2025 மே 19, திங்கட்கிழமை

இந்த நேரத்தில் ஏன் இந்தியப் பயணம்?

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 07 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}



-கே.சஞ்சயன்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய இந்தியப் பயணத்தை நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப் போகிறார். அவரது இந்தப் பயணத்தின் நோக்கம், புத்தகாயாவுக்கும், திருப்பதிக்கும் புனித யாத்திரை செல்வது தான் என்று கூறுகிறது அரசாங்க அறிக்கை.

பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகாயாவில் 1500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பௌத்த விகாரை உள்ளது. இங்கு தான் புத்தருக்கு ஞானம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள மகாபோதி விகாரையில் இருந்த வெள்ளரச மரக் கிளையில் ஒன்றைத் தான், அசோக மன்னனின் மகளான சங்கமித்தை, இலங்கைக்கு கொண்டு வந்து அநுராதபுரத்தில் நாட்டியதாகவும் வரலாறு கூறுகிறது.

பௌத்தர்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக கருதப்படும், புத்தகயாவுக்கும் இலங்கைக்கும் நெருக்கமான உறவுகள் உள்ளன. இலங்கையில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமான பௌத்தர்கள் புத்தகாயாவுக்கு யாத்திரை செல்கின்றனர்.

இதற்கு வசதியாக, மிஹின் லங்கா விமானம் புத்த கயா சர்வதேச விமான நிலையத்துக்கு நேரடி விமான சேவைகளை நடத்தி வருகிறது. இதன்மூலம் அண்மைக்காலத்தில் புத்தகாயாவுக்கான இலங்கை பௌத்தர்களின் யாத்திரைப் பயணங்கள் அதிகரித்துள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மிஹின் லங்கா சிறப்பு விமானத்தில் வரும் வெள்ளிக்கிழமை, புறப்படும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புத்தகாயாவில் வழிபாடுகளை நடத்தப் போகிறார். அதன் பின்னர், பீகார் மாநில முதல்வர் நித்தீஸ்குமாருடனும் அவர் பேச்சு நடத்துவார்  என்று புதுடில்லிக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவாசம் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து, ஆந்திர மாநிலத்தில் உள்ள ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு தனி விமானத்தில் செல்லும் அவர் அங்கிருந்து கார் மூலம் திருப்பதிக்குச் செல்கிறார். அங்கும் சிறப்பு வழிபாடுகளை முடித்துக் கொண்டு மீண்டும் ரேனிகுண்டா விமான நிலையத்தில் இருந்து கொழும்பு திரும்பப் போகிறார்.

இது ஒரு அரசுமுறைப் பயணம் அல்ல என்றும் புனித தலங்களுக்கான யாத்திரையே என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இதற்குள்ளேயும் ஒரு அரசியல் நோக்கம் இருக்காமல் இல்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா வரப்போகிறார் என்ற செய்தி கடந்தவாரம் வெளியானதுமே, அதற்கு எதிரான போராட்டங்களை நடத்தும் முயற்சிகளும் ஆரம்பமாகி விட்டன.

இப்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டங்கள் இந்தியாவில் மூன்று இடங்களை மையப்படுத்தி நடக்கப் போகின்றன. முதலாவது சென்னையில், இரண்டாவது திருப்பதியில், மூன்றாவது புதுடில்லியில்.

கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா சென்றிருந்தார். அதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிடையே கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கறுப்புக்கொடி காண்பித்துப் போராட்டம் நடத்தவதற்கென, வைகோ தலைமையிலான ம.தி.மு.க.வினர் சாஞ்சிக்கு பஸ்களில் புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்களை மத்தியப் பிரதேச எல்லையில் வைத்தே அந்த மாநில அரசு தடுத்து வைத்தது.

எனினும், எதிர்ப்புப் போராட்ட பயத்தினால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிட்டத்தட்ட ஒரு அதிகாரபூர்வமற்ற ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்தி, கடுமையான பாதுகாப்புக் கொடுக்கப்பட்டது. சாஞ்சிக்கு செல்லும் வீதிகள் அடைக்கப்பட்டு, குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்காக சேவைகள் நிறுத்தப்பட்டு, கிராமங்களில் உள்ள மக்கள் வீதிகளுக்கே வரமுடியாமல் தடுக்கப்பட்டு, பாதுகாப்புக் கொடுக்க பெரும் சிரமப்பட்டது மத்திய பிரதேச மாநில அரசு.

