேந்தல் நிகழ்வுக்கு, அரச, அரசாங்கத் தரப்புகளிலிருந்து, ஆதரவு காணப்பட்டது. அந்நிகழ்வுக்கான தடங்கல் எவையும் ஏற்படுத்தப்படவில்லை.
ஆனால், மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, நினைவுக்கல் வைக்கும் நிகழ்வுக்கு, அரச, அரசாங்கத் தரப்புகளிலிருந்து தடங்கல்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதில், 17ஆம் திகதி மாலை, நீதிமன்றத்துக்குச் சென்று, அந்நிகழ்வுக்குத் தடை பெற்றுக் கொண்டமை, பின்னர் பலத்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அந்நிகழ்வை நடத்த அனுமதியளித்தமை என்று, அந்தத் தடங்கல்கள் நீண்டன.
இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரை, அரசியல்வாதிகள் கலந்துகொண்டு, விளக்கேற்றிவிட்டு, 5 நிமிடங்கள் உரையாற்றும் மேல்தட்டு நினைவேந்தல் நிகழ்வுகளை எதிர்ப்பதற்கு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. அவ்வாறான நிகழ்வுகளை, அரசாங்கம் கண்டும் காணாமல் விடுவதற்குத் தயாராக இருக்கிறது.
இல்லையெனில் அவ்வாறான நிகழ்வுகளை, ஊக்குவிக்கவும் அரசாங்கம் தயாராக இருக்கிறது. ஏனெனில், இவ்வாறான நிகழ்வுகள்தான், சர்வதேசத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டு, “போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்காக, வடக்கில் நினைவேந்தல்களை அனுமதித்தோம்” என்று கூறுவதற்கு இலகுவானவை; அவசியமானவை.
ஆனால் மறுபக்கமாக, பொதுமக்களாக ஏற்பாடு செய்யும், உணர்வுகள் முன்னுரிமை பெறும் நிகழ்வுகளை ஏற்றுக் கொள்வதற்கு, அரசாங்கம் தயாராக இல்லை. அதேபோல், நிரந்தரமான நினைவிடங்களையோ அல்லது நினைவுக்காகக் கட்டியெழுப்பப்படும் எந்தவொரு கட்டுமானத்தையோ ஏற்பதற்கும், அரசாங்கம் தயாராக இல்லை. அதனால் தான், சிவில் சமூகங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளுக்குத் தடங்கல் மேற்கொள்ளப்பட்டது.
இதில் முக்கியமாக, இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கான தடையைக் கோரிய விடயத்தில், நீதிமன்றத்தில் பொலிஸார், எதிர்க்கட்சித் தலைவரும் வடமாகாண முதலமைச்சரும் பங்குகொள்ளும் நிகழ்வுக்கு, தாங்கள் பாதுகாப்பு வழங்கியதாகப் பெருமையுடன் கூறிக் கொண்டனர் என்பது முக்கியமாகச் சுட்டிக்காட்டப்படக்கூடியது.
ஏனென்றால், அரசியல்வாதிகள் பங்குகொள்ளும் “விளக்கேற்றும் நிகழ்வுகள்”, வெறுமனே காட்சிக்குரியன என்பதுவும் அங்கு ஆற்றும் உரைகள், வெறுமனே சில நாட்களுக்குரியன என்பதுவும், அரச இயந்திரத்துக்குத் தெரியும்.
ஆனால், காணிக்கென ஆரம்பித்த உணர்வுமிகு போராட்டங்கள், காணாமல் போனோர் விவகாரம், அரசியல் கைதிகள் என, பல வாரங்களாகத் தொடர்ந்து, அரசாங்கத்துக்கும் அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பாரியளவில் அழுத்தம் ஏற்பட்டிருப்பதை, அரசாங்கம் அனுபவித்திருக்கிறது.
எனவே, நினைவேந்தலுக்காக ஆரம்பிக்கப்படுகின்ற உணர்வுமிகு நிகழ்வுகள், இன்னோர் ஆரம்பத்தை வழங்கிவிடக்கூடாது என, அரசாங்கத்தின் தரப்பில் உறுதியாக இருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.
இவை அனைத்துமே, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை வெளியிடப்பட்டு ஒரு வாரத்துக்குள் இடம்பெற்ற சம்பவங்களாகும். அந்தத் தேசியக் கொள்கையில், பாதிக்கப்பட்டவர்களை முன்னிறுத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் உட்பட, முக்கியமான பல்வேறு பிரேரிப்புகள் காணப்பட்டன.
அதில், இடைநிலை நீதி என்ற உப தலைப்பின் கீழ், குணப்படுத்தல் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
(இதில் குறிப்பாக, ஆங்கில வடிவில், குணப்படுத்தல் என்பது காணப்பட, தமிழ் மொழிபெயர்ப்பில், குணப்படுத்தல் என்பது காணப்பட்டிருக்கவில்லை. வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டதா அல்லது மொழிபெயர்ப்புத் தவறா என்பது, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்துக்கே வெளிச்சம்.)
இறந்த தங்கள் உறவுகளை நினைவுகூர முடியாமல், அவர்களுக்கான நினைவை ஏற்படுத்தாமல், குணப்படுத்தல் என்பது சாத்தியப்படாது என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டிய தேவை, அரசாங்கத்துக்கு உள்ளது.
