2025 மே 19, திங்கட்கிழமை

ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதால் சிறுபான்மையினருக்கு விடிவு ஏற்படுமா?

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 19 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்ய வேண்டுமா என்ற சர்ச்சை மீண்டும் அரசியல் களத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறை தமக்கு சாதகமானது என்று வாதாடிய சிறுபான்மை அரசியல்வாதிகளும் தற்போது அம்முறையை ரத்துச் செய்வதையே விரும்புகிறார்கள் போலும். எவரும் இம்முறை இந்த விடயத்தில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை.

ஒரு காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக குரல் கொடுத்து தற்போது பொது பல சேனா போன்ற இனவாத சக்திகளை எதிர்த்து வரும் மாதுலுவாவே சோபித்த தேரர் மற்றும் சிறுபான்மை மக்களது உரிமைகளுக்காகவும் ஊழலுக்கு எதிராகவும் நீண்டகாலமாக குரல் கொடுத்து வரும் சட்டத்தரணி ஜே.சீ.வெலியமுன உட்பட சிலர் நிறைவேற்று ஜனாதிபதி முறை இல்லாத அரசியலமைப்பு நகல் ஒன்றை தயாரித்துள்ளனர்.

அந்நகலை சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் பணியில் முதல் கட்டமாக அவர்கள் அதன் பிரதியொன்றை அண்மையில் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய ஆகிய விகாரைகளின் நாயக்க தேரர்களிடம் கையளித்தனர். நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்வதாக கூறி பதவிக்கு வரும் எவரும் பதவிக்கு வந்ததன் பின்னர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில்லை என அப்போது மல்வத்தை பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் கூறியிருந்தார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறை முன்னர் அமுலில் இருந்த வெஸ்மின்ஸ்டர் ஆட்சி முறையை விட சிறுபான்மை மக்களுக்கு சாதகமானது என்றே 2005ஆம் ஆண்டு வரை பல சிறுபான்மையினக் கட்சிகளின் தலைவர்கள் குறிப்பாக முஸ்லிம் தலைவர்கள்; கூறிவந்தனர். ஜனாதிபதி நாடளாவிய தேர்தல் ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்படுவதனால் அவர் சிறுபான்மை மக்களின் ஆதரவில் வெகுவாக தங்கியிருக்கிறார் என்றும் அதனால் அவர் சிறுபான்மை மக்களின் குரலை கேட்க நிர்ப்பந்திக்கப்படுகிறார் என்றும் அப்போது வாதிடப்பட்டது.

இதனால் நிறைவேற்று ஜனாதிபதி முறையானது சிறுபான்மை மக்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒன்றைப் போல் சேவை செய்கிறது என்று முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவருமான எம்.எச்.எம்.அஷ்ரப் ஒரு முறை கூறியிருந்தார். அதாவது அரசாங்கங்களால் பாதிக்கப்படும் போதெல்லாம் சிறுபான்மை மக்கள் ஜனாதிபதியிடம் முறையிடலாம் என்பதே அவரது வாதமாக இருந்தது.

ஆனால் அவரது காலத்திலேயே ஜனாதிபதிகள் சிறுபான்மை மக்களை கறிவேற்பிலையாக பாவித்து இருந்தனர். உதாரணமாக ஒரு முறை பேருவளை மற்றும் புத்தளம் ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் அதிக விருப்பு வாக்குகளை பெருபவர்களுக்கு அவற்றின் தவிசாளர் பதவிகளை வழங்குவதாக கூறி பொது ஜன ஐக்கிய முன்னணியும் மு.கா.வும் கூட்டாக போட்டியிட்டு வெற்றி பெற்றன. ஆனால் மு.கா.வுக்கு தவிசாளர் பதவி வழங்க ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பின்னர் மறுத்து விட்டார்.

