2025 மே 19, திங்கட்கிழமை

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் திடீர் பாராட்டு!

A.P.Mathan   / 2013 ஜனவரி 14 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

"கலைஞர் கருணாநிதி சகிப்புத்தன்மை மிக்கவர்" என்று தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் விஜயகாந்த் திடீரென்று "சான்றிதழ்" வழங்கியிருக்கிறார். தமிழகத்தில் மதுரை அருகில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கோயிலுக்கு அதிகாலையில் சென்ற விஜயகாந்த் தரிசனம் முடிந்து வெளியே வந்து நிருபர்களை சந்தித்தார். அப்போது, "தி.மு.க. ஆட்சியிலும் நான் குறைகளை சுட்டிக்காட்டினேன். ஆனால் அவர்கள் என் மீது அவதூறு வழக்கு போடவில்லை. கலைஞர் சகிப்புத்தன்மை கொண்டவர். யார் மீதும் வழக்குப் போட்டு பழி வாங்கமாட்டார்" என்று பரபரப்பாக பேட்டியளித்தார். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து மூன்று தேர்தல்களை சந்தித்த பிறகு இப்போதுதான் தி.மு.க. தலைவர் கருணாநிதியை "சகிப்புத்தன்மை மிக்கவர்" என்று வெளிப்படையாக பாராட்டியிருக்கிறார்.

இந்த "பாராட்டுரை"க்குப் பிறகு தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்பட்ட தஞ்சாவூருக்குப் போனார் விஜயகாந்த். காவிரி டெல்டா பகுதியான இங்குள்ள விவசாய நிலங்கள் கர்நாடக மாநில அரசு தண்ணீர் திறந்து விடாமல் அடம்பிடிப்பதால் வறண்டு கொண்டிருக்கின்றன. நெற்பயிற்கள் தண்ணீர் இன்றி சுருண்டு கிடக்கின்றன. இதுபோன்ற பகுதியை தேர்வு செய்து பொங்கல் பரிசு வழங்கும் விழாவினை நடத்தினார் விஜயகாந்த். அந்த விழாவில் பேசும்போது, "தே.மு.தி.க. தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி வைப்பேன். முன்பு அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தபோது எப்படி உங்களிடம் கேட்டு விட்டு கூட்டணி வைத்தேனோ, அதேபோல்தான் எதிர்காலத்திலும் கூட்டணி வைப்பேன்" என்று அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் முழங்கியிருக்கிறார். ஆண்டாள் கோயில் உள்ள இடத்திலும், தஞ்சை பெரிய கோயில் உள்ள இடத்திலும் விஜயகாந்த் தெரிவித்த இந்த கருத்துக்கள் தமிழக அரசியல் அத்தியாயத்தில் திடீர் திருப்பத்தை உருவாக்கியிருக்கிறது.

"என் தலைமையை ஏற்றுக்கொள்வோருடன் கூட்டணி" என்று இப்படி அறிவிப்பது புதிதல்ல. இது பெரும்பாலும் தமிழகத்தில் அணி அமைக்கும் தகுதி மிக்க அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளுக்கு பொருந்தாது. குறிப்பாக மற்ற கட்சிகளுக்கே இது மாதிரி பேச்சுகள் பொருந்தும் விதத்தில் இருக்கும். ஏனென்றால், "என் தலைமையில் கூட்டணி" என்பதை இதற்கு முன்பு வைகோ, ராமதாஸ் போன்றவர்கள் கூறியிருக்கிறார்கள். அதனால் 1996 சட்டமன்ற தேர்தலில் இருவருமே ஒரே அணியில் நிற்க முடியாமல் போனது. இதே போல் 2006 சட்டமன்ற தேர்தலிலும், 2009 நாடாளுமன்ற தேர்தலிலும் விஜயகாந்த் பேசினார். அப்போது, அவர் அ.தி.மு.க., தி.மு.க. தவிர்த்து மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி காண முடியாமல் போனது. "என் தலைமையை ஏற்றுக் கொண்டால் கூட்டணிக்கு ரெடி" என்று பா.ஜ.க.வினருக்கு நிபந்தனை போட்டார் விஜயகாந்த். ஆனால் பா.ஜ.க. அகில இந்திய தலைமை அதற்கு தயாராக இல்லை. அதனால் விஜயகாந்த் அந்த இரு தேர்தல்களிலுமே தனித்துப் போட்டியிட்டார். இந்த கோணத்தில் பார்க்கும் போது, "என் தலைமையை ஏற்றுக்கொள்ள முன் வந்தால் கூட்டணி" என்று விஜயகாந்த் தி.மு.க.வையோ, அ.தி.மு.க.வையோ பார்த்து சொல்லவில்லை. அவருக்கு "தூண்டில்" போடும் பா.ஜ.க. அல்லது காங்கிரஸ் கட்சியைப் பார்த்துத்தான் சொல்லுகிறார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அடிப்படை காரணங்கள் இல்லாமல் இல்லை!

