2025 மே 19, திங்கட்கிழமை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நான் பொருட்படுத்துவதில்லை: அமைச்சர் டக்ளஸ்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 11 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொருட்படுத்துவதில்லை. நான் ஜனாதிபதியை மதிக்கின்றேன். அவர் தமிழர்களுக்கான அதிகாரத்தை நிறைவேற்றுவார். வட., கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் அதீத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை சீர்குலைக்க முயற்சிக்கின்றது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - லங்காதீப பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். 13ஆவது யாப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக அதிகாரங்களை கேட்கின்றதல்லவா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

09.12.2012 அன்றைய லங்காதீப ஞாயிறு பத்திரிகைக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வழங்கிய விசேட செவ்வியின் முழுமையான தமிழாக்கம் இது.
 
கேள்வி: 13ஆவது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பாக அரசாங்க தரப்பிலேயே பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது ஆளுங் கட்சிக்கு பிரச்சினையை ஏற்படுத்தாதா?
 
பதில்: 13ஆம் யாப்புத் திருத்தத்தை அமுல்படுத்துவது அரசாங்கத்தின் நிலைப்பாடு. இது ஒரு கூட்டணி அரசாங்கம். பல்வேறு கட்சி உறுப்பினர்கள் இவ்வரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். இது ஒரு ஜனநாயக அரசாங்கம் என்பதால் கட்சி உறுப்பினர்களுக்கு தங்களது கருத்துக்களை முன் வைக்கலாம். 13ஆவது திருத்தம் தொடர்பாகவும் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு தத்தமது கருத்துக்களை தெரிவிக்கலாம். வரவு - செலவுத் திட்ட உரையின் போது ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையிலேயே எமது நிலைப்பாடும் உள்ளது. மக்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் 13ஆவது யாப்புத் திருத்தத்தை பலப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி கருதுகின்றார். தற்போது பல்வேறு கருத்துக்களை கொண்டுள்ளோரையும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு இணங்கச் செய்ய முடியும்.  விமர்சனங்கள் முன்வைப்பதால் அரசாங்கத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
 
கேள்வி: 13இற்கு அப்பாற்பட்ட தீர்வு தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அது என்ன?
 
பதில்: அது ஜனாதிபதி தெரிவித்த கருத்து. அவர் தெரிவித்த கருத்தில் எவ்வித தவறுமில்லை. இறுதி தீர்மானத்தை எட்டுவதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
 
கேள்வி: 13ஆவது யாப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக அதிகாரங்களை கேட்கின்றதல்லவா?

பதில்: நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொருட்படுத்துவதில்லை. நான் ஜனாதிபதியை மதிக்கின்றேன். அவர் அதை நிறைவேற்றுவார். வட., கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் அதீத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை சீர்குலைக்க முயற்சிக்கின்றது. 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது சமாதானமும் நிம்மதியுமே தேவையாக உள்ளது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் அபசகுனமாகவே பேசுகின்றது. இவர்களது செயற்பாடுகள் மக்கள் மத்தியில் மீண்டும் வன்முறையையும் அமைதியின்மையையும் ஏற்படுத்துவதற்கான முயற்சியாகும். நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் 13ஆவது திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ள உறுப்பினர்களுடன் விசேட பேச்சுவார்தை ஒன்று கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

கேள்வி: வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை காணப்படுகின்றதா?
 
பதில்: எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அங்கு பிரச்சினைகள் எதுவுமில்லை. தேர்தல் நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை காணப்படுகின்றது. 

கேள்வி: ஆனால், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் பின்னர் காணப்படும் சூழ்நிலைகள் சிறப்பானதாக இல்லையே?

பதில்: யாதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட அரசியல் பின்னணியுடன் அவதானிக்கும் தன்மையுடன் இப்பிரச்சினை தொடர்பாகவும் அவதானிக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற பிரச்சினைகள் பல வருடங்களாக காணப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கில் நிலைகொண்டிருப்பதை விரும்புகின்றன. அவர்கள் அதை வைத்து கொண்டு அரசியலை முன்னெடுக்கலாம். சவப்பெட்டி விற்பனை செய்பவர் ஒருவர் மற்றவர் எப்போது மரணம் அடைவார் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பார். தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமது அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்து தங்குதடையின்றி முன்னெடுத்துச் செல்லலாம்.  ஆகவே, பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவதை விரும்புவதில்லை. பிரச்சினைகள் மேலும் முற்றிப் போவதையே அவர்கள் விரும்புகின்றனர். காலாகாலம் புதிய பிரச்சினைகளை அவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். ஒருசில தமிழ் பத்திரிகைகள் இதற்கு துணை புரிகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் நாம் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

