2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி துணை நிற்கும்: சிதம்பரம்

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 09 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தமிழர் பிரச்சினையில் தேசிய  கட்சிகளுக்கு இடையில் மோதல் வெடித்திருக்கிறது. இலங்கை தமிழருக்கு ஆதரவு போல் செயல்பட்டுக் கொண்டிருந்த பாரதீய ஜனதா கட்சிக்கு காங்கிரஸ் கட்சி ஷெக் வைத்துள்ளது. தமிழகத்தில் இப்பிரச்சினை வெடித்ததிலிருந்து பல்வேறு கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் போராடின. தேசிய கட்சிகளான  இந்திய  கம்யூனிஸ்ட்  கட்சி,  பாரதீய  ஜனதா கட்சி போன்றவற்றின் தலைவர்களும், 'காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது' என்ற ரீதியில் பிரச்சாரம் செய்யத் தவறவில்லை. இதற்கு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சரியான பதிலடி கொடுக்காமல் தயங்கி தயங்கி கருத்துக்களை சொல்லிக் கொண்டிருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் இந்திய நிதியமைச்சர் ப சிதம்பரம்.

ஏப்ரல்௭ஆம் திகதி சென்னை சிந்தாதரிப்பேட்டையில் இந்திய சட்ட மேதை டாக்டர் அம்பேத்காரின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தை நடத்தினார் நிதியமைச்சர் சிதம்பரம். ஏற்கனவே இரு முறை தள்ளிவைக்கப்பட்ட பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து இந்த கூட்டமும் தள்ளி வைக்கப்படுமோ என்ற செய்தி அடிபட்டது. ஆனால் 'ஆளுயர கம்புகளில் காங்கிரஸ் கொடி ஏந்தி' காங்கிரஸ் தொண்டர்கள் பொதுக்கூட்டத்தை நடத்தி முடித்தார்கள். மாணவர்கள் போராட்டத்தின் விளைவாக பொதுக்கூட்டத்திற்கு ஏதேனும் பிரச்சினை வந்தால், அதை சமாளிக்கவே காங்கிரஸ் தொண்டர்கள் அப்படி வந்திருந்தார்கள். தமிழகத்தில் 'ஆளுயர கம்புகளில் கொடியுடன்' வந்து கூட்டத்தை காங்கிரஸ் நடத்தியது சமீப காலங்களில் இதுதான் முதல் முறை.

இந்த கூட்டத்திற்கு பொலிஸ்  பாதுகாப்பு பிரமாதமாக போடப்பட்டிருந்தது. தமிழக பொலிஸின் 'அதி விரைவுப் படை' குவிக்கப்பட்டிருந்தது. பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள வீடுகளின் மாடிகளில் பொலிஸ் நின்று பாதுகாப்பு ஏற்பாடுகளை வேவு பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் கூட்டம் துவங்கி, நிதியமைச்சர் சிதம்பரம் பேசிக்கொண்டிருந்த போதுதான் வந்தார். ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் தாமதம். ஜி.கே. வாசன் அணியைச் சேர்ந்தவர் என்பதால் தாமதம். அதை வெளிப்படுத்தும் வகையில் நிதியமைச்சர் சிதம்பரம் தன் பேச்சை பாதியில் நிறுத்தி, 'தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனை வரவேற்கிறேன்' என்றார். அவர் தாமதமாக வந்தார் என்பதை அதை விட வேறு விதத்தில் அங்கே இருந்த கூட்டத்தினருக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட முடியாது.