விஜயகாந்த்தை தங்கள் பக்கமாக இழுத்து அணி அமைக்கப் போகிறது பா.ஜ.க. என்று முன்கூட்டியே பேச்சுக்கள் எழுந்தன. தி.மு.க. பக்கம் போய்விடக்கூடாது என்பதற்காக அப்படியொரு "தூபம்" போடப்பட்டது. ஆனால் அது பலனளிக்கவில்லை. அடுத்த கட்டமாக இந்த முயற்சியை மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொண்டார்கள். அது இன்னமும் கூட தொடருகிறது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சிக்கு சென்ற நாடாளுமன்ற தேர்தலில் 16 எம்.பி. தொகுதிகளைக் கொடுத்தது தி.மு.க. இந்தமுறை அத்தனை தொகுதிகள் கடினம். ஆனால் காங்கிரஸ் கட்சியுடன் முரண்டு பிடிப்பதற்கு முன்பு விஜயகாந்தை தங்கள் பக்கம் சேர்த்து விட வேண்டும் என்ற திரைமறைவுப் பணிகளில் தி.மு.க. ஈடுபட்டிருப்பதாக அதிகார பூர்வமான வட்டாரங்கள் அம்பலப்படுத்துகின்றன. ஏனென்றால் விஜயகாந்த் தி.மு.க. அணிக்கு வர ரெடி என்றால், காங்கிரஸிற்கு கொடுக்க வேண்டிய தொகுதிகளை குறைப்பதும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, மனித நேய மக்கள் கட்சி ஜவஹிருல்லா போன்றோரை தி.மு.க. அணிக்கு கொண்டு வருவதும் சுலபம் என்று தி.மு.க. தலைமை கருதுவதாக தெரிகிறது.

தி.மு.க.விடம் ஏற்படும் "தொகுதி சிக்கலை" சமாளிக்கவே காங்கிரஸ் கட்சி, விஜயகாந்தை முதலில் தங்கள் பக்கம் சேர்த்து விட முனைகிறது. "நீங்களும், நாங்களும் ஓரணியில் இருப்போம். வாருங்கள்" என்று விஜயகாந்திற்கு ஆசை காட்டுகிறார்கள். அதற்காக காங்கிரஸ் தமிழகத்தில் வலுவாக இருப்பதுபோல் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் ஒரு சேர மேடையில் ஏறுகிறார்கள். மத்திய அரசின் சாதனையை விளக்குகிறார்கள். அப்படியொரு கூட்டம் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனிலேயே நடைபெற்றிருக்கிறது.

ஆனால் விஜயகாந்த் இதற்கெல்லாம் சளைத்தவரல்ல. ஏனென்றால் காங்கிரஸின் அழைப்பு "நீங்கள் அவல் கொண்டு வாருங்கள். நான் உமி கொண்டு வருகிறேன்" என்பதை பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறார். அவருக்கு நெருக்கமானவரான பன்ருட்டி ராமச்சந்திரன் போன்றவர்கள், "தி.மு.க.-காங்கிரஸ் அணி மட்டும் அ.தி.மு.க. அணியை வெல்ல போதாது. தி.மு.க. ஒரு வெற்றிக் கூட்டணியை தமிழக வாக்காளர்களுக்கு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காட்ட வேண்டும் என்றால் தே.மு.தி.க.வை சேர்த்து ஆக வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் ஓரணியில் நின்று கொண்டு காங்கிரஸுடன் தொகுதி பேச்சுவார்த்தை நடத்துவதுதான் அக்கட்சியினையும் குறைந்த தொகுதிகள் கொடுத்து தன் கூட்டணியில் வைத்துக்கொள்ள வசதியாக இருக்கும் என்று தி.மு.க. தலைமை நினைக்கும். ஆகவே காங்கிரஸ் "ஆஃபரை" எல்லாம் ஏற்றுக் கொண்டு முதலில் காங்கிரஸுடன் கைகோர்த்து விடாதீர்கள். அது தி.மு.க.விடம் நமக்குக் கிடைக்கும் தொகுதிகளை குறைத்து விடும்" என்றே ஆலோசனை வழங்கியிருக்கிறாராம். அதனால்தான் "என் தலைமையை ஏற்றால் கூட்டணி" என்று காங்கிரஸுக்கு ஒரு செக் வைக்கும் விதத்தில் விஜயகாந்த் பேசியிருக்கிறார். இதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமை மட்டுமின்றி, தமிழக காங்கிரஸ் தலைவர்களும் சம்மதிக்க மாட்டார்கள் என்பது சந்தேகமில்லாமல் விஜயகாந்திற்கு தெரியும். பிறகே, தி.மு.க.வுடனான கூட்டணி பற்றி ஓர் உறுதியான முடிவு எடுக்க வேண்டும் என்று எண்ணுகிறார். இந்த "சுற்றுப்புற சூழ்நிலைகளை" மனதில் கொண்டே, ஒரு புறம், "என் தலைமையை ஏற்போருடன் கூட்டணிக்குத் தயார்" என்று கூறி காங்கிரஸுக்கு "செக்" வைத்து விட்டு, இன்னொரு நிகழ்ச்சியில், "கலைஞர் சகிப்புத்தன்மைமிக்கவர். என் மீது அவர் அவதூறு வழக்குப் போட்டதில்லை" என்று பாராட்டிப் பேசி, தி.மு.க.விற்கான கூட்டணிக் கதவுகளை திறந்து விட்டுள்ளார்.

