2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்த தி.மு.க. முதல் எதிரி: வைகோ

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 04 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (ம.தி.மு.க.) தமிழக அரசியலில் இக்கட்டான காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. அதன் பொதுச் செயலாளர் வைகோ அடுத்து கட்சியை கூட்டணிக்கும், தனித்தும் போட்டியிடுவதற்கு தகுதியான கட்சியாக ம.தி.மு.க.வின் அந்தஸ்தை உயர்த்துவதற்கு "சிங்கிள் மேன் ஆர்மி" போல் போராடிக் கொண்டிருக்கிறார். திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மாற்றாக 1993இல் உருவான ம.தி.மு.க.விற்கு இப்போது வயது 20 வயது.

கட்சி தொடங்கிய பிறகு பெருமளவில் பாதயாத்திரைகள் நடத்திய தமிழக அரசியல் தலைவர்களில் வைகோ முதன்மையானவர் என்று எடுத்துக் கொண்டால், அவரது ஆரம்பம் முதலே இலங்கை தமிழர்களின் நலனை மையப்படுத்தியே அவரது கூட்டணிகளும், தேர்தல் யுக்திகளும் கையாளப்பட்டு வந்தன. ஆனாலும் அவரை நம்பி வந்த தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்களான மதுராந்தகம் ஆறுமுகம், செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன், கோவை மு.கண்ணப்பன், பொன்.முத்துராமலிங்கம் போன்றோர் தமிழகத்தின் வடக்கு, மத்தி, தெற்கு, மேற்கு மண்டலங்களின் முன்னணித் தலைவர்களாக இருந்தார்கள். இவர்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் ஒவ்வொருவராக விலகிச் சென்றார்கள். தாய் கட்சியான தி.மு.க.விற்கே போய்விட்டார்கள். கடைசியாக இவருடன் இருந்த "நட்சத்திர பேச்சாளர்களில்" ஒருவரான நாஞ்சில் சம்பத்தும் ம.தி.மு.க.வை விட்டு சமீபத்தில் விலகிச் சென்றார். ஆனால் இவர் மட்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். அங்கு சென்றவர் இதுவரை வைகோவை ஓப்பனாக எந்த கூட்டத்திலும் விமர்சிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அ.தி.மு.க.வில் சேர்ந்தவுடன் கடந்த 12.12.2012 அன்று அவர் பேசிய முதல் பொதுக்கூட்டத்தில், "கடந்த காலங்கள் அனைத்தையும் கசக்கி தூர எறிந்து விட்டேன். இருந்த இயக்கத்தை (ம.தி.மு.க.) பற்றியோ, ஏற்றுக் கொண்ட தலைமை (வைகோ) குறித்தோ எந்த விமர்சனமும் வைக்க நான் விரும்பவில்லை" என்றே "டிக்ளேர்" பண்ணினார். இன்றளவும் அதையே அ.தி.மு.க.வின் பொதுக்கூட்டங்களில் கடைப்பிடித்து வருகிறார். அது அவரே எடுத்த முடிவா அல்லது எதிர்கால கூட்டணிக்கு வைகோ தேவைப்படுவார் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நினைத்து, அந்த அடிப்படையில் நாஞ்சில் சம்பத்திற்கு "வைகோவை விமர்சிக்காதீர்கள்" என்று போடப்பட்ட "144" தடையுத்தரவா? என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.

ஆனால் வைகோ அப்படிப்பட்டவரல்ல. தமிழக அரசியலின் "நீள அகலத்தை" நன்கு புரிந்தவர். மூன்று முறை (18 வருடம்) ராஜ்ய சபை உறுப்பினராக இருந்தவர். இருமுறை லோக்சபா உறுப்பினராக இருந்தவர். அதாவது பத்து வருடம் என்றாலும், வாஜ்பாய் அரசு பாதியில் கவிழ்க்கப்பட்டதால், ஆறு வருடங்கள் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். தி.மு.க.என்ற அரசியல் கட்சியுடன் மாணவர் காலத்திலிருந்தே இருந்தவர். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றவர். அதன் பிறகு தனியாக ஒரு கட்சியை இருபது வருடங்களாக நடத்தி வரும் வைகோ, அகில இந்திய அரசியல் தலைவர்களான வாஜ்பாய், பரூக் அப்துல்லா, பிரகாஷ் சிங் பாதல், அத்வானி உள்ளிட்ட பல தலைவர்களுக்கு பரீட்சையமானவர். அவருக்கு "நாஞ்சில் சம்பத் பொதுக்கூட்ட மேடைகளில் தன்னை விமர்சிக்காததின் பின்னணி என்ன?" என்பது புரியாமல் இல்லை. இந்த "சுற்றுப்புற சூழ்நிலைகளில்தான்" ம.தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையும், பொதுக்குழு கூட்டத்தையும் நடத்தியிருக்கிறார்.

