2025 மே 19, திங்கட்கிழமை

இறுதியில் ஆயுத பலமே எதற்கும் தீர்ப்பு வழங்குகிறது

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந் நாட்களில் எவரும் நீதித்துறையையும் நீதிமன்றங்களையும் அவமதிக்கலாம் என்ற நிலை நாட்டில் தற்போது நிலவுகிறது போலும். நாட்டில் பல பகுதிகளில் நீதித்துறையையும் குறிப்பாக பிரதம நீதியரசரையும் அவமதிக்கும் வசனங்களைக் கொண்ட சுவரொட்டிகள் காணப்படுகின்றன. சில பத்திரிகைகளிலும் நீதித்துறைக்கும் சில நீதியரசர்களுக்கும் சவால் விடும் வகையில் செய்திகளும் கட்டுரைகளும் காணப்படுகின்றன.

நீதித்துறைக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் தற்போது உருவாகியுள்ள மோதல் நிலை இல்லாதிருந்து இதுபோன்ற சுவரொட்டிகளோ அல்லது பத்திரிகை செய்திகளோ காணப்பட்டால் நிலைமை என்னவாக இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம். இந்த மோதல் இல்லாதிருந்தால் இந்த சுவரொட்டிகளினாலும் பத்திரிகை செய்திகள் மற்றும் கட்டுரைகளாலும் எத்தனை பேர் நீதிமன்றங்கள் முன் ஆஜராக வேண்டியிருக்கும்? நீதிமன்றங்களை அவமதித்த குற்றத்திற்காக எத்தனை பேர் சிறைக்குச் சென்றிருப்பார்கள்?

ஆனால், இப்போது அதுபோன்ற எந்த அபாயத்தையும் எதிர்நோக்காது நீதிமன்றங்களையும் பிரதம நீதியரசரையும் விமர்சித்து மட்டுமல்லாது அவமதித்தும் கூட கருத்து வெளியிடலாம்போல் தெரிகிறது. பொலிஸார் மட்டுமல்லாது நீதித்துறையாவது அவற்றை கண்டுகொள்வதாக தெரியவில்லை. உண்மையான அதிகாரம் எங்கே இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் சிறந்த உதாரணமாக இந்த நிலைமை அமைந்திருக்கிறது.

மக்களின் இறையாண்மை எங்கே இருக்கிறது? யார் அதனை இயக்குகிறார்கள்? நாட்டின் அதி உயர் நிறுவனம் நாடாளுமன்றமா அல்லது நீதிமன்றமா? போன்ற தத்துவார்த்த ரீதியிலான விடயங்களை இந்நாட்களில் சாதாரண மக்களும் கூட கடைத் தெருக்களிலும் பஸ்களிலும் அலசி ஆராய்கிறார்கள். இது நல்ல விடயமாக இருந்தாலும் மக்கள் நடுநிலையாக அவற்றை ஆராய்வதாக தெரியவில்லை. எல்லோரும் அரசியல் ரீதியாக பிரிந்து தாம் தாம் முன்கூட்டியே எடுத்த முடிவுகளை நியாயப்படுத்தும் வகையில் அதற்கான ஆதாரங்களை தேடும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளனர். இந்த விடயத்தில் மட்டுமல்ல இனப் பிரச்சினை விடயத்திலும் இது தான் நடந்து கொண்டு இருக்கிறது.

நாம் முன்னர் எடுத்துக் கொண்ட சுவரொட்டி விடயம் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையின் இறுதி முடிவையும் கோடிட்டு காட்டுகிறது. நியாயங்கள் எந்தப் பக்கம் இருந்தாலும் நீதி மன்றங்கள் என்ன தீர்ப்பை வழங்கினாலும் நாடாளுமன்ற தெரிவுக் குழுக்கள் என்ன சிபார்சுகளை செய்தாலும் ஆயுத பலம் யாரிடம் இருக்கிறது என்ற விடயம் எவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்பதையும் இன்றைய விவகாரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

மக்களின் இறையாண்மையானது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அவர்களின் பிரதிநிதிகள் அடங்கிய நாடாளுமன்றத்திடமே இருக்கிறது என ஆளும் கட்சித் தரப்பினர் கூறுகின்றனர். அதேவேளை, மக்களின் இறையாண்மை மக்களிடமே இருக்கிறது என்று மற்றொரு சாரார் கூறி வருகின்றனர். அந்த இரண்டும் பழைய, இறையாண்மையானது அரசியல் யாப்பிலேயே இருக்கிறது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் விஜேதாச ராஜபக்ஷ கூறுகிறார்.

