2025 மே 19, திங்கட்கிழமை

கொமன்வெல்த் மாநாடு: இலங்கைக்கு வெற்றியா?

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 29 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.சஞ்சயன்

கொமன்வெல்த் உச்சி மாநாட்டை வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடத்தும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கொமன்வெல்த் அமைச்சர்கள் நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி வரும் நவம்பர் 15ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதிவரை கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு, கொழும்பில் நடைபெறும் என்பதை, கொமன்வெல்த் செயலர் கமலேஷ் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.

இது இலங்கை அரசாங்கத்துக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

ஏனென்றால், லண்டனில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொமன்வெல்த் அமைச்சர்கள் கூட்டத்தில், கொழும்பில் இருந்து மாநாட்டை இடம்மாற்றுவது குறித்து ஆராயப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதுபோலவே இந்த விவகாரம் குறித்து லண்டனில் நடந்த கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில், காரசாரமாக வாதிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் டிபு முனி தலைமையிலான இந்தக் கூட்டத்தில் கனடா, அவுஸ்திரேலியா, ஜமைக்கா, மாலைதீவு, சியராலியோன், தன்சானியா, ரினிட்டாட் அன் டுபாகோ, வனாட்டு ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த போதிலும், ஏனைய நாடுகளின் ஆதரவை அவரால் பெறமுடியாது போனது.

மேற்குலக அணியில் உள்ள அவுஸ்திரேலியாவே கைவிரித்து விட்டதால், கனடாவினால் எதையும் செய்ய முடியாமல் போய்விட்டது.

எனினும், இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட - விவாதிக்கப்பட்ட விடயங்களை வெளியிட முடியாது என்று, கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் தலைவரான பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் டிபு முனி தெரிவித்துள்ளார்.

உச்சி மாநாட்டை நடத்தும் இடம் குறித்து, தலைவர்களின் கூட்டத்தில் தான் முடிவு செய்யப்படும் என்றும், அதனைத் தம்மால் மாற்ற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இது லண்டன் கூட்டத்தில் கொமன்வெல்த் மாநாட்டை இடமாற்றம் செய்வது குறித்து கடுமையாக விவாதிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஆனால், மாநாட்டை இடம்மாற்றும் அதிகாரம் தமக்கு இல்லை என்று பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ள கருத்து எந்தளவுக்கு சரியானது என்ற கேள்வி இருக்கிறது. எவ்வாறாயினும், இந்தக் கூட்டத்தில் கொமன்வெல்த் மாநாட்டை எப்படியும் இலங்கையில் நடத்துவது என்று உறுதியாகியுள்ளது இலங்கை அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

ஏனென்றால், கொழும்பில் உச்சி மாநாட்டை நடத்துவதற்கு எதிராக மனிதஉரிமை அமைப்புகள், கொமன்வெல்த் சட்ட அமைப்புகள் போன்றன கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்தன. அதைவிட கனேடிய பிரதமர் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாகவே இந்தக் கோரிக்கையை விடுத்து வந்துள்ளார்.

அதுமட்டுமன்றி அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மல்கம் பிறேசரும் கொழும்பில் மாநாட்டை நடத்துவதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் எதிர்க்கட்சிகளும் மாநாட்டைப் புறக்கணிக்க வலியுறுத்தி வருகின்றன.

இப்படிப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி கொழும்பில் தான் மாநாடு நடத்தப்படும் என்ற அறிவிப்பு அரசாங்கத்தைப் பெரிதும் நிம்மதி கொள்ள வைக்கும்.

திட்டமிட்டபடி, கொழும்பில் தான் கொமன்வெல்த் மாநாடு நடக்கும் என்பது தற்போது உறுதியாகியுள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் இனிமேலும் நெருக்கடிகளைச் சந்தித்தேயாக வேண்டியிருக்கும்.

ஏனென்றால், கொமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் இருந்து இடம்மாற்ற வேண்டும், மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தற்போது தான் வலுப்பெற ஆரம்பித்துள்ளன. எனவே, லண்டனில் நடந்த கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில், கடுமையான நடவடிக்கையில் இருந்து தப்பிவிட்டதாக அரசாங்கம் முழுமையாக நம்ப முடியாது. கொமன்வெல்த் மாநாட்டுக்கு இன்னமும், ஆறரை மாதங்கள் உள்ள நிலையில், அதற்கிடையில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையே உள்ளது.

ஏனென்றால், வரும் நவம்பர் மாதத்துக்கு முன்னதாக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கை அரசாங்கம் இன்னொரு கண்டத்தை கடந்தாக வேண்டியுள்ளது. வரும் செப்டெம்பரில் நடக்கவுள்ள 24ஆவது அமர்வில், ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் ஏதாவது முயற்சிகளை மேற்கொண்டுள்ளதா என்ற வாய்மூலமான அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ளார்.

அந்த அறிக்கையில் ஒன்றும் அவர் இலங்கையைப் புகழ்ந்துரைக்கப் போவதில்லை என்பது தெளிவு. ஏனென்றால், ஜெனிவா தீர்மானத்தையே நிராகரித்துவிட்டது இலங்கை.

அதுமட்டுமன்றி, அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்தவும் அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிக்கும் இடைக்கால அறிக்கை, ஒருபோதும் இலங்கைக்கு சாதகமானதாக இருக்காது. இது கொமன்வெல்த் மாநாட்டிலும் எதிரொலிக்கும்.