இந்திய பட்ஜெட்டில் 'பெண்கள்' 'இளைஞர்கள்' 'ஏழைகள்' உள்ளிட்ட மூன்று தரப்பிற்கும் செய்யப்பட்டுள்ள சலுகைகளை பட்டியலிட்ட சிதம்பரம், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக காங்கிரஸ் செய்த தியாகங்களை விளக்கினார். காமராஜர் அமைச்சரவையில்தான் முதல் தலித் உள்துறை அமைச்சராக கக்கனை நியமித்தார். இந்திய குடியரசுத் தலைவராக (கே.ஆர்.நாராயணன்) தலித் ஒருவரை காங்கிரஸ் கட்சிதான் கொண்டு வந்தது. இந்திய நாடாளுமன்ற சபாநாயகராக (மீரா குமார்) தலித் ஒருவரை காங்கிரஸ் கட்சிதான் தேர்வு செய்தது. இந்திய உள்துறை அமைச்சராகவே (சுசில் குமார் ஷிண்டே) தலித் ஒருவரை இப்போது பிரதமர் மன்மோகன்சிங் நியமித்திருக்கிறார்- இப்படி தலித் மக்களின் மேம்பாட்டிற்காக காங்கிரஸ் செய்த சாதனைகளை பட்டியலிட்டவர் தன் பேச்சின் இறுதிக்கட்டத்தில் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு வந்தார். அது பற்றி ஆவேசமாகவே நிதியமைச்சர் சிதம்பரம் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நிதியமைச்சர் சிதம்பரம், 'தமிழ்நாட்டில்  நிலவும் சூழ்நிலைக்கு வருகிறேன். இலங்கை பிரச்சினையில் சோனியா காந்தியின் கருத்து என்னவோ அதுதான் காங்கிரஸ் கட்சியின் கருத்து. அதைத்தான் கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி காங்கிரஸ் நாடாளுமன்ற எம்.பி.க்கள் கூட்டத்தில் சோனியா கூறியிருக்கிறார். அது ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் வெளிவந்திருக்கும். அதை தமிழக மக்கள் கேட்டிருப்பீர்கள். படித்திருப்பீர்கள். 1983 முதல் காங்கிரஸ் கட்சி இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி காலத்திலிருந்து இலங்கை தமிழர்களுக்காக பாடுபட்டு வரும் கட்சி. அதற்காக விலை மதிக்கமுடியாத மாணிக்கத்தை (ராஜீவ் காந்தியை) இழந்திருக்கிறோம். அதுவும் இந்த தமிழ் மண்ணில் இழந்திருக்கிறோம். அதற்கு யார் காரணம் என்பது உங்களுக்குத் தெரியும். இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் எடுத்த நிலைப்பாட்டிற்காகவே அந்த 'மாணிக்கத்தை' இழந்திருக்கிறோம்.

எங்களைப் பொறுத்தமட்டில் இலங்கை தமிழர்கள் சம அந்தஸ்துடன், சம உரிமையுடன் இலங்கையில் வாழ வேண்டும். அதற்கு அங்குள்ள அரசியல் சட்டம் திருத்தப்பட்டு அந்த உரிமைகள் வழங்கப்பட  வேண்டும். அதிலிருந்து எந்த நேரத்திலும் காங்கிரஸ் கட்சி பின்வாங்கவில்லை. வடக்கு மாகாணமோ, கிழக்கு மாகாணமோ அல்லது வடக்கும் கிழக்கும் சேர்ந்த மாகாணமோ உருவாக்கப்பட்டு  அங்கே  தமிழர்களுக்கு  அதிகாரப் பகிர்வு  அளிக்கப்பட வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்கள் மறு குடியமர்த்தல் செய்யப்பட வேண்டும். 1987ல் ராஜீவ் எடுத்த முயற்சி வெற்றி பெற்றிருந்தால் இந்நேரம் வடக்கு கிழக்கு மாகாணம் உருவாகியிருக்கும். அங்கே ஒரு தமிழர் முதல்வராக இருந்திருப்பார். அது வெற்றி பெறவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி தன் நிலைப்பாட்டை இப்பிரச்சினையில் மாற்றிக் கொள்ளவில்லை' என்று காங்கிரஸ் எடுத்த முயற்சி எப்படி தோற்றுப்போனது என்பதை விளக்கினார்.

அவர் மேலும் பேசும் போது, 'இலங்கை தமிழர் பிரச்சினையில் மற்ற கட்சிகள் 2002ல் தமிழக சட்டமன்றத்தில் (பிரபாகரனை கைது செய்து கொண்டு வர வேண்டும் என்று போட்ட தீர்மானம்) என்ன தீர்மானம் போட்டன? அப்போது அதை ஆதரித்தது காங்கிரஸ் கட்சி. சில கட்சிகள் எதிர்த்தன. நாங்கள் எதிர்க்கவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை என்று நடுநிலைமை வகித்த கட்சி எது? அது எல்லாம் தமிழக சட்டமன்ற அவைக்குறிப்பில் இருக்கிறது.