அடுத்த தேர்தலில் மு.கா.வோ அல்லது பொதுவாக முஸ்லிம்களோ தம்மை எதிர்த்து வாக்களிக்கும் என்ற பயம் சந்திரிகாவுக்கு அப்போதும் இருக்கவில்லை. அப்போது எதிர்க்கட்சி பலமாகவும் இருந்தது. இருந்தும் சந்திரிகா சிறுபான்மை கட்சியான மு.கா.வை ஏமாற்றுவதில் தயக்கம் காட்டவில்லை. இப்போது எதிர்க்கட்சியொன்று இல்லாத நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. எனவே இப்போது நிறைவேற்று ஜனாதிபதி சிறுபான்மை மக்களை கணக்கிலெடுக்கவே தேவையில்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது. எனவே நிறைவேற்று ஜனாதிபதி முறை சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பானது என்று இப்போது எவ்வகையிலும் கூற முடியாது.

நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்க வேண்டும் என்ற குரல் மீண்டும் எழுப்பப்பட்டு இருக்கும் நிலையில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் அவ்வாட்சி முறையை நியாயப்படுத்த புதிய வாதங்களை முன்வைத்து வருகிறார்கள். நிறைவேற்று ஜனாதிபதி முறை நாட்டில் அமுலில் இருந்ததன் காரணமாகவே பயங்கரவாதத்தை அடக்க முடிந்தது என்பதே அவர்களது புதிய கண்டுபிடிப்பாக இருக்கிறது.
 
வெஸ்மின்ஸ்டர் ஆட்சிமுறை இருக்கும் நாடுகளில் ஆட்சியாளர்கள் உள்நாட்டு, வெளிநாட்டு போர்களில் வெற்றி பெறவில்லை போல் தான் அவர்கள் வாதிடுகிறார்கள். இஸ்ரேலில் இருப்பதும் பிரதமர் ஆட்சியே. அவர்களுக்கு பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்க நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறை தேவைப்படுவதில்லை. சில தினங்களுக்கு முன்னர் காலஞ்சென்ற முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் மாகரட் தட்சருக்கு 1982ஆம் ஆண்டு போலாந்து போரில் வெற்றி பெறுவதற்கு நிறைவேற்று ஜனாதிபதி முறை தேவைப்படவில்லை.

எனவே நிறைவேற்று ஜனாதிபதி முறையின் காரணமாகவே புலிகளை அடக்க முடிந்தது என்ற வாதம் தர்க்கரீதியாக அமையவில்லை. இது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை திருப்திப்படுத்தி தமது இருப்பை பலப்படுத்திக் கொள்வதற்காக அமைச்சர்கள் முன்வைக்கும் வாதமேயல்லாமல் வேறொன்றுமல்ல.

நிறைவேற்று ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை ஓரளவுக்கு புறக்கணித்து செயற்பட முடியும். அவர் ஏறத்தாழ ஒரு சர்வாதிகாரியாகவே செயற்படுகிறார். ஆனால் நெருக்கடி நிலைமைகளில் பிரதமர் ஆட்சியுள்ள நாடுகளில் பிரதமர்களும் அவ்வாறே தான் செயற்படுகிறார்கள்.

இலங்கையில் அமுலில் இருக்கும் நிறைவேற்று ஜனாதிபதி முறையின் கீழ் ஜனாதிபதிக்கு எதிராக எவ்வித வழக்கும் தாக்கல் செய்யப்பட முடியாது. அவருக்கு மக்கள் வாக்குப் பலத்தால் பதவிக்கு வந்த ஆளும் கட்சியையும்; புறக்கணித்து செயற்பட முடியும். ஜனாதிபதியும் ஆளும் கட்சியும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் மற்றொரு கட்சி பதவிக்கு வரவே முடியாது என்று தான் கூற வேண்டும்.

ஏனெனில் ஜனாதிபதி தேர்தலின் போது ஆளும்கட்சியும் முன்னர் இருந்த ஜனாதிபதியும் அரச பலத்தை பாவித்து அவர்களது கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளரை வெல்லச் செய்வார்கள். பொதுத் தேர்தலின் போதும் ஜனாதிபதியின் அதிகாரத்தை பாவித்து தமது கட்சியை எவ்வாறோ வெல்லச் செய்வார்கள். மற்றைய கட்சிகள் வெல்லாது என்ற நிலை காணப்படுவதால் மக்களும் அந்தக் கட்சிகளுக்கு வாக்களிக்க தயங்குவார்கள்.