அதைவிட, கொமன்வெல்த் மாநாட்டை இடம்மாற்றவும், புறக்கணிக்கவும் கோரும் அழைப்புகள் இன்னும் வலுப்பெறவும் வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, இந்தியா, நியுசிலாந்து போன்ற நாடுகளில் இத்தகைய கோரிக்கைகள் வலுப்பெறலாம்.

இலங்கையின் மனிதஉரிமைகள் நிலை கருத்தில் கொள்ளப்படுகிறதோ இல்லையோ – சிலவேளைகளில் உள்நாட்டு அரசியல் நெருக்கடிகள் இந்த நாடுகளின் முடிவுகளில் தாக்கம் செலுத்தக் கூடும். ஆனால், கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் தலைவராக உள்ள பங்களாதேஷையும், இன்னொரு முக்கிய நாடான அவுஸ்திரேலியாவையும் இலங்கை தன் கைக்குள் போட்டுக் கொண்டது முக்கியமான விடயமே.

கொழும்பில் நடக்கவுள்ள கொமன்வெல்த் உச்சி மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்ற அழைப்பை, அவுஸ்ருலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் நிராகரித்துள்ளார். அதுமட்டுமன்றி, இலங்கையில் மீறல்கள் இன்னமும் தொடர்கின்றன என்று கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அவர் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

மிக அண்மையில் கூட அமெரிக்கா வெளியிட்ட, நாடுகளின் மனிதஉரிமை நிலைவரங்கள் பற்றிய அறிக்கையிலும், பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வெளியிட்ட மனிதஉரிமை நிலை தொடர்பான அறிக்கையிலும், இலங்கையின் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக நீண்ட பட்டியலே போடப்பட்டிருந்தது.

ஆனால், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரோ, அப்படி ஏதும் நடப்பதாகத் தெரியவில்லையே என்று கூறியுள்ளார். இதிலிருந்து, இலங்கையின் கைக்குள் அவுஸ்திரேலியா அகப்பட்டுக் கொண்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

இலங்கையை அவுஸ்திரேலியா பாதுகாத்துக்கொள்ள முனைவதன் அடிப்படையே, அகதிகள் விவகாரத்தினால் தான். இலங்கையில் பாதுகாப்பான நிலை உள்ளதாக கூறியே, இலங்கையில் இருந்து வரும் அகதிகளை அவுஸ்திரேலியா திருப்பி அனுப்பி வருகிறது.

மீறல்கள் தொடர்கின்றன என்று ஏற்றுக் கொண்டால், அகதிகளை திருப்பி அனுப்பும் அந்த நாட்டு அரசின் கொள்கை கேள்விக்குள்ளாகி விடும். இன்னொரு பக்கத்தில், அகதிகள் விவகாரத்தில், இலங்கை அரசிடம் அவுஸ்திரேலியா மாட்டிக் கொண்டுள்ளது என்பதே உண்மை.

இலங்கை அரசாங்கம் நினைத்தால், அகதிகளை அவுஸ்திரேலியாவை நோக்கி பெருக்கெடுக்க விடமுடியும். அதைத் தடுப்பதற்கு இலங்கை அரசுடன் பல்வேறு விடயங்களில் அவுஸ்திரேலியா படியிறங்கிப் போகிறது என்பது ஒன்றும், இரகசியமான விடயமல்ல.

எனவே, கொமன்வெல்த் விவகாரத்தில் இலங்கையைப் பாதுகாக்க அவுஸ்திரேலியா முனைவது ஆச்சரியமான விடயமாக இருக்க முடியாது. அடுத்து பங்களாதேஷ், வெளிவிவகாரச் செயலர் கடந்த வாரம் கொழும்பு வந்திருந்தபோது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்திருந்தார்.

அப்போதே, மனிதஉரிமைகள் விவகாரத்தில் இலங்கையின் பின்னால் தமது நாடு நிற்கும் என்று அவர் கூறியது கொமன்வெல்த் மாநாட்டை அடிப்படையாக வைத்து தான். இப்போது பங்களாதேஷ் இந்தியாவின் செல்வாக்கிற்கு உட்பட்ட நாடாக இல்லை. அது சீனாவின் செல்வாக்கிற்கு உட்பட்ட நாடாக மாறியுள்ளது.

எனவே இந்த விடயத்தில், இலங்கையின் மிக நெருக்கமான நட்பு நாடான சீனாவும் செல்வாக்குச் செலுத்தியிருக்க வாய்ப்புகள் உள்ளன. அதைவிட, பங்களாதேசிடம் இருந்து பெருமளவு மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்ய இலங்கை முன்வந்துள்ளது.

முன்னர் இந்திய நிறுவனங்களிடம் இருந்த வாங்கப்பட்ட மருந்துகளே இனிமேல் பங்களாதேசிடம் வாங்கப்படவுள்ளன. கொமன்வெல்த் மாநாட்டை அடிப்படையாக வைத்தே, இலங்கை இந்த பாரிய மருந்து கொள்வனவு நடவடிக்கைக்கு முன் வந்தது.

இப்படிப் பல்வேறு வழிகளும், காரணங்களும் தான், கொமன்வெல்த் உச்சி மாநாடு விவகாரத்தில் இலங்கைக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும், இவையெல்லாம் வரும் நவம்பரில் இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடப்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்குப் போதுமானதா என்பதை இப்போதே உறுதிப்படுத்த முடியாது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X