ஒருபக்கமாக, முக்கியமான தேசியக் கொள்கைகளை வகுத்துக் கொண்டு, மறுபக்கமாக அவற்றை மீறும் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் மேற்கொள்வது, ஆரோக்கியமானதாக அமையாது.
தெற்கிலும் கூட, கடந்தாண்டை விட இந்தாண்டு, நினைவேந்தல் தொடர்பான கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள் ஆகியன அதிகரித்திருந்தன. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், நினைவேந்தலுக்குத் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
விடுதலைப் புலிகளை ஞாபகப்படுத்துகின்றனர் அல்லது படையினருக்கு எதிரானவையாக இருக்கின்றன என்பது, அவர்களது எதிர்ப்புக்கான நியாயப்படுத்தலாக இருந்தது.
தெற்கின் கடும்போக்குவாதிகள் பலரும், வடக்கின் நினைவேந்தலை எதிர்த்ததோடு, தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று ஓலமிட்டனர். விடுதலைப் புலிகள் மீண்டும் வருகிறார்களென, பூச்சாண்டி காட்டினர்.
மறுபக்கத்தில், கடும்போக்காளராகக் கருதப்படுகின்ற, அமைச்சரும் போரை வென்றபோது இராணுவத் தளபதியாக இருந்தவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நினைவேந்தலுக்கான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். இறந்தவர்களை நினைவுகூரவும் அஞ்சலி செலுத்தவும் தீபம் ஏற்றவும், அனைவருக்கும் முடியும் என, அவர் தெரிவித்திருந்தார்.
வடக்கின் நினைவேந்தல் நிகழ்வுகள், தெற்கில், இந்தளவுக்கு எதிர்ப்பைச் சந்திப்பது விநோதமானது. ஏனென்றால், இந்த நினைவேந்தல் நிகழ்வுகள், இறுதிப் போரில் கொல்லப்பட்ட பொதுமக்கள் சார்பாக, அவர்களது உறவினர்கள், நினைவுபடுத்துவதும் அவர்களுக்கான நீதியைக் கோருவதுமாகும்.
கடந்த ஆட்சிக் காலத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுதினங்கள், தெற்கில் அனுஷ்டிக்கப்படும் போதும், இதே உணர்வுகள் தானே எழுப்பப்படுகின்றன? அதே மாதிரியான நினைவுகள் தானே, வடக்கிலும் காணப்படும்?
மாவீரர் தினத்துக்கான எதிர்ப்பு என்பது, ஓரளவு நியாயப்படுத்த வேண்டியது. விடுதலைப் புலிகள் பற்றி, தமிழ் மக்களுக்கு எவ்வாறான பார்வை இருந்தாலும், இலங்கைச் சட்டத்தின்படி, அவ்வமைப்பு, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும்.
ஆகவே, அந்த அமைப்பின் உறுப்பினர்களை நினைவுகூருவதைத் தடுப்பது, அரசாங்கத்தின் பார்வையில் சரியானது. ஆனால் மே 18 நினைவேந்தல் நிகழ்வுகள், போரில் உயிரிழந்த பொதுமக்கள் தொடர்பானவை தானே? எதற்காக இத்தனை தடைகள், தடங்கல்கள்?
போரில் கொல்லப்பட்ட மக்களின் நினைவுகள் இருந்தால், அவர்களின் மரணங்களுக்கான நீதியைக் கோரும் குரல்கள் எழும், அதனால் அரசாங்கத்தின் இருப்புக்குப் பாதிப்பு ஏற்படுமென அஞ்சுகின்றனரா? அப்படியாயின், குற்றம் செய்தவன் மனது குறுகுறுக்கிறது என்ற அர்த்தத்தில் அதை எடுத்துக் கொள்ள முடியுமா?
இறந்தோருக்கான நினைவுக்கல்களில் பெயர்களைப் பார்த்தால், 2 வயது, 4 வயது என, பச்சிளம் குழந்தைகளின் பெயர்கள் பதிக்கப்பட்டுக் காணப்படுகின்றன. இவர்களையெல்லாம் நினைவுகூருவது, விடுதலைப் புலிகளை நினைவுகூருவது என்று தெற்கிலும் அரசாங்கத்தில் ஒரு தரப்பினரும் கூறிக் கொள்வது, வெட்ககரமானது.
அத்தோடு, நினைவு நிகழ்வுகளை வேண்டுமானால் தடுக்க முடியும், நினைவுகளையல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால், இறுதி யுத்தம் தொடர்பாக, வடக்கிலும் துக்கமும் நீதிக்கான கோரிக்கைகளும் எழும் நிலையில், தெற்கில், போர் வெற்றிக் கொண்டாட்டங்களும் இடம்பெறும் நிலையில், நல்லிணக்கமென்பது எவ்வளவு சவாலாக அமையப் போகிறது என்பதை, இவை தெளிவாகக் காட்டி நிற்கின்றன.
இப்படியான சூழ்நிலைக்கு மத்தியில் நாட்டை முன்கொண்டு செல்வதற்கு, வாக்குகளைப் பற்றிக் கவலைப்படாத அரசியல் தலைமைகள் தேவைப்படுகின்றன - இரு தரப்பிலும். யாராவது முன்வருவார்களா?
37 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago
4 hours ago