2025 மே 19, திங்கட்கிழமை

அமெரிக்க தீர்மானமும் அனல் பறக்கும் தமிழக அரசியல் களமும்

A.P.Mathan   / 2013 மார்ச் 04 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தமிழர் பிரச்சினை தமிழகத்தில் "உணர்ச்சி பிழம்பாக" மாறியிருக்கிறது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட காட்சிகள் வெளியாக, தமிழகத்தில் உள்ள கட்சிகள் எல்லாமே போராட்டக் களத்தில் வந்து நிற்கின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா, "இது மனிதாபிமானமற்ற செயல்" என்று பாதயாத்திரையில் வைகோவை சந்தித்த மறுநாளே பரபரப்பு பேட்டி கொடுத்தார். இந்த பேட்டி அ.தி.மு.க.வின் பக்கமாகபோக நினைக்கும் கட்சிகள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. "கருணாநிதி நாடகமாடுகிறார். இலங்கை தமிழர் பிரச்சினையில் முதல்வர் உண்மையாகவே போராடுகிறார்" என்று வைகோவே ஒரு வார இதழுக்கு பேட்டி கொடுத்தார். "காங்கிரஸ் எதிர்ப்பு" என்ற களத்தை உருவாக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஆளும் அ.தி.மு.க.விற்கு இப்போது திரையிடப்பட்ட "சேனல்-4" காட்சிகள் புதுவித உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. "ஏற்கனவே தமிழக சட்டமன்றம் இது தொடர்பாக நிறைவேற்றியுள்ள தீர்மானங்களுக்கு (இலங்கை பொருளாதார தடை, ஜனாதிபதி ராஜபக்ஷ மீது சர்வதேச விசாரணை) செயல்வடிவம் கொடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற கோரிக்கையை அ.தி.மு.க.வும், அதை ஆதரிக்கும் ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

தி.மு.க. எம்.பி. சிவா ஆவேச பேச்சு
இதுபோன்ற பரபரப்பான சூழ்நிலையில் இந்திய மாநிலங்களவையில் (நாடாளுமன்றத்தின் மூத்த அவை) இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தை அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கொடுத்தன. ஆனால் அந்த விவாதமே காங்கிரஸை தனிமைப்படுத்தி மற்ற கட்சிகள் எல்லாம் ஓரணியில் சேர வைத்துவிட்டது. அந்த தீர்மானத்தில் பேசிய திராவிட முன்னேற்றக் கழக எம்.பி. திருச்சி சிவா, "நமது சொந்த நாட்டு மக்களை கொன்று குவிக்கும் மனிதாபிமானமற்ற- நட்பு பாராட்டாத நாட்டுடன் நட்பாக இருக்க விரும்புகிறீர்களா? அல்லது இந்தியாவின் தெற்கிலுள்ள (தமிழ்நாடு) உங்களின் சகோதரர்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறீர்களா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்" என்று ஆவேசமாகப் பேசினார்.

அ.தி.மு.க. எம்.பி. டாக்டர் மைத்ரேயன் உணர்ச்சிவசம்
அ.தி.மு.க. ராஜ்ய சபை உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் பேசும்போது, "இலங்கையை நட்பு நாடு என்கிறீர்கள். நம் தொப்புள் கொடி உறவுகளை கொல்லும் நாட்டை எப்படி நீங்கள் நட்பு நாடு என்று கூறுகிறீர்கள். தமிழர்களுக்கு உரிய அதிகாரம் அளிக்காதவரை அது நட்பு நாடு இல்லை. எங்கள் டாக்டர் புரட்சி தலைவி (தமிழக முதல்வர்) ஏற்கனவே சொல்லியிருப்பது போல் "போர்குற்றங்களை கண்டித்தும், சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தியும், இந்தியா ஒருவரி தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும். 40 அல்லது 50 நாடுகளின் தூதுவர்களை சந்தித்துவிட்டால் மட்டும் போதாது. அவர்கள் செய்த பாவம் (தி.மு.க. போர் நடக்கும்போது மத்திய அரசை ஆதரித்தது) போகாது" என்று உணர்ச்சி வசப்பட்டார்.