விஜயகாந்தின் இந்த "சூட்சும" அறிவிப்பை தி.மு.க. தலைவர் கருணாநிதியும் உணர்ந்திருக்கிறார். ஏனென்றால் விஜயகாந்த் பேச்சு வெளிவந்த அதே தினத்தில் "திராவிடம் எங்கேயிருக்கிறது" "தி.மு.க. மக்களை இலவசம் கொடுத்து ஏமாற்றி விட்டது" "காதல் திருமண விவகாரத்தில் ஜாதியை தூண்டி விடுகிறது தி.மு.க." என்றெல்லாம் சகட்டுமேனிக்கு தி.மு.க.வை விமர்சித்துக் கொண்டிருந்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் திடீரென்று கருணாநிதியை பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. கலைஞர் முதலமைச்சராக அதை நல்ல முறையில் செய்தார்" என்று கூறியிருந்தார். ஆனால் அந்த அறிக்கையின் சாரம்சத்தை அப்படியே தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் எடுத்துப் போட்டு தி.மு.க. தலைவர் அடிக்கடி எழுதும், "கேள்வி-பதில்" பக்கத்தில், டாக்டர் ராமதாஸின் கருத்துப் பற்றி "நோ கமெண்ட்ஸ்" என்று பதில் சொல்லியுள்ளார் கருணாநிதி. டாக்டர் ராமதாஸின் பாராட்டுரைக்கு "நோ கமெண்ட்ஸ்" என்று கூறினாலும், அதே தினத்தில் விஜயகாந்த் சுட்டிக்காட்டிய அவதூறு வழக்குகள்  விஷயத்தையே குறிப்பிட்டு, "அதிகமாக அவதூறு வழக்குகளைத் தொடுப்பதின் மூலமாகப் பத்திரிக்கைகளையும், எதிர்கட்சித் தலைவர்களையும் அச்சுறுத்த ஆட்சியினர் முயலுகிறார்கள். இதற்காக இந்த ஆட்சியை (அ.தி.மு.க.) வை எதிர்த்து போராட்டம் நடத்துவதா அல்லது நீதிமன்றத்தின் மூலமாக பரிகாரம் தேடுவதா என்று யோசித்து முடிவு எடுக்கப்படும்" என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறார். இது விஜயகாந்திற்கு தெம்பூட்டும் விஷயம். ஏனென்றால் இப்போது, தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை விட எதிர்கட்சித் தலைவராக இருக்கும் விஜயகாந்த் மீது போடப்பட்டுள்ள வழக்குகளே அதிக எண்ணிக்கையில் உள்ளன.

தமிழக அரசியலில் விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் எல்லாம் தி.மு.க. தலைவர் கருணாநிதியை திடீரென்று பாராட்டியது அரசியல் வானில் புதிய கூட்டணி உதயத்திற்கான மின்னல்கள் போல் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் விஜயகாந்தின் பாராட்டை உள்வாங்கிக் கொண்ட கருணாநிதி, டாக்டர் ராமதாஸின் பாராட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. அது மட்டுமின்றி, ராமதாஸுக்கு நேர் எதிராக நின்று "காதல் திருமண" விவகாரத்தில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனை அதே தினத்தில் சந்தித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி, விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் போன்ற மூன்று பேரின் "பேட்டிகள், அறிக்கைகள்" எல்லாம் "அரசியல் கூட்டணி"யில் உருவாகும் "திரைமறைவுக் காட்சிகளை" அடையாளம் காட்டுகின்றன. இதை உன்னிப்பாக கவனித்து வரும் அ.தி.மு.க. தலைமை, என்ன அதிரடி திட்டங்களை கையில் வைத்திருக்கிறது என்பதுதான் தமிழக அரசியலின் அடுத்தகட்ட பரபரப்புகளாக இருக்கும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X