2025 மே 19, திங்கட்கிழமை

ராகுல் காந்தியை தலைவராக ஏற்கிறேன்: சிதம்பரம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 17 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

"ராகுல் காந்தி என்னை விட வயதில் இளையவர். ஆனால், அவரை நான் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளேன்"- தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் நடைபெற்ற முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் செல்லபாண்டியனின் நூற்றாண்டு விழா பட திறப்பு விழாவில் இந்திய நிதி அமைச்சர் சிதம்பரம் ஆற்றிய உரை இது. தமிழக காங்கிரஸ் தலைவர்களும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களும் சிதம்பரத்தின் இந்த அறிவிப்பில் திகைத்துப் போயிருக்கிறார்கள். தமிழக காங்கிரஸில் பல கோஷ்டிகள் இருந்தாலும், இரு முக்கிய கோஷ்டிகள் உண்டு. ஒன்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தலைமையிலான அணி. இன்னொன்று நிதி அமைச்சர் சிதம்பரத்தை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ள அணி. இந்த இரு அணித் தலைவர்கள் மட்டுமின்றி, சிதம்பரத்திற்கு "ஜென்ம விரோதி" போல் மாறிய மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனும் செல்லபாண்டியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றார்கள். சமீப காலத்தில் ஜெயந்தி நடராஜன், சிதம்பரம், வாசன் ஆகிய மூவரும் ஒரே மேடையில் தோன்றிய அற்புதமான காட்சி இது.

நிதியமைச்சர் சிதம்பரம் அமைக்க விரும்பிய "தேசிய முதலீட்டு வாரியம்" மற்ற அமைச்சகங்களின் செயல்பாட்டிற்குள்ளும், அதிகாரத்திற்குள்ளும் மூக்கை நுழைக்கிறது என்று கடுமையாக எதிர்த்தவர் ஜெயந்தி நடராஜன். இதற்காகவே பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தனியாக கடிதமே எழுதினார். அதை பத்திரிகைகளுக்கும் "லீக்" பண்ணினார். இந்த சூழ்நிலையில் தேசிய முதலீட்டு வாரியத்தை மத்திய அரசே கிடப்பில் போட வேண்டியதாகிவிட்டது. பிறகு "கருத்தொற்றுமை" ஏற்படுத்தி, தேசிய முதலீட்டு வாரியம் "முதலீடுகள் பற்றி ஆலோசிக்கும் அமைச்சரவை குழுவாக" சமீபத்தில்தான் மாற்றி அமைக்கப்பட்டது. அந்த கோபம் தீர்வதற்குள்ளாகவே சிதம்பரமும், ஜெயந்தி நடராஜனும் ஒரே மேடையில் கலந்து கொண்டதை காங்கிரஸ் தொண்டர்கள் ஏக குஷியில் பார்த்தார்கள் என்றால் மிகையாகாது. அப்படியொரு விழாவில்தான் "நான் ராகுல்காந்தியை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளேன். அதேபோல் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கும் இளைஞர் யாரை நியமித்தாலும், அவரை அனைவரும் தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று பரபரப்பாக பேசியிருக்கிறார். "நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கும் ஒரு முயற்சி இருக்கிறது. அதை மனதில் வைத்தே அவர் அப்படி பேசியிருக்கக்கூடும்" என்கிறார் காங்கிரஸின் மூத்த தலைவர் ஒருவர்.

ஆனாலும் அதையும் விட ஒரு படி மேல் போய் வேறு ஒரு விஷயமும் இதில் அடங்கியிருக்கிறது. சமீப காலமாக ப.சிதம்பரத்தின் இமேஜ் பெருகி வருகிறது. குறிப்பாக "2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் அவர் மீது விசாரணை நடத்த தேவையில்லை" என்று ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்ரமண்யம் சுவாமி போட்ட "மறு ஆய்வு" மனுவையும் இந்திய சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. அதனால் காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள "க்ளீன் இமேஜ்" தலைவர்கள் வரிசையில் பிரதமருக்கு அடுத்தபடியாக நிதியமைச்சர் சிதம்பரமே இடம்பெறுகிறார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி போன்றோர் இருந்தாலும், மைனாரிட்டி சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை விட சிதம்பரத்தின் பெயர் பெரும்பான்மையானவர்களால் ஏற்றுக் கொள்ளப்படும் வாய்ப்பு இருக்கிறது. இதை மனதில் வைத்தே, "அடுத்த பிரதமர் வேட்பாளர் ரெடி" என்ற தோரணையில் சில வார ஏடுகளில் செய்திக் கட்டுரைகளே வெளிவந்தன. இதெல்லாம் காங்கிரஸ் தலைமையை விட, காங்கிரஸில் அடுத்த தலைவராக இருக்கும் ராகுல் காந்தியை "டென்ஷன்" அடைய வைத்தது என்பது உண்மை. 2014 நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்காக சமீபத்தில் அமைக்கப்பட்ட குழுக்களில் எந்தக் குழுவின் தலைமைப் பொறுப்பும் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு வழங்கப்படவில்லை என்பது இதில் குறிப்பிடத்தக்கது. இந்த "உள்கட்சி சச்சரவுகளை" போக்கிக் கொள்ளவே இப்போது ராகுல் காந்தியை நான் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளேன் என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் சிதம்பரம்.