கலக்கிய பா.ஜ.க. எம்.பி. வெங்கய்யா நாயுடு
இந்திய முக்கிய எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான வெங்கைய்யா நாயுடுவின் பேச்சு அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்க வைத்தது. அவர் பேசும்போது, "இலங்கைக்கும் இந்தியாவிற்கும் உள்ள உறவு வரலாறு பூர்வமானது. நாம் அவர்களுக்கு ஆயுதம் அளித்திருக்கிறோம். பயிற்சி கொடுத்திருக்கிறோம். அமைதி காக்கும் படையை அனுப்பியிருக்கிறோம். நிதியளித்துள்ளோம். இப்படி இந்தியாவின் உதவிகளை பெறும் நாட்டுடன் நமக்கு ஒரு "ஸ்பெஷல் ரிலேசன்ஷிப்" இருக்கிறது. அப்படியிருக்கையில் தமிழர் பிரச்சினை இலங்கையின் உள்நாட்டு பிரச்சினை என்று நாம் சொல்லக்கூடாது. இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கையை நாம் வலியுறுத்த வேண்டும்... விடுதலை புலிகளை நான் ஆதரிக்கவில்லை. அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் நம் நாட்டின் முன்னாள் பிரதமரை கொன்றார்கள் என்பதையும் மறக்கவில்லை. ஆனால் அந்த ஒரே காரணத்திற்காக 12 வயது பாலகனை பாயின்ட் பிளாங்க் ரேஞ்சில் சுட்டுக் கொன்றிருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இது அவமானம்" என்று கடுமையாகவே பேசினார்.

சீறிய சி.பி.ஐ. எம்.பி. ராஜா
இன்னொரு தேசிய கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் டி.ராஜா மாநிலங்களவையில் பேசும்போது, "90,000 தமிழ் பெண்கள் போர் விதவைகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? 13ஆவது அரசியல் சட்டத்தை தூக்கியெறிய வேண்டும் என்று அங்குள்ள கட்சிகள் பேசுகின்றன. ஏன் அந்நாட்டு ஜனாதிபதி ராஜபக்ஷவை தமிழர்களுக்கு அதிகாரமளிக்க முடியாது என்று கூறிவிட்டார். ஆனால் இன்னமும் நீங்கள் (இந்தியா) 13அவது அரசியல் சட்டத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள். நீங்கள் இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரில் இலங்கைக்கு உதவினீர்களா இல்லையா. ஒன்று நீங்கள் சொல்லுங்கள். அப்படி நீங்கள் சொல்லத் தவறினால் நாங்கள் இலங்கை அரசாங்கத்திடமிருந்து அந்த தகவல்களை பெற்றுக்கொள்கிறோம்" என்றார் கோபம் கொப்பளிக்க.