தற்கால ஜனநாயக ஆட்சிமுறை வழக்கிற்கு வந்தும் மக்களின் இறையாண்மை பற்றிய எண்ணக்கரு அரசியல் அரங்கிற்கு வந்தும் பல நூறு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இப்போதாவது இந்நாட்டு மக்கள் உண்மையான இறையாண்மை எங்கே இருக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் தான். ஆனால் இலங்கையில் நடைபெறும் விடயங்கள் மூலம் அதைப் பற்றி முடிவு எடுப்பது மிகவும் கடினமாகவே இருக்கும்.

மக்களின் இறையாண்மை மக்களிடமே இருக்கிறது என்று கூறுவது அப்பட்டமான பொய் என்றே கூற வேண்டும். மக்கள் அப்பாவிகள். அரசியல்வாதிகள் - தேர்தல் காலங்களில் பொய்யையும் புரட்டையும் பாவித்து அவர்களை ஏமாற்றி அவர்களையே ஆளும் அதிகாரத்தை பெற்றுக் கொள்கிறார்கள். அதன் பின்னர் அந்த மக்கள் சிலவேளைகளில் மனிதர்களாகவாவது மதிக்கப்படுவதில்லை.
அவர்களை ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொண்டவர்கள் பல வழிகளில் அவர்கள் மீது பொருளாதார பழுவை சுமத்தி கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்னர் பாட்டாளி வர்க்க புரட்சியைப் பற்றி கூச்சலிட்டவர்கள் கோடிக் கணக்கில் செலவழித்து மாட மாளிகைகளை கட்டுகிறார்கள். சிலர் இன விடுதலையைப் பற்றிப் பேசிக் கொண்டு அந்த அரசியலின் உதவியாலேயே நாட்டுக்கு நாடு பறந்து திரிகிறார்கள். சைக்கிளில் அரசியலை ஆரம்பித்தவர்கள் விமானம் வாங்கும் நிலையில் இருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கும் மக்கள் தம்மை ஏமாற்றிவர்களை தெய்வங்களாக மதிக்க முற்பட்டுள்ளார்களேயொழிய தாம் ஏமாற்றப்பட்டோம் என்று கூட உணரவில்லை. உணர்ந்தவர்களாலும் எதுவும் செய்ய முடியாது. சட்டத்தாலும் எதுவும் செய்ய முடியாது, சட்டத்துக்கு புறம்பாகவும் எதுவும் செய்ய முடியாது. சட்டத்தால் எதையும் செய்ய இடமளிக்கப்படவில்லை என்று சட்டத்துக்கு புறம்பாக செயற்பட்டால் இறுதித் தீர்ப்பு ஆயுதத்தால் வழங்கப்படும். இது இலங்கையில் மட்டும் இருக்கும் நிலைமை அல்ல. உலகெங்கும் இது தான் நிலைமை. அவ்வாறிருக்க மக்களின் இறையாண்மையைப் பற்றிப் பேசுவது மற்றொரு ஏமாற்றமே தவிர வேறொன்றுமல்ல.

மக்களின் இறையாண்மை யாப்பில் இருப்பதாக கூறுவதும் அதுபோலவே கேலிக்கூத்தான கருத்தாகும். மக்களை ஏமாற்றி பதவிக்கு வரும் அரசியல்வாதிகள் தமக்கு எதிராக மக்களால் எதனையும் செய்ய முடியாதவாறு அரசியல் யாப்புகளை தயாரித்துக் கொள்கிறார்கள். அந்த யாப்பு ஒரு சர்வாதிகாரத்தை தோற்றுவித்தாலும் மக்களால் எதுவும் செய்ய முடியாது.

