2025 மே 19, திங்கட்கிழமை

ஜெனிவாவில் நடந்த சதுரங்க ஆட்டம்

A.P.Mathan   / 2013 மார்ச் 27 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

ஜெனிவாவில் மீண்டும் ஒருமுறை இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்தமுறை 40 நாடுகளின் இணை அனுசரணையுடன் கொண்டு வரப்பட்ட தீர்மானம், இந்தமுறை 41 நாடுகளின் இணை அனுசரணையுடன் கொண்டு வரப்பட்டது.

அதுபோலவே, கடந்தமுறை 24 நாடுகள் ஆதரவு தெரிவித்த தீர்மானத்துக்கு இந்தமுறை 25 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இம்முறை தீர்மானத்துக்கு ஆதரவாக அதிகளவு நாடுகள் வாக்களிக்கும் என்று  தகவல்கள் வெளியான போதிலும், கடந்த முறையைவிட ஒரு நாட்டின் வாக்குத் தான் அதிகரித்துள்ளது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 25 நாடுகள் மட்டும் ஏற்றுக்கொண்ட இந்தத் தீர்மானத்துக்கு, அதிகளவு நாடுகளின் ஆதரவு கிடைக்கவில்லை என்கிறது இலங்கை.

ஏதோ, அருந்தப்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது போலுள்ளது இலங்கையின் நிலைப்பாடு. அதாவது அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த நாடுகள் மற்றும் நடுநிலை வகித்த நாடுகள் என மொத்தம் 23 நாடுகள் தன்பக்கமே இருப்பதாக இலங்கை கருதிக்கொள்கிறது.

அதேவேளை, அமெரிக்காவே மறுபக்கம் சிந்திக்கிறது. தனது தீர்மானத்தை ஆதரித்த நாடுகளுடன் நடுநிலை வகித்த நாடுகளையும் சேர்த்து, இலங்கைக்கு எதிராக 34 நாடுகள் இருப்பதாக அமெரிக்கா சொல்கிறது. வாக்கெடுப்பில் நடுநிலை வகித்த 8 நாடுகள் மற்றும் வாக்கெடுப்பில் பங்கேற்காத காபோன் ஆகிய 9 நாடுகளும் - இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கவும் இல்லை - எதிர்க்கவும் இல்லை.

இலங்கை சொல்வது போன்று, தீர்மானத்தை உறுதியாக ஆதரிப்பதானால், இந்த நாடுகள் ஆதரவாக வாக்களித்திருக்க வேண்டும். அதேவேளை, தீர்மானத்தை எதிர்ப்பதாக இருந்தால், இந்த நாடுகள் எதிராக வாக்களித்திருக்கும், அப்படிச் செய்யாததால் அவை இலங்கையையிட்டு திருப்திகொள்ளவில்லை என்றே அர்த்தம் என்று வாதிடுகிறது அமெரிக்கா. ஒருவகையில் இலங்கையின் வாதம் சரியானால், இன்னொரு வகையில் அமெரிக்காவின் வாதமும் சரியானதாகவே தோன்றும். ஆனால், இந்த வாக்களிப்பில் பல விடயங்கள் செல்வாக்குச் செலுத்தியதை நினைவில்கொள்ள வேண்டும்.

இது தனியே இலங்கை சார்ந்த விடயமாக, இலங்கையின் நிலைமைகள், அதன் முன்னேற்றம் சார்ந்த விடயமாக மட்டும் பார்க்கப்பட்டிருக்கவில்லை. அதற்கும் அப்பால், இந்த தீர்மானம் பல்வேறு விடயங்களில் செல்வாக்குச் செலுத்தும் ஒன்றாகவும் காணப்பட்டதை மறுக்க முடியாது. அதாவது, இலங்கையின் நிலைமையை, அதன் முன்னேற்றத்தை மதிப்பிட்டு வாக்களித்த நாடுகள் சில. இலங்கையுடன் கொண்டுள்ள உறவுகளை மதித்து வாக்களித்த நாடுகள் சில.

இலங்கைக்கு ஆதரவளித்த சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்றவற்றின் செல்வாக்கிற்கு அமைய வாக்களித்த நாடுகள் சில.

அதுமட்டுமன்றி, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் என்பதால் அமெரிக்காவை எதிர்க்க வேண்டும் என்பதற்காக வாக்களித்த நாடுகளும் உள்ளன. அதேபோல, அமெரிக்காவின் தீர்மானத்தின் உள்ளடக்கத்தை விளங்கிக் கொண்டு அதற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் சில. அமெரிக்காவுக்காக வாக்களித்த நாடுகள் சில.

இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற, பல்வேறு அழுத்தங்களின் காரணமாக, ஆதரித்து வாக்களித்த நாடுகள் சில.