மழுப்பல் பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்
இவற்றிற்கு பதிலளித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், "தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் 13ஆவது அரசியல் சட்ட திருத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் இலங்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். "இன அழிப்பு", "கலாசார படுகொலை", "ஒருவரது கலாசார சின்னங்களை அழிப்பது" போன்று வரும் குற்றச்சாட்டுகள் எங்கள் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகின்றன. இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்காலத்திற்கு இந்தியாவின் பங்கு சிறந்த "உத்தரவாதமாக" இருக்கும். இலங்கையில் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இனத்தவரும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வதற்கு ஏற்றவகையில் நிரந்தர தீர்வு காண்பதற்கு போர் முடிந்துள்ள சூழ்நிலை சாதகமானது என்று இந்தியா கருதுகிறது. அதே சமயத்தில் இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு என்பது அங்குள்ள நீண்ட கால பிரச்சினை. இலங்கை அதன் உள்நாட்டு நடைமுறைகளின்படி அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது. எப்போது 13ஆவது சட்ட திருத்தம் அமல்படுத்தப்படும் என்ற உத்தரவாதத்தை நான் கொடுக்க முடியாது. ஏனென்றால் நான் என் நாடு செய்யப் போவதைத்தான் சொல்ல முடியும். மற்ற நாடு செய்யப்போவதை சொல்ல முடியாது. சென்ற ஜெனிவா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிற்கு பிறகு தமிழர் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர சில நடவடிக்கைகளை எடுக்கிறோம் என்று உலக நாடுகளுக்கு இலங்கை வாக்குறுதி அளித்தது. அதை நிறைவேற்றும்படி இந்தியா இலங்கையை கேட்டுக் கொள்கிறது" என்று அறிவித்து, "இலங்கையை இங்கே பேசிய உறுப்பினர்கள் சிலர் எதிரி நாடு என்றார்கள். அது நம் நட்பு நாடு" என்றார். அமெரிக்கா கொண்டு வரும் ஜெனிவா தீர்மானத்தின் மீது இந்தியா எப்படி வாக்களிக்கும் என்பது பற்றிய உறுதியான நிலைப்பாட்டை சொல்லாத இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் பேச்சை தமிழக கட்சிகள் அனைத்துமே கண்டித்தன. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் "வெளிநடப்பு" செய்தன.

அப்செட் ஆன தி.மு.க. "முற்றுகை போராட்டம்"
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசை ஆதரித்து வரும் தி.மு.க.வும் சல்மான் குர்ஷித் பேச்சில் ரொம்பவும் அப்செட் ஆனது. அந்தக் கட்சி 5.3.2013 அன்று சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருக்கிறது. அதே தினத்தில் இந்திய நாடாளுமன்றம் முன்பு தி.மு.க. எம்.பி.க்கள் ஆர்பாட்டமும் செய்யப் போகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் மார்ச் 3ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையொன்றில், "சென்றமுறை எந்தவித காழ்ப்புணர்வும் இன்றி நடுநிலையோடு கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது அமெரிக்கா. ஆனால் அப்போது அந்த தீர்மான வாசகம் நீர்த்துப்போக (இந்தியா மீது மறைமுகமான குற்றச்சாட்டு) வைக்கப்பட்டது. எனவேதான் இந்த ஆண்டும் அமெரிக்கா சார்பில் ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இலங்கை உள்விவகாரங்களில் இந்தியா தலையிட முடியாது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானத்தை கொண்டு வருகிறது என்பதற்காக அதை இந்தியா ஆதரிக்க வேண்டியதில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசியிருப்பது மிகுந்த மன வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது" என்று மத்திய அரசை காரசாரமாக சாடியிருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அதைத் தொடர்ந்து நிருபர்களை சந்தித்த அவர், "எங்கள் உணர்வுகளை உணர்ந்து மத்திய அரசு செயல்படும் என்று நம்புகிறோம்" என்று "எச்சரிப்பது" போல் கருத்து சொல்லியிருக்கிறார்.

போராட்டத்திலும் "எதிர்கால கூட்டணி" வியூகம்
ஆகவே இலங்கை தமிழர் பிரச்சினையில் தொடர் போராட்டங்கள் தமிழகத்தில் சூடுபிடித்துக் கொண்டிருக்கின்ற அதேவேளையில், எதிர்கால கூட்டணி அரசியலை மனதில் வைத்தே அனைத்து அரசியல் கட்சிகளும் "கவனமாக" அணி சேருகின்றன. "காங்கிரஸ் எதிர்ப்பை" தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் சேர்ந்தே செய்வதால், "என்ன நிலைப்பாட்டை எடுப்பது" என்பது தெரியாமல் காங்கிரஸ் கட்சி திகைத்து திக்குத் தெரியாத காட்டில் நிற்கிறது. எப்போதுமே தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு ராசி உண்டு. தமிழகத்தில் "உருப்படியான கூட்டணி"யை அமைக்கும் தேசிய கட்சிதான் அகில இந்திய அளவில் ஆட்சியமைக்கும் சக்தி பெறும். பா.ஜ.க.விற்கு தமிழகத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மாறி மாறி கூட்டணிக்கு கிடைத்த இரு கட்டங்களான 1998 மற்றும் 1999 ஆகிய நாடாளுமன்ற தேர்தல்களின்போதுதான் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்தது. வாஜ்பாய் பிரதமரானார். அதேபோல் 2004 மற்றும் 2009இல் தமிழகத்தில் பலமான கூட்டணி தி.மு.க.வுடன் அமைந்த பிறகுதான் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்தது. பிரதமராக இருக்கிறார் மன்மோகன்சிங். ஆகவே தமிழகத்தில் "பலமான கூட்டணி இது" என்று கொடுக்கப்படும் சிக்னல் அகில இந்திய அளவில் மற்ற மாநிலங்களில், பா.ஜ.க.விற்கோ, காங்கிரஸுக்கோ "வெற்றி இமேஜை" உருவாக்க கடந்த காலங்களில் பேருதவியாக இருந்திருக்கிறது.