அதேநிலை இப்போது மீண்டும் வந்துள்ளது.  ஆனால், பீகார் மாநில அரசுக்கு இப்போது அவ்வளவு சிரமம் ஏற்பட வாய்ப்பில்லை. ஏனென்றால், எந்தவொரு தமிழ் அமைப்புமே புத்தகயாவில் எதிர்ப்பைத் தெரிவிக்கப் போவதாக, இன்னமும் அறிவிக்கவில்லை. ஆனால், சத்தமில்லாமல் சென்று யாரேனும் எதிர்ப்புக்காட்ட முனையலாம் என்பதால், பீகார் அரசினாலும், நிம்மதியாக இருந்து விடமுடியாது.

கடந்த ஆண்டு சாஞ்சியில் காண்பிக்கப்பட்ட அதே பாதுகாப்பு இறுக்கத்தை புத்தகயாவிலும் எதிர்பார்க்கலாம். அடுத்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செல்லப் போகும் இடம் திருப்பதி. அது உண்மையிலேயே சவால் நிறைந்த இடம்தான். ரேனிகுண்டா விமான நிலையத்தில் இருந்து  சுமார் 38 கி.மீ தொலைவில் தான், திருப்பதி திருமலை தேவஸ்தானம் உள்ளது. அதுவும் தரைவழியாக காரில் தான் அங்கு செல்ல வேண்டும்.

ஏற்கனவே, திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு விட்டன. ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளும், இந்திய பாதுகாப்பு அதிகாரிகளும், இணைந்து தேவஸ்தான நிர்வாகத்துடன் பேசி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனாலும் எப்போதும் பக்தர்களால் நிரம்பியிருக்கும், திருப்பதி ஏழுமலையான் கோவிலில், இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி எவராவது எதிர்ப்புத் தெரிவித்து விடுவார்களோ என்ற அச்சம் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உள்ளது.

அதைவிட, ரேணிகுண்டாவுக்கும், தேவஸ்தானத்துக்கும் இடைப்பட்ட 38 கி.மீ வீதியில் எங்காவது எதிர்ப்புத் தெரிவிக்கப்படலாம் என்ற  எதிர்பார்ப்பும் உள்ளதால், இந்தியக் காவல்துறையும், மத்திய புலனாய்வுப் பிரிவுகளும் உசார்படுத்தப்பட்டுள்ளன.

திருப்பதியில் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகளே போராட்டத்தை அறிவித்துள்ளது. இவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் என்பதால், தமிழக எல்லையில் வைத்தே இவர்களை தடுக்கும் முயற்சிகளில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பயணத்தினால், புதுடில்லியிலும் சென்னையிலும் இரு வேறு போராட்டங்கள் நடக்கவுள்ளன. அவற்றினால், நேரடி அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும், இந்தப் பயணத்துக்கு உள்ள எதிர்ப்பை வெளிப்படுத்தும். புதுடில்லில் நடக்கப் போவது பிரதமர் மன்மோகன் சிங் வீட்டை முற்றுகையிடும் போராட்டம்.

அதை நடத்தப் போவது வைகோ தலைமையிலான மதிமுகவினர். இதற்கென அவர்களில் ஒருபகுதியினர் ஏற்கனவே சென்னையில் இருந்து ரயிலில் புறப்பட்டுவிட்டனர். ஏற்கனவே கடந்த செப்ரெம்பரில் சாஞ்சிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்த போது மத்தியப் பிரதேசம் வரை சென்று எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் இவர்கள்.

இன்னொருமுறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா வந்தால்,  பிரதமர் மன்மோகன்சிங் வீட்டையே முற்றுகையிடுவோம் என்று அப்போது வைகோ எச்சரித்திருந்தார். அதன்படியே இப்போதைய போராட்டம் நடக்கப் போகிறது.

புதுடெல்லிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செல்லும் திட்டத்தை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும், பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்தை முற்றுகையிடுவதன் மூலம், இந்தப் போராட்டத்துக்கு பெரியளவிலான பிரசாரம் கிடைக்கும். அதேவேளை, சென்னையில் திமுகவின் தலைமையிலான டெசோ அமைப்பு கறுப்புச்சட்டையில் எதிர்ப்புப் போராட்டம் நடத்தவுள்ளது.

தி.மு.க பங்கேற்பதால், இதில் பெருந்திரளானோர் பங்கேற்க வாய்ப்புள்ளது என்ற போதிலும், இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்தியப் பயணத்தில், பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்திய அரசாங்கம் வரவேற்கிறதோ இல்லையோ, புனித தலங்களுக்கு வரும் அவரை தடுக்கக் கூடாது என்று கூறியுள்ள ஒரே ஒருவர், இந்து முன்னணி தலைவர் இராம கோபாலன் தான்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த மாதக் கூட்டத்தொடரில் இலங்கை நெருக்கடிகளை எதிர்நோக்கவுள்ள சூழலில், பொதுநலவாய மாநாடு தொடர்பான சர்ச்சைகள் நீளும் நிலையில், நிம்மதி தேடி இந்தப் புனித யாத்திரையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்வதாக தெரிகிறது. இன்னும் சிலர் இது தோச நிவர்த்திக்கானது என்கின்றனர்.