இப்படியாக ஒரே தீர்மானத்தின் மீது பல்வேறு அடிப்படைக் காரணங்களின் நிமிர்த்தம் ஆதரித்தும் எதிர்த்தும் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

எனவே, ஜெனிவா தீர்மான வாக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தீர்மானத்துக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குகள் அனைத்தையும், இலங்கைக்கு ஆதரவான வாக்குகள் என்றோ, தீர்மானத்துக்கு ஆதரவாக அளிக்கப்பட்ட வாக்குகள் அனைத்தையும் இலங்கைக்கு எதிரானது என்றோ எடுத்த எடுப்பிலேயே தீர்மானிக்க முடியாது. ஆனால் இந்த வாக்கெடுப்பு, இலங்கை தொடர்பான சர்வதேசக் கணிப்பின் போக்குகளை ஓரளவுக்கு விளங்கிக் கொள்ள உதவும்.

அதைவிட, இது இலங்கை விவகாரம் என்பது சர்வதேச அரங்கில் எந்தத் தரப்பினால் கையில் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதன் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது என்ற உண்மையையும் விளங்கிக் கொள்ளலாம்.

கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவளித்த நாடுகள் இம்முறை இல்லை. கடந்த ஆண்டு இறுதியில் நடந்த உறுப்புரிமை மாற்றம் காரணமாக காய்கள் குழப்பி விடப்பட்டு புதிய ஆட்டமே தொடங்கியது.

கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்த 24 நாடுகளில், கமரூன், பெல்ஜியம், ஹங்கேரி, மொரிசியஸ், மெக்சிகோ, நைஜீரியா, நோர்வே, உருகுவே ஆகிய 8 நாடுகள் இம்முறை வாக்களிக்கும் தகைமையைக் கொண்டிருக்கவில்லை.

அதேவேளை, கடந்த ஆண்டு இலங்கைக்கு ஆதரவாக – அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த பங்களாதேஷ், சீனா, ரஷ்யா, கியூபா, சவூதி அரேபியா ஆகிய நாடுகள் இம்முறை வாக்களிக்க முடியாத நிலையில் இருந்தன.

அத்துடன் வாக்கெடுப்பில் பங்கேற்காத டிஜிபோற்றி, ஜோர்தான், செனகல் ஆகிய நாடுகளும் இம்முறை பேரவையில் இல்லை.

இம்முறை பிறேசில், ஐவரிகோஸ்ட், ஆர்ஜென்ரீனா, எஸ்தோனியா, எதியோப்பியா, காபோன், ஜேர்மனி, அயர்லாந்து, ஜப்பான், கசக்ஸ்தான், கென்யா, மொன்ரெனிக்ரோ, தென்கொரியா, சியராலியோன், ஸ்பெய்ன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வெனிசுலா என 17 நாடுகள் புதிதாக உள்ளே வந்தன.

கடந்தமுறை இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் அதிகளவில் பேரவையில் இருந்து வெளியேறியிருந்தன. இது அமெரிக்கத் தரப்புக்கு சவாலானதொன்றாகவே இருந்தது.

இம்முறை உள்ளே வந்த 17 நாடுகளில் பிறேசில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கசாக்ஸ்தான், கென்யா, வெனிசுலா என்பன தனக்கு ஆதரவளிக்கும் என்று இலங்கையால் எதிர்பார்க்கப்பட்டது. அதேவேளை ஜப்பானும் தென்கொரியாவும் குறைந்தபட்சம் நடுநிலை வகிக்கும் என்றும் இலங்கை எதிர்பார்த்தது.

அதேவேளை, ஆர்ஜென்ரீனா, எஸ்தோனியா, ஜேர்மனி, அயர்லாந்து. மொன்ரெனிக்ரோ, ஸ்பெய்ன் என்பன தீர்மானத்தை ஆதரிக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. இந்தநிலையில், அமெரிக்கத் தீர்மானத்துக்கு 23 நாடுகளின் ஆதரவே கிடைக்கும் நிலை உறுதியாக இருந்தது.

இதனால், புதுவரவான, ஐவரிகோஸ்ட், எதியோப்பியா, சியராலியோன் என்பனவற்றை இலங்கைக்கு எதிராகத் திருப்ப வேண்டிய தேவை அமெரிக்க அணிக்கு ஏற்பட்டிருந்தது. ஏனென்றால், இம்முறை இந்தியாவை தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வைப்பது சிரமமானது என்றே அமெரிக்கா உணர்ந்திருந்தது. எனவே, கடந்த முறையை விட குறைந்தளவு ஆதரவு கிடைத்தால், தீர்மானம் தோல்வியில் முடிந்து போகும்.

எனவே, எப்படியாவது தீர்மானத்தை கடந்த முறையை விடவும் அதிகமான ஆதரவுடன் நிறைவேற்றுவதில் அமெரிக்கா உறுதியாக இருந்தது.

இறுதியில் ஒஸ்ரியா, ஜேர்மனி, இத்தாலி, அயர்லாந்து, ஸ்பெய்ன், மொன்ரெனிக்ரோ, சுவிற்சர்லாந்து, அமெரிக்கா, பிறேசில், தென்கொரியா, சியராலியோன், இந்தியா,  பெனின், கோஸ்டாரிக்கா, லிபியா, ஆர்ஜென்ரீனா, சிலி, ஐவரிகோஸ்ட், கௌதமாலா, பெரு, செக் குடியரசு, எஸ்தோனியா, போலந்து, மோல்டோவா, ருமேனியா ஆகிய நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.

