2025 மே 19, திங்கட்கிழமை

இந்தியாவை குற்றக்கூண்டுக்குள் அனுப்ப முனையும் கொழும்பு

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 13 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

ஜெனிவா தீர்மானத்தை அடுத்து, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தொங்குநிலை உறவு, சற்று ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது போலவே தெரிகிறது. இது, இருநாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள விரிசல், சற்று ஆழமாவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளன.

மனிதஉரிமைகள் விவகாரத்தில் புதுடெல்லி காட்ட ஆரம்பித்துள்ள இறுக்கமான போக்கு கொழும்புக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்பட்டபோது, இந்தியப் பிரதிநிதி திலீப் சின்ஹா வாசித்த அறிக்கையில், குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமான - சுதந்திரமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடி, தமிழ்நாட்டின் அழுத்தங்களால், இலங்கைக்கு எதிராக வாக்களிக்க இந்தியா முடிவு செய்தது என்பதை விட, நம்பகமான - சுதந்திரமான விசாரணைகளை வலியுறுத்தி இந்திய பிரதிநிதி வெளியிட்ட அறிக்கை தான் கொழும்பை பெரிதும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியது.

அதுமட்டுமன்றி, அண்மையில் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமானதும் சுதந்திரமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

மொத்தத்தில், பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படாத வகையில் போரை நடத்தியதான இலங்கை அரசாங்கத்தின் ‘கதை‘யை இந்திய அரசாங்கம் நம்பத் தயாராக இல்லை.

கடந்தவாரம் சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், “ராஜபக்ஷ அரசால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர், மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்றன என்பதை காங்கிரஸ் மறுக்கவில்லை. மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளும் வகையிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதையும் காங்கிரஸ் மறுக்கவில்லை” என்று கூறியிருந்தார்.

இது மனிதஉரிமைகள் விவகாரத்தில், கொழும்புடன் இணங்கிப் போகும் நிலையில் புதுடெல்லி இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது, போர்க்குற்றச்சாட்டுகள், மனிதஉரிமை மீறல்கள் விடயத்தில் இலங்கை அரசின் நிலைப்பாட்டையோ அல்லது அதன் நலனையோ பாதுகாக்கின்ற பணியை புதுடெல்லி மேற்கொள்ளாது என்பது ஓரளவுக்கு உறுதியாகி விட்டது.

இத்தகைய நிலையில் தான், கடந்த 9ஆம் திகதி இந்து நாளேட்டில், இந்தியாவின் மூத்த இராஜதந்திரிகளில் ஒருவரான ஹர்தீப் சிங் பூரி, ‘இலங்கை மீதான இந்தியாவின் செயற்பாடு ஏன் சரியானது‘ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

பூரி இலங்கை விவகாரத்தில் ஒன்றும் அந்நியமானவர் அல்ல. ஜே.என்.டிக்சிற் கொழும்பில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றிய காலத்தில், அவர் கொழும்பில் மூத்த அதிகாரியாக இருந்தவர். 1987இல் விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்காக முதலில் யாழ்ப்பாணம் சென்றவர். புலிகளின் தலைவர் பிரபாகரனை சுதுமலையில் இருந்து ஹெலிகொப்டர் மூலம் அழைத்துச் சென்றவர், இலங்கையில் இந்தியத் தலையீடுகள் குறித்த அத்தனை விவரங்களையும் நன்றாகவே அறிந்துள்ளவர். நியுயோர்க்கில் ஐ.நாவுக்கான தூதுவராகப் பணியாற்றி இரு மாதங்களுக்கு முன்னர் தான் ஓய்வுபெற்றுள்ளவர்.

அவர் தனது கட்டுரையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு, பாதுகாப்புச்செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையில் தீவிரவாதத்தை வளர்த்தெடுத்தது இந்தியாவே என்றும், நேரடியான தலையீடுகளின் மூலம் தீவிரவாதத்தை உருவாக்கிவிட்ட பொறுப்பில் இருந்து இந்தியா தப்பித்துக் கொள்ள முடியாது என்று பதிலடி கொடுத்துள்ளார். இந்தப் பதிலடி தான் அடுத்த விவகாரத்தையும் சேர்த்தே கிளப்பி விட்டுள்ளது.

அதாவது, இந்தியத் தலையீடு குறித்து தொடக்கத்தில் இருந்தே முழுமையான விசாரணை நடத்துவது குறித்து அனைத்துலக சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என்று கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்து, இந்தியாவுக்கு கண்டிப்பாக எரிச்சலூட்டக் கூடியது.

ஏனென்றால், இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட்டது, தமிழ் இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்தது, ஆயுதங்கள் கொடுத்தது, அடைக்கலம் கொடுத்தது என்று பல பரிமாணங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் கிண்டிக் கிளறுவதன் மூலம், இந்தியாவையும் குற்றக்கூண்டில் நிறுத்த கொழும்பு முனைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இந்தியா எல்லா உதவிகளையும் வழங்கியது என்பதை புதுடெல்லி மறுத்தே வந்தாலும், அது தான் வெளிப்படையான உண்மை. இறுதிக்கட்டப் போரில் நடந்த குற்றங்கள் குறித்து விசாரிக்க முற்படும்போது, இந்தியா மீதும் குற்றச்சாட்டுகள் வரும் என்பதால் தான், இலங்கை அரசை பல்வேறு தருணங்களில் இந்தியா காப்பாற்றி வந்துள்ளது. இப்போது இந்தியா, மனிதஉரிமை விவகாரங்களில் இலங்கையைக் காப்பாற்றத் தயாராக இல்லாத நிலையில், இந்தியாவையும் தெருவுக்கு இழுக்க இலங்கை தயாராகி விட்டது. ஆனால் ஒன்று, இறுதிப் போரின் போது, இந்தியாவும் உதவியதே என்று இலங்கை இன்னமும் வாயைத் திறக்கவில்லை.