கேள்வி: நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒருசில தமிழ் உறுப்பினர்கள் நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்க முற்படுகின்றனர் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்: ஆம். ஒரு எம்.பி. நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது மஹாவம்சத்தை தீயிட்டுக் கொளுத்த வேண்டுமென்று தெரிவித்திருந்தார். இதுபோன்று கருத்துக்கள் மீண்டும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவே வழிவகுக்கும். தென்பகுதி சிங்கள மக்கள் - தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிறந்த புரிந்துணர்வைக் கொண்டுள்ளனர். தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சிங்கள மக்கள் உள்ளனர். அதேபோன்று குழப்பங்களை ஏற்படுத்தி பிரச்சினைகளை ஏற்படுத்தும் சக்திகளும் நாட்டில் காணப்படுகின்றன.

கேள்வி: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை தமிழ் மக்கள் மத்தியில் கவலைகளை ஏற்படுத்தியிருக்குமல்லவா?
 
பதில்: யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்கு ஒரு தமிழ் எம்.பி.யே காரணம். மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க அவர் விரும்பினால் தமது வீட்டிலேயோ அல்லது வர்த்தக நிலையத்திலோ தீபம் ஏற்றியிருக்கலாம். அதில் பல்கலைக்கழக மாணவர்களை தொடர்புபடுத்தக் கூடாது. அமைதியாக படிக்கும் மாணவர்களை குழப்பி, குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதே அந்நாடாளுமன்ற உறுப்பினர்களின் முயற்சியாகும். அரசியல் ஆதாயத்தை பெற்றுக்கொள்வதற்காக தேவையற்ற குழப்பங்களை அவர் ஏற்படுத்தினார். அதற்கு பல்கலைக்கழக மாணவர்களை அவர் கேடயமாக பயன்படுத்தினார். பொது இடங்களில் தீபம் ஏற்றி மோதல்களை ஏற்படுத்துவதே அவரது நோக்கமாக இருந்தது.

கேள்வி: இறந்தோரை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றுவது தவறா?
 
பதில்: தீபம் ஏற்றி மரணித்தோரை நினைவு கூருவதில் எவ்வித தவறுமில்லை. ஆனால், அதனை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவது தவறு. பொது இடங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதும் தவறு. மரணமடைந்த புலிகள் தொடர்பாக அவருக்கு அனுதாபமோ ஆதங்கமோ இருந்தால் அதனை தனது வீட்டில் அல்லது வர்த்தக நிலையத்தில் விளக்கேற்றுவதில் எவ்வித தவறுமில்லை. ஆனால், பல்கலைக்கழக மாணவர்களை பலிக்கடாக்கள் ஆக்கி அரசியல் ஆதாயம் பெற்றுக்கொள்வது தவறு. ஹிட்லரை நினைவு கூர்ந்து எங்காவது தீபம் ஏற்றுவது உண்டா?

கேள்வி: தீபம் ஏற்றியமைக்காக பொலிஸார் தாக்குதல் நடத்தியமை தவறல்லவா?
 
பதில்: இது பிழையான கருத்து. தீபம் ஏற்றியதால்தான் பொலிஸார் தாக்கினார்கள் என்று சொல்ல முடியாது. ஊர்வலம் ஒன்று நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுமதியின்றி கூட்டம் நடத்த வேண்டாமென்ற பொலிஸாரின் அறிவுறுத்தல் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது. இதனை தடுக்கச் சென்றபோதே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தென்பகுதி பல்கலைக்கழக மாணவர்களும் பொலிஸாரின் அறிவுறுத்தல்களை மீறியபோது தடுக்கப்பட்டுள்ளனர்.  புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட இயக்கமாகும். மக்கள் விடுதலை முன்னணி தடைசெய்யப்பட்ட இயக்கமாக இருந்தபோது கார்த்திகை வீரர்கள் தினத்தை கொண்டாட சட்டம் அனுமதிக்கவில்லை. புலிகளின் அமைப்பும் அவ்வாறுதான்.

கேள்வி: யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் சீர்குலைந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றதே?
 