அதை மீண்டும் இங்கு படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன். வேண்டும் என்றால் படிக்கக்கூடத் தயார். அதற்காக ஒரு கட்சி ஒரு பிரச்சினையில் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. பிடிவாதமாக அதையே சொல்ல வேண்டியதில்லை. கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப கருத்துகளை மாற்றிக்கொள்வதில் தவறில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில்  எந்த  காலகட்டத்திலும்  இலங்கை தமிழர் பிரச்சினையில் ஒரே கருத்தில்தான் இருக்கிறது. அதிலிருந்து பின்வாங்கியது கிடையாது.' என்று ஆணித்தரமாக பலத்த கைதட்டலுக்கு இடையே வாதிட்டார் சிதம்பரம்.

அடுத்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடந்த காலகட்டத்திற்கு வந்தார் இந்திய நிதியமைச்சர் சிதம்பரம். அது பற்றிப் பேசிய அவர், '2009இல் என்ன நடந்தது? அன்று மயிலை மாங்கொல்லையில் நின்று நான் தம்பி பிரபாகரனுக்கு (அவரை 'தம்பி' என்றுதான் அழைப்பார்கள்) வேண்டுகோள் விடுத்தேன்.  அவர் எனக்கு பழக்கமில்லாதவர் அல்ல.

1984களில் தம்பி தமிழகத்தில் இருந்த போது என் வெள்ளை நிற பியட் காரை நானே தன்னந்தனியாக ஓட்டிச் சொன்று கோடம்பாக்கத்தில் இருந்த தம்பி பிரபாகரனை நள்ளிரவில் சந்தித்து மணிக்கணக்கில் இலங்கை தமிழர் பிரச்சினையை விவாதித்தவன். அந்த உரிமையில் நான் தம்பி பிரபாகரனுக்கு அன்று வேண்டுகோள் விடுத்தேன். நான் கேட்டது இதுதான். 'நீங்கள் இந்திய அரசுடன்  ஒத்துழையுங்கள். தமிழர்களின்  முதல்வர் நீங்கள்தான்' என்று கூறினேன். ஆனால் அதெல்லாம் 'நீர்க்குமிழி' போல் ஆகிவிட்டது.

பிறகு என்ன நடந்தது? அங்கே மிகப்பெரிய உள்நாட்டு யுத்தம் நடைபெற்றது. அது யுத்தமா, போராட்டமா என்ற வார்த்தை விளாயாட்டுக்குள் நான் போக விரும்பவில்லை. இலங்கை இராணுவத்திற்கும், எல்.டி.டி.ஈ.க்கும் இடையே நடைபெற்ற அந்த உள்நாட்டு யுத்தத்தில் எல்.டி.டி.ஈ. தோற்கடிக்கப்பட்டது. அந்த போரில் அதிபர் ராஜபக்ஷ மற்றும் இலங்கை இராணுவத்தால்  அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டிருக்கிறது. மனித உரிமை மீறல்கள் மீறப்பட்டன என்பதை காங்கிரஸ் கட்சி மறுக்கவில்லை. அதனால்தான் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை வேண்டும் என்கிறது காங்கிரஸ் கட்சி. அதுவும் உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் அந்த விசாரணை இருக்க வேண்டும் என்கிறோம். இதில் எங்கிருந்து பின்வாங்கியது காங்கிரஸ் கட்சி' என்று புட்டுப் புட்டு வைத்தார்.
 