ஆனால் இன்று என்ன நிலைமை? தேசிய கட்சியான பா.ஜ.க.வும் வழக்கத்திற்கு மாறாக இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் எதிர்ப்பை கூர்மையாக்குகிறது. குறிப்பாக மார்ச் 2, 3 ஆகிய திகதிகளில் நடைபெற்ற பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங், "இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பரவல் கிடைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியதோடு நில்லாமல், இன்னொரு பேட்டியில் "இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் ஏன் மத்திய அரசு மவுனம் சாதிக்கிறது?" என்றே கேள்வி எழுப்பி விட்டார். அதன் இன்னொரு தலைவர் வெங்கய்யா நாயுடு, "இலங்கை தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு முற்றிலும் தோற்றுவிட்டது" என்று ஆணித்தரமாக மாநிலங்களவையில் வாதிட்டுள்ளார். தாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் கடைப்பிடிக்க வேண்டிய வெளியுறவுக் கொள்கை விடயத்தில் ஒரு தேசிய கட்சி இன்னொரு தேசிய கட்சியான காங்கிரஸை ஏன் இப்படி சாடுகிறது?

பா.ஜ.க.வின் "வியூகம்" ரொம்பவும் சிம்பிள். சிறுபான்மையின வாக்குகள் தங்களுக்கு விரோதமாக போய்விடும் என்று கருதி தமிழகத்தில் உள்ள தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரு கட்சிகளும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க "தேர்தல் சமயத்தில்" அஞ்சும். (தேர்தலுக்குப் பிறகு தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டு விடுவார்கள் என்பது வேறு விடயம்) "தங்களுடன் கூட்டணி வைக்காத இரு கட்சிகளும் காங்கிரஸுடனும் சேரக்கூடாது" என்பது பா.ஜ.க.வின் "ராஜதந்திர" வியூகம். அதுதான் காங்கிரஸை இலங்கை பிரச்சினையில் கடுமையாக எதிர்ப்பதற்கு காரணம். இதனால் என்ன பலன்? தமிழகத்திலிருந்து பா.ஜ.க.விற்கு எம்.பி.க்கள் கிடைக்கவில்லை என்றாலும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 எம்.பி.க்களில் இருந்து காங்கிரஸுக்கு ஏதாவது எம்.பி.க்கள் கிடைத்து விடக்கூடாது என்பதே இந்த வியூகத்தின் பின்னணி. ஏனென்றால் தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் ஆந்திரா அக்கட்சியினை விட்டுப் போய்விட்டது. கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி. அங்கே வெற்றி எப்படியிருக்கும் என்று தெரியவில்லை. கர்நாடகா மிகவும் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டதால், அங்கே காங்கிரஸுக்கும் "பெயர் ரிப்பையர்" ஆகிப் போய் நிற்கிறது. எஞ்சியிருப்பது தமிழகம் மட்டுமே. இங்கு காங்கிரஸுக்கு தனியாக ஒரு எம்.பி.யைக் கூட ஜெயிக்கும் சக்தி இல்லை. ஆனால் அக்கட்சி சேரும் அணியால் இந்த வெற்றி கிடைக்கக்கூடும். அப்படி வெற்றி வாய்ப்பு உள்ள தமிழகத்தில் காங்கிரஸின் கணக்கை முறியடிக்க இலங்கை தமிழர் பிரச்சினை பா.ஜ.க.விற்கு "கூர்மையான" ஆயுதமாக கிடைத்திருக்கிறது. அதனால்தான் இலங்கை தமிழர் பிரச்சினை வெளியுறவுத்துறை சம்பந்தப்பட்ட விடயம் என்றாலும், தமிழகத்தில் உள்ள மாநில கட்சிகளுடன் சேர்ந்து பா.ஜ.க.வும் காங்கிரஸை கடுமையாக எதிர்க்கின்ற வரிசையில் முந்திக் கொண்டு வந்து நிற்கிறது.

