Super User / 2011 மே 11 , பி.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி, சுபுன் டயஸ்)
"அப்பாவை பார்க்க எங்களுக்கு சரியான ஆசை. அது இண்டைக்கு தான் நிறைவேறியது. அம்மா உழைக்கிற பணம் குடும்பம் நடத்தவே போதாதுள்ளது. இதற்கு மத்தியில அம்மா கடன்பட்டு தான் எங்கள படிக்க வைக்கிறாங்க. நானும் தம்பியும் அப்பா இல்லாம சரியா கஷ்டபடுகிறம்" என புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளியொருவரின் மகளான சலோனி துஷ்யந்தன் ஆதங்கப்படுகிறார்.
இதேபோன்று விடுதலை செய்யப்பட்ட மற்றுமொரு முன்னாள் போராளியின் மகனான கேசவன், "நான் 8ஆம் வகுப்பில் கல்வி கற்கிறேன். குடும்பத்தில மொத்தம் ஐந்து பிள்ளைகள். அம்மா உழைத்தால் தான் பணம். மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் தான் அம்மா எங்கள படிப்பிக்க வைக்கிறார். சில நிறுவனங்கள் தரும் உதவிகள் மூலம் தான் குடும்பத்தை ஒரு மாதிரியாக கொண்டு செல்கிறோம். எங்களின் படிப்பும் மிக கஷ்டத்திற்கு மத்தியில் தான் முன்னெடுக்கப்படுகிறது" என்றார் அவர்.
விடுதுலைப் புலிகள் இயக்கத்துடனான இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பாதுகாப்பு தரப்பினரால் பெரும்பாலான போராளிகள் கைது செய்யப்பட்டதுடன் மேலும் பலர் சரணடைந்தனர். இவர்களின் எண்ணிக்கை சுமார் 11,000 என பாதுகாப்பு தரப்பு தரவுகள் அந்நாட்களிலேயே அறிவித்தன. .jpg)
இவ்வாறு சரணடைந்தவர்கள் மற்றும் கைதானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 24 புனர்வாழ்வு நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிலையங்களினூடாக புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் சுமார் 7,000 பேர் இதுவரையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், ஏனையவர்கள் எஞ்சியுள்ள 9 புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைத்து புனர்வாழ்வளிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கான தொழிற் பயிற்சிகள், இழந்த கல்வியை மீளப் பெறுவதற்கான வசதிகள் என்பன குறித்த புனர்வாழ்வு நிலையங்களினூடாக வழங்கப்படுவதுடன் சுயதொழில் வாய்ப்புக்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் போன்றனவும் பெற்றுக்கொடுக்கப்படுகின்றன.
முக்கியமாக, புனர்வாழ்வளிக்கப்படும் முன்னாள் போராளிகளில் சுமார் 150 பேர் க.பொ.த. (சா/த) மற்றும் க.பொ.த. (உ/த) பரீட்சைகளுக்கு தோற்றியுள்ளனர். இவர்களில் பலர் பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவாகியுள்ளமை விசேட அம்சமாகும். விசேடமாக பல்கலைக்கழகங்களுக்கு தெரிவானவர்களில் இருவர் மருத்துவபீடத்திற்கு தெரவாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு சில நன்கொடையாளர்களினால் மாதாந்தம் 2,500 ரூபா வீதம் புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றன. குறித்த புலமைப்பரிசில் பணம் மாதாந்தம் அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வைப்பு செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, "கல்வி அறிவற்ற நிலையில் புனர்வாழ்வு நிலையங்களுக்கு வருகை தந்த முன்னாள் போராளிகள், பல்கலைக்கழகங்களுக்கு நுழையுமளவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர்" என மனிதவள சிரேஷ்ட அமைச்சர் டி.யூ.குணசேகர கொழும்பில் இடம்பெற்ற நிகழவொன்றில் தெரிவித்தார்.
"புனர்வாழ்வு நிலையங்களில் பயிற்சிபெற்று பல்கலைக்கழகங்களுக்கு முன்னாள் போராளிகள் தெரிவு செய்யப்பட்ட வரலாறு இலங்கையில் மாத்திரமே இடம்பெற்றுள்ளது" எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
புனர்வாழ்வு செயற்பாடுகள் கல்வி, தொழிற்பயிற்சி போன்ற ஐந்து வேறுபட்ட தலைப்புக்களின் கீழ் இடம்பெறுகின்றன.
இதற்கு மேலதிகமாக முன்னாள் போராளிகளுக்கு கடந்த இரண்டு வருட காலப் பகுதியில் மத, கலாசார, விளையாட்டு, இணைப்பாடவிதான செயற்பாடுகள், குடும்ப உறுவுகள், சமூக உளவியல் மற்றும் ஆன்மீகம் போன்ற விடயங்களில் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் சிலர் தங்களது அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்துகொள்கின்றனர்.
"போராளிகளுக்கு சமைத்து கொடுக்கும் தொழிலில் ஈடுபட்ட நான் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தேன். இதனையடுத்து நெலுக்குளம் புனர்வாழ்வு நிலையத்தில் எனக்கான புனர்வாழ்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டன" என்று 42 வயதான வீரகொட்டி ஞானசீலன் தெரிவித்தார்.