பிறகு இலங்கை பிரச்சினை தொடர்பாக வந்த அமெரிக்க தீர்மானங்கள் குறித்த சப்ஜெக்டிற்கு தாவினார். அதை விளக்கிப் பேசிய நிதியமைச்சர் சிதம்பரம், 'கடந்த மார்ச் 2012 இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க தீர்மானம் ஜெனீவாவில் வந்தது. அந்த தீர்மானத்தில் இந்திய அரசு இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று நான் வாதாடினேன். இதை நான் சொல்லவில்லை. நமக்கு எல்லாம் ஆதரவாக இல்லாத தினமணி பத்திரிக்கை அன்றே அப்படி செய்தி வெளியிட்டுள்ளது. (அந்த செய்தியை படித்துக் காட்டினார்) தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பாக தெளிவான நிலையை மத்திய அரசு எடுக்காவிட்டால் கடும் விளைவுகள் தமிழகத்தில் ஏற்படும் என்று சிதம்பரம் சொன்னார் என்று செய்தி போட்டது.

அன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா பாராளுமன்றத்தில் அளித்த பதில் திருப்தியாக இல்லை என்றும் பிரதமரிடம் சிதம்பரம் தெரிவித்தார் என்றும் செய்தி வெளியிட்டது. இப்படியெல்லாம் நாங்கள் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக பாடுபட்டிருக்கிறோம். பிறகு காங்கிரஸ் மீது மட்டும் ஏன் இந்த பிரச்சினையில் பழி போடுகிறீர்கள்? அந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று அ.தி.மு.க., தி.மு.க., இடது சாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் என்ன நிலைப்பாட்டை எடுத்ததோ அதே நிலைப்பாட்டைத்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் எடுத்தது. பிறகு ஏன் காங்கிரஸை தனிமைப்படுத்த இப்படி பிரச்சாரம் செய்கிறீர்கள்? 125 வருட காங்கிரஸ் கட்சியை அப்படியெல்லாம் இன்று நீங்கள் தனிமைப்படுத்திவிட முடியாது' என்றவர், 'சில கட்சிகள் தலைவர்கள் இருக்கிறவரை இருக்கும். தலைவர்கள் மறைந்ததும் பிறகு மறைந்து விடும்.

அகில இந்திய கட்சிகள் பலவற்றை அப்படி பார்த்திருக்கிறோம். இங்கு திராவிடக் கட்சிகள் இருக்கின்றன. தி.மு.க.விற்கு 60 வருட பாரம்பரியம் இருக்கிறது. அவர்களின் போராட்டத்தை, தியாகத்தை மதிக்கிறேன். அதே போல் அ.தி.மு.க.வின் போராட்டங்களையும், தியாகங்களையும் மதிக்கிறேன்.
அதே நேரத்தில் 125 வருட கட்சியான காங்கிரஸின் தியாகங்களையும், போராட்டங்களையும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் காங்கிரஸிலும் செக்கிழுத்து சுதந்திரம் பெற்றவர்கள், நகக்கண்களில் ஊசியால் குத்தப்பட்டு சுதந்திரம் பெற்றவர்கள் இருக்கிறார்கள்.' என்று மிகவும் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற நேரத்தில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனிமைப்படுத்தப்பட்டு விட்டது என்று அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் காங்கிரஸ் கட்சியையும் மதிக்க வேண்டும் என்று சிதம்பரம் பேசியது அந்த கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அத்துடன் நிற்கவில்லை சிதம்பரம். இப்போது நடந்து முடிந்த அமெரிக்க தீர்மான விவகாரத்திற்கும், தி.மு.க. மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்ற விஷயத்திற்கும் வந்தார். அது பற்றி பேசிய சிதம்பரம் 'சென்ற வருடம் வந்த அதே மார்ச் மாதம் இந்த முறை இரண்டாவது அமெரிக்கா தீர்மானம் வந்தது. அந்த ஜெனிவா தீர்மானத்தில் சில திருத்தங்கள் வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் கோரியது. மார்ச்  18-ம் தேதி கலைஞரை வந்து சந்தித்தோம். இரண்டு முக்கிய கோரிக்கைகளை வைத்தார். மிகவும் வலியுறுத்தியே சொன்னார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒன்று அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் கடுமையான வார்த்தைகள், அழுத்தமான வார்த்தைகள் இடம்பெற வேண்டும். இன்னொன்று புதிய கோரிக்கை. இந்திய பாராளுமன்றத்தில் இலங்கையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். 'எங்கள் தலைவர்களுடன் கலந்து பேசி முடிவைச் சொல்கிறோம்' என்று கலைஞரிடம் கூறிவிட்டு டெல்லி சென்றோம். ஏனென்றால் நாங்கள் தலைவர்கள் அல்ல. முடிவை சொல்வதற்கு. நாங்கள் டெல்லிக்கு அன்று நள்ளிர 11.45க்கு திரும்பினோம். அந்த ராத்திரியில் சென்று சோனியாகாந்தியின் கதவை தட்டி இது பற்றி பேச முடியாது. மறுநாள் மார்ச் 19ஆம் திகதி காலை 9.30 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற எம்.பி.க்கள் குழு கூட்டம். அதில் இலங்கை தமிழர் பிரச்சினையில் கட்சியின் நிலைப்பாட்டை சோனியா விளக்கி பேசினார்.