அது மட்டுமின்றி சமீபத்தில் சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த போது, "நீங்கள் பிரதமர் வேட்பாளராக வாருங்கள்" என்று சோனியாகாந்திக்கு "சூசகமாக" அழைப்பு விடுத்திருந்தார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அதன் சாரம்சம் என்னவென்றால் தான் போன்ற சீனியர் தலைவர் ஒருவரால் ராகுல் காந்தி போன்ற இளம் தலைவரை ஏற்றுக் கொண்டு கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியாது என்பதே. அதுவும் குறிப்பாக 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை ராகுல் காந்தி தலைமையில் சந்திக்கப் போகிறோம் என்று அறிவித்து, "பிரசார கமிட்டி தலைவராக" ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சி நியமித்திருக்கின்ற வேளையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி போன்ற சீனியர் அரசியல்வாதி அவருடன் அமர்ந்து கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமாக இருக்காது என்பதும் அதன் உள்ளர்த்தம். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய ப.சிதம்பரம், "மூப்பனாரை விட செல்லபாண்டியன் 18 வயது மூத்தவர். ஆனாலும் செல்லபாண்டியன் மூப்பனாரை தலைவராக ஏற்றுக் கொண்டார்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கிடையில் நிதியமைச்சர் சிதம்பரம் பற்றி 60இற்கும் மேற்பட்ட வி.ஐ.பி.கள் எழுதிய புத்தகம் ஒன்றை வருகின்ற டிசெம்பர் 29ஆம் திகதி சென்னை காமராஜர் அரங்கத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் சிதம்பரத்தின் பேச்சு, "காங்கிரஸிற்குள் நான் ராகுல் காந்திக்கு போட்டியில்லை என்ற மெஸேஜ் ஒரு புறமும், காங்கிரஸிற்குள் உள்ளவர்களும், கூட்டணிக் கட்சியாக இருப்பவர்களும் ராகுல் காந்தி தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இன்னொரு பக்கமும் "அட்வைஸ்" செய்வது போல் அமைந்திருக்கிறது" என்பதுதான் ஹைலைட்ஸ்!

இந்தப் பேச்சின் பின்னணியில் "ஒற்றுமை இல்லாததால்தான் தமிழகத்தில் 45 வருடங்களாக காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியவில்லை" என்றும் கூறியிருக்கிறார். "எதிரும் புதிருமாக இருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றுவதும்", "காங்கிரஸ் பலமாக இருக்கிறது. ஒற்றுமை இல்லாததால் ஆட்சிக்கு வர முடியவில்லை" என்று பேசுவதும், "காங்கிரஸ் கட்சியை வளர்க்க அனைவரும் பாடுபட வேண்டும்" என்று பேசுவதும் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது என்பதற்கான அங்க அடையாளங்கள். ஏனென்றால் இது போன்ற தேர்தல் காலத்தில்தான் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேருவார்கள், உரக்கப் பேசுவார்கள். தி.மு.க. கூட்டணியில் முதலில் 2004 நாடாளுமன்ற தேர்தலில் 10 எம்.பி. தொகுதிகளையும், 2009 நாடாளுமன்ற தேர்தலில் 16 எம்.பி. தொகுதிகளையும் பெற்றது காங்கிரஸ் கட்சி. அதே போல் அ.தி.மு.க. கூட்டணியில் அதிகபட்சமாக 29 எம்.பி. தொகுதிகளையும் (1996 நாடாளுமன்ற தேர்தல்), குறைந்த பட்சம் 12 எம்.பி. தொகுதிகளையும் (1999 நாடாளுமன்ற தேர்தல்) காங்கிரஸ் கட்சி வாங்கியது. ஆகவே தி.மு.க.வுடன் கூட்டணி என்றால் 16 தொகுதிக்கு குறையக்கூடாது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றால் 12 தொகுதிக்கும் குறையக் கூடாது. இதுதான் காங்கிரஸ் கட்சியின் எதார்த்தமான நிலையாக இருக்க முடியும்.

ஆனால் "ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது" என்பது போல், இந்த "எதார்த்த நிலைமை" இன்றை தமிழக காங்கிரஸுக்கு தர்மசங்கடமாக இருக்கிறது. இலங்கை பிரச்சினை, மாநிலம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு "லாபம்" என்று கிடைப்பதை விட "சுமை" ஏற்பட்டு விடுமோ என்று தமிழகத்தில் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் அ.தி.மு.க, தி.மு.க. போன்ற கட்சிகள் கருதுகின்றன. சென்ற உள்ளாட்சி தேர்தலில் தமிழக காங்கிரஸ் வெறும் 5.75 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றதுதான் அந்த எண்ணவோட்டத்திற்கு காரணம். இப்படியொரு சூழலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே முன்பு காங்கிரஸுக்கு கொடுத்த எம்.பி. தொகுதிகளை வருகின்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் கொடுப்பார்களா என்ற "சிக்கலான" கேள்வி எழுந்துள்ளது. அதனால்தான் "எங்களுக்குள் ஒற்றுமை இல்லையே தவிர, காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் பலவீனப்படவில்லை" என்ற செய்தியை நிதியமைச்சர் சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பரப்புகிறார்கள். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. மத்தியில் இது எதுமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், காங்கிரஸிற்கு என்ன லாபத்தை ஈட்டிக் கொடுக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X