"புலிகள் இயக்கத்தில் இருந்ததைவிட மிக நிம்மதியாக புனர்வாழ்வு நிலையத்தில் இருந்தேன். எனக்கு தியானம், கல்வி, தொழிற் பயிற்சி போன்ற பல பயிற்சிகள் புனர்வாழ்வு நிலையத்தில் வழங்;கப்பட்ட நிலையில் தான் விவசாய தொழிலில் ஈடுபடவுள்ளளேன்" என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, "புனர்வாழ்வு நிலையத்தில் எனக்கு பல நல்ல பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதனை கொண்டு சுயமாக
மோட்டார் திருத்துநர் தொழிலில் நான் ஈடுபடவுள்ளேன். எனினும் இத்தொழிலை ஆரம்பிப்பதற்கு பணமில்லாமலுள்ளது" என புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை மயூரன் குறிப்பிட்டார்.
இருப்பினும் "புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படும் முன்னாள் போராளிகள் சுயதொழிலில் ஈடுபடுவதற்காக வங்கிகளினூடாக கடன்கள் வழங்கவுள்ளதோடு அரச வேலைவாய்ப்பு வழங்கப்படும்" என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.
"புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழுள்ள ரெபியா நிறுவனத்தின் ஊடாக வட மாகாணத்திலிருந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் தெரிவுசெய்யப்பட்ட 1,000 பேருக்கு 250,000 ரூபா வரையான சுயதொழில் கடன் வழங்கவுள்ளதுடன் குறித்த கடன் திட்டம் மே மாத நடுப்பகுதியில் அமுல்படுத்தப்படும்" என அமைச்சர் சந்திரசிறி கஜதீர குறிப்பிட்டார்.
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படும் பல முன்னாள் போராளிகள் தாங்கள் சுய தொழிலை ஆரம்பிப்பதற்காக பணமின்றி வங்கி கடன்களை எதிர்பார்க்கின்ற நிலையிலேயே அரசாங்கத்தினால் இவ்வாறான திட்;டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இந்த சந்தர்ப்பத்தினை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் வாழ்வில் முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்க முடியும்.
இந்நிலையில் முன்னாள் போராளிகளினால் வரையப்பட்ட சித்திரங்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட கைப்பணி பொருட்களை காட்சிப்படுத்தும் கண்காட்சியினை கடந்த ஏப்ரல் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் கொழும்பு கலாபவனத்தில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் தலைமைச் செயலகம் ஏற்பாடு செய்திருந்தது.
இதற்கு முன்னரும் முன்னாள் போராளிகளினால் தயாரிக்கப்பட்ட கைப்பணிப் பொருட்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு மொனராகலை, புத்தளவில் இடம்பெற்ற தயடகிருள கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சித்திர கண்காட்சியில் சிறந்த ஓவியமாக தெரிவுசெய்யப்பட்ட ஒவியத்தை வரைந்தவருக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் கண்காட்சியின் இறுதியில் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் கிடைக்கப் பெற்ற பணங்கள் உரிய பயனாளிகளிடமே கையளிக்கப்பட்டன.
இதேவேளை, "புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து விடுதலை செய்யப்பட்ட வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கு சுயதொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்காக வவுனியா மாவட்ட செயலகத்தினால் அவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டி வருவதாக" வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.சாள்ஸ் தெரிவித்தார்..jpg)
அத்துடன் முன்னாள் போராளிகளுக்கு தேவையான காணி மற்றும் வீடுகளை வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் 'கணவர் புனர்வாழ்வு நிலையத்திலுள்ளதால் கையில் இரு பிள்ளைகளை வைத்து கொண்டு மிகவும் கஷ்டபடுகின்றேன். தொழிலுக்கு கூட செல்லமுடியவில்லை' என முன்னாள் போராளியொருவரின் மனைவியொருவர் தெரிவித்தார்.
"முன்பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மூத்த பிள்ளைக்கான கல்வியை நிறுத்திவிட்டேன். கணவர் விடுதலை செய்யப்பட்டால் பிள்ளைகளின் எதிர்காலம் சிறந்தாக அமையும் என நான் தெரிவிக்கிறேன். இது தொடர்பாக தனது வேண்டுகோளை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரிடமும் கொடுத்துள்ளேன்" என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, "எனது மகன் இன்று வரை புனர்வாழ்வு நிலையத்திலேயே உள்ளார். இதனால் அவரது மனைவியும் கைப்பிள்ளையும் அவரின்றி மிகவும் கஷ்டப்படுகின்றனர். அவரை விடுதலை செய்யக்கோரி அமைச்சரிடம் கடிதம் கொடுத்துள்ளேன்" என முன்னாள் போராளியின் தாயான கிருபாமலர் தெரிவித்தார்.
தற்போது புனர்வாழ்வு நிலையங்களில் சுமார் 4000 முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர்களும் மிக விரைவில் விடுதலை செய்யப்படுவர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும் எப்போது என இதுவரை அரசாங்கத்தினால் குறிப்பிடப்படவில்லை. 2600ஆவது புத்த ஜயந்தியை முன்னிட்டு இவர்கள் விடுதலை செய்யப்படலாம் எனவும் நம்பப்படுகிறது. எது எப்படி இருப்பினும் இவர்கள் எப்பொழுது விடுதலையாவார்கள் என்பது இன்னமும் புதிராகவே இருக்கிறது. இதனால் புனர்வாழ்வு நிலையங்கள் மிகுதியாகவுள்ள முன்னாள் போராளிகளின் விடுதலை எப்போது என்பது கேள்வி குறியாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது. Pix By: Pradeep Pathirana
.jpg)
.jpg)
33 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
33 minute ago
1 hours ago
1 hours ago