அதன் பிறகு பத்து மணிக்கு பிரதமர் இல்லத்தில் கூட்டம். நான், வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி உள்ளிட்ட அனைவரும் பிரதமருடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறோம். அப்போது மணி 10.05 இருக்கும். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. வைத்த கோரிக்கைகள் பற்றித்தான் பேச்சுவார்த்தை. ஆனால் 10.10-க்கு டி.வி.களில் 'தி.மு.க. ஆதரவை விலக்கிக் கொண்டது' என்று செய்தி ஒலிபரப்பாகிறது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் அன்று மட்டும் மூன்று முறை இலங்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவது குறித்து விரிவாக பேசினோம். கடைசிக் கூட்டம் பிரதமர் இல்லத்தில் இரவு பத்து மணிக்கு நடந்தது. அப்போது தி.மு.க.வின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு குடியரசுத் தலைவரை சந்தித்து தி.மு.க.வின் ஆதரவு விலகல் கடிதத்தை கொடுத்தார் என்ற செய்தி வருகிறது.

 நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டிய வரைவு தீர்மானத்தை என் கையால் எழுதுகிறேன். அமெரிக்க தீர்மானத்தில் செய்யப்பட வேண்டிய ஆறு திருத்தங்களை எழுதி அதை ஜெனிவாவில் இருந்து வந்திருந்த இந்திய பிரதிநிதியிடம் கொடுத்து அனுப்பி அது பற்றி நடவடிக்கை எடுக்கச் சொல்கிறோம்' என்று அந்த கடைசி நிமிடத்தில் ஜெனிவா தீர்மானத்திற்காக இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை ஒவ்வொன்றாக கூட்டத்தில் விளக்கிப் பேசினார் சிதம்பரம்.

அடுத்துத்தான் தேசிய கட்சியான பா.ஜ.க. மீது தன் அட்டாக்கை தொடங்கினார் சிதம்பரம். அது பற்றிப் பேசும் போது, 'மார்ச் 20ஆம் திகதி இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டிய இலங்கைக்கு எதிரான தீர்மானம் பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம். வரைவு தீர்மானத்தை இந்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் ஆகிய மூவரும் முன்மொழிகிறார்கள். ஆனால் எடுத்த எடுப்பிலேயே பாரதீய ஜனதா கட்சி அதை ஆதரிக்க மறுத்து விட்டது. கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் சுஸ்மா சுவராஜ், 'எதற்காக இந்த கூட்டம் போட்டீர்கள்? அதுவே தேவையில்லை. ஏன் இந்த வரைவுத் தீர்மானம் கொண்டு வந்தீர்கள்?' என்றெல்லாம் கேட்டு முரட்டுத்தனமாக தீர்மானத்தை எதிர்த்தார்.

இடது சாரிகள் எதிர்த்தார்கள். ஐக்கிய ஜனதா தளம் எதிர்த்தது. அகாலி தளம் எதிர்த்தது, சிவசேனா எதிர்த்தது. தெலுங்கு தேசம் கட்சி எதிர்த்தது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்த அனைத்து அகில இந்திய கட்சிகளும் எதிர்த்த நிலையில், அந்த தீர்மானம் வேண்டும் என்று ஆதரித்த ஒரே அகில இந்திய கட்சி காங்கிரஸ் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. தமிழகத்திலிருந்து அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் ஆதரித்தன. ஏன் நரேந்திர மோடி நண்பர்தானே. அவரிடம் சொல்லி பா.ஜ.க.வை தீர்மானத்தை ஆதரிக்கச் சொல்லியிருக்க வேண்டியதுதானே? தி.மு.க. எடுத்த நிலைப்பாட்டிற்காக கலைஞரை மதிக்கிறேன். அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டிற்காக அக்கட்சியின் பொதுச் செயலாளரை மதிக்கிறேன். ஆனால் இப்பிரச்சினையில் காங்கிரஸின் மீது பழி போடாதீர்கள்' என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார் சிதம்பரம்.

