2025 மே 19, திங்கட்கிழமை

ஜெனீவாவில் இந்தியா என்ன செய்யும்?

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 04 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வருகிறது மீண்டும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஜெனீவா மாநாடு. இலங்கை அரசாங்கம் தொடர்பாக அமெரிக்கா இந்த முறையும் மனித உரிமை பேரவையில் விசேட பிரேரணையொன்றை முன்வைக்கவிருக்கிறது.

அன்மையில் இலங்கைக்கு அமெரிக்காவின் மூன்று மூத்த அதிகாரிகள் விஜயம் செய்தனர். அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர்களான ஜேம்ஸ் முவர், விக்ரம் சிங் மற்றும் ஜேன் சிமர்மன் ஆகியோரே அவர்களாவர். அவர்கள்; கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே ஜேம்ஸ் முவர், தமது நாடு இலங்கை விடயத்தில் கடந்த வருடம் போலவே பிரேரணையொன்றை இம்முறையும் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப் போவதாக கூறினார்.

அமெரிக்க அரசாங்கத்தில் உள்ளவர்களைத் தவிர வேறொருவருக்கும் பிரேரணையில் என்ன வரப் போகிறது என்று இன்னமும்; தெரியாது. ஆனால் இப்போதே பலர் அதனை ஆதரிக்கவும் பலர் அதனை எதிர்க்கவும் தயாராகிவிட்டார்கள். கடந்த முறையும் இதுதான் நடைபெற்றது. எடுத்த எடுப்பிலேயே எல்லோரும் தாம் விரும்பியவாறு பிரேரணையை ஆதரிக்கவும் எதிர்க்கவும் முனைந்தனர்.

பிரேரணையில் உள்ளவை எவை என்று தெரியாவிட்டாலும் அது மனித உரிமை மற்றும் நல்லாட்சி போன்ற விடயங்களில் அரசாங்கத்தை கண்டிக்கும் அல்லது விமர்சிக்கும் அல்லது குறைந்தபட்சம் சில விடயங்களை வற்புறுத்தும் என்றே ஊகிக்க முடிகிறது. எனவே அந்த அடிப்படையில் தான் பலர் பிரேரணையை ஆதரிக்கவும் எதிர்க்கவும் முற்பட்டுள்ளனர்.

பிரேரணையை ஆதரிப்பதாக பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது. கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த தெற்காசியாவுக்கான பிரிட்டனின் பொதுநலவாய அலுவலகத்தைச் சேர்ந்த அமைச்சர் அலிஸ்டெயார் பேர்ட் இதனை இலங்கையில் வைத்தே கூறியிருந்தார். ஆனால் பிரிட்டனையும் உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியம் இன்னமும் இது தொடர்பாக முடிவு எடுக்கவில்லை.இலங்கைக்கான ஐரேப்பிய ஒன்றியத்தின் தூதுவர் பேர்னார்ட் சவேஜ் இதனை ஆங்கில பத்திரிகையொன்றுக்கு கூறியிருந்தார்.

இந்தியா இந்த பிரேரணை விடயத்தில் என்ன முடிவு எடுக்கும் என்பது பலரது கேள்வியாகவிருக்கிறது. இந்தியா இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு என்பதாலும் இந்தப் பிரேரணை இலங்கையின் இனப் பிரச்சினையோடு நெருங்கிய தொடர்புடையதாக கருதப்படுவதாலும் இந்தியாவும் அந்த இனப்பிரச்சினை விடயத்தில் அக்கறை கொண்டுள்ளதாக கருதப்படுவதாலுமே இந்திய நிலைப்பாட்டை பலர் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.

கடந்த முறை இந்தியா நினைத்திருந்தால் அமெரிக்க கொண்டு வந்த பிரேரணை தோல்வியடைந்திருக்கும். ஆனால் கடைசி நேரத்தில் இந்தியா அமெரிக்க பிரேரணையை ஆதரிக்க முடிவு செய்தது. ஆதனால் பிரேரணையை எதிர்த்து வாக்களிக்கவிருந்த சில நாடுகளும் வாக்களிப்பில் இருந்து ஒதுங்கிக் கொண்டதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறியிருந்தார்.