பதில்: அத்தகவல்களில் எவ்வித உண்மையுமில்லை. வடக்கில் சிவில் நிர்வாகத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் சிலரால் இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டாலும் தற்போது பல்கலைக்கழகம் சிறப்பாக செயற்படுகின்றது. யாழ். பல்கலைக்கழகம் சர்வதேச பல்கலைக்கழக தரவரிசையில் 9306ஆம் இடத்தில் காணப்பட்டது. தற்போது 5662ஆம் இடத்தை அடைந்துள்ளது. தேசிய மட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் 7ஆம் இடத்தில் உள்ளது. முறையற்ற நிரவாகம் காணப்பட்டால் பல்கலைக்கழகம் எவ்வாறு இந்நிலையை அடைந்திருக்கமுடியும்? இது நிர்வாகம் சார்ந்த பிரச்சினையல்ல. ஒருசில அரசியல்வாதிகள் - பல்கலைக்கழக மாணவர்களை தமது ஆதாயத்திற்காக பகடைக் காய்களாக பயன்படுத்துகின்றனர்.

கேள்வி: கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளபோதும் வடக்கில் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுகின்றதா?
 
பதில்: அமுல்படுத்தப்படவில்லை என்று சொல்ல முடியாது. அரசாங்கம் தன்னால் இயன்றவரை பரிந்துரைகளை அமுல்படுத்துகின்றது. வெளிநாடுகள் திருப்தியடையும் வகையில் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும்.
 
கேள்வி: திவிநெகும சட்டமூலத்திற்கு மாகாண சபையின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியதால் தான் பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றவியல் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதாக பல்வேறு வதந்திகள் காணப்படுகின்றன. இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

பதில்: குற்றவியல் பிரேரணை தொடர்பான விசாரணை விசேட தெரிவுக்குழுவினால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அது தொடர்பாக கருத்து கூறும் உரிமை எனக்கு கிடையாது. 

கேள்வி: திவிநெகும சட்டமூலத்தை மாகாண சபைகளின் அங்கீகாரத்திற்கு அனுப்பும் உத்தரவிற்கமைவாக எதிர்காலத்தில் வடக்கில் ஆளுந்தரப்பு அல்லாத கட்சியொன்று ஆட்சி அமைத்தால் அதனால் ஏற்படும் விளைவுகள்?

பதில்: மாகாண சபைகளுக்கு அனைத்து அதிகாரங்களும் இருக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அது பொதுவான ஒரு விடயம். திவிநெகும திட்டம் வட., கிழக்குக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல. நாடெங்கும் அமுல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். பெரும்பாலான மக்கள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஒரு சிறிய தரப்பு எதிர்ப்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை.  எதிர்த்தரப்புக்கள் ஏதாவது ஒரு சூழ்ச்சிகளை மேற்கொள்ளும். எது எப்படியிருந்தாலும் வட மாகாணத்தில் ஆட்சியமைக்கும் கட்சியாளர்கள் குழு தொடர்பாக மக்களே தீர்மானிப்பார்கள்... பொறுத்திருந்து பார்ப்போம்.
 
கேள்வி: யாழ். மக்களின் வாழ்க்கை நிலைமை எவ்வாறு உள்ளது?

பதில்: மிகவும் சாதகமாக உள்ளது. முன்னேற்றம் காணப்படுகின்றது. அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது. கண்ணி வெடிகள் அகற்றப்படும் வரை இடம்பெயர்ந்தோருக்கு தற்காலிக நிவாரணங்கள், உணவு விநியோகம், உட்கட்டமைப்பு வசதிகளை கட்டியெழுப்புதல், மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுத்தல், அவர்களின் வாழ்க்கையை மீள்கட்டியெழுப்புதல் உள்ளிட்ட முன் எப்போதுமில்லாத பல்வேறு சவால்களை எதிர்கொள்ளவேண்டியதாக உள்ளது. வடக்கின் வசந்தம் செயற்திட்டத்தின்கீழ் யாழ். மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1418 மில்லியன் சதுர மீற்றர் பரப்பளவில் 1330 மில்லியன் சதுர மீற்றரில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தமது பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக 35 ஆயிரம் ரூபாவிற்கு குறையாத பெறுமதியுடைய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் மக்கள் நலன் கருதி மேலும் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கேள்வி: எல்.ரி.ரி.ஈ. அமைப்பு மீண்டும் தலைதூக்கும் அபாயம் உள்ளதா?

பதில்: அவ்வாறான எவ்வித அபாயமுமில்லை. ஆனால், தமது தனிப்பட்ட நலனுக்காக பல்வேறு பிரச்சினைகளை கிளப்பும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பிரச்சினைகள் உள்ளவரை தமது இருப்பை தக்கவைத்துக் கொள்ளலாம் என கருதும் சிலர் உள்ளனர் என்பதை மறக்கக்கூடாது.  மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஆகவே மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காது.
 