எல்லாம் முடித்து விட்டு இறுதியில் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை இந்த பொதுக்கூட்டத்திலேயே தொடங்கினார் சிதம்பரம் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் தன் பேச்சில், 'இலங்கையை கண்டித்து இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வர இருந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி கூட்டத்திலேயே மூர்க்கத்தனமாக எதிர்த்த பா.ஜ.க. தமிழர்களுக்கு ஆதரவான கட்சியா? அவர்கள் டெல்லியில் ஆட்சிக்கு வருவது நல்லதா கெட்டதா? மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவது இலங்கை தமிழர்களுக்கு நல்லதா? காங்கிரஸ் டெல்லியில் ஆட்சியில் இருந்ததால்தான் இப்படியொரு தீர்மானம் பற்றி விவாதிக்கவே அனைத்துக் கட்சி கூட்டம் போடப்பட்டது என்பதை மறந்து விடாதீர்கள்.' என்று ஆக்ரோஷமாக பேசியவர், 'இப்போது பா.ஜ.க.வின் வேஷம் கலைந்து வருகிறது. நரேந்திர மோடியை நாடாளுமன்ற குழுவில் போட்டிருக்கிறார்கள்.

என்கவுன்டர் புகாரில் சுப்ரீம் கோர்ட்டால் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் அமித் ஷாவை பா.ஜ.க.வின் பொதுச் செயலாளராக அறிவிக்கிறார்கள். பாபர் மசூதி இடிப்பு பற்றி வருத்தப்பட தேவையில்லை. அதை கொண்டாட வேண்டும் என்று சொல்லுகிறார் அத்வானி. இதுதான் பா.ஜ.க. இந்த நேரத்தில் நான் தமிழக மக்களைப் பார்த்துக் கேட்கிறேன். காங்கிரஸா அல்லது பா.ஜ.கவா. எங்களிடம் ஆயிரம் குறைகள் இருக்கலாம். நாங்கள் மகாத்மா என்று சொல்லவில்லை. ஆனால் தமிழர்களுக்கு பாதுகாப்பு காங்கிரஸா, பா.ஜ.க.வா என்றால் காங்கிரஸ்தான் பாதுகாப்பாக நிற்கும்.' என்று தீர்மானமாகப் பேசினார்.

பிறகு சிதம்பரம் தன் பேச்சின் இறுதியில் இலங்கை தமிழர்களுக்கு வாக்குறுதி கொடுத்து முடித்துக் கொண்டார். அவர் மேலும் பேசுகையில், 'இலங்கை  தமிழர்களுக்காக  மாணவர்கள் போராட்டம் நடைபெறுகிறது. அதை கொச்சைப்படுத்தக்கூடாது என்று நான் என் கட்சிக்காரர்களிடம் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். போராடுங்கள் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் வன்முறை இல்லாமல் போராடுங்கள். இலங்கை இன்னொரு நாடு. அங்கே நம்மால் சில காரியங்களை செய்ய முடியும். சில காரியங்களை செய்ய முடியாது. ஆனால் அதை வைத்து இந்திய நாட்டை கூறு போட்டு விட சில சக்திகள் இங்கே இருக்கின்றன.