அதற்குப் பதிலாக, தமிழ் இயக்கங்களுக்கு பயிற்சி, ஆயுதங்கள், அடைக்கலம் கொடுத்து இலங்கையில் போரை உருவாக்கி விட்டது இந்தியா தான், அதன் தலையீடு தான் என்ற குற்றச்சாட்டை சுமத்த முனைகிறது கொழும்பு. கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்து இதனையே தான் உணர்த்தி நிற்கிறது.

இது ஹர்தீப்சிங் பூரியின் கட்டுரைக்குப் பின்னர் தோன்றியுள்ள நிலை என்று கருதினால் அது தவறு.

ஜெனிவாவில் இந்தியாவின் நிலைப்பாடு வெளிப்பட்ட பின்னரே கொழும்பிடம் இந்த உணர்வு வேரூன்றி விட்டது.

அதாவது, இலங்கை விவகாரத்தில் இந்தியத் தலையீடு குறித்து சர்வதேச விசாரணையைக் கோருகின்ற அளவுக்கு, இலங்கை சென்றுள்ளது என்பது, சாதாரணமான விடயமல்ல. அதுவும், இலங்கையில் இரண்டாவது சக்தி வாய்ந்த நபராக கருதப்படும், கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள இந்தக் கருத்து, புதுடெல்லிக்கு நிச்சயம் வெறுப்பையே அளித்திருக்கும்.

இது தவிர, இலங்கையில் இந்தியப்படையினர் நிலை கொண்டிருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின்போது, கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் பற்றிய மதிப்பீடு ஒன்றை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவும் கூட, இந்தியாவை சங்கடத்தில் ஆழ்த்துகின்ற - நெருக்கடிக்குள் தள்ளிவிடுகின்ற முயற்சி தான். ஏனென்றால், இலங்கையில் தாம் கைகள் கட்டப்பட்ட நிலையில் போரிட்டதாகவே இந்தியப்படையினர் எப்போதும் கூறி வந்துள்ளனர்.

ஆனால், ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் இந்தியப்படையினரின் நடவடிக்கைகளின் போது கொல்லப்பட்டனர், காயமடைந்தனர். இது ஒன்றும் இரகசியமான விடயம் அல்ல.

இலங்கையில் தமிழர்களைக் கொன்று விட்டுத் திரும்பும் அமைதிப்படையினரை வரவேற்கச் செல்லமாட்டேன் என்று, சென்னை திரும்பிய இந்தியப்படையினருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பையே அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி புறக்கணித்திருந்தார். அப்போது மனிதஉரிமைகளுக்கு உலகளாவிய ரீதியில் பெறுமானம் இருக்கவில்லை. மனிதஉரிமை மீறல்களைத் தட்டிக் கேட்கும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உருவாக்கப்பட்டிருக்கவில்லை.

இதனால், இந்தியப்படையினரின் மனிதஉரிமை மீறல்களும், போர்க்குற்றங்களும் விசாரிக்கப்படவும் இல்லை விசாரிக்கப்பட வேண்டும் என்று அழுத்தங்கள் கொடுக்கப்படவும் இல்லை. இப்போது, இலங்கை மீது அழுத்தங்கள் அதிகரிக்கும் போது, அந்த அழுத்தத்தை இந்தியாவும் சேர்ந்தே கொடுக்க முனையும் போது, தடாலடியாக, இந்தியா மீது அதைத் திருப்பி விடப் பார்க்கிறது கொழும்பு. வெளிப்படையில் இதனை ஒரு புத்திசாதுரியமான அரசியல் நகர்வு என்று கருதினாலும், இத்தகைய அணுகுமுறை தற்கால இராஜதந்திர அணுகுமுறைகளுடன் ஒத்துப் போகின்ற ஒன்றல்ல. இது கிட்டத்தட்ட பனிப்போர்க்கால இராஜதந்திர அணுகுமுறைகளை ஒத்தது.

அதுமட்டுமன்றி, காஸ்மீரில் இந்தியப்படையினர் செய்த மனிதஉரிமை மீறல்கள் குறித்து, இலங்கை அமைச்சர்கள் இந்தியாவை நோக்கி சுட்டுவிரலை நீட்டவும் தொடங்கியுள்ளனர். இது நிலைமையை மேலும் மோசமாக்கும் அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளது.

இப்போது, இந்தியா கொடுக்கும் - கொடுக்க முனையும் அழுத்தங்களை குறைக்கும் வகையிலேயே, இலங்கை நகர்வுகளை மேற்கொள்கிறது. இது கொழும்புக்கும் புதுடெல்லிக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தொங்கு நிலை உறவை மேலும் ஈடாடச் செய்துள்ளது. இந்த ஈடாட்டம் என்பது, இருநாடுகளுக்கும் இடையிலான இறுக்கமான உறவுப் பிணைப்புக்கு சவாலாகவே இருக்கும். இருநாடுகளும், குற்றச்சாட்டுகள் அடுக்க ஆரம்பித்தால், இன்னும் எத்தனையோ வெளியே வராத இரகசியங்கள் கூட அம்பலத்துக்கு வரக் கூடும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X