1970ஆம் ஆண்டில் மக்களிடம் மூன்றில் இரண்டு நாடாளுமன்ற வாக்கு பலத்தை பெற்று பதவிக்கு வந்த சிறிமா பண்டாரநாயக்க 1972ஆம் ஆண்டு தமது ஆட்சிக் காலத்தை நீடித்துக் கொள்ளும் வகையில் யாப்பொன்றை தயாரித்துக் கொண்டார். மக்களால் எதுவும் செய்ய முடியாது போய்விட்டது. 1977ஆம் ஆண்டு ஆறில் ஐந்து நாடாளுமன்ற வாக்குப் பலத்தோடு பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜயவர்தன 1978ஆம் ஆண்டு ஒருவித சர்வாதிகாரத்தை உருவாக்கும் வகையில் யாப்பை மாற்றினார். அதனை உணர்ந்தவர்களாலும் எதுவும் செய்ய முடியாது போய்விட்டது.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்து 2005ஆம் ஆண்டு பதவிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ, 2010ஆம் ஆண்டு 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் வேண்டுமென்றால் வாழ்நாள் முழுவதும் தாம் நிறைவேற்று ஜனாதிபதியாக இருக்கக்கூடிய வகையில் யாப்பை மாற்றிக் கொண்டார். நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்வதாக கிராமம் வாரியாக வாக்குறுதியளித்து வந்த அவரது கட்சி ஆதரவாளர்களுக்கே ஒன்றும் செய்ய முடியாது போய்விட்டது. அவர்கள் அந்த சட்டத்தை மீறினால் ஆயுதம் பேசும். எனவே யாப்பில் மக்களின் இறையாண்மை இருப்பதாக கூறுவது உண்மையல்ல.

நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்றே கூறப்படுகிறது. மோசடிகள் இல்லாது சுதந்திரமாக தேர்தல்கள் நடந்தால் இது உண்மை தான். அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டாலும் மக்கள் நலனை முன்நிறுத்தியா செயற்படுகிறார்கள் என்பது கேள்விக்குறியே. இதுவும் இலங்கைக்கு மட்டும் பொருத்தமான நிலைமையல்ல. ஒரு நாடாளுமன்றம் மக்களுக்கு எதிராக செயற்பட்டாலும் மக்களால் எதுவும் செய்ய முடியாது. இது தான் இறையாண்மையின் லட்சனம்.

குற்றப் பிரேரணையை அடுத்து நீதிமன்றமா நாடாளுமன்றமா மேல் என்ற விவாதமும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையிலுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்க நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு அதிகாரம் இருக்கிறதா என்று நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நாடாளுமன்ற விவகாரங்களில் தலையிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என நாடாளுமன்றம் கூறுகிறது.

நாடாளுமன்ற விவகாரங்களில் தலையிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை தான். ஆனால் நாடாளுமன்ற விவகாரமாக இருந்தாலும் சட்டத்தை வியாக்கியானம் செய்யும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கே இருக்கிறது. எனவே தான் பல சட்டமூலங்கள் ஜனாதிபதியால் உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி, அவை யாப்பிற்கு முரணானவையா என்று ஆராயப்படுகின்றன. பின்னர் யாப்பின் தீர்ப்புகளை நாடாளுமன்றமும் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் குற்றப் பிரேரணை விடயத்தில் அது முடியாது என்று நாடாளுமன்றம் கூறுகிறது. இரு நிறுவனங்களும் தொடர்ந்தும் கடும்போக்கை கடைப்பிடித்தால் என்ன நடக்கும்?

தெரிவுக்குழுவின் முடிவு சட்டவிரோதமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தால் அந்த தீர்ப்பின் பிரகாரம் பிரதம நீதியரசரை பதவியில் இருந்து நீக்க நாடாளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றவோ அல்லது அதன்படி ஜனாதிபதியால் அவரை பதவி நீக்கம் செய்யவோ முடியாது. ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பை புறக்கணித்து விட்டு நாடாளுமன்றம் குற்றப் பிரேரணையை நிறைவேற்றி ஜனாதிபதி - பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்யும் உத்தரவை பிறப்பித்தால் நிலைமை என்னவாகும்?

அப்போது பிரதம நீதியரசருக்கு தமது கடமைகளை நிறைவேற்ற பாதுகாப்பை வழங்குமாறு நீதிமன்றம் பொலிஸாரை பணிக்கலாம். அவரை நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என ஜனாதிபதி - பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கலாம். பொலிஸார் எந்த முடிவை ஏற்பார்கள்? பொலிஸாரின் அந்த முடிவே பிரச்சினையை தீர்த்து வைக்கும்.

சுருக்கமாக கூறின் இறையாண்மை பிரச்சினையின்போது முன்னர் கூறியது போலவே இந்த விடயத்திலும் ஆயுத பலம் யாரிடம் இருக்கிறது என்பதிலேயே தீர்வு தங்கியிருக்கிறது. துப்பாக்கி முனையிலிருந்தே அதிகாரம் பிறக்கிறது (power emanates from the barrel of a gun) என்று முன்னாள் சீனத் தலைவர் மாஓ சேதுங் கூறியதை இது நினைவூட்டுகிறது.

You May Also Like

  Comments - 0

  • Muzammil Friday, 04 January 2013 08:43 PM

    ஜன நாயகம்...என்னும்.. பிரம்மம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X