கேள்வி: உங்களுக்கு தற்போது இந்தியாவிற்கு போகமுடியாதா?

பதில்: சூளைமேட்டில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பாக நானும் நீதிமன்றத்தில் ஆஜரானேன். அதில் எனக்கு நேரடித் தொடர்பில்லை. இச்சம்பவத்தில் பின்னணியில் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரனும் செயற்பட்டனர். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இச்சம்பவத்திற்காக நீதிமன்றம் மன்னிப்பு வழங்கியது. நீதிமன்றத்தில் ஆஜராக தேவையில்லை எனவும் தெரிவித்தது. இலங்கை - இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டதன் பின்னரும் அடிக்கடி இந்தியாவிற்கு சென்று வந்தேன். நான், ஜனாதிபதியுடன் இந்தியாவிற்கு விஜயம் செய்வதை ஒருசில தமிழக அரசியல்வாதிகள் எதிர்த்தனர். ஆகவே, அவர்கள் மீண்டும் வழக்கு தொடுத்துள்ளனர்.  குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஒருசில ஊடகங்களும் நபர்களும் என்மீது சேற்றை வாரியிறைப்பதற்காக கொலை வழக்கு தொடர்பில் நீதிமன்றம் என்னை தேடுவதாக தகவல்களைப் பரப்பினர். அதில் உண்மையில்லை. சட்டரீதியாக நான் இதனை எதிர்கொள்வேன்.  இந்தியாவில் ஒருசில அரசியல்வாதிகள் நான் அங்கு விஜயம் மேற்கொள்வதை விரும்பவில்லை.  புலிகள் தொடர்பாக யதார்த்த நிலையை நான் பகிரங்கப்படுத்துவதை அவர்கள் விரும்பவில்லை.  நானும் தமிழன் என்பதால் எனது கருத்துக்கள் அவர்களை பாதிக்கின்றன. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தினால் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கை மீண்டும் உயிர்கொடுக்க முனைகின்றனர்.  தமிழகம் மற்றும் இலங்கையிலுள்ள எல்.ரி.ரீ.ஈ. ஆதரவாளர்கள் இதன் பின்னணியில் செயற்படுகின்றனர்.
 
தற்போதும் இந்தியாவிற்கு விஜயம் செய்ய முடியுமா. அதில் எவ்வித தடையுமில்லை. தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக செய்மதி ஊடாக சாட்சியம் அளிக்க முன்வந்த போதும் அது நிராகரிக்கப்பட்டது. தற்போது இவ்விடயம் தொடர்பாக மேன்முறையீடு செய்யப்பட்டது.

கேள்வி: புலம்பெயர் தமிழர்கள் மிகவும் வீரியத்துடன் செயற்படுகின்றனர். அது எமது நாட்டிற்கு பாதகமானதல்லவா?

பதில்: தற்காலிக நலன்கருதி அமைதியற்ற சூழ்நிலையை ஏற்படுத்த முயன்றாலும் அது வெற்றியளிக்கப்பபோவதில்லை. நான் சரியாகவும் நேர்மையாகவும் செயற்பட்டால் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒரு பொருட்டல்ல.

நேர்காணல்: தயாசீலி லியனகே
தமிழாக்கம்: பெருமாள் அனில்குமார்


You May Also Like

  Comments - 0

  • AJ Wednesday, 12 December 2012 06:11 AM

    உங்களை நாங்களும் அதாவது 95% தமிழர்களும் ஒரு மண்ணுக்கும் பொருட்படுத்த வில்லை. இது உங்களுக்கே தெரியும்

    Reply : 0       0

    thalai Thursday, 13 December 2012 05:51 AM

    என்ன கொடுமை சரவணன். அரசியல்வாதி தீபம் ஏற்றச் சொன்னால் தீபம் ஏற்றுவதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் இவரை மாதிரி படிப்பறிவில்லாத முட்டாளா? முதலில் ஒரு பல்கலைக்கழகத்திற்கு சென்று படிக்க வேண்டும் அங்குதான் நல்ல மனிதர்கள் உருவாகுவார்கள்.

    Reply : 0       0

    தர்மலிங்கம் Sunday, 16 December 2012 07:13 AM

    தமிழ் மக்களின் அதிக விருப்பு வாக்குகள் பெற்ற ஒரே தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த வரலாறு தெரியாதா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X