இதில் அரசியல் வட்டாரத்தில் ஏன் ம.தி.மு.க. வட்டாரத்தில் "வைகோவின் பாணி" என்று ஒரு விடயம் இருக்கிறது. அதாவது ஏறக்குறைய அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்குமே அந்த "பாணி அரசியல்" பொதுவானதுதான். கட்சி தலைவராக இருப்பவர் விரும்பும் கருத்தை தனக்கு நம்பிக்கையாக உள்ள மாவட்ட செயலாளரை விட்டு கூட்டத்தில் பேச வைப்பார்கள். மாவட்ட செயலாளர் கூட்டம் என்பது நான்கு சுவருக்குள் நடக்கும் கட்சி நிர்வாகிகள் மட்டும் கலந்து கொள்ளும் கூட்டம். வெளியாட்கள் உள்ளே போக முடியாது. அப்படியொரு கூட்டத்தில் பெப்ரவரி மூன்றாம் திகதி பேசிய கோவை ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மோகன்குமார் வைகோவின் எண்ணத்தை பிரதிபலித்துள்ளார். அன்றைய தினம் முதலில் பேசிய மாவட்டச் செயலாளர் அவர்தான். மோகன்குமார் பேசும்போது, "காங்கிரஸும், தி.மு.க.வும் இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்திருக்கிறது என்றால் நாமும் ஒருவகையில் இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்திருக்கிறோம்" என்று தொடங்கியவுடன் அனைத்து மாவட்ட செயலாளர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். ஏன் வைகோவே கொஞ்சம் மிரண்டுதான் போனார். உடனே "ம.தி.மு.க. செய்த துரோகம் என்ன?" என்ற விளக்கிய மோகன்குமார், "வைகோ அவர்கள் 2004 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாததுதான் ம.தி.மு.க.வின் துரோகம். வைகோ மட்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தால், நாடாளுமன்றத்தில் இருந்திருப்பார். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்திருக்க மாட்டார். டெல்லியில் உள்ள தலைவர்களை சந்தித்து இந்திய அரசுக்கு போரை நிறுத்தி இலங்கை தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தைக் கொடுத்து இருப்பார். ஆகவே இனி தலைவர் அவர்களே, நாம் தனியாக நிற்கக்கூடாது. ஏதாவது ஒரு கூட்டணியில் நின்று வெற்றி பெற்று முதலில் நீங்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய வேண்டும். 2016 சட்டமன்ற தேர்தலில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். இந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வேண்டும்" என்று பரபரப்புடன் பேசி முடித்தார்.

இவரைத் தொடர்ந்து பேசிய மற்ற மாவட்ட செயலாளர்களும் மோகன்குமாரின் கருத்தை வலியுறுத்தியே பேசினார்கள். ஏறக்குறைய கூட்டணி வேண்டும் என்பது ம.தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவாகி விட்டது. அப்படியென்றால் யாருடன் கூட்டணி? இது அடுத்த கேள்வி. இதற்கு இறுதியில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய வைகோவே பதில் சொல்லிவிட்டார். வைகோ பேசும் போது, "தி.மு.க.வும், காங்கிரஸும் சேர்ந்து இருக்கிறது. இலங்கை தமிழர்களின் இன்றைய நிலைக்கு அந்த கட்சிகள்தான் காரணம். ஆனால் அ.தி.மு.க. மீதும் மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதனால் இப்போது தேர்தல் கூட்டணியைப் பற்றி நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்கள் இருக்கின்றன. அந்த நேரத்தில் தேர்தல் கூட்டணி பற்றி பார்த்துக் கொள்ளலாம். ஆனால் நம்மைப் பொறுத்தமட்டில் தி.மு.க.தான் நம் முதல் எதிரி" என்று முத்தாய்ப்பாக பேசினார்.
அத்துடன் நிற்கவில்லை வைகோ. மேலும் பேசிய அவர், "தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மீதும் மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அடிமட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை ஊழல் என்று இளைஞர்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். மக்களின் அன்றாட தேவைகளான மின்சாரம் போன்றவை கூட அவர்களுக்கு கொடுக்க முடியாத நிலையில் அரசாங்கம் இருக்கிறது. ஆகவே இது நமக்கு நல்லதொரு சூழ்நிலை. கட்சியின் வாக்கு வங்கியை இன்னும் உயர்த்த இது ஒரு நல்ல சந்தர்ப்பம். ஆகவே அந்த இளைஞர்களை, அரசின் மீது அதிருப்தியில் உள்ள மக்களை நம் பக்கம் திரட்டுங்கள். கட்சியில் சேருங்கள். நான் விரைவில் அனைத்து ஊராட்சிகளுக்கும், ஒன்றியங்களுக்கும் சுற்றுப்பயணம் வருவேன். நாடாளுமன்ற தேர்தல் வருவதற்குள் நம் கட்சியை முதலில் பலப்படுத்துவோம். அதற்கான நடவடிக்கைகளில் நீங்கள் மும்முரமாக ஈடுபட வேண்டும். பிறகு தேர்தல் கூட்டணி பற்றிய பிரச்சினையை என்னிடம் விட்டு விடுங்கள்" என்று உணர்ச்சிகரமான உரை நிகழ்த்தினாராம்.