வெனிசுலா, தாய்லாந்து, பாகிஸ்தான், இந்தோனேசியா, ஈக்வடோர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார், மாலைதீவு, குவைத், உகண்டா, மொரிட்டானியா, கொங்கோ, பிலிப்பைன்ஸ் ஆகிய 13 நாடுகள் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.

அங்கோலா, பொட்ஸ்வானா, புர்கினா பாசோ, கென்யா, எதியோப்பியா, மலேசியா, கசாக்ஸ்தான், ஜப்பான் ஆகிய நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.

குறைந்தபட்சம் நடுநிலை வகிகும் என்று எதிர்பார்க்கப்பட்ட தென்கொரியாவும், இம்முறையாவது எதிர்த்து வாக்களிக்கும் என்று நம்பிய இந்தியாவும் தீர்மானத்தை ஆதரித்தது இலங்கைக்குப் பெரும் ஏமாற்றம்.

அதுபோலவே புதிதாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்குள் வந்த பிறேசில் தீர்மானத்தை எதிர்க்கும் என்ற இலங்கையின் நம்பிக்கையும் வீண்போனது. புதிதாக உள்ளே வந்த 17 நாடுகளில் 9 நாடுகள் இலங்கைக்கு எதிராகவே- அதாவது தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

இதன் மூலம், தீர்மானத்துக்கு ஆதரவாக கடந்தமுறையை விடவும் ஒரு வாக்கு அதிகமாகவே கிடைத்துள்ளது.

அதேவேளை, நடுநிலை வகித்த 3 நாடுகள் வெளியேறிய போதிலும், புதிதாக உள்ளே வந்த நாடுகளில், 4 நாடுகள் இம்முறை நடுநிலை வகித்துள்ளன.

தீர்மானத்துக்கு ஆதரவளித்த மற்றும் நடுநிலை நாடுகளின் அணியைச் சேர்த்தால், இலங்கைக்கு வலுவான ஆதரவைக் கொடுக்கும் புதிய உறுப்பு நாடுகள் எண்ணிக்கை வெறும் 4 மட்டும் தான்.

13 ஆபிரிக்க நாடுகளில் தீர்மானத்துக்கு ஆதரவாக 4 நாடுகளும், எதிராக 3 நாடுகளும் வாக்களித்த அதேவேளை, 6 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன.

எட்டு இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தீர்மானத்துக்கு ஆதரவாக 6 நாடுகள் வாக்களிக்க, இரண்டு நாடுகள் மட்டும் எதிர்த்தன.

13 ஆசிய நாடுகளில் இரண்டு நாடுகள் மட்டுமே தீர்மானத்தை ஆதரித்தன. 8 நாடுகள் எதிர்த்து வாக்களிக்க, மூன்று நாடுகள் நடுநிலை வகித்தன. மேற்கு ஐரோப்பிய நாடுகள் அணியில் இருந்த 7 நாடுகளும் தீர்மானத்தை ஆதரித்தன.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் அணியில் உள்ள 6 நாடுகளும் கூட முழுமையாக தீர்மானத்தை ஆதரித்தன.

வலய ரீதியாக பார்த்தால், ஆசியாவைத் தவிர இலங்கைக்கு வெளியே செல்வாக்கு மிகவும் குறைவே என்பது புலனாகும்.

இந்த வாக்கெடுப்பில், ஆசிய நாடுகள் கைகொடுத்ததால் தான், ஓரளவுக்கு இலங்கை காப்பாற்றப்பட்டது.

ஒரு கட்டத்தில் இறுக்கமாக இருந்த இந்தச் சதுரங்க விளையாட்டில் அமெரிக்கா எப்படியோ தனது செல்வாக்கை வைத்து வெற்றி கொண்டுள்ளது. இலங்கையும் தன் பங்கிற்கு தனது கூட்டாளி நாடுகளுடன் இணைந்து போராடிப் பார்த்தது. ஆனால் அமெரிக்காவின் வியூகத்தை அதனால் உடைக்க முடியாது போய்விட்டது.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள இரண்டாவது தீர்மானம், இலங்கையை அடுத்தடுத்த கூட்டத்தொடர்களிலும் கேள்வி கேட்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது. அதாவது செப்டெம்பரில் நடக்கவுள்ள 24ஆவது கூட்டத்தொடர், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள 25ஆவது கூட்டத்தொடர் என்பனவற்றிலும் இலங்கை விவகாரம் சூடு பறக்கவுள்ளன. அடுத்தடுத்த கட்டங்களில் இந்தச் சவால்களைச் சமாளிப்பது இலங்கைக்கு மிகவும் கடினமான காரியமாகவே இருக்கப் போகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X