தற்போது நடப்பதும் அது தான். மக்கள் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு வாக்களிப்பது அக்கூட்டணியின் கொள்கைகளுக்காகவல்ல. வெற்றி பெறக்கூடிய மற்றொரு கட்சி தென்படாததாலும் வெற்றிபெறும் பக்கத்தில் தாம் இருக்க வேண்டும் என்ற ஆசையினாலுமே மக்கள் அக்கூட்டணிக்கு வாக்களித்து வருகிறார்கள்.
 
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முதலான கூட்டணிகள் 1994ஆம் ஆண்டு முதல் இன்று வரையும் (இரண்டு ஆண்டுகள் தவிர) பதவியில் நீடித்து வந்துள்ளன. அதே போல் தான் 1993ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவு ஏற்படும் வரை அக்கட்சி 1977ஆம் ஆண்டு மதல் 17 ஆண்டுகள் பதவியில் இருந்தது. அந்தப் பிளவு ஏற்படாவிட்டால் சிலவேளை இன்னமும் அக்கட்சிவே பதவியில் இருக்கக்கூடும். 

தற்போதைய நிலையில் அடிக்கடி ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்ற அச்சத்தை ஆட்சியாளர்களின் மனதில் ஊட்டி, அவர்களை ஓரளவுக்காவது மக்களை சார்ந்து நிற்கும் வகையில் செயற்படச் செய்வதாக இருந்தால் அதற்காக நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டேயாக வேண்டும். அத்தோடு தொகுதிவாரி தேர்தல் முறையும் ஓரளவுக்காவது இருக்க வேண்டும்.

ஆனால் இந்த விடயத்தில் மல்வத்தை மஹாநாயக்க தேரர் கூறுவது உண்மையே. நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்து விட்டு பதவிக்கு வரும் எவரும் அந்த பதவியை கைவிடவோ அல்லது அவ்வாட்சி முறையை இரத்துச் செய்யவோ முன்வருவதில்லை.

1994ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக பதவியேற்ற போது வழங்கிய பிரதான வாக்குறுதி நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வேன் என்பதே. அவர் அவ்வாக்குறுதியை எழுத்து மூலமாகவே மக்கள் விடுதலை முன்னணிக்கு வழங்கி அம்முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை போட்டியில் இருந்து வாபஸ் பெறச் செய்தார்.

2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிக்கு வரும் போது அவரும் வழங்கிய பிரதான வாக்குறுதி நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வேன் என்பதே. ஆனால் அவர் தமது முதலாவது பதவிக் காலத்தில் அதைப் பற்றிப் பேசவேயில்லை. தமது இரண்டாவது பதவிக் காலத்தில் அவர் அம் முறையை இரத்துச் செய்வதற்குப் பதிலாக ஒருவர் இரண்டு முறைக்கு மேல் நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியில் இருக்கக்கூடிய வகையில் அரசியலமைப்பையும் மாற்றிக் கொண்டார்.

ஐக்கிய தேசிய கட்சி இப்போது நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை இரத்துச் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் அக்கட்சி பதவியில் இருந்த 17 ஆண்டுகளில் அக்கட்சியும் அவ்வாட்சி முறையை நியாயப்படுத்தியது.

அடிக்கடி ஆட்சி மாறும் அபாயம் இருந்தால் இனப் பிரச்சினை தொடர்பாகவும் பிரதான கட்சிகளை நெருக்குவாரத்திற்குள்ளாக்க சிறுபான்மை கட்சிகளுக்கும்  வாய்ப்பு ஏற்படும். ஆதற்கும் நிறைவேற்று ஜனாதிபதி முறை தடையாக அமைந்துள்ளது. அந்த வகையில் வெலிஅமுன போன்றோர் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பு நகல் நல்லது தான். ஆனால் அதனை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதே பிரச்சினை.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X