எது எவ்வாறாயினும், இந்தப் பயணத்தின் மூலம் சந்தர்ப்பம் கிடைத்தால்,  இந்தியாவின் ஆதரவு காரி அவர் கதவுகளைத் தட்டாமல் விடப் போவதில்லை. குறிப்பாக, மாநில அரசுகளுடன் உறவுகளை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது. காரணம், இந்தியாவில் தனிக்கட்சி ஆட்சி என்பது இல்லாமல் போய் விட்டது.

இப்போதும் இனிமேலும் மாநிலக் கட்சிகளின் கையில் தான் எல்லாமே இருக்கப் போகிறது. எனவே காங்கிரஸ் கட்சியை மட்டும் நம்பிக் கொண்டிருந்தால் சரிவராது என்பது இலங்கை அரசுக்கு நன்றாகவே புரிந்து விட்டது. அதனால், மாநில அரசுகளுடன் இலங்கை உறவுகளை ஏற்படுத்தி புதுடில்லியில் இலங்கையின் நலனை உறுதிப்படுத்த முனைகிறது.

கடந்த செப்ரெம்பரில் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ்சிங் சௌகானுடன் பேசி உறவை ஏற்படுத்தினார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அதேபோல, இதற்கு முன்னர் திருப்பதி சென்றிருந்தபோது, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியுடன் பேசியிருந்தார். இப்போது பீகார் முதல்வருடன் பேசப் போகிறார்.

இந்த மூன்று மாநிலங்களும் உத்தரப் பிரதேசத்துக்கு அடுத்ததாக அதிகளவிலான நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்ட மாநிலங்கள் என்பது கவனிக்கத்தக்கது. பீகாரில், 54 தொகுதிகளும், ஆந்திராவில் 42 தொகுதிகளும், மத்தியப் பிரதேசத்தில் 40 தொகுதிகளும் உள்ளன.

மாநில அரசுகளை வளைத்துப் போடும் நோக்கம் என்ற கணிப்பு சரியாக அமைந்தால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அடுத்த இலக்கு உத்தரப் பிரதேசமாக இருக்கும். அதுதான் 85 தொகுதிகளைக் கொண்ட மாநிலம் என்பதுடன், வாரணாசியில் சாரநாத் மற்றும் குஷிநகர் என்று இரு பௌத்த யாத்திரைத் தலங்களையும் கொண்டது.

சாரநாத்தில் தான் புத்தர் முதல் முறையான ஐந்து சீடர்களுக்கு தர்மபோதனை செய்தார். குஷிநகரில் தான் புத்தர் மரணத்தைத் தழுவினார் இப்படியான உறவுக்கு இந்தத் தலங்கள் அவருக்கு கைகொடுக்கும். இவ்வாறு மாநில அரசுகளுடன் உறவுகளை ஏற்படுத்துவதால், இலங்கைக்கு உடனடியாகப் பெரிய  இலாபம் கிடைத்து விடவோ, பெரிய திருப்பங்கள் ஏதும் நிகழவோ வாய்ப்பில்லை.

நீண்டகால நோக்கில் இது இலங்கையின் நலன்களுக்கு உறுதியான ஆதரவைக் கொடுக்கக் கூடியது. தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்புகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் எதிர்கொள்ளும் நிலையில், அதுபற்றி அரசாங்கம் அவ்வப்போது ஒன்றைக் கூறுவது வழக்கம். எமக்கு பேச்சு, உறவுகள் எல்லாம் மத்திய அரசுடன் தான். மாநில அரசுகளைப் பற்றிக் கவலையில்லை என்று அடிக்கடி அரசாங்கம் கூறுவதுண்டு.

ஆனால் அதையும் மீறி மாநில அரசுகளுடனும், மாநில முதல்வர்களுடன் இலங்கை அவ்வப்போது பேசவே செய்கிறது. தமிழ்நாடு முதல்வருக்குக் கூட அழைப்பு விடுத்தது. வெளிப்படையாக அரசாங்கம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்தப் பயணம் புத்தகயா மற்றும் திருப்பதிக்கானது என்று கூறினாலும், உள்ளூர அதற்குள்ளேயும் ஒரு அரசியல் உள்ளது.

அதுமட்டுமன்றி, தமிழ்நாட்டின் எதிர்ப்புகளையெல்லாம்  கண்டுகொள்ளப் போவதில்லை என்ற அலட்சியமும் இதன்மூலம் வெளிப்படுத்தப்படுகிறது என்பதையும் மறுக்க முடியாது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X