வைகோவின் இந்த பேச்சில் "நமக்கு தி.மு.க. முதல் எதிரி" என்று "டிக்ளேர்" பண்ணி விட்டார். ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன்தான் தி.மு.க. இருக்கப் போகிறது என்றால் இலங்கை தமிழர் பிரச்சினையை மையமாக வைத்து காங்கிரஸை விமர்சித்து வந்த வைகோவிற்கு அங்கே சேருவது முடியாத காரியம். அதேபோல் தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க. என்று மூன்று கட்சிகளும் ஒரே அணியில் இருந்தாலும், அந்த அணியில் வைகோ பங்கேற்க முடியாது. ஆனால் வைகோவை சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் அ.தி.மு.க.விற்கு ஏற்படும். ஏனென்றால் இன்றைக்கும் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு அடுத்தபடியாக மாநிலம் முழுவதும் கிளைகள், அமைப்புகள் உள்ள ஒரே கட்சி வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான். பலமான தி.மு.க. அணியை சந்திக்க வைகோ போன்றவர்கள் அ.தி.மு.க.விற்கு நிச்சயம் தேவைப்படுவார்கள் என்பதே இன்றைய அரசியல் சூழ்நிலை.

அதற்கு தடையாக இருப்பது ம.தி.மு.க.விலிருந்து பிரிந்து சமீபத்தில் அ.தி.மு.க.வில் சேர்ந்து மாநில கொள்கை பரப்பு துணை செயலாளராகியிருக்கும் நாஞ்சில் சம்பத் என்று மற்றவர்கள் நினைக்கலாம். ஆனால் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைப் பொறுத்தமட்டில் ம.தி.மு.க.வின் முக்கிய தலைவர் ஒருவர் நம் கட்சியில் சேர்ந்திருக்கிறார் என்பதால் ம.தி.மு.க.வை கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்று கருதுபவர் அல்ல. இதற்கு உதாரணங்கள் இருக்கின்றன. 2000ஆம் வருடம் வாக்கில் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகினார் தலித் எழில்மலை. இவர் அக்கட்சியின் சார்பில் இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர். அவருக்கும் டாக்டர் ராமதாஸுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் பா.ம.க.விலிருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்தார். அதன் பிறகுதான் பா.ம.க.வுடன் கூட்டணி வைத்தார் ஜெயலலிதா. அது மட்டுமின்றி அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணியின் வேட்பாளராகவே தலித் எழில்மலை திருச்சி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் (ரங்கராஜன் குமாரமங்கலம் மறைவையொட்டி ஏற்பட்ட தேர்தல்) போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தனைக்கும் பொதுத் தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் தலைவரை நிறுத்தி வெற்றி பெற வைத்தார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது. அந்த உதாரணம் ம.தி.மு.க.விற்கும் பொருந்தும் என்பது வைகோவிற்கு புரியாமல் இருக்காது. அதனால்தான் இப்போது முதலில் "தி.மு.க. நமக்கு முதல் எதிரி" என்பதை பிரகடனப்படுத்தியிருக்கிறார் வைகோ.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X