 நாம் அவர்களை அடக்கி வைத்திருக்கிறோம் என்பது வேறு விஷயம். ஆகவே இந்தியாவை கூறு போட விரும்பும் சக்திகளிடம் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அமெரிக்கா தீர்மானம் இந்த முறை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் வந்த போது அங்குள்ள நாடுகள் 47. அதில் தீர்மானம் நிறைவேற 24 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதில் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும். வலுவான நாடான அமெரிக்காவே தீர்மானம் கொண்டு வந்தது. அதற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது. அவர்களின் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கும் நாடுகளுக்கு உதவி செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்தது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவே ஒவ்வொரு நாட்டு தலைவர்களுக்கும் போன் போட்டு ஆதரவு கேட்டார். அப்படியும் அந்த தீர்மானத்திற்கு கிடைத்த ஆதரவு 24 வாக்குகள் மட்டுமே. இந்தியாவையும் சேர்த்து 25 வாக்குகள் கிடைத்தது. சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் எல்லாம் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. ஜப்பான் நடுநிலைமை வகித்தது. இப்படியொரு தீர்மானத்தில் தான் இந்தியா ஆறு திருத்தங்களை கொடுத்தது என்பதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே மாணவர்களே சிந்தித்துப் பாருங்கள். இந்தியாவால் எவ்வளவு முடியுமோ, எந்த எல்லையைத் தொட முடியுமோ, அந்த அளவு சக்தியைப் பயன்படுத்தி இலங்கை தமிழர்களுக்காக என்றும் காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்பதை மட்டும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்' என்று வாக்குறுதி கொடுத்தார்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸின் நிலைப்பாட்டை விளக்கி இப்படியொரு கூட்டம் சமீப காலங்களில் அக்கட்சி நடத்தியதில்லை. இதுதான் முதல் முறை. அதுவும் சிதம்பரம் போன்ற தலைவர் இப்படி விளக்கமாக பேசியது காங்கிரஸ் கட்சியின் அணுமுறையை அறிவிக்க உதவும். அது மட்டுமின்றி, இலங்கை தமிழருக்கு ஆதரவாக இருப்பது போல் பாராளுமன்றத்தில் பேசி விட்டு, பிறகு தீர்மானம் கொண்டு வருவதை தடுத்த பா.ஜ.க.வை தோலுரித்துக் காட்டும் வகையில் சிதம்பரம் பேசியதில் பின்னனி இருக்கிறது.

அது 'காங்கிரஸ் இருந்தால் மட்டுமே இலங்கை பிரச்சினை விவகாரத்தில் இந்த அளவு செய்ய முடியும். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் செய்ய முடியாது' என்பதுதான் அந்த பின்னனிச் செய்தி. அது மட்டுமின்றி, காங்கிரஸை எப்படி தனிமைப்படுத்த பிரச்சாரம் தமிழகத்தில் நடக்கிறதோ அதே மாதிரி பா.ஜ.க.வையும் தனிமைப்படுத்த சிதம்பரம் மேற்கொண்ட முயற்சி அது. காங்கிரஸுடன் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி வைக்க முடியாது என்றால் அவர்களால் பா.ஜ.க.வுடனும் கூட்டணி வைக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தவே தன் பேச்சில் 'பா.ஜ.க. அட்டாக்கை' அவ்வளவு தீவிரமாக செய்தார் சிதம்பரம்.

அதே நேரத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை சிதம்பரம் அட்டாக் பண்ணவில்லை. அதற்கு மாறாக அந்த இரு கட்சிகளின் தியாகத்தையும் மதிப்பதாக மேடையிலேயே ஓப்பனாக அறிவித்தார். அதன் தலைவர்களை வணங்குவதாக தெரிவித்தார். ஏனென்றால் இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த இரு கட்சிகளில் ஒன்று தேவை என்பதை மனதில் வைத்துத்தான் சிதம்பரம் அப்படிப் பேசினார். இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸின் நிலைப்பாடு பற்றிய சிதம்பரத்தின் பேச்சு மிகவும் உணர்ச்சிகரமானது. உற்சாகம் மிகுந்தது. ஆனால் இது ரொம்பவும் லேட். ஏற்கனவே 'தமிழர் விரோத கட்சி காங்கிரஸ்' என்ற கருத்து குக்கிராமங்கள் தோறும் பரவி விட்டது. அதை இவ்வளவு லேட்டாக வரும் சிதம்பரத்தின் பேச்சு சரி செய்யுமா? அது 'மில்லியன்' டொலர் கேள்விதான்! 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X