அணி சேர்ந்து நிற்கும் தமிழக அரசியல் கட்சிகள்
தேசிய கட்சிகளின் நிலை இப்படியிருக்க, இப்போதைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வைகோவின் ம.தி.மு.க. ஆகியவை இப்பிரச்சினையில் அ.தி.மு.க. பக்கமாக தமிழகத்தில் சாய்ந்து நிற்கின்றன. அதனால் தி.மு.க. எந்த போராட்டம் பண்ணுகிறதோ அதற்கு முன்கூட்டி போராட்டம் நடத்தியோ அல்லது தி.மு.க.வின் போராட்டத்தை விமர்சித்தோ "பாலிடிக்ஸ்" பண்ணுகின்றன. இதற்கு பழ.நெடுமாறன், சீமான் போன்றோர் துணை நிற்கிறார்கள். தி.மு.க. பக்கமாக திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி, கீ.வீரமணியின் திராவிடர் கழகம், சுப.வீரபாண்டியன் போன்றோர் அணி சேர்ந்து நிற்கிறார்கள். தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வின் வெற்றி தோல்விகளை நிச்சயிக்கும் சக்தி படைத்த விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வும் கூட "காங்கிரஸ் எதிர்ப்பில்" உறுதியாகவும், அ.தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து விலகியும் நிற்கிறது. எந்த நேரமும் இந்த கட்சி தி.மு.க. அணி பக்கமாக சேர்ந்து விடலாம் என்பதுதான் நிதர்சனமான நிலைமை.

திக்குத் தெரியாமல் தவிக்கும் காங்கிரஸ் கட்சி
ஆனால், காங்கிரஸ் கட்சியோ திருவிழா கூட்டத்தில் காணாமல்போன குழந்தைபோல் திருதிருவென்று முழித்துக் கொண்டிருக்கிறது. சென்றமுறை ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட அமெரிக்க தீர்மானத்தை "நீர்த்துப் போக" காங்கிரஸ் முயற்சிகள் மேற்கொண்டாலும், அந்த தீர்மான வெற்றிக்கு பாடுபட்டது என்ற "இமேஜ்" காங்கிரஸும் இலங்கை தமிழர்களுக்காக பாடுபடும் கட்சியோ என்ற இமேஜை கொடுப்பதற்கு தொடக்கமாக இருந்தது. ஆனால் இப்போது வருகின்ற அமெரிக்காவின் இரண்டாவது தீர்மானத்திற்கு "ஆதரவா? இல்லையா?" என்ற நிலைப்பாட்டை இந்தியா எடுக்கத் தயங்குவதால், காங்கிரஸின் எதிர்காலம் தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் "மிகப்பெரும் கேள்விக்குறியாக" மாறியிருக்கிறது. இதை உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் உணர்ந்திருந்தாலும், அகில இந்திய காங்கிரஸ் தலைமை, குறிப்பாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, "இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸின் கொள்கைகளை (முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு ஏற்பட்ட கொள்கை) விட்டுக் கொடுத்து சரண்டர் ஆக முடியாது" என்பதில் உறுதியாக இருக்கிறார் என்றே தகவல்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X