தமிழ்நாட்டின் நெருக்குதலே இதற்கு காரணம் என்று கூறிய போதிலும் வேறு பல விடயங்களும் இந்திய முடிவை மாற்றிதாக பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தம்முடன் கூறியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா ஊடகவியலாளர்களுடன் கூறிவிட்டு நாடு திரும்பியவுடன் தாம் அவ்வாறு கூறவில்லை என்று ஜனாதிபதி கூறியமை இந்தியாவின் மனதை நோகவிட்டதாகவும் அதுவும் இந்தியா அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க காரணமாகியதாகவும் கூறப்பட்டது. சீனாவுடனான இலங்கையின் நெருங்கிய உறவும் சிலவேளை காரணமாகியிருக்கலாம்.

உண்மையிலேயே அமைரிக்கா கடந்த முறை பிரேரணையை கொண்டு வந்த போது ஆரம்பத்தில் இந்தியா அதனை ஆதரிக்க விரும்பவில்லை. ஏனெனில் மனித உரிமை என்று வரும் போது காஷ்மீரில்; மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்திய அரசாங்கமும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

எனவே தான் தனியொரு நாட்டை குறிவைத்து ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படும் பிரேரணைகளை தாம் ஆதரிக்கப் போவதில்லை என இந்திய அரசாங்கம் ஆரம்பத்தில் கூறியது. ஆனால் தமிழ்நாட்டின் நெருக்குவாரம் அதிகரிக்கவே அமைச்சர் ப.சிதம்பரம் முன்வந்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் மனதை மாற்றிவிட்டார்.

ஆனால் உண்மையில் கடந்த வருடம் கொண்டு வரப்பட்ட பிரேரணை இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு வகையில் சாதகமாகவே அமைந்திருந்தது. இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றே அந்தப் பிரேரணை கொண்டு வரப்படு முன் சர்வதேச சமூகமும் இலங்கை மற்றும் இந்தியாவிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகளும் கோரி வந்தன.

கடந்த வருட அமெரிக்க பிரேரணையின் பிரகாரம் இலங்கையின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளின் படி இந்த குற்றச்சாட்டுக்களைப் பற்றி உள்நாட்டு விசாரணையே நடத்தப்பட வேண்டும். இது இலங்கைக்கு சாதகமான விடயமாகும். ஆனால் இலங்கை அரசாங்கம் ஏனோ இந்த பிரேரணையை தோற்கடிக்க முயற்சி செய்தது. சிலவேளை இது போன்ற பிரேரணைகளால் நாட்டில் மனித உரிமை மீறப்படுகிறது என்ற கருத்து உலக மக்கள் மனதில் பதிந்து விடுகிறது என்று அரசாங்கம் நினைத்திருக்கலாம்.

கடந்த முறை பிரேணையின் போது இந்தியா ஆற்றிய பங்கு பற்றியும் இலங்கையில் பலர் விசனத்தை தெரிவித்தாலும் இந்தியா அமெரிக்க பிரேரணையின் காரத்தை மேலும் குறைத்தது என்பது தான் உண்மை. ஆமெரிக்க பிரேரணையின் பிரகாரம் இலங்கை அரசாங்கம் நல்லிக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை அமுலாக்க தேவையான நுட்ப உதவிகளை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு வழங்க வேண்டும்.

இதனை இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை. கடைசி நேரத்தில் இந்திய அரசாங்கம் தலையிட்டு இந்த வாசகத்தை மாற்றியமைத்தது. ஆதன் படி இலங்கை அரசாங்கம் விரும்பினால் மட்டுமே ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு நுட்ப உதவிகளை வழங்க முடியும்.

ஆனால் பலர் இந்த விடயங்களை கவணிக்கவில்லை. அவர்கள் வெற்றி தோல்வி என்ற கண்ணோட்டத்திலேயே பிரச்சினையை அணுகினர். இலங்கை அரசாங்கம் எதிர்ப்பதால் நாம் அதனை ஆதரிக்க வேண்டும் என சிலர் நினைக்க இலங்கை அரசாங்கம் அதனை எதிர்ப்பதால் நாமும் அதனை எதிர்க்க வேண்டும் என்று வேறு சிலர் நினைத்தனர்.

இந்த முறையும் இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் நெருக்குதல் இல்லாமல் இல்லை. வைகோ, நெடுமாறன், கருணாநிதி ஆகியோர் ஏற்கனவே நெருக்குவாரத்தை ஆரம்பித்து விட்டனர். அதேவேளை இம்முறை பிரேரணை புதியதொன்றுமல்ல.

அது கடந்த வருடம் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் தொடர்ச்சி என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் வேறு காரணங்களுக்காக ஒதுங்கியிருக்க தேவை இருந்தாலும் இந்தியாவுக்கு இம்முறையும் பிரேரணையை ஆதரிக்காமல் இருப்பது கடினமானதாகவே இருக்கும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X